இந்தக் குறிப்பை எழுத எனக்கு விருப்பமில்லை. எனினும் தவிர்க்க விரும்பவில்லை. கருத்தியல் வெளிப்பாட்டிலும் அது சார்ந்த அரசியல் நிலைப்பாட்டிலும் தீவிர கவனம் கொள்ளும் நம் வாசகத் தோழர்களில் கணிசமானவர்கள் தொடர்ந்து கவிதாசரண் மேல் காட்டிவரும் அக்கறையை மதித்தேற்கும் விதமாக இதை எழுத நேர்கிறது.

பொ. வேல்சாமி நான் சந்தித்த அரிய வகை திறனாளிகளில் ஒருவர். கவிதாசரண்மேல் கூடுதல் கரிசனமும் நட்பார்ந்த அக்கறையும் கொண்டவர். அதன் பொருளாதார நலன்களின்மேல் அதிகம் கவலை கொண்டு பேசுபவர். அரிய தருணங்களில் உதவவும் முன்வருபவர். அவரது கருத்துகளை ஒரு மறுமதிப்பீட்டுக்கு உட்படுத்திக் கொள்பவரைப்போல தொடர்ந்து என்னுடன் பகிர்ந்துகொள்பவர். என் தொலைபேசிக்கு அவரது குரல் மிகுந்த பரிச்சயமுள்ளது.

அவர் ஒரு “நிறப்பிரிகை”யாளர் என்பது, அதிகம் எழுதாமலே அவருக்குக் கிடைத்திருந்த மதிப்புமிக்க அடையாளம். அதற்கிணையாக அல்லது அதற்கும் மேலாகவே அவர் ஒரு ‘ஆய்வறிஞர்’ என்னும் பட்டத்தை (சுந்தரராமசாமி ஓர் உரையாடலில் இந்த அடைமொழியைத் தந்திருந்தார் - பெரிய ஆசீர்வாதம்தானே!) கவிதாசரணில் எழுதத் தொடங்கியே அவர் பெற்றார் என்பது இதழ் வாசகர்களின் அசைக்க முடியாத மதிப்பீடு.

ஒரு வணிகராகப் பல சந்தர்ப்பங்களில் குவியம் கலைந்து கவனம் சிதறும் அவரை, “எழுதுங்கள். அது ஒன்றுதான் நம்மை சமூக மனிதனாக்கிக் கொள்ளக் கிடைத்த ஒரே வழி,” என்று தொடக்கத்தில் தொடர்ந்து நச்சரித்து எழுத வைத்ததைத் தவிர கவிதாசரணுக்கு இதில் வேறெந்தப் பங்கும் இல்லை. இது ஒன்றும் சிறப்புக் கவனத்துக்குரியதல்ல என்பதை என் வாசக நண்பர்கள் இயல்பாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அவர்களது எதிர்பார்ப்புக்கெல்லாம் வேல்சாமி ஈடுகொடுக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்த்தார்கள் எனத் தெரியவில்லை. அது ஒரு வகையில் வேல்சாமியின் மேல் அவர்கள் கொண்டிருந்த மதிப்பும் நம்பிக்கையுமாக இருக்க வேண்டும். அவை கலைந்துபோனதாக அவர்கள் கருதுவதாலேயே கவிதாசரணைச் சரிபார்ப்புக்காக உற்று நோக்குகிறார்கள்.

ஊற்றுக் கண்ணைத் துல்லியமாகக் கண்டறிய ஓர் உபாயம் உண்டு. அந்த ஈரக்குறுமணற்பரப்பைச் சேற்றுக் குழம்பாக மிதித்துத் துவைத்துவிட்டால் ஊற்று அந்தச் சேற்றைக் கழுவிக்கொண்டு தன் கண்ணைத் திறக்கும். அதனைப் பார்த்து இவர்கள் என்ன பண்ணப் போகிறார்கள்? ஒன்றுமில்லை. பாலை மணலை வண்ணக் கண்ணாடி வழியே பார்த்துப் பரவசப்படுவது போலத்தான். வாழ்க்கை இந்த வண்ணங்களைக் கோருகிறது. என் வாசகர்களும் கோருகிறார்கள். உடைத்துச் சொல்வதெனில் அவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான் உண்டு. வெகு எளிய கேள்வி; பொருட்படுத்தத் தேவையில்லாத கேள்வி.

