மலேசிய வரலாற்றில் ஆளுங்கட்சி பிரமுகர்களை கலங்கடித்த 25.11.2007 ஞாயிற்றுக்கிழமை கறுப்பு நாளாக இடம்பெறும். இந்நாள் தமிழர்களின் எழுச்சி நாளாக இனி ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் வியப்படைவதற்கில்லை என்பதற்குச் சான்றாக அந்நினைவுகள் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டுள்ளன. தென்கிழக்காசிய தமிழர் வரலாற்றில் முன்னுதாரனமற்ற இவ்வெழுச்சி திடீரென வெடித்தெழுந்தது எப்படி! அதிகமாக கூச்சல் போட்டுக் கொண்டு, கௌரவம் என்பதே சிறிதுமில்லாமல் பிடுங்கித் தின்பதையே பிழைப்பாய்க் கொண்ட அமைச்சரவை பிரதானிகள் உளறுவதைப்போல் நிறையப் பணம் கிடைக்கும் என்ற கவர்ச்சி சொற்றொடர்களோ, ஆசை வார்த்தைகளோ அல்லது இன வாதமோ அல்ல. மாறாக, தாங்கள் மூன்றாம் தர குடிமக்கள் போல் நடத்தப்படுவதும், தங்களை பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொள்பவர்களோ எதனையும் பெற்றுத் தரத் திறனற்றவர்களாக இருப்பதோடல்லாமல் அவர்களும்கூடத் தங்களையே சுரண்டித் திண்பவர்களாக மாறி விட்டது போன்ற ஆற்றாமையும்தான் காரணம். தமிழ்ச் சமூகத்தின் காய்ந்துப் போன மேற்பரப்பில் தோன்றிய சிறு பிளவும் வெடிப்புகளும்தான் இப்பேரணிக்கு அடித்தளம் வகுத்தது என்பதனை நினைவில் இருத்தி அவற்றுக்கு முந்திய நிகழ்வுகளை மீள் நோக்க வேண்டும்.

மலேசிய நாட்டில் இந்திய சமுதாயம் எதிர்க்கொள்ளும் ஆயிரமாயிரம் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் தகுதியுடையவர் பிரதமர் மட்டுமே எனும் அடிப்படையில். ‘பிரதமரே நமது தலைவர்’ என்று மாண்புமிகு அப்துல்லா அகமது படாவி அவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் நேரடியாக தலையிட வேண்டும் எனும் 18 கோக்கைகள் அடங்கிய மகஜர் 12.8.2007 ஞாயிறன்று அவரின் பார்வைக்கு சார்வுச் செய்யப்பட்டது.

ஐவர் அடங்கிய மனித உரிமை வழக்கறிஞர்கள் குழு தலைமையில் மலேசிய அரசின் தலைமையகமாக புத்திரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் முன் திரண்ட 3,000க்கும் மேற்பட்ட இந்திய வமிசாவளி மலேசியர்கள் மகஜரை சமர்ப்பித்தனர். தலைமையமைச்சரின் சார்பில் அவரது தனிச்செயலாளர் திரு யாக்கோப் அவற்றைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சி மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் தனி முத்திரை பதித்தது என்று தமிழேடுகள் குறிப்பிட்டிருந்தன.

அடுத்து வந்த நாட்களில் முன்சொன்ன நிகழ்ச்சி குறித்து கேலியும் கிண்டலும், நக்கலும் நையாண்டியுமாக கருத்து சொல்லிவந்த, இந்தியர்களின் பிரதிநிதியாகப் பெயர் போட்டுவரும் வானளாவிய அதிகாரம் கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சரும் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய இனவாதக் கட்சியான ம.இ.கா. வின் ஏகோபித்த அதிகாரமுடைய ஒரே தலைவருமான அமைச்சர் சங்கிலிமுத்து சாமிவேலு, ஒரு கட்டத்தில் மகஜர் வழங்கத் திரண்டவர்களுக்குத் தலைமை தாங்கியவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாம் தயார் என்று அறிவிக்க. தலைமைக்குழுவின் முன்னோடியான வழக்கறிஞர் பொன்னுசாமி உதயகுமார், அதிகாரம் எதுவுமற்ற அமைச்சரோடு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று பதிலிறுக்க, முறுகல் நிலை ஏற்பட்டது.

