தமிழியல் ஆய்வை உலக அளவில் வளர்த்தெடுத்த அறிஞர் பேராசிரியர் தனிநாயகம் அவர்களின் நூற்றாண்டு

ஐரோப்பியர்கள் வருகையோடு தமிழியல் ஆய்வு புதிய முகத்தைப் பெறத் தொடங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் முதல் பல்வேறு ஐரோப்பிய பாதிரியார்கள், அரசு அலுவலர்கள், தனிப்பட்ட ஆராய்ச்சி யாளர்கள் என்று பல்துறையினரும் பல்வேறு ஆய்வு களைக் காலனிய இந்தியாவில் நிகழ்த்தத் தொடங்கினர். தமிழ்மொழி, தமிழ்பேசும் நிலப்பகுதி, தமிழ் மக்கள் ஆகியவை சார்ந்து பல்வேறு ஆவணங்களைத் தேடித் தொகுத்தனர். இவ்வகையில்தான் மொழிநூல் (Philology) சார்ந்த ஆய்வுகள், பழங்குடி மக்கள் தொடர்பான ஆய்வுகள், தொல்பொருள்துறை ஆய்வுகள் ஆகியவை தமிழியலில் கால்கோள் பெற உதவினர். இவர்களது இவ்வகை ஆய்வுகள்தான் திராவிட மொழியியல் என்னும் துறை உருவாக வழிகண்டது. உலகத்தில் உள்ள பிற மொழிக் குடும்பங்களோடு திராவிட மொழிக் குடும்பத்தை இணைத்துப் பார்க்கும் ஆய்வுகள் உருவாயின.

அச்சுக்கருவி வருகையால் அதுவரையில் ஓலையில் இருந்த நமது தொல்பழம் நூல்கள் அனைத்தும் அச்சுவடிவம் பெற்றன. தமிழ்ப் பதிப்புத்துறை உருவானது. தமிழின் செம்மொழி வளம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் புரிந்துகொள்ளப்பட்டது. சமயம் சார்ந்த நூல்களை மட்டுமே பெரும்பான்மையாக இருந்த தமிழில், சமயச் சார்பற்ற செவ்விலக்கியங்கள் மிக வளமாக இருப்பது உலகுக்குத் தெரியவந்தது. இந்தப் பின்புலத்தில் தான் இந்தியாவில் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. வட்டார மொழிகள் சார்ந்த ஆய்வுகள் உருவாயின. தமிழ்மொழி, சமசுகிருத மொழிக்கு இணையான இலக்கிய இலக்கணங்களைக் கொண்டது என்ற செய்தியும் உலகுக்குத் தெரியவந்தது.

மேற்குறித்த சூழலில் தமிழகத்தில் பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் தோன்றின. பாண்டித்துரை தேவரால் உருவாக்கப்பட்ட மதுரைத் தமிழ்ச்சங்கம் இதில் குறிப்பிடத்தக்கது. சைவசித்தாந்த சமாஜம் என்னும் அமைப்பு மூலம் தமிழியல் ஆய்வுகள் முன்னெடுக்கப் பட்டன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு ஆய்வு இதழ்களும் இக்காலத்தில் வெளிவரத் தொடங்கின. பின்னர் 1920களில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1927இல் உருவான சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை மற்றும் 1929இல் உருவான அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழியல் ஆய்வுகள் வளமாக முன்னெடுக்கப்பட்டன. பல்துறை சார்ந்த ஆய்வுகளும் இக்காலங்களில் உருப்பெற்றன. உலகம் முழுவதுமிருந்து, தமிழகத்திற்கு வந்து தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழர் வரலாறு குறித்த ஆய்வுகளை 1930கள், 1940கள் ஆகிய காலங்களில் நிகழ்த்தத் தொடங்கினர். இந்தப் பின்புலத்தில் அறிஞர் தனிநாயகம் அடிகள் முன்னெடுத்த ஆய்வு மிக முக்கியமானது.

1952 Tamil Culture என்னும் ஆங்கில ஆய்விதழைத் தனிநாயகம் அடிகள் கொண்டு வந்தார். 1966 வரை வெளிவந்தஇந்த இதழில், உலகத்திலுள்ள தமிழியல் துறை சார்ந்த அறிஞர்கள் பலரும் கட்டுரைகள் எழுதினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகிய காலங்களில் உருவான தமிழியல் ஆய்வுக்குப் புதிய முகம் தருவதாக Tamil Culture இல் வெளிவந்த கட்டுரைகள் அமைந்தன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இருந்த கீழைத்தேய ஆய்வாளர்கள் இவ்விதழில் எழுதினர். தமிழியல் ஆய்வு உலகம் சார்ந்த ஆய்வாக உருவானது.

