எனக்கு அறிமுகமான இருளர் பழங்குடி மக்கள் பற்றிய கவிதைகளை அவர்கள் மொழியான இருளர் மொழியிலேயே எழுதியிருப்பது வாசகனை சித்திரவதைப்படுத்தும் நோக்கத்திலல்ல, அவர்களிடம் கேட்டதை, கேட்டபடி, எழுத்து வடிவம் இல்லாத அவர்கள் மொழியிலேயே கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்பதாலும் தான்.  கீழ் நாட்டு மொழிகளின் கலப்பால், கொஞ்சம் சிரத்தை மேற்கொண் டால், எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய அளவில் தான் அம்மொழி தற்போது இயங்கி வருகிறது.  இருந்தபோதிலும் சொல்ல வரும் செய்தி புரியாமல் போய்விடக் கூடிய வாய்ப்பிருக்கிறது என்பதால் கவிதைகளின் கீழ்ச் சற்றே மரபுமீறலாக இருந்தாலும் குறிப்புகள் கொடுக்க வேண்டியதாயிற்று.  அத்தோடு தொன்மங்களாகவும், குறியீடுகளாகவும் இயங்கும் முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை முறையைக் கொண்ட, பழங்குடிகளின் சிந்தனைப்போக்கை என்னால் தமிழ்ப்படுத்த முடியுமே தவிர, உணர்வுப் படுத்த முடியுமென்று தோன்றவில்லை.

மண்ணுக்காரன்

tribal_woman_340எல்லாம்போடுவினா

நா

வெதே போட்டபிம்புதே

வெளஞ்சா

கூரே தேடி வரும்

கொள்ளு ராகி மௌhகூ

வள்ளமே ஒடாய்கும்

இச்சாமே சாக்கே தூக்கி போகினா

ரேசானு வாங்க

கரும

ஊத்தி குதிச்சா

ஊத்து பீச்சும்

எலும்பூம் அழுகும்

வெள்ளகுல சீமே

அய்யா கால் வெச்ச பிம்புதா

அடிக்குது வரட்டு இடி

மலே பெணாங்கி பெணாங்கி

துப்புது வெங்கச்சாங்கல்லே

கரும- கரு மான், பிம்பு - பின்பு

இருளர் பதியில் விதைப்பதையும் அறுப் பையும் தொடங்கி வைப்பவன் மண்ணுக் காரன்.  விளைந்த பிறகு வள்ளம் உடைந்து போகுமளவுக்கு அவன் பங்கு வீடு தேடி வரும்.  மான் குதித்தாலே மலைகளில் ஊற்று பீறிட்டுவரும்.

........ அய்யா வரும் வரை

இப்போது இடி போன்ற ஓசையோடு ஆழ் துளைக் கிணற்றுக்காக மலை துளைக்கப் படுகிறது.  கற்களை சபித்து துப்புகிறது மலை.

செட்டி

அஞ்சு இட்லிக்கூ

ஆறு ஏக்கரே கொடாத்து

காலேவாயிலே

கல்லூ சொமக்கே நா

மண்ணுபாசோ விடுகாதில்லே

ம்க்கூம்

எல்லா சூளேயும்

இச்சாதாஞ் செவக்கு

ஐந்து இட்லிக்கு விலை ஆறு ஏக்கர்.  இருளனிடம் கைப்பற்றிய நிலத்தில் செங்கல் சூளை அமைக்கிறார்கள் கரியன்செட்டிகள்.  மண்ணைப் பிரிய மனம் இல்லாத இருளன் அதே சூளையில் ரத்தம் சுண்ட மண் சுமக் கிறான்.

அன்பார்ந்த பெரியோர்களே...

அச்சோ பொம்மையோ

சுண்டுனா மட்டுந்தே

காலே மடாக்கி புட்டே வாங்குன பின்னாக்கு

ஊந்தி நடக்கினா

பாத்துக்கொண்டே இருக்கேமு

தடியே ஒடகாலே

ஆளுஞ்சாகாலே

ஓட்டு போட்டுக்கொண்டே இருக்கேமு...

நாமு தந்தேமு

அவரு திந்தேமு

உனி

தோல் பக்கி கௌhம்ப

வசல்லே கிளி கத்துன்னாத்தே

வரும்

தோல் பக்கி- வெளவால்

இருட்டும் நேரத்தில் வாசலில் வந்து கிளி கத்தினால் ஊரில் உள்ள எல்லோருக்கும் சமமாய் ஏதாவது கிடைக்கும், நல்லது நடக்கும் என்பது குடிகளின் நம்பிக்கை.

ஓட்டு கேட்கிறார்கள், போடுகிறார்கள், நாங்கள் தந்தோம், அவர்கள் தின்றுவிட்டு போய் விட்டார்கள்.  இனி கிளி கத்தினால் தான் உண்டு...