பதிவு மறுக்கப்பட்ட பிரிம் (PRIM) எனப்படும் கட்சி ஒன்றின் தலைமைச் செயலாளரான தோழர் உதயகுமாரின், அடித்தட்டு மக்களுக்கான போராட்ட முன்னெடுப்புகள் குறித்து பல அத்தியாயங்கள் எழுதப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு சார்பான அமைப்புகளுக்கு இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் பதிவு கிடைத்து விடும் நாட்டில், பதிவு மறுக்கப்பட்டும் அமைதியாக இருந்து விடாமல், கடந்த ஒன்பது ஆண்டுகளாக வழக்காடு மன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் கட்சியினரில் முகாமையானவர்கள் பி.எஸ்.எம். எனப்பெறும் மலேசிய சோசலிசக் கட்சியினர் ஆவர். வக்கீல் உதயகுமாரின் காட்டமான மறுமொழிக்கு இதுவும்கூடக் காரணமாக இருக்கக்கூடும் என எண்ணத்தோன்றும் ஓர் சம்பவம் குறித்து கவனம் செலுத்தலாம். முசுலிம் அல்லாதான் சமய உரிமைகளைப் பாதிக்கும் சட்டங்களை மீள்பார்வை செய்யக்கோரும் வரைவு ஒன்றினை முசுலிம் அல்லாத அமைச்சர்கள் பிரதமரிடம் கையளித்தனர். அவ்வொன்பது அமைச்சர்களில் சங்கிலி முத்து சாமிவேலுவும் ஒருவராவர். புத்த,கிறித்துவ,சீக்கிய, இந்து மற்றும் சீனர்களின் தாவோ மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத நல்லிணக்கக் குழுவினரின் பந்துரைகளும் அம்மகஜல் அடங்கியிருந்தன.

''எளிதில் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் விவகாரங்களை இவ்வாறு கையாளுவது மேன்மேலும் பிரச்சினைகளை உண்டுபண்ணும் என்பதால் இவை குறித்து விவாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கலாம்.’’ என்ற தலைமையமைச்சரின் ஆலோசனையை ஏற்று இரண்டொரு நாள் இடைவெளியில் அவ்வரைவை மீட்டுக்கொண்டதாக அமைச்சர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் பத்திகைகளுக்குப் பேட்டி தந்திருந்தனர். 2006ஆம் ஆண்டு சனவரித்திங்களில் அரங்கேறிய சம்பவத்தின் மகஜர் குறித்து இதுநாள்வரை எத்தனை முறை மந்திரிசபைக் கூட்டங்களில் பேசியுள்ளார்கள் என்பது சிதம்பர இரகசியமாகும். கோர்டின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் அரசியல் அமைப்பின் 121 (1அ) பிரிவில் திருத்தம் செய்யக்கோரும் மகஜர் அதுவாகும்.

இந்து இளைஞர் பேரவையின் ஆண்டுக்கூட்டத்தில். ''இந்தியர்கள் பின்தங்கியுள்ளார்கள் என்று கூறுபவர்கள் பைத்தியக்காரர்கள். இந்தியர்கள் பிறரைவிட 50 ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் இன்னமும் நொய்வமரம் சீவும் தொழிலாளிகளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால். இன்றைக்கு அவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், அவர்களில் சிலர் மிகவும் முன்னேற்றமடைந்தவர்களாகவும் உள்ளனர். மகஜர் வழங்கக் குழுமியவர்கள் சொல்லிக்கொள்வதைப்போல் அங்கு கூடியிருந்தவர்கள் மூவாயிரம் பேர் அல்ல. வெறுமனே 600 பேர்தான். அதிலும் சிறப்பிற்குரியது என்னவென்றால், பிரதமர் அரசு முறைப் பயணமாக புருனை நாட்டிற்குச் சென்றுவிட்டிருந்த தினத்தை இவர்கள் தேர்ந்தெடுத்திருந்ததுதான். அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த சில கோயில்கள்தான் உடைக்கப்பட்டன. சாக்கடைக்குப் பக்கத்திலும். சாலைக்கு அருகிலும் அனுமதியின்றி எழுப்பப்படும் கட்டடங்கள் திண்ணமாக அப்புறப்படுத்தப்படும். 1979இல் 17,600 ஆக இருந்த கோயில்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 24,000 ஆயிரமாக காளான்கள் போல் பெருகியுள்ளன.’’ என்று ஆற்றிய உரையை அம்னோவின் ஆங்கில நாளேடான நியூ ஸ்ரெட் டைம்ஸ் வெளியிட்டிருந்தது.

