“தனிமரம் தோப்பாவதில்லை” என்பது பழமொழி. பார்வைக்கு இது ஓர் எளிய கருத்தை உள்ளடக்கியிருப்பது போலத் தோன்றினாலும் ஆழமான பொருளை உடையதாக இருக்கிறது.

மனிதன் நாகரிக வாழ்க்கையை அவனுடைய சமூக உறவுகளை உருவாக்கி வளர்க்க முனையும் போதுதான் தொடங்கியிருக்கிறான். அவனுடைய வாழ்க்கையை மேம்படுத்த அவன் தொடர்ந்து முயற்சித்து வருகிறான். அந்த முயற்சியின் தொடர்ச்சியான அனுபவங்களை அவன் தன்னுடைய வரலாறாக வடிவப்படுத்துகிறான். அந்த வரலாற்றின் வளர்ச்சியிலிருந்தும், தாக்கத் திலிருந்தும் அவன் தொடர்ந்து புதியவற்றை உருவாக்கிக் கொண்டே வளர்கிறான். மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் அதற்கே உரிய பரிணாம வளர்ச்சி இயல்பாக அமைந்து விடுகிறது. அந்த வளர்ச்சி அவனுடைய சமுதாயத் தேவைகளைச் சார்ந்தே தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவனுடைய வரலாற்றி லிருந்து அவனைத் தனியே பிரிக்க முடியாது. எந்த ஒரு மனிதனும் தன்னுடைய வரலாற்றையும், வாழ்க்கையையும் சார்ந்தே சிந்திக்கிறான். அவன் தன்னைத் தன்னுடைய சமுதாய உறவுகளிலிருந்து பிரித்துக்கொள்ளும்போது அவனுடைய வாழ்க்கைச் சூழலிலிருந்து அந்நியமாகிவிடுகிறான். அந்த அந்நியமாதல் மனநிலை அவன் சார்ந்துள்ள அவனுடைய சமுதாயத்தில் அவனுக்குத் தேவை யானவற்றை அவனால் பெற முடியவில்லை. அவனுடைய மனம் சமுதாயத்தில் அவனுக்குத் தேவைப்படுவதைக் குறித்துச் சந்தித்து அவனை அதற்காக எதிர்வினை புரியச் செய்கிறது. அந்த வகையில் தனிமனிதன் அவனுடைய சமுதாயத் திற்கு எதிராகக் கலகம் செய்கிறான். அவனுடைய மனம் காமம், குரோதம், வன்மம் போன்ற உணர்வு நிலைகளுக்கு முதன்மை அளித்து அவற்றின் அடிப்படையிலேயே அவனைச் சிந்திக்க வைக்கிறது. அவனுடைய எதிர்வினைகளே அவனு டைய வாழ்க்கையாக அர்த்தம் பெறுகிறது.

அவனுடைய வாழ்க்கை அவன் சார்ந்துள்ள சமூக வாழ்க்கையினாலும், சமூக உறவுகளாலும் தான் தீர்மானிக்கப்படுகிறது என்ற மதிப்பீட்டுக்கு அவன் வருவதில்லை. அவனுக்குத் தேவையான உணவும், உடையும், உறைவிடமும் சமூகத்தி லிருந்தே அவனுக்குக் கிடைக்கின்றன என்ற உணர்வை அவன் இழந்து தனிமைப்பட்டுப் போகிறான்.

வரலாற்றினூடே உருவான எல்லாவிதப் படைப்புக்களும் தேவையைச் சார்ந்தே தோன்றி யவை. அவை உடன்பாட்டுத் தன்மையையும், எதிர் மறைத் தன்மையையும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ கொண்டிருக்கும். வர லாற்றின் இயக்கப் போக்கிலிருந்து எந்த ஒரு மனிதனும் முழுமையாக விலகிச் செல்ல முடியாது.

ஆகவே, வரலாற்றுப் பொருள்முதல் இயக்கக் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்வதுதான் அறிவியல் சார்ந்த வாழ்க்கை முறை.