அட்டவணை அய்ந்து

அச்சா அஞ்சூரு

இச்சா அஞ்சூரு

ரெண்டூ கிட்டதா கெடாக்கு

நேரா பிரிச்சா

பிரசிரெண்டு நாம்மாளுதே

குறுக்கா வகுந்து

குள்ளனா ஆளுறா

எத்து ஒடாம்புலே

எவனோ தலே

இதூக்கூ

வெட்டு தழே வேறே

வெட்டு தழே - வெட்டியதை ஒட்ட வைக்கும் மூலிகை

ஒரே இடத்தில் இருக்கும் ஆதிவாசி கிராமங்கள் கீழ் மேலாகப் பிரிக்கப்பட்டு அவர்கள் சிறு பான்மையாக்கப்பட்டு, சமவெளி மக்களின் ஆளுகைக்குள் கொண்டுவரப்படுவதைக் கேள்விக் குள்ளாக்குகிறான் ஒரு மலைமகன்.

இறக்கை தின்னும் குருவி

வேங்கே மடுவிலே

வெடி போடூம் வலையா

நா

வெளஞ்சே கெண்டே

நல்லாதிந்து

ஆடி மூஞ்சாச்சு

ஏங்குஞ்சும் சாகேடா

குட்டீயே கொல்லுகாதில்லே

சென மான் சுத்துதுன்னா

வெலயே விரிக்காதில்லே

முச்சூடும் சொரண்டும் பழக்கோ

முடுகனுக்குமில்லே

ரெக்கே திங்கா பக்கி

புங்கரே கேட்டு

போட்டுக்கோயி

சொக்குமரப்பட்டே

கெரையே கொன்னு

நாட்டுக்குள்ளே போடுகாக்காகாது

சாபம்

போட்டுகொனே ஓடு

ரெக்கே -சிறகு

சொக்குமரப்பட்டே -  இந்த மரத்தின் இலையை அல்லது பட்டையைக் கசக்கி நீரில் போட்டால் மீன்கள் மயங்கி மிதக்கும்.  ஆதி வாசிகள் பெரியமீன்களைப் பிடித்துவிட்டுக் குஞ்சுகளை நீரில் விட்டுவிடுவார்கள்.  கொஞ்ச நேரத்தில் அவை மயக்கம் தெளிந்து நீந்த ஆரம்பித்துவிடும்

வெடி போடுதல் - தோட்டாக்களை நீருக்குள் வெடிக்க வைத்து மீன்பிடிக்கும் சமவெளிக் காரர் களின் முறை.

கீழிருந்து வந்தவர்கள் நீர்நிலைகளில் தோட்டா போட்டு வளர்ந்த மீன்களையும் குஞ்சுகளையும் ஒருங்கே கொன்று குவிக்கிறார்கள்.  குட்டி களையும், சூல்கொண்ட மிருகங்களையும் கொல்வது பழங்குடி மக்களின் வழக்கம் அல்ல.  அப்படிச் செய்பவர் களைப் பார்த்து ‘உன் உடலின் ஒரு பாகத்தையே உண்பாயா’ என்று கேட்கிறார் ஓர் ஆதிவாசி.

ஆடு விடு தூது

கப்போம் கட்டி

காட்டுலே உடுகே

ஒப்பே சோலே வரே

ஓடியோடி மேய்க்கே

நல்லா மேஞ்சென்னா செய்காது

நீ திந்தா புண்ணியம்

பரவால்லே நரி திந்தாலும்

ஆருக்குமில்லாமே

ரேஞ்சர் பொண்ணு கண்ணாலத்துக்கூ

கரியாகப்போரே

செம்போத்து குறூக்கே பறாக்கு

கோசி!

என்னே

கொன்ணு திந்துரு இப்பவே

ஒப்பே சோலே - பயிர மரச் சோலை

ஆட்டுக்கு நல்ல தீனி கிடைக்கவேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுத்து ரிசர்வ் காட்டில் மேய்க்கிறான் கோசி.  தான் நன்றாக மேய்ந்தாலும் அவளுக்கு என்ன லாபம் என்று கேட்கிறது ஆடு.  உனக்கும் இல்லாமல் காட்டுநரிக்கும் இல்லாமல் ரேஞ்சர் வீட்டுக்கு விருந்தாகப்போகிறேன்.  செம்போத்து குறுக்கே பறக்கும் கெட்ட சகுனமும் தெரி கிறது.  எனவே “கோசி! என்னே கொன்ணு திந்துரு இப்பவே” என்கிறது அது.