கவிதாசரணிலும் காலச்சுவடுவிலும் ஒரு ஆள் ஒரே நேரத்தில் எழுத முடியுமா என்னும் ஆகச் சிறிய கேள்விதான் அவர்களை அதிசயிக்க வைக்கிறது. அருவருக்க வைக்கிறது என்பது மிகையான கூற்று. நடைமுறையில் அதிசயமும் அருவருப்பும் அருகருகேதான் புழங்கப்படுகின்றன என்றாலும் நான் அந்தச் சொல்லாடலை ஒப்புக்கொள்ள மாட்டேன்.

எனில், இதில் அதிசயிக்க என்ன இருக்கிறது என்று புரியவில்லை. எப்படி எழுத முடிகிறது என்றால் வேல்சாமியைப் போல என்று சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே? அ.மார்க்ஸ் ‘உயிர்மை’யில் எழுத முடிந்தாற்போல என்று சொல்லிவிட்டுப் போகலாம்தானே. வேல்சாமி எத்தனையோ இதழ்களில் எழுதுகிறார். அப்பொழுதெல்லாம் எழாத கேள்வி காலச்சுவடுவில் எழுதும்போது மட்டும் துருத்திக்கொண்டு துன்புறுத்துகிறது எனில் அப்படியொரு ஒவ்வாமையை நிறப்பிரிகை இனம்கண்டு பயிர் செய்திருந்தது. நிறப்பிரிகையாளர்களுக்கு அதில் கூட்டுப்பொறுப்பு இருந்தது. அதை முதலில் உடைத்தவர் ரவிக்குமார். அடுத்து உடைத்ததாகக் கருதப்படுபவர் பொ.வேல்சாமி. எஞ்சியவர் என்பதால் அ.மார்க்ஸ் அந்தச் சுட்டலிலிருந்து தப்பித்துக் கொண்டவராகிறார். அவர்கள் ஒன்றாயிருந்து, அ.மார்க்ஸ் இன்றுபோல் காந்தியாரின் வர்ணாசிரமக் கொள்கைக்கெல்லாம் புது வியாக்கியானம் கொடுத்து அவரை ‘மகாத்மா’வாகப் பார்க்கத் தொடங்கியிருந்தால், முதலில் உடைத்தவர் அவராகத்தான் இருந்திருப்பார். ‘இது அபத்தம்’ என்று சொல்லிவிட முடியும் எனில், நிறப்பிரிகையின் பின்நவீனத்துவ விருப்பு வெறுப்புகள் சிலபல முதிர்ச்சியற்ற அபத்தம் என்று சொல்லிவிடவும் கூடும்தான்.

எல்லாம் கலைந்து கரைந்து போயாயிற்று. இந்த நேரத்தில் இதை நான் பேசுவதென்பது, எப்படி கலைந்தது, எப்படி கரைந்தது என்பதாகக்கூட அல்லாமல் வெறும் ஆற்றாமையாகவோ அல்லது அணிதிரண்டுவரும் புதிய பகைப்பேச்சுகளுக்கு முகம் கொடுப்பதாகவோகூட ஆகிவிடலாம். எனக்கு ஏதொன்றும் புதியதாக இருக்கப்போவதில்லை. ஒவ்வொருவரும் நியாயம் என்று கருதுவதை ஏதோ ஒருவகையில் பேசித்தானாக வேண்டியுள்ளது.