அதை உணரும் விதத்தில், அந்தக் கண் ணோட்டத்தை வளர்த்து ‘தமிழ் இலக்கிய வரலாறு’ குறித்த மதிப்பீடுகளைக் கண்டறியப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தைத் தன் னுடைய ‘தமிழில் இலக்கிய வரலாறு’ என்ற புத் தகத்தின் வாயிலாக நிறுவுகிறார்.

மனித வரலாற்று வளர்ச்சியில் உற்பத்தி முறைகள் தொடர்ந்து மாறிக்கொண்டும், வளர்ந்து கொண்டும் இருப்பதை வரலாற்று உணர்வு உள்ளவர்களால் எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும். நிகழ்காலத் தேவைகளின் முக்கியத்துவம் முதன்மையாகக் கருதப்படும் வாழ்க்கைப் போக் கில் மனிதன் தான் வளர்ந்து வரும் வரலாற்றின் உணர்வை இழந்து விடுகிறான். அவன் தன் னுடைய வரலாற்றின் வளர்ச்சியை மீள்பார் வைக்கு உள்ளாக்கி மறுமதிப்பீடு செய்யும் போது தான் அவன் அறிவியல் அடிப்படையிலான வாழ்க் கையை உணரும் தன்மை பெறுகிறான்.

மனித வரலாற்றில் முதலாளித்துவ சமுதாயத் தோற்றத்தின் போதுதான் அவன் அறிவியலைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உரு வாகிறான். தன்னுடைய புதிய பிரச்சினைகளை அறிவியல் சார்ந்தே தீர்க்க வேண்டிய கட்டாயத் திற்கு உள்ளாகிறான். அதற்கு முன்பு அவன் இயற்கையைச் சார்ந்தே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்தான். அவனுடைய தேவைகள் நிலம் சார்ந்தவையாகவே இருந்தன. அவன் தன்னுடைய உழைப்பை நிலம் சார்ந்தே பயன்படுத்த வேண்டியிருந்தது. அதன் வளர்ச்சிப் போக்கில் மக்களை ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயம் உருவானபோது அது தொடர்பான கருத்துக்களை அவன் உருவாக்கினான். அவற்றின் அடிப்படையில் அவனுக்கான சமுதாயத்தை அவன் வடிவமைத்துக் கொண்டான். அதற்கு அவனுக்கு மதம் என்னும் வடிவம் அவனுக்குத் தேவைப்பட்டது. அதையும் அவனுடைய கடந்த காலத்திலிருந்தே அவன் உருவாக்கிக் கொண் டான். அதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை.

நிலவுடைமைச் சமுதாய அமைப்பில்தான் எல்லா மதங்களும் தோன்றின. முதலாளித்துவத் தோற்றத்திற்குப் பிறகு அவை கிளைகள் விரித்தன. புதிதாக ஒரு மதமும் தோன்றவில்லை. மனிதனு டைய கூட்டு வாழ்க்கையில் கலையும் இலக்கிய மும் முதன்மையான பங்கை வகித்து வருவதை வரலாறு நெடுகிலும் காணமுடியும். அவற்றைப் பயன்படுத்தி அவற்றின் உள்ளே மதக் கருத்துக்கள் நுழைக்கப்பட்டன. அந்தப் போக்கே அடுத்து வந்த வரலாற்றுக் காலகட்டத்தில் தொடர்ச்சியாக நிலை கொண்டு உருமாற்றம் பெற்று வருகிறது.

வாழ்விற்கும், சாவிற்கும் இடையில் மனிதன் தொடர்ந்து போராடிக் கொண்டே வளர்ந்து வருகிறான். அவனுக்குக் கடவுள் என்ற ஒரு படிமம் பல வகையிலும் தேவையாக இருக்கிறது. மனி தனுக்கும் அவன் சார்ந்துள்ள இயற்கைக்கும் உள்ள உறவை முடிவு செய்யும் ஒரு படிமமாகவே கடவுள் வரலாற்றில் இருந்து வருகிறார். இனியும் இருந்து வருவார். கடவுள் என்ற அந்தப் படிமம் வரலாற்றில் தோன்றிய ஒவ்வொரு மதத்திலும், அது தோன்றிய காலகட்டத் தேவைகளின் அடிப் படையில் மாறுபட்ட வடிவங்களாக உருவம் பெற்றன. அடிப்படையில் எல்லா மதங்களும் ஒரே கருத்தையும், ஒரே நோக்கத்தையும், ஒரே இலக்கை யும் உடையவையாக உள்ளன.