சில நாட்கள் கழித்து அதே ஏட்டில் வாசகர் கடிதம் பகுதியில் டாக்டர் ஏ. சூரியன் என்பார் அமைச்சர் சாமிவேலுவின் பேச்சு குறித்து கீழ்கண்டவாறு கருத்து தெவித்திருந்தார்: ''இப்போது இந்தியர்கள் சிறப்பாக இருந்து வருவதாக சாமிவேலு தெவித்ததாக வெளியான செய்தி வியப்பைத் தருகிறது. இந்தியர்கள் பின்தங்கியவர்கள் என்று கூறுபவர்கள் பைத்தியக்காரர்கள் என்று அவர் கூறியுள்ளார். அத்தகைய பல பைத்தியக்காரர்களில் நானும் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும். மலேசிய இந்தியர்கள் தங்களது ரப்பர் தோட்டத் தொழிலாளி என்ற தோற்றத்திலிருந்து இப்போது கல்வியில் தேர்ச்சிப்பெற்ற நகர்ப்புறச் சமூகமாக மாற்றம் கண்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியர்கள் தொடர்ந்து பால் மரம் வெட்டுபவர்களாக இருந்திருந்தால் அவர்கள் இப்போதைய ரப்பர் விலையில் காணப்பட்டிருக்கும் மேம்பாடு காரணமாக நல்ல நிலையில் இருந்திருப்பார்கள். ஆனால். நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மேம்பாட்டுத் திட்டங்கள், அவர்களை இடப்பெயர்ச்சி செய்ய வைத்து, மாற்று நிலம் கொடுக்கப்படாமல் தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப் பகுதிகளுக்கு விரட்டப்பட்டிருக்கின்றனர்.

அவ்வாறு இடம் பெயர்ந்தவர்கள் தேர்ச்சி இன்மையாலும் புதிய சூழ்நிலையில் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் இல்லாததாலும் ஏமாற்றம் அடைந்து விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மலேசிய சமூகங்களிடையே தற்கொலை செய்துகொள்வோர் பற்றிய பின்வரும் புள்ளி விவரங்களை சுகாதார அமைச்சர் டாக்டர் சுவா சோய் லெக் வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு லட்சம் மக்களுக்கும் இந்தியர்களின் தற்கொலை விகிதமாக 21.1 பேரும், சீன சமூகத்தில் 8.6 பேரும், மலாய்க்காரர்களில் 2.6 பேரும் உள்ளனர். கவர்ச்சியைக் காட்டும் நகர்ப்புறத்தில் வாழும் தங்களது சக இந்தியர்கள் பளப்பளப்பான கார்களை ஓட்டிச் செல்வது, புத்தம் புது ஆடைகளை அணிந்து கொள்வது,மற்றும் இரவு கிளப்புகளுக்குச் செல்வது போன்ற தோற்றத்தை அன்றாடம் காண்பது இந்தியர்களின் சகிப்புத் தன்மையையும் புரிந்துணர்வையும் குறைத்துள்ளன. அதன் காரணமாக வன்செயல், மூர்க்கத்தனம், சம்சு (சாராயம்) மற்றும் போதைப் பழக்கம் போன்றவை அவர்களை ஆட்கொண்டுவிடுகின்றன. அத்தகைய நிலை அவர்களை குற்றச்செயல்கள் புரிவதற்குத் தள்ளிவிடுகிறது. முதலில் சிறிதாக ஆரம்பித்து பிறகு பெரிதாக மாறிவிடுகிறது.

இந்தியர்கள் நாட்டின் எல்லாக் குற்றச்செயல்களிலும் 40 விழுக்காட்டை புரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு சிறுபான்மை சமூகத்தில் அது பெரிய சாதனையாக பதிவு காண்கிறது. முன்பெல்லாம் வங்கிகளில் இந்தியர்கள் கொள்ளை அடித்ததாக சான்றுகள் கிடையாது. ஆனால், இன்று நகர்ப்புற சகவாசத்தில் அவர்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றனர். இவையெல்லாம் இன்று இந்தியர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதற்கு அறிகுறிகளா? முப்பது ஆண்டுகளுக்கு முன் சாமிவேலு மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைமைத்துவத்தை ஏற்றபோது இந்திய சமூகத்தின் தொழில் பங்குமை 0.1 விழுக்காடு என்ற நிலையில் இருந்தது. அதன் பிறகு அதிக மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. நாம் உண்மையான நடப்பு நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். முறையான தீர்வுகளைக் காண வேண்டும். அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்க வேண்டும்.’’ என்று தமது கடிதத்தை முடித்திருந்தார் டாக்டர் ஏ. சூரியன்.

