படித்துப் பாருங்களேன்...

E.ARNO LEHMANN (2006) IT BEGAN AT TRANQUEBARS ANDREAS GROSS, VINCENT KUMARADOSS (2006)

Halle and the Beginning of Protestant Christianity in India (Volume I, III) HEIKE LIEBAU (2013)
Cultural Encounters in India.

டேனீசியர்களின் வருகைக்கு முன்னரே, போர்ச்சுக்கீசிய வணிகர்களால் கத்தோலிக்கமும், டச் வணிகர்களால் சீர்திருத்தக் கிறித்தவமும் தரங்கம்பாடியில் அறிமுக மாயிருந்தன. இவ்விரு சமயப்பிரிவினருக்கும் என, தனித்தனியே தேவாலயங்கள் இருந்தன. என்றாலும் ‘கிறித்தவத்தின் நுழைவாயில்’ (Gateway of Christianity) என்று தரங்கம்பாடி பெயர் பெற இவை காரணமாக அமையவில்லை. ஜெர்மன் லூத்திரன் மறைப் பணியாளர்கள் இங்குத் தங்கி மறைத்தளம் (மிஷன்) ஒன்றை உருவாக்கிச் செயல்படத் தொடங்கிய பின்னரே கிறித்தவசமயவரலாற்றில் தரங்கம்பாடி தனக்கென, சிறப்பான இடத்தைப் பெற்றது. இந்தியாவில் சீர்திருத்தக் கிறித்தவத்தின் முதல் மறைத்தளமாக ‘தரங்கம்பாடி மறைத்தளம்’ (தரங்கம்பாடி மிஷன்) உருப்பெற்றது. இங்கிருந்தே தமிழ்நாட்டின் உள்நாட்டுப் பகுதிகளில் சீர்திருத்தக் கிறித்தவம் பரவியது.

கிறித்தவப் பரப்பல் குறித்த சிந்தனை

தரங்கம்பாடியில் டேனிசியர் நிலைபெறக் காரணமாயிருந்த, நான்காம் பிரெடரிக் என்ற டென் மார்க் மன்னன், கிறித்தவத்தை இந்தியாவில் பரப்புவதில் ஆர்வம் கொண்டிருந்தான். தன் கட்டுப்பாட்டிற்குள் இருந்த தரங்கம்பாடிக்கு, மறைப்பணியாளர்களை (மிஷனரிகளை) அனுப்ப விரும்பினான். தன் விருப்பத்தை, அரண்மனைக் குரு லூத்கன் என்பவரிடம் தெரிவித்த போது, அவர் இது தொடர்பாக முயற்சி மேற்கொண்டார். டென்மார்க் நாட்டின் மறைப் பணியாளர்கள் கடல் கடந்து செல்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை அவர் அறிந்துகொண்டார்.

எனவே, அரண்மனைக் குருவான லூத்கன், டென்மார்க் கிறித்தவ சபையின் பேராயரான போர்ன்மான் என்பவரின் உதவியை நாடினார். அவரோ டேனீசிய நாட்டு மறைபோதகர்களை அயல்நாட்டிற்கு அனுப்புவது தொடர்பான தம் அச்சவுணர்வை, பின்வருமாறு வெளிப்படுத்தினார்:

டேனியக் குருமாணவர்கள் ஆடம்பரப்பிரியர் களாகவும் குடிகாரர்களாகவும், சோம்பேறிகளாகவும், கூடாவொழுக்கம் உடையவர்களாகவும் இருப்பதால் இப்பணிக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் (ஆர்னோ லெக்மான் 2006:3).

பின்னர் டென்மார்க் மன்னனின் விருப்பத்தைக் கூறி தன் செர்மானிய நண்பர்களின் உதவியை வேண்டினார். அவரது வேண்டுகோளுக்கு உற்சாகமான பதில் கிடைத்தது. கடவுள் பயமும் மறைபரப்பும் பணியில் ஆர்வமும் கொண்ட இருவர் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர் (மேலது ).

ஹாலேயில் இருந்து பயணம்:

அவர்கள் குறிப்பிட்ட இருவரில் ஒருவர் ஹென்ரிச் புலூட்சத் (Heinrich Pluetschau) மற்றொருவர் பார்த் வோமா சீகன்பல்க் (Bartholomacus ziegemlalg). இவ்விரு வரும் பிறப்பால் ஜெர்மானியர்கள். ஜெர்மனியில் ஹாலே என்னும் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள்.