வேல்சாமி எங்கே எழுதுகிறார் என்னும் ஒற்றைப்பரிமாணக் கேள்வியை நான் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர் தீவிர வாசகர். கருத்துகளை உள்வாங்கிச் செறித்துக் கொள்வதில் வல்லவர். என்னைப் பொறுத்தவரை அவை பதிவு செய்யப்பட வேண்டும் என்பதிலேயே இன்னமும் குறியாய் இருக்கிறேன். அவர் நீர்த்துப்போய்க் கொண்டிருக்கிறாரா, ஒரு நிலைப்பாட்டில் புதிய சேமிப்புகளோடு தன்னை வகைப்படுத்திக் கொள்ளும் தேவையை உணர்கிறாரா என்பதை அவர்தான் நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும். (இந்த இதழில் வெளியாகியுள்ள அவரது கட்டுரையின் சில பகுதிகள் ஏற்கனவே காலச்சுவடுவிலும் வந்துள்ளன.) ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது மறு சீரமைப்புகள் தேவைப்படும். அவருக்கும் அது விரைவில் தேவைப்படலாம். அப்போது அவரது திசைவழிகள் ஓர் அழுத்தமான நிலைபாட்டில் புதுப்பரிமாணம் பெறலாம். எல்லாம் இயல்பாய் இருக்கும்வரை வரையறைகள் உற்றுப் பார்க்கப்படுவதில்லை. இல்லாமல் போகும்போது வெய்யிலில் பனித்துளி தளும்பித் திரள்வதில்லை.

“நீங்கள் கவிதாசரணில் எழுதும்போது அதைப் படிக்காமலே நாங்கள் மதித்தோம். ஆனால் காலச்சுவடுவில் எழுதும்போது அந்த மரியாதை இல்லாமல் போய் விடுகிறது,” என்று அவரிடமே சில நண்பர்கள் சொன்னதாக அவரே ஒருமுறை சொன்னார்.

“அது எப்படி படிக்காமலே சொல்ல முடிகிறது? நான் எல்லா பத்திரிகைகளிலும் ஒரே மாதிரிதானே எழுதுகிறேன். படித்துப் பார்த்தால்தானே தெரியும்,” என்று அவர்களுக்குப் பதிலளித்ததாகவும் என்னிடம் சொன்னார். இந்தப் பதில் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளவும் சொல்லிக் கொண்டது என்பதை அவர் அறியாதவர் அல்லர்.

ஒருவகையில் வேல்சாமி ஆசைப்படுவதில் ஒரு குழந்தையைப் போல. எழுதுவதில் தனக்கொரு சுவை ஏற்பட்டதும், தன் எழுத்து எல்லாரையும், எல்லா வட்டங்களையும், தமிழ் உலகின் எல்லா மூலை முடுக்குகளையும் சென்றடைய வேண்டும் என்று ஆசைப்படத் தொடங்கிவிட்டார். இது பலருக்கும் உள்ள ஆசைதான். வேல்சாமிக்குக் கொஞ்சம் பேராசையாக விரிவடைந்தது என்று சொல்லலாம். அதற்கு அவர் தகுதி உள்ளவராகத் தன்னை நினைக்கிறார். ஒரு கட்டுரை வந்ததும் குறைந்தது ஒரு நூறு பேரையாவது தொடர்புகொள்வார் என்று நினைக்கிறேன். அது ஒருவகையில் கட்டுரைக்கு மட்டுமல்லாது கட்டுரை வந்த இதழுக்கும் கிடைக்கும் விளம்பரம் என்பதாக மகிழலாம். கவிதாசரண் இத்தகைய விளம்பரங்களில் கவனம் செலுத்தவில்லை என்பதால் அதன் வாசகர் வட்டம் அவருக்குப் போதுமானதாயில்லை. ஆனால் அந்த வட்டம்தான் அவரை முக்கியமான ஆய்வாளர் என்று அடையாளம் காட்டியது என்பதையும் அவர் மறந்துவிடவில்லை. ஆகவே, அழுத்தமான இலக்கியத் தரமுள்ளவற்றுக்குக் கவிதாசரண், வணிகத்தனமான எழுத்துப்பரவலுக்குப் பிற பத்திரிகைகள் என்று அவர் முன்பொரு கணத்தில் யோசித்திருக்கக் கூடுமோ என்றுகூட தோன்றுகிறது. கவிதாசரண் வாசகர் வட்டம் பற்றித்தான் அவருக்குக் கொஞ்சம் மனக்குறை இருந்ததே தவிர கவிதாசரண் என்னும் ஆளையும் தாளையும் அவர் இதுவரை குறைத்து மதிப்பிட்டதில்லை என்பதை நான் அறிவேன் என அவரும் அறிவார்.