இவற்றுக்கிடையில். 30.8.2007 அன்று பிரிட்டிசு உயர்நீதி மன்றத்தில் சிவில் வழங்கு ஒன்று மலேசிய இந்தியர்கள் சார்பில் பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கில் மலேசிய இந்திய வமிசாவளியினரை பிரதிநிதித்துவப்படுத்த இரண்டாம் எலிசபெத் இராணியார் குவின் கவுன்சிலில் சட்டத் தரணிகளை நியமிக்க விழையும் வேண்டுகோளுக்கு ஆதரவாக 100,000 கையொப்பங்களைக் கொண்ட மகஜர் ஒன்றினை கூட்டமாகச் சென்று பிரிட்டிசு தூதரகத்தில் வழங்குவதற்கு பொலிசார் அனுமதி வேண்டியிருந்த இந்து ரைட்ஸ் எக்சன் போர்ஸ் (இன்ராஃப்)சின் மனுவைப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எனும் காரணத்தால் நிராகப்பதாகக் கூறிய துணை ஓ.சி.பி.டி. ஏற்பாட்டுக் குழுவினர் துணை கமிசனர் வழியாக அனுமதிக்கு மேல்முறையீடு செய்யலாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

''அவர்களின் நோக்கத்தை அறிந்துள்ள நாங்கள், வழங்கப்படவிருக்கும் கோரிக்கைக்கு ஆதரவான கையொப்பங்களை பெற்றுக்கொள்வதற்குத் தயாராக உள்ளோம்.’’ என்று செய்தியாள்களின் வினாவிற்கு விடை தந்திருந்தவர் பிரிட்டிசு தூதரகத்தின் இரண்டாம் நிலை அரசியல் செயலாளர் டவுன் அவுத்தோன் ஆவர்.

எதிர்வரும் நவம்பர் 25இல் நடைபெறவிருக்கும் பேரணி சட்டவிரோதமானது என்பதால், அவற்றில் பங்குபற்ற வேண்டாம் என அறிவுறுத்தும் வகையில் அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிப்பதாகச் சொல்லப்படும் மலேசிய இந்திய காங்கிரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்களால் பத்திரிைககளுக்கு அறிக்கைகள் தரப்பட்டு வந்தன.

உயர்மட்ட பொலிசு அதிகாரிகளின் மிரட்டல் தோரணையிலான எச்சக்கைகள் இன்னொருபுறம். இவற்றோடு ஏற்பாட்டாளர்களின், பேரணியில் பங்கெடுக்க வேண்டிய தேவை குறித்த அறிக்கைகளும் ஆதரவாளர்களின் கைப்பேசி குறுஞ்செய்திகளுமான வேறொருபுறம் என்று நாடு பரபரப்பானது. இன்ராஃப்பின் அழைப்பறிக்கை பின்வருமாறு இருந்தது:

''மலாயா, வெள்ளையர் ஆட்சியின் கீழ் 150 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. அவ்வமையம் வெள்ளையர் இம்மண்ணில் இரப்பர் உற்பத்தியை அறிமுகப்படுத்தினர். பல ரப்பர் தோட்டங்கள் மூலைமுடுக்கெல்லாம் உருவாக்கப்பட்டன. அதில் வேலை செய்ய தென்னிந்திய தொழிலாளர்கள் இலட்சக்கணக்கானோர் இங்கே கொண்டு வரப்பட்டனர். பல ஆயிரம் தென்னிந்தியர்கள் கொடுமையான முறையில் தொழில் செய்யும் இடத்திலேயே மாண்டு போயினர். மேலும் பல்லாயிரம் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் இன்றி. போதுமான ஊதியம் வழங்கப்படாமல் அவதிக்குள்ளாயினர். 1957ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்த நேரம் இம்மக்கள் மறக்கப்பட்டு ஒடுக்கப்பட்டனர். இது வரலாற்று உண்மை.