ஹாலேயில் இருந்து பயணித்து டென்மார்க்கின் கோபன்ஹென் நகரை இருவரும் வந்தடைந்தனர். 1705 நவம்பர் 11 ஆம் நாள் இருவரையும் குருக்களாக திருநிலைப்படுத்தி (Ordained) கப்பல் ஒன்றில் தரங்கம் பாடிக்கு 1705 நவம்பர் 30 ஆம் நாள் அனுப்பிவைத்தனர்.

தரங்கம்பாடியை வந்தடைதல்:

1706 ஜூலை ஒன்பதாம் நாளன்று, கப்பல் தரங்கம் பாடியை வந்தடைந்தது. தரங்கம்பாடி ஊருக்கு நான்குமைல் தொலைவில் கப்பல்கள் நிற்பது வழக்கம். கரையோரம் கடல் ஆழமில்லாது இருப்பதுதான் இதற்குக் காரணம். துடுப்பின் துணையால் இயக்கப்படும் படகுகளில் ஏறியே கரையை வந்தடைய வேண்டும்:

மறைப்பணியாளர்கள் இருவரும் கப்பலில் இருந்து இறங்கி, படகு ஒன்றில் ஏறினர். விரைவாகத் துடுப்புப் போடும்படி, டேனிஷ் வணிக நிறுவன அதிகாரிகள் படகோட்டிகளை சவுக்கால் அடித்தனர். இது குறித்து இருவரும் வினவியபோது. ‘துடுப்புப்போடுபவர்கள் உள்ளூர்வாசிகள் தானே’ என்ற அலட்சியமான பதில் கப்பலின் காப்டனிடமிருந்து வந்தது.

இருவரும் தரங்கம்பாடிக் கடற்கரையை வந்தடைந்த போது, இவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல எவரும் வரவில்லை. பாதுகாப்புத் தருவது தொடர்பான டென்மார்க் மன்னனின் ஆணையுடன் இருவரும் கடற்கரையில் நின்றனர். தரங்கம்பாடியில் இருந்த டேனிஷ் ஆளுநர், அவ்விருவரையும் அங்கிருந்த டேனிஷ் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றும்படி வற்புறுத்தினான். ஆனால், தாம் சார்ந்துள்ள ஜெர்மன் லூத்தரன் மிஷன் கூறியனுப்பியபடி, கிறித்தவ சமயப் பரப்புதலை மேற்கொள்வதில் இருவரும் உறுதியாக நின்றனர்.

தரங்கம்பாடி வாழ் அய்ரோப்பியர்:

தரங்கம்பாடிப் பகுதியில், பூர்வீகக் குடிகள் கிறித்தவர்களாக இல்லாத நிலையில் அங்கிருந்த கிறித்தவர்கள் என்போர் அய்ரோப்பியர்களாகவே யிருந்தனர். இவர்களைக் கண்டபோது இருவருக்கும் அதிர்ச்சியேற்பட்டது. பிறவியினால் மட்டுமே இவர்கள் கிறித்தவர்களாயிருந்தனர். கிறித்தவ விழுமியங்களைப் (values) பின்பற்றாதவர்களாகவே இவர்கள் விளங்கினர். ‘புறச்சமயத்தினரை மதமாற்றம் செய்வதில் முக்கிய தடைக்கல்’ என்று சீகன்பால்க் இவர்களைக் குறிப்பிட்டார்.

கிறித்தவராக மதம் மாறிய தமிழர் ஒருவர் இவர் களைக் குறித்துக் கூறியதை ‘மலபார் கடிதப் போக்கு வரத்து எண் 34 பின்வருமாறு பதிவு செய்துள்ளது:

அவர்கள் பத்துக் கட்டளைகளின்படி வாழ் வதில்லை. மிகுதியாகக் குடித்து அறிவை இழப்பவர்கள். பொய் கூறுபவர்கள். முட்டாளைப் போல் உளறுபவர்கள். ஒருவரையருவர் வெறுத்துச் சண்டையிடுபவர்கள். கடவுளின் மீதும் ஆன்மாவின் மீதும் ஆணையிடுபவர்கள். பரத் தமையும் சூதாட்டமும் மேற்கொள்ளுபவர்கள். பசுவைக்கொன்று அதன் இறைச்சியை உண் பவர்கள், வெள்ளைக்காரர்கள் மிகவும் மோச மானவர்கள். பயணிகளிடம் சிறிதும் இரக்கம் காட்டமாட்டார்கள். செல்வம் உடையவர்களாக இருந்தாலும் அறச் செயல்களுக்கோ, நற்பணி களுக்கோ செலவிடமாட்டார்கள். ஏழை சக மனிதர்களைக் குறித்து ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள் (ஆர்னோ லெக்மான் 2006:42-43).

