அந்தர்ஜனம் என்ற சொல், அடைத்த கதவுகளுக்குப் பின்னால் தன்வாழ்வைக் கழிக்கும் நம்பூதிரி சமூகப் பெண்ணினைக் குறிப்பதாகும். இங்கு அறிமுகப்படுத்தப்படும் இந்நூல், அந்தர்ஜனங்களின் வாழ்க்கை குறித்து நம்பூதிரி குடும்பப் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியரும் ஓர் அந்தர்ஜனம்தான். இந்நூலைப் புரிந்துகொள்ள, நம்பூதிரிப் பிராமணர்கள் குறித்த சில செய்திகளைச் சுருக்கமாகவேனும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

நம்பூதிரி:

கேரளத்தின் சமூக வாழ்வில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை அரசியல், பண்பாடு, பொருளாதாரம் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்திவந்தவர்கள் நம்பூதிரிப் பிராமணர்கள் ஆவர்.

நம்பூதிரி சாதியின் தோற்றம் குறித்த செய்திகள் ‘கேரளோற்பத்தி’, ‘கேரளமகாத்மியம்’ என்ற மலையாள புராணங்களில் இடம்பெற்றுள் ளன. பரசுராமன் என்ற முனிவன் துளுநாட்டிலும், கேரளத்திலும் அறுபத்துநான்கு பிராமணர் குடி யிருப்புகளை உருவாக்கி, அதில் நம்பூதிரிப் பட்டத் தையும் வழங்கியதாக இப்புராணங்கள் குறிப்பிடு கின்றன.

பூதேவர்களாக அழைக்கப்பட்டதால் நம் பூதிரிகளுக்குப் பணிவிடை செய்வது அனைத்துச் சாதியினரின் கடமையாக விதிக்கப்பட்டது. கேரளத்தின் கோவில்களில் பணிபுரியும் சூத்திரர்களும், நிலவுடைமையாளர்களாகவும், போர்வீரர் களாகவும் விளங்கிய நாயர்சாதியினரும் தேவலோக அழகிகளான அப்ஸரஸ்களின் வழித் தோன்றலாகக் கருதப்பட்டனர், பூதேவராக விளங்கிய நம்பூதிகளை மகிழ்ச்சியடையச்செய்வது அப்ஸரஸ்களின் வழிவந்தோரது கடமையாயிற்று. நம்பூதிரி ஆண்களுடன் பாலுறவுகொண்டு அவர் களை மகிழ்விப்பதே, மகிழ்ச்சியடையச் செய்வதன் பொருளாயிற்று. அத்துடன் இச்சமூத்தைச் சார்ந்த பெண்களுக்கு விதிக்கப்பட்ட கடமை யாகவும், பெருமைக்குரிய ஒன்றாகவும் விளங்கியது.

நம்பூதிகளின் திருமண உறவு:

நம்பூதிரி வாழும்வீடு ‘இல்லம்’ எனப்பட்டது. இல்லத்தின் தலைவனாக வீட்டின் மூத்தமகன் விளங்குவான். குடும்பச் சொத்துக்கள் இவனுக்கே உரிமையானவை.

மூத்தமகன் மட்டுமே தன் நம்பூதிரிச் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடியும். அவனது தம்பியர் ‘சம்பந்தம்’ என்ற பெயரில் நாயர் மற்றும் கோவில்பணியாளர் குடும்பங் களைச் சார்ந்த பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வர். இவ்வுறவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தைவழிச் சொத்தில் உரிமை கிடையாது.

அந்தர்ஜனம்:

நம்பூதிரிக் குடும்பத்தில் மூத்தமகன் மட்டுமே தன்சாதிக்குள் திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற விதிமுறையால், நம்பூதிரிச் சாதிப் பெண் களுக்கு மணமகன் கிட்டாதநிலை இருந்தது. இதனால் ‘முதிர் கன்னியர்களாக’ இல்லத்தில் வாழ்நாளைக் கழிக்க வேண்டும் அல்லது ஒரு குடும்பத்தின் மூத்த நம்பூதிரிக்கு இரண்டாம் தாரமாகவோ, மூன்றாம் தாரமாகவோ வாழ்க்கைப்பட வேண்டும்.