கடவுள் தொடர்பான கட்டுக் கதைகளும், கருத்துக்களும் நடைமுறைச் சடங்குகளும், ஆரா தனைகளும் அடிப்படைக் கருத்துக்களிலிருந்து மனிதனை அந்நியப்படுத்திவிட்டன. அதனால், ஒருங்கிணைந்து வாழ வேண்டிய மனிதன் பல வாறாகச் சிதறுண்டு மதங்களுக்குள் தனக்கான புக லிடத்தைத் தேடிக் கொண்டான். அதை அதிகார வர்க்கமும், அதைக் காப்பாற்றும் அரசியல் வடி வமும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள மதங்களைப் பல வகைகளிலும் பயன்படுத்தி வருகின்றன. வறுமையிலும், ஏழ்மையிலும், அறியாமையிலும் வாடிக்கொண்டிருக்கும் மக்களும் மதத்தையே புகலிடமாகக் கொள்ளவேண்டியிருக்கிறது. அதனால், அவர்கள் பல விதங்களிலும் சுரண்டப் படுவதை அறிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

இதுபோன்ற ஒரு புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்வதற்கான ஒரு கருவியாக அமைந்திருப்பது தான் ‘தமிழில் இலக்கிய வரலாறு’. கா.சிவத்தம்பி அவர்களின் ஆழ்ந்த ஆய்வுத் திறனை இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு வரியும் புலப்படுத்துவதை உணர முடிகிறது.

இலக்கியத் திறனாய்வு குறித்துத் தன்னுடைய முன்னுரையில் அவர் தெளிவாகக் குறிப்பிடு கிறார்.

“இலக்கியத்தின் வரலாறு’, ‘இலக்கிய வர லாறு’ ஆகாது. இலக்கியத்தின் வரலாறு என்பது சமூகத்தில் இலக்கியம் அதற்குரிய பண்புகளோடு வளர்ந்த முறையை எடுத்துக் கூறுவது. ஆனால், உண்மையான ‘இலக்கிய வரலாறு’ என்பது ஒரு சமுதாயத்தின் வரலாற்றை அதன் இலக்கியங் களைக் கொண்டு, அதன் இலக்கியங்களின் அடி நாதங்கள், வெளிப்பாடுகள், தாக்கங்கள் ஆகியன கொண்டு எடுத்துக் கூறுவதாகும். ‘இலக்கிய வரலாறு’ என்னும் தொடரை நாம் ‘இன்’ என்னும் ஐந்தாம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு விட்டோம். அதனை ஓர் உம்மைத் தொகையாகக் கொண்டு இலக்கியமும் வரலாறும் இன்றியமையா வகையிற் பின்னிப் பிணைந்து கிடப்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.”

இதுவரை தமிழில் வெளிவந்துள்ள இலக்கிய வரலாற்று நூல்களில் பெரும்பாலானவை செய் திகள் என்ற அளவில் பட்டும்படாமலும் மேலோட்டமாக வெளிவந்திருப்பவையாக உள்ளன. அவற்றிலிருந்து மாறுபட்ட திறனாய்வுக் கண்ணோட்டத்தில் அறிவியல் சார்ந்து கருத்து நிலைகளை வெளிப்படுத்தக்கூடிய ஒன்றாக இந்தப் புத்தகம் வடிவம் பெற்றிருக்கிறது.

இலக்கியத் திறனாய்வின் அடிப்படையான நோக்கத்தை விரிவான தளத்தில் விருப்பு வெறுப்பு இல்லாத பார்வைக்கு உட்படுத்தி இப்படிக் குறிப் பிடுகிறார் அவர்.