இப்படியாகத்தான் அவர் பரந்துபட்ட எழுத்தாளரானார் என்பது என் அனுமானம்.

அவர் தனது வாழ்க்கையில் சொந்தச் சகோதரர்களிடமும், உறவினர்களிடமும், சொந்தத்துக்கும் மேலான வாழ்நாள் நண்பர்களிடமும் மிகுந்த ஏமாற்றங்களைச் சந்தித்து நொந்துவிட்டதாக நம்புகிறார். புண்கள் ஆறாதவரை, தான் பட்டதுதான் ஆகப் பெரும் காயங்கள் என்பதாகத்தான் மனம் கிடந்து தவிக்கும். அதன் காரணமாக, இந்த வியாபாரத்தையெல்லாம் ஏறக்கட்டிவிட்டு, பண்ணையைப் பிரித்துக்கொண்டு, சென்னையில் குடியேறி, எழுத எவ்வளவோ இருக்கிறது என்பதால் முழுநேர எழுத்தாளனாகவும், தெரு முனையில் கொடிபிடித்துக் கூவும் களப்பணியாளனாகவும் மாறிவிடலாமா என்று யோசிக்கிறார். இதில் எனக்குக் கொள்ளை மகிழ்ச்சி. பலரும் எழுத்தைப் பேயாய் பிடித்துக்கொண்டு ஆட்ட, கடைசியில் இவரைப்போய் எழுத்துப்பேய் பிடித்துக்கொண்டு விட்டதல்லவா. ஆனால் ஒன்று, வியாபாரம் செய்தால்தானா ஒருவர் வியாபாரி? வேல்சாமி நாடியோடு பிறந்தவர். வியாபாரம்தான் அதன் துடிப்பு. “எழுத்தைக்கூட வியாபாரம் போலவே விநியோகிக்கிறார்,” என்று நெருங்கிய நண்பர்கள் தங்கள் அடிமனத்தில் சிறு கசப்பிருந்தாலும், புறத்தில் குதூகலமாகப் பகடி செய்யும் அளவுக்கு அவர் ஒரு தேர்ந்த வியாபாரி.

கவிதாசரணில் வேல்சாமி எழுதப் புகுவதும், அ.மார்க்ஸ் எழுதுவதைத் தவிர்ப்பதும் ஏறக்குறைய சமகாலத்தில் நடந்த நிகழ்வுகள். மார்க்ஸ் எழுதாமைக்கு, அவர் ஞாநியைப் பற்றி எழுதிய கட்டுரைக்கு ஞானி எழுதிய பதிலை நான் அப்படியே வெளியிட்டதுதான் காரணம் என்பது என் யூகம். காரணம் என்று வந்துவிட்டால், அது ஒற்றையாய் நிற்பதில்லை. வேல்சாமி தொடர்ந்து எழுதுவதுகூட ஒரு சொல்லப்படாத காரணமாக இருந்திருக்கலாம். உண்மையில் எல்லாக் காரணங்களுமே சொல்லப்படாதவை. ஏனெனில் அவை கேட்கப்படாதவை. நிறப்பிரிகை காலத்தில் அவர்கள் மாலை வேளைகளில் கூடிக்கூடி விவாதித்து, படித்து, கருத்துப் பரிமாறிக் கொண்டு, செழுமை பெற்றவர்கள். வேல்சாமியின் கருத்தியல் தகவல்களையும் சேர்த்து அப்போது மார்க்ஸ்தான் எழுதிக் கொண்டிருந்தாரே தவிர, வேல்சாமிக்கென்று எந்தப் பதிவும் இல்லை.