திருமணமாகி நம்பூதிரியின் இல்லத்திற்கு வரும் பெண்கள் ஆணாதிக்கத்திற்கு அடங்கி கட்டுப்பட்டியான சூழலிற்குள் வாழ்ந்துமடிய வேண்டும். மொத்தத்தில் திருமணமான பெண் களும், கன்னிப் பெண்களும் தம் வாழ்நாளை இல்லத்தின் கதவுகளுக்குப் பின்னால் கழிப்பர். அந்தர்ஜனம் என்ற பெயரைத் தாங்கி வாழ்ந்த நம்பூதிரிப் பெண்களின் அவலநிலை குறித்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1907) ‘லச்சுமிபாய்’ என்ற பெண்களுக்கான பத்திரி கையில் வெளிவந்த கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதியையும், 1937ஆம் ஆண்டில் தென் திரு விதாங்கூர் சட்டமன்றத்தில் (ஸ்ரீமூலம் சட்ட மன்றம்) தேவகி அந்தர்ஜனம் என்ற, நம்பூதிரிப் பெண் ஆற்றிய உரையின் ஒரு பகுதியையும் அந்தர் ஜன நூலின் முன்னுரையில் தேவிகா குறிப் பிட்டுள்ளார். அப்பகுதிகள் வருமாறு :

தம்முடைய செல்வத்திற்கும், உயரிய குடிப்பிறப்பிற்கும் பெயர் பெற்ற நம்பூதிரிகளின் இல்லங்களைப் பாருங்கள். இவற்றுள் பெரும் பாலானவற்றில் ஒருவேளை உணவிற்கு இரண்டு பறா (ஏறத்தாழப் பதின்மூன்று கிலோ) அரிசியும், அதற்கு ஏற்ற அளவு பதார்த்தங்களும் தேவைப் படும். இதைச் சமைக்கும் முழுப்பொறுப்பு இரண்டு அல்லது மூன்று அந்தர்ஜனங்களுடை யது. வேதம் ஓதுதல் தொடர்பான ‘ஓத்து, போன்று விருந்துகளிலும் இதைவிட அதிகமாகச் சமைக்க வேண்டியதிருக்கும். அப்போது தம் பெண் உறவினர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு சமையல் செய்வர். நிலவு போன்ற முக முடைய இப்பெண்கள் கொதிக்கும் அரிசியுடன் கூடிய பெரிய பித்தளைப் பாத்திரங்களை வளையல் அணிந்த மெல்லிய கரங்களால் தூக்கி இதயமற்ற நம்பூதிரி ஆண்களின் மேற்பார்வையில் கஞ்சித் தண்ணீரை வடிப்பதைப் பார்த்தால் சமையல் செய்வதில் வல்லவனான பீமனே வியந்துபோவான்.

***

பெரும்பாலான அந்தர்ஜனங்கள் கோஷா முறையைப் பின்பற்றுகிறார்கள். அவர்களுக்குக் கண்கள் உள்ளன, ஆனால் மகிழ்ச்சியூட்டும் எதையும் பார்க்கவிடாது தடைசெய்யப்பட்டுள் ளன. அவர்களுக்குக் கால்கள் உள்ளன, ஆனால் அவற்றின் இயக்கம் வரையறுக்கப்பட்ட எல்லைக் குள் மட்டுமே நிகழும்படி கட்டுப்படுத்தப்பட்டுள் ளன. வீட்டு உபயோகப் பாத்திரம் போன்றதே அவர்களுடைய தகுதியும். சுருங்கச் சொன்னால் அந்தர்ஜனம் என்பவர் சிறைப்பட்ட பிராணி. அந்தர்ஜனங்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப் படுகிறார்கள். நல்ல காற்றைச் சுவாசிக்கவும், உலகைப் பார்க்கவும் அவர்கள் அனுமதிக்கப்படு வதில்லை, கத்திக்கொண்டே பிறக்கும் அந்தர் ஜனம் கண்ணீரில் வாழ்ந்து அழுதுகொண்டே இறக்கிறாள்.

தேவகி நிலையங்களோடு:

இச்செய்திகளின் பின்புலத்தில், தேவகி நிலையங்களோடு எழுதிய ‘அந்தர்ஜனம் ஒரு நம்பூதிரிப் பெண்ணின் நினைவுகள்’ என்ற நூலைக் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தைச் செய்து கொள்ளலாம்.