“ஒரு நாட்டினது, அல்லது கூட்டத்தினரது வரலாற்றை, அந்நாட்டினது அன்றேல் அம்மக்கள் கூட்டத்தினரது இலக்கிய உற்பத்தி, விநியோகம், நுகர்வுகொண்டு அறிந்துகொள்ளும் முயற்சி ‘இலக்கிய வரலாறு’ ஆகும். இலக்கியம் வர லாற்றின் இயங்கு கருவியாக அமைகின்றதென்பது இப்பயில்துறையின் முக்கிய எடுகோளாகும்.”

இலக்கியத்தை ஒவ்வொருவரும் அவர வருக்கே உரிய விருப்பு வெறுப்புக் கண்ணோட் டத்தில் மதிப்பீடு செய்வது ஒரு இயல்பாகவே இருக்கிறது. ‘கலை கலைக்காகவே’ என்றும் ‘கலை சமுதாயத்திற்காகவே’ என்றும் வாதிடுபவர்கள் உலகம் முழுவதுமாக இருந்து வருகிறார்கள். ஆனால், இலக்கியத்தின் ஊடாக அதன் பின்ன ணியைப் புரிந்துகொள்வதில் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறார்கள். அதனால், இலக்கியம்பற்றிய புரிதலில் தாறுமாறான மதிப்பீடுகள் உரு வாகின்றன.

கலைஞன் தன்னுடைய காலகட்டத்தை முன் வைத்தே தன்னுடைய படைப்பை உருவாக்கு கிறான். அவன் தன்னை முந்தைய வரலாற்றி லிருந்து விலக்கிக் கொண்டு வாழ்க்கைப் பிரச் சினையை அணுகுகிறான். ஆனாலும் அவனு டைய காலச்சூழல் அவனுடைய படைப்புக்களின் தொனிப் பொருளாக அமைந்துவிடுகிறது. அவனு டைய காலத்தைத் தொடர்ந்து வரும் திறனாய் வாளர்கள் அவனுடைய படைப்புக்களின் பின்புல மாக உள்ள சமுதாய பொருளாதார கலாசாரப் பண்பாட்டு நிலைமைகளை இனம் கண்டு வெளிப் படுத்த வேண்டும். இதனையே திறனாய்வு முறை யின் முதன்மை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதை அவர் தன்னுடைய கருத்தாகக் குறிப்பிடு கிறார்.

அவருடைய கருத்துப்படி திறனாய்வு முறை யைப் பின்பற்றும் பொழுது ஓர் இலக்கியத்தின் வாயிலாக வரலாற்றின் இயக்கப் போக்கை ஆழ மாகவும் விரிவாகவும் உணர முடிகிறது. அந்த இலக்கியத்திற்குப் பன்முகத் தன்மைகள் இருப் பதை இனம் கண்டு அதன் படைப்புத் திறனை உணரலாம். இந்த முறையில் அணுகும்போது ஒரு படைப்பின் மேலான தர நிலைமையையும், படைப்பாளியின் ஈடுபாடும் அதிக அளவில் புலனாகும். இதை நெறிப்படுத்துவதுதான் இந்தத் திறனாய்வு நூலின் உள்ளார்ந்த தொனியாக உள்ளது.

தொன்மையான தமிழ் இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்கு இந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதை அவர் இந்த நூலின் வாயிலாக உணர்த்துகிறார். பழைய இலக்கியங்கள் வாய் மொழியிலிருந்தும் செப்புத் தகடுகளிலிருந்தும், ஓலைச் சுவடிகளிலிருந்தும், ஓடுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை. அவை காலத்தின் ஊடே தேவை கருதி மாற்றப்பட்டிருக்கலாம். அவை அபூர்வமானவையாகவே இருக்கக்கூடும். அச்சு எந்திரக் கண்டுபிடிப்பும், அதன் பயன்பாடும், பரவல் முறையும் தான் அந்தப் பழைய இலக்கியங் களுக்குரிய தனித்தன்மைகளை அறிந்துகொள்ள வாய்ப்பளித்தன.