தமது கடிதம் ஒன்றில், “அய்ரோப்பியக் கிறித்தவர்கள், புறச்சமயத்தினரைக் கருப்பு நாய்போல் நடத்துகின்றனர். தம் செயல்பாடுகளால் அவர்களைப் புண்படுத்துகிறார்கள்” என்றும் அய்ரோப்பியர்களே ரட்சிக்கப்படும்போது, தாமும் ரட்சிக்கப்படுவோம் என்று இப்பகுதி மக்கள் நம்புவதாகவும் சீகன்பல்க் குறிப்பிட்டுள்ளார். அய்ரோப்பியரை அறிந்திராத ஒருவரைக் கிறித்தவராக மதமாற்றம் செய்வதே நல்லது என்று அதே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் (மேலது).

அய்ரோப்பியர் குறித்து இத்தகைய எதிர்மறையான கருத்துக்கள் நிலவிய சூழலிலேயே அய்ரோப்பியர்களான சீகன்பல்க்கும், றென்றிபுளுசட்த்தும் கிறித்தவசமயப் பரப்பலை மேற்கொள்ளவேண்டியிருந்தது. இதனால் அவர்களது தொடக்ககால முயற்சிகள் தரங்கம்பாடியில் வாழ்ந்த அடிமைகளை மையமாகக் கொண்டமைந்தன.

கிறித்தவரான அடிமைகள்:

தரங்கம்பாடியில் வாழ்ந்து வந்த செர்மானியக் கிறித்தவர்களுக்கு, செர்மன் மொழியில் வழிபாடு நிகழ்த்துவது சீகன்பல்கின் தொடக்ககாலப் பணியாக இருந்தது. இப்பணியில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, புதிய கிறித்தவர்களை உருவாக்குவதே அவரது இலட்சியமாக இருந்தது. ஆனால் இதை நிறைவேற்றுவதில் அவர் எதிர்கொண்ட முக்கிய இடர்ப்பாடாக சாதியிருந்தது.

கிறித்தவராகத் திருமுழுக்குப் பெற விரும்பியோர் தம் சாதியின் எதிர்ப்பை முதலில் எதிர்கொள்ள வேண்டி யிருந்தது. கிறித்தவராக மதம்மாறியவர்கள் எந்தச் சாதியினராய் இருந்தாலும், அவர்கள் பறையர் சாதி யினராகவே கருதப்படலாயினர். அவருக்கு நெருப்புக் கொடுக்கவும், பொதுக்கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. அவருக்கு யாரும் பெண் கொடுக்கமாட்டார்கள். கிறித்தவராக மாறிய கணவன் மனைவியரும், பெண்களும் சமூக விலக்கத்திற்கு ஆளானார்கள். கிறித்தவராக மாறியோர் தாம் பிறந்த வீட்டில் இருந்து விரட்டப்பட்டதுடன் இறந்து போனவர்களாகக் கருதப்பட்டனர். இக்காரணங்களால் கிறித்தவ சபையன்றை நிறுவமுடியவில்லை (மேலது:43). இத்தகைய சமூகச் சூழலில், அப்பகுதியில் நிலவிய அடிமைமுறை அவர்களுக்குக் கைகொடுத்தது.

கி.பி.1715 வாக்கில் கத்தோலிக்க சமயம் சார்ந்திருந்த அடிமைகள் சிலரை விலைக்கு வாங்கி, கிறித்தவ சபை ஒன்றை நிறுவினர். பணம் கொடுத்து விலைக்கு வாங்கி கிறித்தவர்களாக்கப்பட்ட இவர்களைப் போன்றோரை ‘பணக்கிறித்தவர்’ என்றழைத்தனர் (மேலது 43-44).

தரங்கம்பாடியில் வாழ்ந்து வந்த அய்ரோப்பியர்கள், அடிமை வணிகர்களிடம் இருந்து அடிமைகளை விலைக்கு வாங்கி வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தி வந்தனர். இவ்வடிமைகளில் இஸ்லாமியர்களும் இருந்தனர். இவர்கள் அனைவரும், அவர்களது கிறித்தவ எசமானர்களால், வலுக்கட்டாயமாகக் கிறித்தவர் களாக்கப்பட்டவர்கள். தேவாலயத்திற்குச் செல்ல அவர்களின் உரிமையாளர்கள் அவர்களை அனுமதிக்கா விட்டால், உபதேசியார்கள் அவர்களது இருப்பிடத்திற்குச் சென்று மறையுபதேசம் செய்தனர் (ஹெய்கிலிபோவ், 2013:151-152).