இவர்களை இங்கு கொண்டு வந்து விட்ட வெள்ளையர்களின் கடமை என்ன? நாடு சுதந்திரம் அடைந்த சமயம், இயற்றப் பட்ட புதிய அரசியல் சாசனத்தில். ஏன் இந்தியர்களின் உரிமை பாதுகாக்கப்படவில்லை? இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் காரணமாகிய பிரிட்டிசு அரசாங்கத்தை எதிர்த்து அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்று இந்நாட்டு இந்தியர்கள் சார்பில் கடந்த 30.8.2007 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் 100,000 பேர் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றை பிரிட்டிசு மகாராணி அவர்களிடம் சமர்பிக்க மலேசிய பிரிட்டிசு ஆணைய அலுவலகம் முன்பு நாம் கூடவுள்ளோம். சனநாயக மரபில் நம்பிக்கை கொண்டு எல்லா இன மலேசியர்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகின்றனர். ஒன்று திரண்டிடுவோம். நியாயம் கேட்டிடுவோம்!’’
நவம்பர் 24. காலை மணி ஏழரைக்கு இன்ராஃப்பின் சட்ட ஆலோசகரான திரு. உதயகுமாரின் வீட்டில் ஆறு சிவில் உடையணிந்திருந்த பொலிசாரும் தலைமை இன்ஸ்பெக்டரும் மறுநாள் நடைபெறவிருக்கும் பேரணியில் அவர் கலந்துக்கொள்ளத் தடைவிதிக்கும் கோர்ட் ஆர்டரை வழங்கினர்.

காலை பத்தரை மணியளவில் கலகம் தூண்டும் பேச்சு நடவடிக்கையின் கீழ் அவரின் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு சிலாங்கூர் மாநிலத் தலைநகரான சா ஆலம். பொலிசு தலைமையகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டவரை சந்திப்பதற்காக அப்பொலிசு தலைமையகத்திற்குச் சென்ற பிறிதொரு ஆலோசகரான வழக்கறிஞர் வீரமான் கணபதிராவ் அவர்கள் பிற்பகல் 2.45 மணிக்கு அங்கு வைத்து கைது செய்யப்படுகின்றார். பிற்பகல் மூன்று மணிக்கு இன்ரா1ப்பின் தலைவர் வழக்கறிஞர் பொன்னுச்சாமி வேதமூர்த்தி கைதுக்குள்ளாகின்றார்.

மாலை 4.45 மணி அளவில் கிள்ளான் விசாரணைக் கோர்ட்டில் இருதரப்பு வாதத்திற்குப்பின் ஒவ்வொருவருக்கும் 800 மலேசிய வெள்ளி பிணையல் வழங்கப்பட்டது. அதுபோது வழக்காடு மன்றத்திற்கு முன் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததாக ஸ்ரெட்ஸ் டைம்ஸ் நாளேடு எழுதியிருந்தது. செய்யாத தவற்றிற்கு அளிக்கப்பட்ட தண்டனையான கைதுக்குக் கண்டனம் தெவிக்கும் முகத்தான் பிணையலில் வெளிவர வேதமூர்த்தி மறுத்துவிட. அவரின் அண்ணன் உதயகுமார், கணபதிராவ் மற்றும் அவர்களுக்காக வாதிட்ட வழக்கறிஞர்களையும் ஆதரவாளர்கள் தோள்களில் ஏற்றி ஊர்வலமாக கிள்ளான் நகர் ஊடே சுமந்து சென்றபோது, அந்நகரப் போக்குவரத்து நிலைகுத்தி நின்றதாக அப்பத்திரிக்கை மேலும் விவரித்திருந்தது. அதன் பின்னர் அருகிலிருந்த செட்டித் திடலில் வழக்கு மன்றத்தில் நடந்து முடிந்தவை குறித்து ஆயிரக் கணக்கில் திரண்டிருந்தவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு கூட்டம் கலைந்தது.

அம்மூவரின் கைதுக்கான காரணம்தான் என்ன? நவம்பர் 16. இரவு மணி 8.30 முதல் 11.15 க்கு இடைப்பட்ட நேரத்தில் கோலசிலாங்கூன் சுங்ஙை ரம்பை எனுமிடத்தில் பத்தாங் பெர்சுந்தை சாலையில் உள்ள சீனன் உணவகத்தில் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் உரைகள் நிகழ்த்திய குற்றச்சாட்டின் பேரில் முன் சொன்ன மூன்று வக்கீல்களும் கைது செய்யப்பட்டனர்.