இலக்கியம் குறித்த பல வகையான கருத்துக் களைச் சேகரித்து ஆய்வு செய்து அவற்றிற்குரிய நியாயங்களைப் பகுப்பாய்வு செய்து தெளிவுபடுத் துகிறார். அதற்குரிய கருத்துக்களை உலகளாவிய இலக்கியச் சிந்தனையாளர்களின் இலக்கியம் சார்ந்த பங்களிப்புக்களிலிருந்து தேர்வு செய்து விவாதிக்கிறார். இலக்கியம் சார்ந்த கருதுகோள் களையும், அவற்றிற்குரிய நியாயங்களையும் தன் னுடைய திறனாய்வு முறைக்கு உட்படுத்துகிறார். இலக்கியத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடும் பொழுது அவர் இப்படிச் சொல்கிறார்:

“இலக்கிய உருவாக்கம் இல்லாத எந்த ஒரு சமூகமும் உருவாக்கம் பெற்றுவிட்டதாகக் கொள்ள முடியாதென்பது தெள்ளத் தெளிவா கின்றது. சமூக உருவாக்கத்திற்கு இலக்கிய உரு வாக்கம் ஓர் அங்கமாகும். வேறொரு முறையில் சொல்வதானால், தனக்கென ஓர் இலக்கியம் இல்லாத சமூகம் உண்மையான கருத்தில் ஒழுங் கமைக்கப் பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. இலக்கியம் என்பது எழுதப்பட வேண்டியதில்லை. அது அடிப்படையில் வாய்மொழி நிலைப்பட் டதே என்னும் உண்மையை இக்கூட்டத்திலே நினைவுறுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.”

தமிழ் இலக்கிய வரலாற்றைக் கால வகைப் படுத்திக் கொண்டு திறனாய்வு செய்து ஒவ்வொரு காலகட்டத்தின் வளர்ச்சிப் போக்கை அடை யாளம் காண்கிறார் அவர்.

சங்க காலத்திற்கு முன்னிருந்து தற்காலம் வரை நிகழ்ந்த அரசியல் ஆதிக்கத்தை வகைப்படுத்தி அவற்றினூடாகத் தமிழ் இலக்கியம் வளர்ந்துவந்த மாற்றங்களை இனம் கண்டு விளக்குகிறார்.

வேதகால இலக்கியங்களின் தன்மைகளை யும், தாக்கங்களையும் குறிப்பிட்டு விளக்குவதைப் போலவே, சமண, பௌத்த, சைவ, வைணவ, முகம்மதிய, கிறித்துவ மதங்கள் தமிழ் இலக்கியத் தில் தாக்கங்களை ஏற்படுத்தியதையும் அவர் விளக்குகிறார். அதன் பின்னணியில் இயங்கிய சமுதாய, பொருளாதார, கலாசாரப் பண்பாட் டின் நிலைமைகளை அறிந்துகொள்ளச் செய்கிறார்.

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வரலாற்றில் திறனாய்வுத் துறையில் ஈடுபட்டுப் பங்களிப்பை வழங்கிய திரு.வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, திரு.வி.க., தெ.பொ.மீ.சோம சுந்தரபாரதி, பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி, மயிலை சீனி வேங்கடசாமி, மா.பொ.சிவஞானம் போன்றவர்களைப் பற்றி விரிவான ஓர் ஆய்வை அவர் நிகழ்த்துகிறார்.

அதைப் போலவே, தமிழின் நவீன இலக்கிய விமர்சகர்கள் பற்றியும் அவர் தன்னுடைய கருத்துக் களைத் தெளிவாக முன்வைக்கிறார்.