தமது எழுபத்தைந்தாவது வயதில் மலையாள மொழியில் ‘நஷ்ட்ட போதங்களில்லாது’ (இழப் புணர்வு இல்லாத) என்ற தலைப்பில் தன் வாழ்க்கை நிறைவுகளைத் தேவகிநிலையங்களோடு சிறுநூலாக வெளியிட்டார். இச்சிறு நூலில் ‘அன்பில்லாத ஒளிகுன்றிய நம்பூதிரிக் குடும்பச் சூழலில் வளர்ந்த’ அவரது சொந்த வாழ்க்கை இடம்பெற்றிருந்தது. மலையாள வாசகர்களி டையே இதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து ‘யாத்திரை: காட்டிலும் நாட்டிலும்’ என்ற தலைப் பிலான அவரது தன்வரலாறு வெளியானது.

மேற்கூறிய இரு நூல்களிலிருந்து தேர்ந் தெடுத்த சில பகுதிகளையும், மலையாளப் பத்திரி கைகளில் இவர் எழுதிய சில கட்டுரைகளையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்நூல் உரு வாக்கப்பட்டுள்ளது.

‘நஷ்ட போதங்களில்லாது’ என்ற தலைப் பிலான ஆசிரியரின் முதல் நூலை ராதிகா மேனனும், ‘யாத்திரை; காட்டிலும் நாட்டிலும்’ என்ற நூலுடன் சில கட்டுரைகளையும் இந்திரா மேனனும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள் ளனர். அத்துடன் தனித்தனியாக மொழிபெயர்ப் பாளர் குறிப்புரையும் எழுதியுள்ளனர்.

கேரளத்தின் கடந்தகால வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்திராத பிறமொழி வாசகர் களுக்கு உதவும் வகையில், கேரள நம்பூதிரிகள் குறித்த ஆழமான அறிமுக உரையை ஜெ.தேவிகர் எழுதியுள்ளார். நூலில் இடம்பெறும் பல மலை யாளச் சொற்களைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் கலைச்சொல் அகராதி ஒன்றும் நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளது.

நூல் நுவலும் செய்திகள்:

இருபத்து எட்டு இயல்களைக் கொண்ட இந்நூலில் நூலாசிரியரின் பக்ரவூர் இல்லம், அவரது பெற்றோர்,. உடன்பிறந்தோர் குறித்த செய்திகள் முதல் இயலில் இடம்பெற்றுள்ளன. நம்பூதிரிப் பெண் கருவுற்றவுடன் சிறப்பு வழிபாடு களும், வேண்டுதல்களும், ஆண்குழந்தை பிறக்க வேண்டி நடைபெறும். ஆண் குழந்தை பிறந்தால் இல்லப் பணியாளர்கள் குலவையிட்டு மகிழ்ச்சி யான செய்தியை அறிவிப்பர். பெண் குழந்தை பிறந்தால் கதவை மெதுவாகத் தட்டி கிசுகிசுப்பர்.

இரண்டாவது இயல் நூலாசிரியரின் அம் மாவைக் குறித்த சித்திரம் என்றாலும், நம்பூதிரி இல்லங்களில் வாழ்ந்து மடிந்த எத்தனையோ அம்மாக்களை அறிமுகப்படுத்தும் தன்மையது, குடும்பத்தலைவன் இறந்தவுடன் அவன் மனை விக்கு நேரும் அவமானங்கள், புறக்கணிப்புகள், பொருளாதாரச் சீர்குலைவு என்பவையும் இவ்விய லில் பதிவாகியுள்ளன.

சாதிவிலக்கம் செய்யப்படும் குடும்பத்தார், இவ்வாறு பாதிக்கப்பட்டோருக்கு வறுமையிலும் நூலாசிரியரின் அம்மா உதவியமை ‘பெண்களுக் கென்று சொந்தமாக எதுவும் கிடையாது’ என்று தனக்குத்தானே கூறிக்கொள்ளுதல் என்ற செய்தி களைக் கூறும் இவ்வியல் அம்மாவின் மரணத் துடன் முடிகின்றது.