மலேசிய வரலாற்றில் பேரணியை நிறுத்துவதற்கு பொலிஸ் துறை கோர்ட் தடையுத்தரவு பெற்ற முதல் நிகழ்ச்சி இதுதான் என்று செய்தித்தாள்கள் எழுதியிருந்தன. இன்னும் பல முதல் என்னும் சுட்டல்களுக்கு உரிய சிறப்பிற்குரிய பேரணி அது. அது பற்றியெல்லாம் அடுத்த இதழில் அலசலாம்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் அமைந்திருக்கும் கிள்ளான் பள்ளத்தாக்கின் இருபத்தைந்து அரசு சார்பற்ற இந்திய அமைப்புகளும், மலேசிய இந்தியக் காங்கிரசும் அடுத்த நாள் நடைபெறவிருக்கும் சட்டவிரோத நிகழ்ச்சியை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்து. அதில் பங்கெடுக்க வேண்டாம் என்று வெகுசனங்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர். அக்கூட்டத்தில் ம.இ.கா.வின் செய்தித் தொடர்பு தலைவர். இன்ராஃப்பின் கோரிக்கை அடிப்படையற்றது என்றும் மலேசிய இந்தியர்கள் அவற்றை ஆதரிக்க மாட்டார்கள் என்றும் பேசியிருந்தது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

''எங்களுக்கு சவால் விடாதீர்கள்’’ என்ற எச்சக்கையோடு கூடிய கோர்ட் தடையுத்தரவு சுவரொட்டிகளையும் பிரிட்டன் தூதரகம் இருக்கும் அம்பாங் சாலை பகுதி மரங்களிலும் அவற்றை ஒட்டிய வேறு பகுதிகளிலும் பொலிசார் ஒட்டி வைத்ததோடு. அருகிலிருந்த உணவகங்கள், வாடகை உந்து, பேருந்து நிறுத்தம் என்று அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் ஒட்டி வைத்தனர்.

பேரணிக்குச் சில நாட்களுக்கு முன்னதாகவே சாலை தடுப்புகள், வெளியூர்களில் இருந்து தலைநகர் நோக்கி வரும் இந்தியர்கள் எனப்படும் தமிழர்கள் மட்டுமே பயணித்த பேருந்து, மகிழுந்து, கூட்டத்தோடு வேறு பல ஊர்திகளும் வந்த வழியே திருப்பி அனுப்பப்பட்டதோடு பயணிகளும் பொலிசாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

தடையுத்தரவை ரத்து செய்யக்கோரியும், அம்மூவரையும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கக் கோரியும் கோர்ட்டில் சார்வு செய்யப்பட்ட மனுவின் முடிவு வார விடுமுறை என்பதால் திங்கட்கிழமைதான் தெரியவரும் என்ற நிலையில், தோழர் உதயகுமார் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதின் சுருக்கம் பின்வருவன: ''வேறுபல நாடுகளிலும் சட்டத்திற்குட்பட்ட வழியில் நடத்தப்படுவதைப்போல் எங்கடை உணர்வுகளை வெளிக்காட்ட சனநாயக நெறியில் அமைதியான முறையில் கூடவுள்ளோம். எது நடப்பிலும் நாங்கள் அங்கு இருப்போம்.’’

குறைபாடுகள் கொண்டிருந்தபோதும் பிறப்பு வேற்றுமை, மதம், கட்சி, கொள்கை என்ற வேறுபாடுகளையெல்லாம் கடந்து எமது உரிமைகளுக்கு போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதனடிப்படையில் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் களம் காணத் தேர்ந்தெடுத்த அந்த நாளும் வந்தது. நவம்பர் 25. 2007. ஞாயிற்றுக்கிழமை.