1964இல் புதுடெல்லியில் நடந்த கீழைத்தேயவியல் ஆய்வாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழியல் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து உலகத் தமிழியல் ஆய்வு மன்றம் (IATR) ஒன்றை உருவாக்கினார். இவ் வமைப்பு மூலம் பின்னர் உலகத்தமிழ் மாநாடுகள் நடைபெறத் தொடங்கின. Tamil Culture இதழ்வழி உருவான ஆய்வுப் போக்கை, திட்டமிட்ட மாநாட்டுக் கருத்தரங்குகள் மூலம் வளர்த்தெடுத்தார். அவ்வகையில் அவர் நடத்திய முதல் உலகத்தமிழ் மாநாடு சிறப்பு மிக்கது. மலேசியப் பல்கலைக் கழகத்தின் இந்தியவியல் துறையின் தலைவராகத் தனிநாயகம் அடிகளார் பணியாற்றினார். இந்தக் காலத்தில்தான் முதல் உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கை அங்கு நடத்தினார். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். தமிழியல் ஆய்வு என்பது உலகம் தழுவிய ஆய்வாக முழுமையாக இம்மாநாட்டின் மூலம் வடிவம் பெற்றது.

1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டுக் கருத்தரங்குகளிலும் சிறப்பான கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இம்மாநாட்டில் அடிகள் முழுமையாகப் பங்கேற்கும் வாய்ப்பு குறைவாக இருந்தது. 1973இல் பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டை அடிகள் சிறப்பாக நடத்தினர். அறிஞர் பிலியோசா அவர்களுடன் இணைந்து இம்மாநாடு நடத்தப்பட்டது. மிகச் சிறப்பான ஆய்வுக் கட்டுரைகள் இதில் இடம்பெற்றன. 1974இல் யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. ஐந்தாவது மாநாடு நடக்கவிருந்த தருணத்தில் (1980) அடிகள் மறைந்தார்.

1966-1980 இடைப்பட்ட காலங்களில்நடைபெற்ற உலகத்தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்குகள் அனைத்திலும் உலகத்தரம் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டு தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளன. இத்தொகுதிகளில் காணப்படும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு மேலும் மேலும் தமிழியல் ஆய்வை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் மிகுதி. இவ்விதம் உலக அளவில் தமிழியல் ஆய்வை வளர்த்தெடுத்த அறிஞர் பேராசிரியர் தனிநாயகம் அடிகள் முன்முயற்சியால்தான் சென்னையில் உள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் உருவாக்கப் பட்டது. யுனெஸ்கோ உதவியுடன் இந்நிறுவனம் மிகச்சிறப்பாகச் செயல்படுவதற்கான அடிப்படைகளை உருவாக்கியவர்களில் தனிநாயகம் அவர்களுக்கு முதன்மையான இடமுண்டு. அடிகள் உருவாக்கிய ஆய்வு மரபுகள் இன்றும் தொடர்கிறதா? என்ற கேள்வியை அவரது நூற்றாண்டில் கேட்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அரசு சார்ந்த ஆய்வு நிறுவனங் களில் பணியமர்த்தப்படும் பலரும், கல்வியாளர்களா? என்பது அய்யத்திற்கு இடமளிக்கிறது. ஒரு ஆய்வுக் கட்டுரைகூட எழுதாதவர்கள் உயர்ஆய்வு நிறுவனங் களின் உயர் பதவியில் அமர்த்தப்படுகிறார்கள். ஆய்வு மரபுக்கு எள்ளளவு கூடத் தொடர்பு இல்லாதவர்கள் எப்படி ஆய்வு நிறுவனங்களில் பணியாற்ற முடிகிறது. வேறு அரசு சார்ந்த நிர்வாக நிறுவனங்களைப் போலவே ஆய்வு நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் கருதும் மனநிலை உருவாகியுள்ளது. கல்வியாளர்களாகப் பயிற்சி பெறாத பலர் அரசியல் கட்சி ஆதரவுடன் துணை வேந்தர்களாகிவிடுகிறார்கள். பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் என்பவை வெறும் நிர்வாக நிறுவனங்களாகிவிடுவதில்லை. அவை தனிப்பட்ட புலமையையும் பயிற்சியையும் உடையவர்கள் இடம் பெறவேண்டிய இடம். கடந்த இருபது ஆண்டுகளாக இந்தத் தன்மை சீரழிந்துள்ளது. ஆய்வுத் தரம் படிப் படியாகக் குறைந்துவிட்டது. எதிர்காலத்தில் சிறந்த ஆய்வுகள் உருவாவதற்கான ஆய்வுநிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளனவா? என்ற கேள்வி நம்முன் உள்ளது. அறிஞர் பேராசிரியர் தனிநாயகம் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் தருணத்தில் மேற்குறித்த நிலைமைகள் மாறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் சிந்திப்போமாக.

Pin It