ஒரு சூழலியல் கண்காட்சியின்

பார்வையாளர் குறிப்பு

பக்கி

பம்மு

யானே

குட்டே

குப்ளா

கூமே பாரு

நாரைகல்லு

கராடி

கல்லாத்து கரே

பாடு பந்தி

மயிலு

கோகிலா

காட்டு நாயி

காடு

அச்சா எல்லாமே வெக்கே

கிழிந்த காயாம்

சீழு

அழுகாச்சு

நடுங்கிய காலூ

கெஞ்சிய கையீ

ஒளிஞ்ச பாறே

முரிந்தெ எலூம்பூ

உருவினா நராம்பூ

இச்சா

வெக்கியா நீவிரு

எத்து சனத்தினே

ஒத்தே போட்டா!

ஒத்தே போட்டா!

பக்கி - குருவி, பம்மு - பழம், குப்ளா - ஆந்தை, கூமே பாரு - கரும்பருந்து, நாரைக்கல்லு - நாரை, பாடுபந்தி - காட்டுப்பன்றி, கோகிலா - குயில்.

சூழலியலாளர்கள் நடத்தும் ஆடம்பரமான கண்காட்சிகளில் மரம் மட்டைகளும், விலங்கு களும், பறவைகளும், புழு பூச்சி களும் இடம் பெறுகின்றன.

நாங்கள் இல்லாமல் காடா? வதைபடும் எம் மக்களை ஏன் மறைத்து வைக்கிறாய்?

ஓடியன்

மொக்கே பொருச்ச குஞ்சு

நீராடுகாக்கு

கருவேலெ மரமொடுச்சு

கொடிங்கெரைக்கு போகேமு

நெலா

கள்ளி முள்ளு கிழிச்சு

பாலே வடிக்கூ

எலே விரிச்சு சொக்குகா பயிரமரம்

கேளயாடுகா கத்தூம் சத்தம்

கேக்காக்கு

கொளாப்பே கண்ணுல வெச்சு

ஊரெல்லாம் சோருந்தண்ணியும் தேடுகே

நீர் வெக்க கெசாங்கு

ஏங்குங்கெடாய்க்கலே

குதிக்கா கப்பே

எத்து காலு மேலே

குந்திரிக்கே கொத்துகா

நாக்குலே

பட்டிசாலே வண்டாரி

பொறயடிக்கா

வெளிங்கக்கல் மொக்கேலே

வெடிபோடுகாங் குறுதலே

குள்ளான்

கொழலோடே

குக்கிக்கெடாக்கா

என்னே வெராட்டகாக்கு

சோலே கெடாந்து போன

நமு லொண்டி

எம்மே பாத்து கொலேக்கூ

நித்துதே திருடி

நின்னே தெகேய் மேலே போட்டு

தொரைகா சேத்து வெச்ச

பணத்தே! தின்னே... ந்தப்பா

ஏழு உருப்படியூம் லெத்து

ஒண்டியாகி வருகேமு

ஒன்னா நிப்பாமா

ரேசா

கீழ்நாட்டுகயிருந்து

வெராட்டகாக்கு வருகாரு

எம்மே

கும்கிகா

இப்போ என்னே

அப்புறோ நின்னே

மலை பொரித்த குஞ்சான யானை அந்நியன் நட்டுவைத்த கருவேல மரங்களை உடைத் தெறிந்து விட்டுக் காட்டாற்றுக்கு குளிக்கப் போகிறது...  கள்ளி முள்ளில் சிக்கி நிலவு குருதி வடிக்கும் ஒரு இரவில்.

கேளையாடு கத்தும் சத்தத்திற்கு பயிர மரம் காதுகளை விரித்துக் கொண்டு காத்துக் கிடக்கிறது.  கண்ணில் விளக்கை வைத்துக் கொண்டு உணரும் நீரும் தேடுகிறது யானை.  நீரைத் தன்னில் சேமித்து வைத்திருக்கும் நீர்முள்ளிக் கிழங்கும்கூட கிடைக்க வில்லை.

பசியில் சோர்ந்த என் நிலையைப் பார்த்து தவளை (கப்பே) என் கால் மீது குதிக்கிறது.  தேள் (குந்திரிக்கே) என் நாவில் கொட்டுவது போன்ற தாகம்.

பட்டிசாலை என்ற ஊர்த் தலைவன் (வண் டாரி) கிழக்கே பொறை (மத்தளம்) அடிக்கிறான்.  மேற்கே வெங்கச்சாங்கல் மொக்கையில் பட்டாசு வெடிக்கிறார்கள்.  துப்பாக்கியோடு கீழிருந்து வந்து தோட்டம் போட்டிருக்கும் குள்ளான் காத்து நிற்கிறான் என்னை விரட்ட.

காட்டுக்கு (சோலை) சொந்தமான உயிரான நாய் மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்டு சகவிலங்கான என்னைக் காட்டிக் கொடுக்கிறது.

உன் காட்டைத் திருடி உன்னை அநாதை யாக்கிவிட்டு (தேகேய்).  அதில் வாழையும் கரும்பும் விதைத்திருக்கிறான் அந்நியன்.  அதைத்தானே தின்றேன் என்ற தவறு?