மூன்றாவது இயலில் நம்பூதிரியில்லக் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை இடம்பெறு கிறது. வறுமை வாய்ப்பட்ட நம்பூதிரிப் பெண் களைத் தம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப் பதற்கு அழைத்துவந்து, தம் வீட்டில் தங்கவைத்து அவர்களின் உணவு, எண்ணெய்க் குளியல் ஆகிய வற்றைக் கவனித்துக்கொள்ளல், குழந்தைகளுக்குப் பசும்பால் கொடுக்க விரும்பாமை, குழந்தைகளின் உணவு, நாயர் பெண்கள் தொடுவதால் தீட்டு ஏற்படும் என்று அஞ்சி ‘உடுத்துத் தொடங்கல்’ என்ற சடங்கு நிகழும்வரை பெண்குழந்தைகளும், உபநயனம் நடக்கும் வரை ஆண் குழந்தைகளும் பருத்தி ஆடை அணியாமை, இல்லத்தில் சமைக்கப் படும் உணவுவகைகள் போன்ற செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

நம்பூதிரி விதவைகள் ஈர ஆடையுடன் உறங்க வேண்டிய அவலம், அந்தர்ஜனங்களின் அன்றாட வாழ்க்கைமுறை, வாழ்க்கைவட்டச் சடங்கு சார்ந்த நீராடல்கள் குறித்த செய்திகள் நான்காவது இயலில் இடம்பெற்றுள்ளன.

ஐந்தாவது இயல் அன்றைய கேரளத்தின் பாரம்பரிய ஆடைகள், அவற்றை உருவாக்கப் பயன்படுத்திய தாவரங்கள், பெண்கள் தம் மார்பை ஆடையால் மறைக்காமை, மார்பில் ஆடை யில்லாக் குறையை, கழுத்தில் அணியும் சில தங்க அணிகலன்கள் ஓரளவிற்கு ஈடுசெய்தல், விழாக் காலச் சிறப்பு உணவுவகை ஆகியவை குறித்து விவரிக்கிறது.

எழுத்தறிவிற்கும் சடங்கு, பெண் குழந்தை களுக்கான ‘உடுத்துத் தொடங்கல்’ என்ற சடங்கு, இச்சடங்கின்போது பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஒரே சொத்தாக அப்பெட்டி அமைதல். கணவன் வீட்டிற்குத் தன் உடைமை யாக, திருமண ஊர்வலத்தில் அதை எடுத்துச் செல்லுதல், நல்ல உணவு, நல்ல உடை, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாய் அமைதல் இம்மூன்றும் தான் அந்தர்ஜனத்தின் பிரார்த்தனையாக இருந் தமை. உடுத்துத் தொடங்கல் சடங்கிற்குப்பின் அப் பெண் குழந்தை பிற சாதியினரைத் தொட்டு விட்டால் நீராட வேண்டிய கட்டாயம், மாதப் பூப்பின் போது அதற்கென்று உருவாக்கப்பட்ட அறையில் தனித்திருத்தல் ஆகிய செய்திகளை ஆறாவது இயல் விவரிக்கிறது. அத்துடன் நூலாசிரியர் தாம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டதைத் தம் பதினைந்தாவது வயதில் திருமணம் செய்துகொண்டதையும் குறிப்பிடுகிறார்.

வளம் வாய்ந்த அந்தர்ஜன பெண்களும், பெண் குழந்தைகளும்கூடத் தங்க வளையல் அணியத் தடைவிதிக்கப்பட்டிருந்தும், பித்தளை யால் ஆன வளையல்களை அணிந்தமையும் ஏழா வது இயலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பற்பொடி, குளிக்கும்போது பயன்படுத்தும் சோப், முகம் பார்க்கும் கண்ணாடி, பாட்டுப் புத்தகங்கள் போன்றவற்றின் அறிமுகம் நூலாசிரியர்க்கும் அவரது சகோதரிகளுக்கும் தெருவில் கூவிவிற்கும் வியாபாரிகள் வாயிலாகக் கிட்டியதும் ஏழாவது இயலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக மாறு தலின் சிறு அசைவு அந்தர்ஜனங்களை எட்டியதின் சிறு அடையாளமாக இப்பொருள்களைக் குறிப் பிடலாம்.