அடிமைகளை விலைக்கு வாங்குவதற்காக மறைத் தளத்திற்கு முன்பணம் வழங்கப்பட்டது. இப்பணம் அடிமைகளின் விடுதலைக்காக வழங்கப்படவில்லை என்று ஹெய்கிலிபோவ் (2013:151-152) எள்ளலாகக் குறிப்பிடுகிறார்.

பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் பெற்றோர்கள், தம் குழந்தைகளை அடிமைகளாக விற்றனர். இவ்வாறு விற்கப்படும் குழந்தைகளை விலைக்கு வாங்கி கிறித்தவராக்கும் செயலை, கிறித்தவ விழுமியங்களுக்குப் புறம்பான நடவடிக்கையாக சீகன்பல்க் கருதவில்லை. 23 டிசம்பர் 1710 இல் அவர் எழுதிய கடிதம் ஒன்றில்,

இங்குள்ள நடைமுறைப்படி பெற்றோர்கள், ஏதோ ஒரு காரணத்திற்காக, தம் குழந்தைகளை அடிமை களாக விற்கிறார்கள். அக்குழந்தைகளைச் சிறிதளவு பணம் கொடுத்து வாங்கி, தேவாலயத்திற்கு உரிய தாக்குவதில் தவறில்லை. நம்பள்ளியில் இவ்வாறு விலைக்கு வாங்கப்பட்ட இரு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் நன்றாகவுள்ளனர். இவர்கள் வாயிலாக இவர்களது பெற்றோர்களின் நம்பிக் கையைப் பெற முடிந்தது.

என்று குறிப்பிட்டுள்ளார் (ஹெய்கிலிபோவ் 2013:152). கி.பி.1785 இல் எழுதப்பட்ட மராத்திமோடி ஆவணம் ஒன்றும் சிறுமியை விலைக்கு வாங்கி, திருமுழுக்கு செய்ததைக் குறிப்பிடுகிறது. திருமுல்லைவாசல் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த செவதாயி என்பவள் தன் சகோதரியின் மகளை, தரங்கம்பாடி வெள்ளைக்காரன் உஸ்மானுக்கு ஆறு சக்கரம், ஒரு வராகனுக்கு விற்றுள்ளார். விலைக்கு வாங்கப்பட்ட அப்பெண்ணுக்குத் திருமுழுக்குச் செய்யப்பட்டது (வேங்கடராமையா 1984:326).

கிறித்தவராக மாற்றப்பட்ட பின்னரும் அடிமைகள் அடிமைகளாகவே இருந்தனர். தம் உரிமையாளர்களுக்கு மிகவும் உண்மையுடன் இவர்கள் பணிபுரிந்தார்கள் என்று ஹெய்கிலிபோவ் (2013:154) குறிப்பிடுகிறார்.

தரங்கம்பாடி மறைத்தளமும் சாதியும்:

தொடக்கத்தில் பெரும்பாலும் பறையர் சமூகத் தினரே தரங்கம்பாடி மறைத்தளத்தில் கிறித்தவராயினர் (மேலது 142). டென்னிஸ் ஹட்சன் என்பவர் தரங்கம் பாடி சபைகளில் 90% பறையர் கிறித்தவர் இருந்தனர் என்று கருதுகிறார் (மேலது 216). இம்மக்கள் மீதான தரங்கம்பாடி மறைத்தளத்தின் அணுகுமுறையை ஹய்கிலிபோவ் (2013:143) பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

கிறித்தவத்தைத் தழுவியவர்களில் மிகப் பெரும் பாலோர் தீண்டத்தகாதோர் பிரிவைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான கிறித்தவச் சபைகளிலும், பள்ளிகளிலும், கிறித்தவக் கிராமங்களிலும், தரங்கம்பாடி மறைத்தள வரலாறு முழுவதிலும் ஒரு தலித் கூட கிறித்தவ சபை ஊழியராகத் திருநிலைப்படுத்தப்படவில்லை. இந்தி யாவில் பணியாற்றி வந்த அய்ரோப்பிய மறைப் பணி யாளர்களுக்கும் அய்ரோப்பாவில் இருந்த மேலதிகாரி களுக்கும் இடையே இது தொடர்பான வெளிப்படை யான ஆழமான விவாதம் எதுவும் நடைபெறவில்லை.