“1950களிலும் அதற்குப் பின்னரும் வர லாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையிற் செய்யப்படும் இலக்கிய ஆய்வுகள் வளரத் தொடங்கின. இலக்கியத்தைச் சமூக அபிவிருத்தி களுடன் இணைத்து நோக்கும் இவ்வாய்வுமுறை சங்கம் முதல் தற்காலம் வரையுள்ள காலப் பகுதி களை விளக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படு கின்றது. காலஞ்சென்ற நா.வானமாமலையும், க.கைலாசபதியும், தொ.மு.சி.ரகுநாதனும் இவ்வணுகுமுறையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினர்.”

புதுவகையான இலக்கியப் போக்கின் தன்மையையும், அதன் வளர்ச்சியையும், அவர் அடையாளம் காட்டுகிறார். அதை விரிவான தளத்தில் வைத்து மதிப்பீடு செய்கிறார். “1950 களின் முக்கிய பண்புகளில் மற்றொன்று இலங்கை, மலேசியாவின் தமிழிலக்கிய வரலாறு எழுதப் பட்டு அவை தமிழின் முழுமையான வளர்ச்சி யுடன் இணைத்து நோக்கப்பட்டது.”

அடுத்து, 1970களின் பின்னர் நவீன வளர்ச்சிக்கு உதவிய பலர் பற்றிய ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டதையும் அவர் குறிப்பிடுகிறார்.

அதைத் தொடர்ந்து, ‘தமிழிலக்கிய வர லாற்றில் பிரச்சினை மையங்கள்பற்றி அவர் விரி வாக ஆய்வு செய்கிறார். திறனாய்வு செய்வதில், குறிப்பாக பழைய இலக்கியங்களில், உள்ள சிரமங்களை வகைப்படுத்தி விரிவாக ஆய்வு செய் கிறார். அதில் உள்ள ‘பிரச்சினை மையங்களை’க் குறிப்பிட்டு திறனாய்வு முறையை ஒழுங்குபடுத்து கிறார்.

மேலும், “தமிழிலக்கிய வளர்ச்சியைப் பார்க்கும் முறை, கால வகுப்புப் பிரச்சினைகள்” பற்றிய ஆய்வுகளை அவர் நிகழ்த்துகிறார். கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வுகளை அவர் முன்வைத்து விளக்குகிறார். அதன் முக்கியத் துவத்தைப் பற்றி அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்: “வரலாறு என்பது, நிகழ்காலத்தின் தேவை களுக்கும், நியமங்களுக்கும் இயையக் கடந்த காலத் தைப்பற்றி நாம் கொண்டுள்ள அறிவு என்பது புலனாகிறது.”

அடுத்து, இலக்கியத்தின் தேவைபற்றிக் குறிப்பிடும்போது, “இலக்கிய உருவாக்கம் சமூக உருவாக்கத்திற்கு இன்றியமையாதது, அதாவது தனக்கென இலக்கியம் இல்லாத ஒரு சமூகம் உண்மையிலே நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாகாது” என்கிறார்.

இன்றைய சூழலில் தமிழ் இலக்கியப் படைப்புக்களைத் திறனாய்வு செய்வதில் உள்ள ஈடுபாட்டையும், சிரத்தையையும் அவர் வலியுறுத்துகிறார். ஆகவே, சமூக மாற்றத்திற்குத் தேவையான இலக்கியத் திறனாய்வை மேற்கொள் ளும் முயற்சிக்கு அவருடைய ‘தமிழில் இலக்கிய வரலாறு’ பெருமளவில் உதவக்கூடியதாக உள் ளது. இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் ஏராள மான ஆதாரங்களையும், ஆவணங்களையும் தகவுகளையும் அதனுள் கொண்டிருக்கிறது.

சமூக ஆர்வலர்களுக்கும், கலை இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்தப் புத்தகம் வியக்கத்தக்க விதத்தில் பயனளிக்கும் என்பது தெளிவு. திறனாய்வுத் துறையில் மாற்றத்தையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் விதத்தில் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

தமிழில் இலக்கிய வரலாறு (வரலாறெழுதியல் ஆய்வு)

கார்த்திகேசு சிவத்தம்பி

வெளியீடு : என்.சி.பி.எச்

விலை : ரூ.175.00

Pin It