பூப்படையும்வரை கோவில்மரங்களின் இடையே விளையாடியமை, குருவாயூருக்கு, கால் நடையாக அம்மாவுடன் பயணித்தமை, பேருந்து அறிமுகமானது, குடையை மறைவாக வைத்து குருவாயூரில் உணவுண்டமை, படகுப் பயணம் என ஆசிரியர் பெற்ற பயண அனுபவங்கள், அவர் வயதுக்கு வந்த பின்னர் தடைசெய்யப்பட்டவை யாக மாறிவிட்டன, இதை ‘சிறகொடிக்கப்பட்ட பறவையாக’ தாம் மாற்றப்பட்டு விட்டதாக எட்டாவது இயலில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

ஓணம் திருவிழாவையொட்டி நிகழும் ‘கைகொட்டிகளி’ (கும்மி) ‘குன்றிகுட்டியம்மா’ என்ற கைகொட்டிகளின் ஆசிரியை அவர் சொந்த மாக உருவாக்கிய பாடல்கள் ஆகியன குறித்து ஒன்பதாவது இயலில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

பெருமழையில் நிகழ்ந்த வெள்ளம் குறித்துப் பதினொன்றாவது இயலும், ஓணப்பண்டிகை குறித்தும் அது குறித்த எதிர்பார்ப்பினையும் பன்னிரண்டாவது இயலும், ‘துப்பட்டன்’ என்ற மருத்துவரைக் குறித்துப் பதின்மூன்றாவது இயலும் விவாதிக்கின்றன.

பதினான்காவது இயல் நம்பூதிரி இல்லங் களின் பொருளாதார வீழ்ச்சியையும், சிதைவையும் விவரிக்கின்றது. அதன் தொடர்ச்சி போன்று இருபத்தாறாவது இயலைக் குறிப்பிடலாம். தானியம் சேர்த்துவைக்கும் ‘பத்தையப்புரைகள்’ நிலச் சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு தேவை யற்றவையாக மாறியமையை இவ்வியல் குறிப்பிடு கிறது. மேலும் ‘சம்பந்தம்’ என்ற பெயரிலான மண உறவை நம்பூதிரி இளைஞர்கள் கைவிட்டுவிட்டு, தம் சுயசாதிக்குள் திருமணம் செய்யத் தொடங்கிய பின்னர் பத்தயப்புரைகளை அழித்து படுக்கை அறைகளாக மாற்றியமை, கூட்டுக்குடும்பம் மறைந்து தனிக்குடும்பங்கள் உருவானதும் பத்தயப் புரைகளின் பலகைகள், புதிய வீடுகளின் சன்னல் களுக்கும், கதவுகளுக்கும் பயன்பட்டமை ஆகியன குறித்து இவ்வியல் பதிவுசெய்துள்ளது.

பதினைந்தாவது இயல் நம்பூதிரி சமூக விதவைகளின் அவலநிலையை விரிவாகப் பதிவு செய்துள்ளது. மேலும் விதவை மறுமணம் குறித்த சிந்தனை நம்பூதிரி சமூகத்தில் உருவாகி, மெல்ல நடைமுறைக்கு வந்ததையும் தொடக்கத்தில் அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளையும் குறிப்பிடு கிறது.

எஞ்சியிருக்கும் இயல்களில் இடம்பெற் றுள்ள செய்திகளில் முக்கியமானவையாக இரண் டைக் குறிப்பிடலாம். முதலாவது, நம்பூதிரி இல்லங்களின் பொருளாதார வீழ்ச்சி, இரண் டாவது, நம்பூதிரி சமுதாயத்தில் சீர்திருத்தக் கருத் துக்கள் இடம்பெற்றுக் காலம்கடந்த மரபுகளைப் புறந்தள்ளும் போக்கு நம்பூதிரி இளைஞர்களிடம் உருவானமை இதனால் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.

***

தலித்துகள் என்ற பெயரிலான ஒடுக்கப் பட்டோர்களின் வரிசையில் தீண்டாமைக் கொடு மைக்கு ஆளாகாத மேட்டிமைச்சாதிப் பெண் களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்ற விவாதத் திற்குரிய கருத்து உண்டு. இந்நூலைப் படித்து முடித்ததும் இக்கருத்தில் ஓரளவுக்காவது உண்மை யுண்டு என்று கருத இடமுள்ளது.

தான் பிறந்த குடும்பம், தன் அம்மா, அப்பா, உறவினர், அண்டை அயலார் குறித்த செய்தி களுடன் தன் இளமைக்கால அனுபவங்களையும் நம்பூதிரி இல்லங்களின் வாழ்க்கை முறைகளையும் நம்பூதிரி சமூகத்தில் பெண்களுக்கான இடத் தையும் ஆசிரியர் கூறிச் செல்கிறார். இச்செய்தி களின் அடிநாதமாக நம்பூதிரிப் பெண்களின் வாழ்க்கை இடம்பெற்றுள்ளது. இந்நூலைப் படித்து முடித்தவுடன் ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்களின் அவலவாழ்வை ஊடுருவிப் பார்த்த உணர்வு ஏற்படுகின்றது.