சகபணியாளர்கள்:

உள்ளூர் மக்களைக் கிறித்தவராக்கவும், கிறித்தவரான வரை, அதில் நிலைக்கச் செய்யவும், உள்ளூர் மக்களில் இருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து மறைத்தள ஊழியர் களாகப் பயிற்சி கொடுத்தனர். இவர்களைத் தவிர வேறு சில ஊழியர்களையும் நியமித்தனர். இவ்வாறு நியமிக்கப் பட்ட பணியாளர் பதவிகள் வருமாறு:

(1) உபதேசியார் (2) பள்ளி ஆசிரியர் (3) எழுத்தர் (4) உணவு பரிமாறுபவர் (5) கணக்கர் (6) பாதுகாவலர் (7) பிணக்குழி தோண்டுபவர் (8) சமையல்காரர் (9) சலவைத் தொழில் செய்பவர் (10) தண்ணீர் கொண்டு வருபவர்.

இவர்கள் அனைவரும் தரங்கம்பாடி மறைத் தளத்தில் பணியாற்றிய அய்ரோப்பியர்களின் சக ஊழியர்களாக விளங்கினர். இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. சிலர் பகுதிநேர ஊழியர்களாக இருந்தனர். ஒரே பணியைச் செய்தாலும் அய்ரோப்பிய சக பணியாளர்களுக்கும் இந்திய சக பணியாளர்களுக்கும் இடையே ஊதியத்தில் வேறுபாடு இருந்ததை ஹெய் கிலிபோ (2013:193) சுட்டிக் காட்டுகிறார்.

உபதேசியார்:

தரங்கம்பாடி மறைத்தளத்தின் சகபணியாளர்களில் உபதேசியார் என்போர் முதல்நிலைப் பணியாளர்களாக விளங்கினர். இவர்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர் களாகவும் கிறித்தவ மறையறிவு உள்ளவர்களாகவும் இருந்தனர்.

முதல் தமிழ் உபதேசியார் 28 மே 1707 இல் நியமிக்கப்பட்டார். கிறித்தவர் அல்லாதாரிடம் கிறித்தவத்தைப் பற்றி உரையாடுதல், கிறித்தவ சமய உண்மைகளைப் போதித்தல், புதிய கிறித்தவர்களைச் சந்தித்தல் என்பன இவரது கடமைகளாகும்.

1733 இல் உபதேசியாரின் கடமைகள் குறித்து விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நாள் தோறும் தமிழ்க் கிறித்தவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களையும் அய்ரோப்பியர் வீடுகளுக்குச் சென்று அங்குப் பணிபுரியும் கிறித்தவ அடிமைகளையும் சந்திக்க வேண்டும்.

திருமணம் ஆகாத இளம் வயதினரின் ஒழுக்கம் குறித்துக் கவனம் மேற்கொள்ளவேண்டும். நோயாளி களைச் சந்திக்க வேண்டும். சவ அடக்கத்தைக் கிறித்தவ முறையில் செய்யவேண்டும். திருமணம் மற்றும் கிறித்தவத் திருநாள் கொண்டாட்டங்களின் போது புறச்சமயப் பழக்கவழக்கங்கள் நுழையாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஞாயிறன்று தேவாலயத்தில் நிகழும் வழிபாட்டை மேற்பார்வையிடுவதுடன், சில நேரங்களில் மறையுரை ஆற்றவும் வேண்டும். இவ்வாறு தாம் செய்த பணிகள் குறித்த விவரங்களை மறைத்தளத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

தாம் பணிபுரியும் வட்டாரத்திற்கு ஏற்ப உபதேசி யார்கள் ‘கிராம உபதேசி’, ‘நகர உபதேசி’ என இரு பிரிவாக இருந்தனர். அத்துடன் அவர்களுக்கு வழங்கப் பட்ட அதிகாரங்களுக்கு ஏற்ப ‘உபதேசியார்’, ‘இளநிலை உபதேசியார்’ என்றழைக்கப்பட்டனர்.