அவர் முதல் முறையாகத் தொடர்ந்து எழுதத் தொடங்கியது கவிதாசரணில்தான். இதன் உள்வெளிகளை அவர்களே அறிவர். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் வேல்சாமியின் உறவினர் குடியிருந்த மார்க்ஸ் வீட்டை உடனடியாகக் காலிபண்ணித் தரும்படி கோரி மார்க்ஸ் வேல்சாமியைத் துச்சமாகப் பேசித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார் என்று பதற்றத்தோடு சொன்னார். அவர் பேசப்பேச அந்தப் பதற்றம் கோபமாகவும் வெறுப்பாகவும் வன்மமாகவும் பீறிடுவதை உணர்ந்து அவரைச் சமாதானப்படுத்தினேன். “நீண்டகால நண்பர்கள் இப்படித் திடீரென்று முகம் முறித்துக்கொள்வது எதிராளிக்கு இளப்பமாகிவிடும். எனவே எவ்வளவு கசப்பாயிருந்தாலும் இதைத் துடைத்தெறிந்துவிட முயலுங்கள். யாரிடமும் பேசாதீர்கள். இத்தோடு விட்டுத் தொலையுங்கள்” என்று வேண்டினேன். ஆனால் அவர் பதற்றம் அவ்வளவு எளிதாயும் விட்டுத் தொலைக்கும்படியாயும் இல்லை. இரு நண்பர்கள் பிரிந்து விடுவதெனில் ஒருவரைப்பற்றி மற்றவர் பேசாமல் மௌனம் காப்பதே உத்தமமாயிருக்கும். ஆனால் அவர்கள் அப்படிப்பட்ட ஆழ்மனத் தவம் காக்கும் நண்பர்களாய் இல்லை. இருவரும் தங்களுக்கிடையே பெரும் பள்ளத்தை வெட்டிக் கொண்டார்கள்.

இதற்கிடையில் பெருமாள் முருகன் வேல்சாமியிடம் ஒரு கருத்தைப் பதிவு செய்து அதைக் காலச்சுவடுவில் வெளியிட்டார்.

வேல்சாமி நாமக்கல்லில் தன்னந்தனி மனிதனாக வணிகம் செய்து கொண்டிருப்பவர். வணிக உலகம் தன் சொந்த பந்தங்களையும் சுய சாதி பலத்தையும் அடியாள் பட்டாளமாக வைத்துக்கொண்டு நாடுநகரமெங்கும் கொடிகட்டிப் பறக்கிறது. இப்படிப்பட்டதொரு நெருக்குதலான சூழகல் வேல்சாமிக்குப் பெருமாள் முருகன் நட்பும் துணையும் அறிவுரீதியாகவும் தொழில்ரீதியாகவும் அனுசரணையாக இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. பெருமாள் முருகன் அங்கே உள்ளூர்ப்பிள்ளை; அதுவும் பேராசிரியப்பிள்ளை. எழுத்தூக்கமுள்ள ஆளுமை. அவருக்குக் காலச்சுவடுவானது அரசியலுக்கப்பாற்பட்ட, கைக்கு இணக்கமான பத்திரிகை. ஒன்றும் ஒன்றும் இரண்டாவதுதான் இயல்பு. திறந்த சாளரத்தின் வழியாகத்தான் வெளிச்சமும் காற்றும் தடம் பதித்து நடக்கும். மார்க்சும் அவரது சீடர்களும், “சூடு சுரணையில்லாமல் நாய் மாதிரி காலச்சுவடை நக்கப்போய்விட்டான்” என்று வேல்சாமியை வேண்டிய மட்டும் தூற்றினர்.

ஈரோட்டில் அப்படியொரு தூற்றலை நானே என் கண்ணால், காதால் கண்டேன்; கேட்டேன். “இந்த ஆள் இப்படிச் சொல்லிக்கொண்டு அலைவதற்காகவே நான் அதில் எழுதினால் என்ன?” என்று கேட்டார். “எழுதுங்க. அதனாலென்ன?” என்றேன். “நான் காலச்சுவடைத் திட்டினதில்ல. எனக்கெந்த பகையும் இல்ல. நான் அதுல எழுத நினைக்கல. ஆனா இந்த மனுசனுக்காக எழுதத் தோணுது. அந்த ஆள் வார்த்தையை நிரூபிக்கணும்னு தோணுது,” என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. அந்த ஆள் இவரை “முட்டாள்” என்று திட்டினால் இந்த ஆள் அதை நிரூபித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரா என்று எனக்கு நானே மனத்துக்குள் சொல்லிக் கொண்டதோடு சரி. அவரது பேச்சுகள் ஒரு தவற்றை நியாயப்படுத்துவதற்கான வாய்ப்புக்காகக் காத்திருப்பவரின் வாதத்திறமையாகத்தான் ஒலிக்கும் என்பது அவருக்குத் தெரிந்தே இருக்க வேண்டும்.