காட்டில் இருக்கும் ஏழு யானை (இருளரில் ஏழு குலங்கள் உள்ளன) பலத்தோடு நான் வரு கிறேன்.  நீயும் நானும் இணைந்து நிற்போமா?

ரேசா (ரேசமூப்பன்) கீழ்நாட்டிலிருந்து என்னை விரட்ட கும்கி யானை (பழக்கப்படுத்தப் பட்ட யானை) வருகிறதாம்.

அது வந்தால்

இன்று நான்

நாளை நீ!

ஒடியன்: தாயின் கர்ப்பத்திலிருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி.

இன்று இயற்கையின் மடியிலிருந்து வனத் தையும் உயிர்களையும் திட்டமிட்டுச் சிதைத்து அழிக்கும் ஒடியன்கள் கீழ்நாட்டிலிருந்து வந்து மலை முழுவதும் நிறைந்து கிடக் கிறார்கள்.

சகுனா குருவி

என்னாதுக்கே... மசலு

புல்கடிக்காப்பவெ நெனச்சே

சோரே பீ எதுன்னு தெரிகாலே

செம்ம போரா வழி புரிகாலே

என்னாக்கு பெனாங்கறா

இச்சா வந்து மாசாரு குருவியா

வாச்சரூ

ஓஓஒ...

அச்சாமே கெடாக்கு பொழாப்பு

குட்டி காவலுக்கு டக்குனா

காலமா காடுனே

காக்கறது நாமுதே

இப்ப வந்துகொனு சொல்லுகாது

இல்லாத நாயாத்தே

ஏங்கிருந்து வந்தாமலே

என்னாக்கு வந்தாரு

நீக்கு

செப்புளிஞ்சா எலே தெரிகாலே

கொட்டாலே ரொங்குற

கொடி தெரிகாலே

செம்புளியே புடிக்காக்கு

ஏங்கிருந்து வந்தாமலே

என்னாக்கு வந்தாரு

பலிபொட்டே பதுங்கூ

குழி தெரிகாலே

சீதரி பக்கி

முட்டே தெரிகாலே

ஏங்கிருந்து வந்தாமலே

என்னாக்கு வந்தாரு

எம்க்கூ

கரட்டீமலேதா கோக்கொடத்தி

தாசங்கரே நாளிதா

தம்மாமி

சீங்க மேடுதா

சினகே

வீசுகல் தக்கு தா

அம்மே...

அஃகா

ஆரூ... இவ்வே.?

மண்ணுக்காரானா

வடுகி வெறகெடுப்பா

வள்ளி சொப்புரிச்சா

என்னாக்கு எழுதறா பைனு

இவ்வே ஆரூ...?

தெசையே அரிஞ்சு போட்டன்னா

மரமரமா மொழாய்க்கும்

நத்தாத்துலே டாகு கடாஞ்சு

கொப்பேக்கு புட்டு போட்ருவே அவேனெ

சகுனா குருவி கத்தூ

தாட்டியுடு கேளே மூப்பா...

மசலு - முயல், சோரா - காட்டுப்புறா, மசாரு குருவி - உளறுவாய் குருவி, டக்குனா - நரி

செம்ம - செம்மான், டாகு - கீரை, கொப்பே - சுடுகாடு, சகுனா குருவி - கெட்ட சகுனம் காட்டும் கருவி

புட்டு - ராகி களி, வீசுகல் தக்கு- முன்னோர்கள் வாழ்ந்ததற்கு சாட்சியாய் ராகி அரைக்கும் கல் கிடக்கும் இடப்பகுதி, சொப்பு இலைகள், சினமே- சின்னம்மா

குருவி வகைகள் - கொட்டாலே, பலிபொட்டே, சீதிரி- சருகு சிட்டு.

இது எங்கள் காடு, இங்கு வாழும் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் பற்றி எங்களுக்கு மட்டுமே தெரியும்.  இந்த மலை தான், எனக்குத் தாய், தந்தை, சம்பந்திஎல்லாம், என் காட்டுக்குள் வந்து என்னை ஆள நீயார் என்று வனத்துறை ஊழியரைக் கேள்விக்கு உட்படுத்தி, கெட்ட சகுனத்தை முன்னறிவிக்கும் சகுனா குருவி கத்துகிறது, கொலை செய்ய நாங்கள் விரும்பவில்லை.  அவரை சீக்கிரம் அனுப்பி விடு என்று மூப்பனை எச்சரிக்கிறாள் ஒரு ஆதிவாசிப் பெண்.

ஒடியன் (கவிதைத் தொகுப்பு) விரைவில் என்.சி.பி.எச். பதிப்பாக வெளிவர இருக்கிறது...

Pin It