உபதேசியாரும் ஆதிக்க வகுப்பினரும்:

கிறித்தவ சமயத்தைப் பரப்புவதே உபதேசியாரின் முக்கிய கடமையாய் இருந்ததால், ஆதிக்க வகுப்பினரின் பகைக்காளாக அவர்கள் விரும்பவில்லை. எனவே ஆதிக்க வகுப்பினரின் பொருளியல் நலனுக்கு இடையூறு ஏற்படாது பார்த்துக்கொண்டனர்.

கிராமப்புற நிலப்பிரபுக்களின் வரிக் கொள்கையால் பாதிக்கப்படும் மக்கள் அதை எதிர்க்கும் வழிமுறைகளில் ஒன்றாக, ஊரைவிட்டு வெளியேறுவது அக்கால வழக்க மாகும். இவ்வாறு உழைக்கும் மக்கள் வெளியேறுவதால், வேளாண் உற்பத்தி மற்றும் கைத்தொழில் உற்பத்தி பாதிக்கப்படும். தம் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறையாக ஊரைவிட்டு வெளியேறிய கிறித்தவர்களை ஊருக்குத் திரும்பச் செய்வதும் அய்ரோப்பியர்களிடம் பணி புரிவோர் ஓடிச் செல்வதைத் தடுத்து நிறுத்துவதும் உபதேசியாரின் பணிகளில் இடம்பெற்றிருந்தன (மேலது 164).

குரு:

சீர்திருத்தக் கிறித்தவசபையின் தேவாலயங்களின் பொறுப்பாளராகவும் வழிபாட்டை (ஆராதனை) நடத்து பவராகவும் விளங்கும் மறைப்பணியாளரைக்குரு அல்லது ஐயர் என்று தமிழில் குறிப்பிடுவர். கல்வி நிறுவனம், மருத்துவநிலையம், இராணுவப் பாசறை, சிறைச்சாலை போன்ற அமைப்புகளில் வாழும் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமத்தினர் மட்டும் பயன்படுத்தும் தேவாலயத்தில் பணிபுரிபவர் சாப்லின் என்றழைக்கப்படுவார்.

தரங்கம்பாடி மறைத்தளத்தில், தொடக்கத்தில் அய்ரோப்பியர்களே குருக்களாயிருந்தனர். பின்னர் தமிழர்களைக் குருக்களாக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர். உபதேசியார்களாகப் பணிபுரிந்து வந்தோரைத் தேர்ந்தெடுத்து தொடக்கத்தில் குருக்களாக்கினர்.

இவ்வகையில் தரங்கம்பாடியின் புதிய ஜேருசலம் தேவாலயத்தில் உதவி உபதேசியாராகப் பணிபுரிந்து பின்னர் உபதேசியாரான ஆரோன் (1698ஃ9-1745) என்பவர் 28 டிசம்பர் 1733 இல் குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார். இந்தியாவின் முதல் சுதேச குரு இவர்தான். தரங்கம்பாடி மறைத்தளத்தின் தொடக்ககால வரலாற்றில் குரு நியமனத்தில் சாதி முக்கிய பங்கு வகித்துள்ளது.

பறையர் சமூகத்தைச் சேர்ந்த இராஜநாயக்கன் என்பவர் தஞ்சை மராத்திய மன்னரின் படையில் ‘சேர்வைக்காரன்” என்ற பதவி வகித்து வந்தார். மூன்று தலைமுறையாகக் கத்தோலிக்கராக வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த இவர் லூத்தரன் சபைக் கிறித்தவராக மாறியவர். 1729 இல் உபதேசியாராக நியமிக்கப்பட்டார்.

1740 இல் குருவாகப் பதவி உயர்வு இவருக்கு வழங்கவேண்டிய சூழலில் சாதியின் அடிப்படையில் அது மறுக்கப்பட்டு தியாகு என்பவருக்கு வழங்கப் பட்டது. என்றாலும் இராஜநாயக்கனின் திறமையைப் புறக்கணிக்க இயலாத நிலையில் ‘மூத்த உபதேசியார்’ என்ற பட்டத்தை வழங்கிச் சமாளித்தனர்.

கிறித்தவர் மீதான தண்டனைகள்:

கிறித்தவர்களாக மாறிய மக்கள் பிரிவினரைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் வழிமுறையாகச் சில தண்டனைகள் வழங்குவதை மறைத்தள அதிகாரிகள் மேற்கொண்டனர்.