முந்தைய இரவு பத்துமலைத் திருத்தலத்தில் கார்த்திகைத் திருநாள் பிரார்த்தனைக்கு மக்கள் குவிந்திருக்க, தேவஸ்தான நிர்வாகத்தினர் கேட்டை பூட்டிவிட, உள்ளே அடைபட்டுக் கிடந்தவர்கள் வெளியேற வேறு வழியில்லாத நிலையில், கேட்டின் மீது ஏறியும். அவற்றை உடைத்துக்கொண்டும் வெளிவர முயன்றபோது. வெளியில் காத்துக்கிடந்த கலகம் அடக்கும் பொலிசார் லத்தி, கண்ணீர்ப்புகை மற்றும் இரசாயணம் கலந்த நீர் ஆகியன கொண்டு அம்மக்களின் மேல் தாக்குதல் தொடுக்க, தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக பாலஸ்தீனத்தின் ‘இன்திபாடா’ பாணியில் தங்களின் கால்களுக்குக் கீழே கிடந்த கற்களைக்கொண்டு எதிர்த்தாக்குதல் தொடுக்க, நிலைமை மோசமாகி பன்னூற்றுக்கணக்கில் தமிழர்கள் பாதிக்கப்பட்டதெல்லாம் வரவிருக்கும் கட்டுரையில் விரிவாக பேசப்பட உள்ளது.

இப்படி நாட்டில் அமளி துமளி நடைபெற்றுக்கொண்டிருந்த போது மாண்புமிகு பிரதமர் அப்துல்லா அகமது படாவி உகாண்டா நாட்டுத் தலைநகர் கம்பாலாவில் நடந்துகொண்டிருந்த காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் சமூகமளித்திருந்தார். அதுபோது இலங்கை அரசு தலைவர் மகிந்த ராஜபக்சேவுடன் அளவளாவிக்கொண்டிருந்த ஒளிப்படத்தை பத்திக்கையாளர்கள் வெளியிட்டு வைத்திருந்தார்கள். காவல்துறை மற்றும் FRU எனப்படும் கலகமடக்கும் பொலிசுத்துறைக்கு பொறுப்பான உள்துறை அமைச்சுக்கு தலைமையேற்றிருப்பவர் பிரதமரே!

எச்சரிக்கைகள். மிரட்டல்கள் என்பனவற்றைக் கண்டும் கேட்டும் பின்வாங்காது அற்றை நாள் பேரணியில் பங்கேற்றோரின் கருத்துகள், கைதுப்படலங்கள், வழக்கு மன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கிய குடும்பத்தினரின் சோகங்கள், கைதானவர்கள் பிணையலில் வெளிவர நிலப்பாட்டாவை அடகு வைத்தும், பொருட்கொடை அளித்தும் உதவிநின்ற நன்நெஞ்சங்கள், எக்கட்டணமும் பெறாமல் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக வழக்காடிய வழக்கறிஞர்கள், இன்ராஃப்பினர் விடுதலைப்புலிகள் இயக்கம் தவிர வேறு ஐந்து பயங்கரவாத இயக்கங்களோடு தொடர்பு கொண்டிருக்கின்றனர் என்ற அரசு தரப்பு குற்றச்சாட்டு, ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்கள், நிலைப்பாடுகள், சீனர்களுக்கு ஏற்பட்ட பீதி, பெரும்பான்மை மலாய்க்காரர்களில் அரைப்பகுதிக்கும் மேற்பட்டோரின் நிதானம், அதற்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஆலிம்சாக்கள் தொழுவிப்பாளர்கள் ஆகியோன் பங்களிப்புகள், வெளி வந்தவர்கள் தமது முயற்சியினாலேயே விடுவிக்கப்பட்டார்கள் என்ற சாமிவேலுவின் சுயதம்பட்டத்திற்கு சூடான மறுப்பை தெவித்திருக்கும் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் பேட்டிகள். போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க இன்ராஃப்பினரின் உறுதி, இசா எனப்படும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னணியினர் ஐவரை விடுவிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளோடு சிறப்பு பிரார்த்தனைகள், போராட்டத்திற்கு வெளிநாடுகளில் ஆதரவைத் திரட்டச் சென்றிருக்கும் இன்ராஃப்பின் தலைவர் பொன்னுசாமி வேதமூர்த்தியை சந்திக்க மறுத்துவிட்ட தில்லியின் ஆளுங்கட்சி அமைச்சர்கள், ஆகியவற்றோடு பொலிசாரின் கணக்குப்படி பத்தாயிரம் என்றும் வேறு பலரால் ஐம்பதாயிரம், நூறாயிரம், ஓரிலக்கம் பேர் திரண்டனர் என்றும் சொல்லப்பெறும் நவம்பர் 25 போராட்டம் விளைத்த நன்மை தீமைகளோடும் அடுத்த இதழில் சந்திப்போம்.
Pin It