ஒருநாள் நள்ளிரவு - நள்ளிரவென்றால் சொல்லிவைத்தாற்போல் 12 மணிக்கு என்னைத் தொடர்பு கொண்டார். பெரும் பதற்றத்தோடும் மிகுந்த மனக்கொதிப்போடும் பேசினார். ஒரு பத்து நிமிடங்களுக்கு முன்னால் தனக்கொரு தொலைபேசி வந்ததாகவும் அந்தச் செல்பேசி எண்ணைக் குறித்துக் கொள்ளும்படியும் கோரினார். குறித்துக் கொண்டேன். அவரைத் தொடர்பு கொண்டவர்கள் மகா கேவலமாகவும் சொல்லக் கூசும்படியாகவும் திட்டினதாகவும், சில கணங்கள் அதிர்ச்சிக்குப்பின் தானும் அதைவிட மோசமாகத் திட்டியதாகவும் சொன்னார். எல்லாம் காலச்சுவடுவோடு அவரைத் தொடர்புபடுத்தித்தான். அன்று இரவு ஈரோட்டில் அந்த நபர்கள் கூடியிருந்தனர். குடித்துவிட்டு அவரைச் சீண்டியிருந்தனர்.

அவர் மானாங்காணியாகப் பெயர் சொல்லித் திட்டத் தொடங்கியதும், “ஏய், அடையாளம் கண்டுக்கிட்டாண்டா. கட் பண்ணுடா, கட் பண்ணுடா” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்து விட்டனர். அந்தச் சூட்டோடுதான் அவர் என்னிடம் தகவல் பரிமாறிக் கொண்டது. எனக்கு உண்மையில் மகா அருவருப்பாயிருந்தது. இது ஒருவகை பொறுக்கித்தனம் என்பதாகக் கூசியது. “அந்த நம்பர் யாருடையது என்று பாருங்களேன்,” என்றார். “நாளைக்குப் பார்க்கலாம். தத்துவக் கருத்தியல்கள் எல்லாம் இந்தக் கீழ்மைக்குள்தான் கனிந்து மணம் பரப்புகின்றன என்பதை நினைக்க எனக்கு ஒரே மலைப்பாயிருக்கிறது. குமட்டலாகவும் இருக்கிறது. பன்றி சிலுப்பி சேறு தெறித்தால் கழுவிக்கொள்ளாமல் வேறென்ன செய்வது? சரி, அமைதி பேணுங்கள். நாளைக்குப் பேசிக்கொள்ளலாம்,” என்றேன்.

மறுநாள் அந்த எண்ணைத் தற்செயலாக ஒரு நண்பரிடமிருந்து உறுதி செய்துகொண்டு அவரிடம் தெரிவித்தேன். அது ஒரு ஈழத் தமிழ் எழுத்தாளரின் செல் எண். வெகு நல்ல படைப்பாளி. ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கிறார். தமிழகம் வந்துள்ள அவர் இன்னும் 20 நாட்கள் தமிழ் நாட்டில் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். அவர்தான் பேசினாரா, அல்லது அந்த செல்லில் அவரது குடிகாரக் கூட்டாளிகள் பேசினார்களா என்று வேல்சாமிக்குத் துல்லியமாகத் தெரியவில்லை. “அவனை மடக்குனா என்னங்க? ஏர்போர்ட்ல வச்சே அவனை மடக்கிடலாம். ஐரோப்பாவுக்கு அவனைப் போக விடக்கூடாது,” என்றார். “ஆனா அவர் பேசினாரான்னு உங்களுக்குத் தெரியாது. பேசலேன்னாலும் அவரும் உடந்தைதான். இல்லேன்னா அவங்க எப்படி அவர் செல்லைப் பயன்படுத்தியிருக்க முடியும். குடிச்சிட்டா எல்லாமே தொலைஞ்சிடுமா?” என்று ஏதேதோ சொல்லி என்னை மீட்டுக்கொள்ள முயன்றேன்.