எச்சரிக்கை செய்தல், கடிந்துரைத்தல் என்பன எளிய தண்டனை முறைகளாயிருந்தன. கிறித்தவர்கள் முன்னிலையில் தாம் செய்த குற்றத்திற்கு வெளிப் படையாக மன்னிப்புக் கேட்டல், தேவாலயத்தில் முழங்காலிடுதல் என்பன சில தண்டனைகளாகும். இவை தவிர பிரம்படியும், சிறைத்தண்டனையும் வழங்கப் பட்டன. தரங்கம்பாடி மறைத்தளம் தனக்கென ஒரு சிறைச்சாலையைக் கொண்டிருந்தது.

சமயம் சார்ந்தும் சில தண்டனைகள் அமைந் திருந்தன. இதன்படி, தேவலாய வழிபாட்டின் போது நிகழும் திருவிருந்தில் பங்கு கொள்வதைத் தடுத்தல், தற்காலிகமாகச் சபையை விட்டு நீக்குதல் ஆகியன அமைந்தன. கடுமையான குற்றங்களுக்கு, சமய விலக்கம் செய்தனர். திருந்தாது இறந்துபோனவர்களுக்குக் கிறித்தவமுறையிலான சவ அடக்கம் மறுக்கப்பட்டது.

இடம் மாறுதல், பணியிடை நீக்கம், சம்பளப் பிடிப்பு, பணிவிலக்கம் ஆகியன மறைத்தளப் பணியாளர் களுக்குத் தண்டனைகளாயிருந்தன.

* * *

குடிகாரச் சாப்லின்கள் இருவருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்துப் பேராசிரியர் மரியலாசர் (2010:59-61) தம் நூலில் குறிப்பிட்டுள்ளது வருமாறு:

டென்மார்க்நாட்டின் உள்நாட்டுச் சிக்கல்களாலும், அண்டை நாடுகளுடன் ஏற்பட்ட பகையினாலும் கி.பி.1642 தொடங்கி 1669 முடிய உள்ள இருபத்தேழு ஆண்டுகளில் டென்மார்க்கில் இருந்து கப்பல் எதுவும் தரங்கம்பாடிக்கு வரவில்லை. இதனால் தரங்கம்பாடி வாழ் டேனிசியருக்கும் அவர்களது தாய்நாட்டிற்கும் இடையே தகவல் தொடர்பு நின்றுபோனது. தனிப்பட்ட முறையில் வாணிபம் செய்தும் கடற்கொள்ளை நடத்தியும் தரங்கம்பாடி டேனீசியர்கள் காலத்தை ஓட்டினர்.

டென்மார்க்கிலுள்ள தம் குடும்பத்துடன் தகவல் தொடர்பு இல்லாத நிலையில், நீல்ஸ் ஆண்டர்சன் உபைண்டர் என்ற குருவும், கிறிஸ்தியன் பீட்டர்சன் ஸ்டிராம் என்ற குருவும் உளவியல் நிலையில் பாதிப்புக் குள்ளாயினர். தரங்கம்பாடியின் வெப்பமும் தனிமை யுணர்வும் சலிப்புணர்வும், நண்பர்கள் உறவினர்களிடம் தொடர்பற்றுப்போன நிலையும் அவர்களை நிலை குலையச் செய்தன. தம் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறையாக இருவரும் குடிகாரர்களாக மாறினர். உள்ளூர்ச் சாராயத்தை இரவு பகல் பாராது குடிக்கத் தொடங்கினர். பட்டப்பகலில் சிறுஅளவிலான துணி அணிந்தும் அணியாமல் முழுநிர்வாணமாகவும் தெருக்களில் ஓடினர்.

பழவேற்காட்டில் இருந்த டச் படைத்தலைவன் இதை விசாரித்து உண்மையென்றறிந்து கிறிஸ்தியன் பீட்டர்சன் ஸ்டிராமுக்கு மரணதண்டனை விதித்தான். அதன்படி அவன் காலில் இரும்புக் குண்டுகளைக் கட்டி கோணிப்பையில் உயிருடன் போட்டு, கடற்கரையில் இருந்து ஒரு லீக் (ஏறத்தாழ மூன்றுமைல்) தொலைவில் அக்கோணிப்பையைக் கடலில் வீசினர்.

நீல் ஆண்டர்சனைக் கைது செய்து சிறையில் அடைத்து, விசாரணை செய்து மரண தண்டனை விதித்தனர். ஆனால் அவன் மீது குற்றம் சாட்டியவர்களும்கூட அவன்மீது இரக்கம் காட்டும்படி வேண்டினர். அதனால் மரணதண்டனை ஆயுள் தண்டனை ஆக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டான். தரங்கம்பாடியில் இருந்த அவன் மனைவிக்கு விதவைக்குரிய ஓய்வூதியம் வழங்கப்பட்டது. தரங்கம்பாடி மிஷன் உருவாகும்முன்பு இவை நிகழ்ந்துள்ளன.

