சூசன் ஓமன், (அய்யப்ப பணிக்கரின் மாணவி)

அவர் அமைதியையும் நிம்மதியையும் நாடினார், அவர் பிறந்த குட்டநாடு, காவாலம் மண்ணில் அவரது பூதவுடல் புதைக்கப்பட்டது. 2005இல் அய்யப்ப பணிக்கருடைய கிருதிக்கள் (1990-1999) 4ஆவது தொகுப்பிற்காக சரஸ்வதி சம்மான் விருது; 1997இல் இந்திரா காந்தி நினைவு விருது; 1984இல் விமரிசனத்திற்கான கேரள சாகித்ய அகாதமி விருது; 1975இல் கவிதைக்கான கேரள சாதித்ய அகாதமி விருது.... எனப் பலப்பல. தலை தலைமுறையாக மலையாளிகளுக்கு அவர் “பணிக்கர் சார்”. அய்யப்ப பணிக்கர் மதிக்கத்தக்க, மறுதலிக்க முடியாத அறிவுஜீவி. ஜி.சங்கர பிள்ளை, காவாலம் நாராயண பணிக்கர் ஆகிய ஒத்த நோக்குடையவர்களோடு இணைந்து கேரளத்திற்கு நவீனத்தைக் கொண்டு வந்தவர்.

1960இல் வெளிவந்த அவரது “குருஷேத்ரம்” கவிதை அணுகுமுறையை முழுதுமாக மாற்றியது. புவிப்பரப்பு என்பது மனம்; மனிதம் அதன் முதல் கரு. போர்க்களங்கள் புவியியல், வரலாற்றுப் பரப்பிகருந்து நழுவி, மிக எளிதாக நாம் நமது வாழ்வில் காணக்கூடிய பரப்புகளில் தென்படுகின்றன. குருஷேத்திரத்தில் கவிஞர் காண்பது, வாழ்வின் அற்புதத்தை மறைத்துப் படரும் சின்னத்தனங்கள், கொடுமைகள், தன்னலம் ஆகியவையே. எள்ளல், அங்கதம், துக்கஞ்செறிந்த நகைச்சுவை ஆகியவை அவரது கவிதைகளின் பண்புநலன்கள். அவரது கவிதை வாசிப்பு பிரபலமானது. உணர்வு செறிந்த அவரது குரல், மரபையும் சமகாலத்தை உள்வாங்கிக் கொண்ட மீள் கட்டமைப்பு செய்ய முனையும் மனங்களில் எதிரொலித்தது. நான்கு பகுதிகளில் வெளிவந்த அய்யப்ப பணிக்கரின் கிருதிக்கள் ஐம்பது ஆண்டு காலத்தில் வந்த கவிதைத் தொகுதிகள்; அவற்றோடு 1989இல் வெளிவந்த கோத்ராயணம் இணைந்து மலையாளக் கவிதை உலகில் முன்னணியில் நிற்கின்றன.

பணிக்கரது சிந்தனை மற்றும் கருத்தாக்கத் தளம் கண்டங்கள் கடந்தது. அவரது பதின் பருவத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களின் இயங்கியல் பொருள்முதல் வாத மாலை வகுப்புகளில் தொடங்கிய கருத்தாடல்கள். அவை குறித்த கடும் விவாதங்கள் பின்னரும் தொடர்ந்தன. ராபர்ட் லோவெல் மற்றும் செஸ்லா மிலோஸ் ஆகியோருடன் அவர் நடத்திய உரையாடல்கள் இதற்கு சாட்சி. அவரது சமகாலத்தவர் போலவே அவரும் தனி வாழ்வை அரசியலாகவும், அரசியலைத் தனி வாழ்வாகவும் வாசித்தார். படுவேகமாக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டதன் மூலம், தீவிர மலையாள வாசகர்களுக்குப் பனுவல்களின் விரிந்த உலகை அடையாளம் காட்டினார். 1989இல் குருநானக்கின் கிரந்தம் மொழிபெயர்ப்பு டி.சி. பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கியூபக கவிதைகள், பூனையும் ஷேக்ஸ்பியரும், ஷேக்ஸ்பியர் கவிதைகள் ஆகியவை அவரது மொழிபெயர்ப்புகளில் முக்கியமானவை.