***

இந்நூலைப் படித்து முடித்ததும் என் உள்ளத்தில் உருவான இரு உணர்வுகளை வாசகர் களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

முதலாவது உணர்வு :

இரக்கத்திற்குரிய அந்தர்ஜனங்களின் வாழ் வியலை நூலாசிரியர் எளிமையாகவும், தெளி வாகவும், எழுதியுள்ளார். தாம் எழுத எடுத்துக் கொண்ட நம்பூதிரி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் உற்றறியும் மனப்பாங்கும், எழுத் தறிவும் அவருக்குத் துணை நின்றுள்ளன.

அதேபோழ்து ‘சம்பந்தம்’ என்ற பெயரில் நம்பூதிரிக் குடும்பத்தின் ஆண்கள் மேற்கொண்ட மணஉறவில் குழந்தைகளை உருவாக்கிவிட்டு, குழந்தைகளுக்கும், தமக்கும் எவ்விதஉறவும் இல்லை என்று கைகழுவிவிட்டு சிலர் அடுத்த சம்பந்தம் மேற்கொண்டமை, இவ்வாறு கைவிடப் பட்ட பெண்கள் அல்லது நம்பூதிரிகளின் நாலு கட்டு இல்லங்களுக்குள் வாழும் உரிமையின்றி இல்லத்தின் சுற்றுப் பகுதியில் வாழ்ந்து மடிந்த பெண்கள் தந்தைவழிச் சொத்தில் உரிமையற்றுப் போன சம்பந்தவழிப் பிறந்த குழந்தைகள் ஆகியோர் நினைவுக்கு வருகின்றனர்.

இவர்களது வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில் அந்தர்ஜனங்களின் வாழ்க்கை பரவாயில்லை என்று கூறலாம். சம்பந்தம் வாயிலாக நம்பூதிரி களால் மணந்துகொள்ளப்பட்ட பெண்கள் தம் அனுபவங்களை எழுதி இருந்தால், அந்தர் ஜனங்களின் வாழ்க்கையைவிட அவலம் நிறைந்த தம் வாழ்க்கையை எழுதியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

தகழியின் ‘கயிறு’ நாவலில் சம்பந்தம் என்ப தன் பெயரால் நம்பூதிரிகள் மேற்கொள்ளும் பாலியல் சுரண்டல் மென்மையாகவும், ‘லலிதாம பிக்கா அந்தர்ஜனத்தின் ‘அக்கினிசாட்சி’ நாவலில் சற்று அழுத்தமாகவும் பதிவாகியுள்ளன. ஒரு வேளை மலையாள மொழியில் இது தொடர்பான படைப்பிலக்கியங்கள் வெளிவந்திருக்கலாம்.

இரண்டாவது உணர்வு:

அந்தர்ஜனம் என்ற பெயரிலான இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களுள் ஒருவரான இந்திராமேனன் டெல்லி கமலாநேரு கல்லூரியில், ஆங்கிலப் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். மற்றொருவரான ராதிகாமேனன், கொல்லம் பாத்திமா மாதா தேசிய கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணிபுரிபவர். தமிழில் வெளியான ‘அழகிய நாயகியம்மாள், முத்தம்மாள் பழனிச்சாமி, வீரம்மாள்’ ஆகியோரின் தன் வரலாறுகள், பல அரிய, சமூக வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியவை. ஆனால் தமிழி லிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமை யால் பிறமொழியினரின் கவனத்தை இந்நூல் ஈர்க்கவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஆங்கிலம் கட்டாய பாடமாகும். அதனால், அனைத்துக் கல்லூரி களிலும் ஆங்கிலத்துறை ஒன்றுண்டு. அதில் பணிபுரியும் தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட பேராசிரியர்களும் உண்டு. இதுபோன்ற தமிழ் நூல்களையும் நல்ல படைப்பிலக்கியங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியில் இவர்கள் ஏன் ஈடுபடுவதில்லை?

Pin It