புதிய ஜெருசலம் தேவாலயம்:

தரங்கம்பாடிக்கு சீகன்பல்க் வரும்முன்பே அங்கும், அருகிலுள்ள பொறையாறிலும் கிறித்தவத் தேவாலயங்கள் இருந்தன. செர்மானியர்களும் டேனியர்களும் போர்ச்சுக் கீசியர்களும் இதில் பெரும்பான்மையினராகச் சென்று வழிபட்டனர். எனவே, செர்மன் டேனிஷ், போர்ச்சுக்கீஸ் மொழிகளில் வழிபாடு நிகழ்ந்தது.

புதிய தமிழ்க் கிறித்தவர்கள் உருவான பின்னர் அவர்களுக்கென்று புதிய தேவாலயம் கட்ட சீகன்பல்க் விரும்பினார். இதன்படி ராஜவீதியில் சியோன் ஆலயத்திற்கு எதிரில் புதிய ஆலயம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

9 பிப்ரவரி 1717-இல் ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த டச் நிர்வாகம் தேக்கு உத்திரங்களையும், மரப் பொருட்கள், கண்ணாடி, ஈயம், பிரப்பங்கழி ஆகிய வற்றையும் அன்பளிப்பாக வழங்கியது.

பதினாறு கொத்தனார்கள், எட்டு தச்சர்கள் ஆறு கொல்லர்கள், ஏறத்தாழ இருபது நாள், வேலைக்காரர்கள் நாற்பது அய்ம்பது பையன்கள் பணிபுரிந்தனர். கடற் கரையில் இருந்து நாள்தோறும் ஆறுபேர் கடற்சிப்பி களைச் சேகரித்து வந்தனர். இச்சிப்பிகளைக் கொண்டு சுண்ணாம்பு தயாரித்தனர். இதனால் அய்ம்பது விழுக்காடு செலவு குறைந்தது. செப்டம்பர் ஒன்பதில் கூரைவேயும் உயரத்திற்குக் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. மழைக்காலம் தொடங்கியதால் கட்டடவேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது (ஆண்டடிரியாஸ் கிராஸ் 2006:252-253).

1718 சனவரியில் மீண்டும் கட்டடவேலை தொடங்கியது யாழ்ப்பாணத்தில் இருந்து பனைமர உத்திரங்களும் கட்டைகளும் மே மாதம் வந்து சேர்ந்தன. ஓடுவேய்ந்த கூரையுடன் புதிய ஜெருசலம் ஆலயம் கம்பீரமாகக் கட்டிமுடிக்கப்பட்டது. டென்மார்க் மன்னன் நான்காம் பிரடரிக்பெயரின் முதல் எழுத்து கூரையின் உச்சியில் நடப்பட்ட சிலுவையின் கீழே பொறிக்கப்பட்டது. 1718 அக்டோபர் பதினேழாம் நாள் திருநிலைப்படுத்தப்பட்டது (மேலது)

சிலுவை வடிவில் கட்டப்பட்ட இத்தேவாலயம் 28X28 மீட்டர் நீளத்தையும் 9.5மீட்டர் அகலத்தையும் கொண்டது (மேலது 249). கடந்த வரலாற்றுச் சின்னமான இதன் பழமையை லூத்திரன் சபையினர் பாதுகாத்துவருகின்றனர். தரங்கம்பாடியில் போர்ச்சுக் கீசியரால் கட்டப்பட்ட பழமையான கோவா ஆலயத்தைக் கத்தோலிக்கர்கள் இடித்ததைப் போன்ற வரலாற்றுச் சின்ன அழிப்பை மேற்கொள்ளாதது பாராட்டுதற்குரியது.

* * *

இவ்வாறு தரங்கம்பாடியில் உருவாகிச் செயல்பட்டு வந்த தரங்கம்பாடி மறைத்தளத்தினர், தம் சமயப் பணியின் ஓர் அங்கமாக, சில அறிவுசார்பணிகளையும் மேற்கொண்டனர். இவை கல்வி, நூலாக்கம், அச்சாக்கம், மருத்துவம் எனப் பலதரப்பட்டவை. இவை குறித்து அடுத்த இதழில் காண்போம்.

-தொடரும்

Pin It