ஆசிரியர்களில் அவர் தலைமையானவர். அவரது புலமைச் செறிவும், தீர்க்கமான அறிவும் அவரது மாணவர்களுக்கான பரிவை அகலப்படுத்தின. அவர் எங்கும் கற்றார்; எங்கும் கற்பித்தார் - கோட்டயம், யேல், ஹார்வர்ட், திருவனந்தபுரம், இந்தியானா, ஹைதராபாத்.... கறாரான எசமானராக இருந்து, மாணவர்கள் அடிப்படைகளைக் கற்பதை உறுதிப்படுத்தினார். அவரது வகுப்புகளில் கூர்மையான பனுவல் சார்ந்த கல்வி முதல் கொள்கையாகத் திகழ்ந்தது. ஒதெல்லோ நாடகத்தில் உள்ள “சைப்ரஸ் வரவேற்கிறது - ஆடுகளை, குரங்குகளை” என்ற சாலைப் பலகையை கவனிக்காவிட்டால் அந்த நாடகத்தை நாம் இழந்துவிடுவோம் என்பது அவரது வாதம். கடினமான விமரிசனக் கோட்பாட்டுத் துறையின் கதவுகளைத் திறப்பதற்கான திறவுகோலைத் தந்தார்; ஆனால் வாசகர் பனுவலைத் தனது நிலைபாட்டில் இருந்து அணுகக் கற்றபின்னரே கோட்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அவர் நம்மோடு அவரது கதைகள், ஞானம், நூல்கள், நண்பர்கள், நகைச்சுவை அனைத்தையும் பகிர்ந்துகொண்டு யாத்திரையில் சகபயணிகளாக அங்கீகரித்தார். அவரது பெருந்தன்மைக்கு வரம்பில்லை; மாணவர் குறித்த அவரது கர்வம் அதிசயிக்கத்தக்கது.

அய்யப்பப் பணிக்கர் கேள்விகள் எழுப்பினார்; அழகியலை மறுவாசிப்பு செய்தார்; பலவகைப்பட்ட ஊடகங்களோடு உறவாடினார். அவரது விமரிசன எழுத்துக்கள் வாசகனைப் பல வகையில் அசைத்தன. புதிய சிந்தனைத் தளத்தை நோக்கி உந்தின. அவரது ஷேக்ஸ்பியர் எதற்கு? (2000), அகவயமாக்கல் (2000), இந்தியத் தத்துவ இயல் (1999) போன்றவை முக்கிய புள்ளிகளாகத் திகழ்கின்றன. சிந்தனை அவருக்கு அதிமுக்கியமானது. அதுதான் மனிதகுல மொழியை உணர வைக்கும்; அடக்குமுறையின் இலக்கணத்தைக் கட்டுடைக்க உதவும்; எதிர்ப்பதற்கான வலுவைக் கொடுக்கும். விட்மன் மற்றும் கின்ஸ்பர்க்கில் அவர் பெரிதும் இரசித்த “திறந்த பாதையை”க் காணும் விடுதலையைத் தரும். கயர் அரசன் தொடுத்த பதில் தர முடியாத இலட்சியக் கேள்வியைப் பணிக்கர் கேட்கிறார் என்று நான் கருதுகிறேன்:

நான் யார் என்பதை யார் எனக்குச் சொல்வது?

இதில்தான் மொழி, பண்பாடு, அடையாளம், மண், நினைவு, கதையாடல் சார்ந்த கேள்விகள் பின்னிப் பிணைந்துள்ளன.

நான் இந்த ஜூலையில் பணிக்கர் சாரைப் பார்த்தேன். கைகூப்பினேன். கூப்பிய கரங்களைப் பற்றியவாறே அவர் எனக்கு நன்றி சொன்னார். உண்மையான பொருளில் அவர் குரு. அவரது கரங்கள் பட்டு நான் உருவானது எனது பெருமை. அவர் கடப்பதை நான் உணர்ந்தேன். அவர் வெள்ளை மேகங்களை நோக்கித் திரும்பிவிட்டார். அவர் ஜூலையில் எழுதிய கவிதை இது. அவரது கடைசிக் கவிதை.

வெள்ளை மேகங்கள் மழை மொழியாதாம்.
அவை வானத்தில் அலைந்து திரிகின்றனவாம்.
கருத்த மேகம் மழை மொழிந்து மண்ணுக்கு ஈரம் தருகின்றது.
இடிவெட்டி பூமிக்குப் புளகம் தருகிறது.
மின்னல் கீற்றாய் வீசி வானை ஒளிர்விக்கிறது.
கருத்த மேகங்களைக் கடல் கைகூப்பித் தொழுகிறது.
இருந்தாலும், அந்த வெண்பஞ்சுப் பொதிகள்
நீலவானின் ஊடே ஊர்ந்து நகரும்போது
என்ன ஒரு அழகு கண்ணில் விரிகிறது!
பார்த்து அப்படியே மலைத்து நிற்கிறேன்.
அந்த வெண்மையின் அழகை வேறெங்கு காண்பேன்?

மொழிபெயர்ப்பு: அ. மங்கை

Pin It