“அவனை அமுக்கிடலாமாங்க?” என்றார் மீண்டும். “ஒரு பாடமா இருக்கும்னா, செஞ்சாதான் என்னான்னு கோபம் வருதுதான்,” என்றேன். எனக்கிருந்த வெறுப்பிலும் அடிபட்ட மனிதருக்கு ஆறுதலாகவும் அதைச் சொன்னாலும் அது ஒரு முட்டாள்தனம் என்பது அப்போதே விளங்கியது. அடுத்தநாள் அவர் தொடர்பு கொண்டபோது, “ஒரு புகழ் மிக்க படைப்பாளி உங்கள் கையில்தானா அவமானப்பட வேண்டும்? விட்டுத் தொலையுங்களேன்,” என்றேன். ஆனால் வேல்சாமி அதைப்பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டார். அடுத்த சில தினங்களில் அந்த எழுத்தாளர் ஐரோப்பாவுக்குப் பறந்துவிட்டார். அவரைச் சூழும் நெருக்கடியை உய்த்தறிந்துதான் அவர் முன்கூட்டியே சென்றுவிட்டதாகவும் அந்த நெருக்கடியை உருவாக்குவதில் காலச்சுவடுவும் துணையிருந்தது என்பதாகவும் சிறிது காலத்திற்குப் பிறகு நான் கேள்விப்பட்டேன். இந்த விஷயங்கள் ஏதொன்றும் தெரியாது என்று கருதப்பட்ட நண்பர் அதைச் சொன்னார். இவையெல்லாம் இட்டுக்கட்டிய வதந்திகள் என்று நிரூபணமானால் அவற்றை இங்கே சொன்னமைக்காக நான் மன்னிப்பே கேட்டுக்கொள்வேன். அத்தோடு நிம்மதியடைவேன். ஆனால் அவை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்து விடக்கூடிய விஷயமல்ல.

ஆக, ஆழிப்பேரலை ஒன்று வேல்சாமியை அடித்துத் தள்ளிக்கொண்டு போய் அவருக்கான இடத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது என்பதாக உலகுக்கு அர்த்தமாகிறது.

இதில் அவருக்கான இடம் என்பதன் எனது வரையறைகள் விரிந்த பொதுத்தளத்திலானவை. அதன் வட்டாரக் குறியீடாக, கட்டாயம் சொல்லித்தானாக வேண்டும் என்று கருதுகிறவர்கள் வேண்டுமானால் காலச்சுவடுவைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அவரது இயல்பின் நீட்சியாக, அ. மார்க்ஸ், பெருமாள் முருகன் என்று இணைப்புக் கண்ணிகள் ஏதுமில்லாமலே அவருக்கான இடத்தில்தான் அவர் பொருந்துவார் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

இதன் சார்பாக எனக்குச் சில விமர்சனங்கள் உண்டு. அவற்றை இங்கு வெளிப்படையாக விவாதிப்பதென்பது வேல்சாமி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய, ஒரு பொதுத்தன்மையின் அடையாளப் படிமங்களை இனம் காண்பதற்கான முயற்சியாகவே இருக்கக்கூடும். மேலும் வேல்சாமியின் நிலைபாடுகளில் பிடிபடாமல் நழுவும் நுண்ணரசியலின் தவிர்க்கமுடியாத அர்த்தங்களைக் கணக்கில் கொள்வதாகவும் அமையும். இவ்விமர்சனங்கள் வேல்சாமியின் ஆய்வுத்திறனை ஆழமாக நேசிக்கவும், அவரது வரிகளிடையே நுட்பமாக வாசிக்கவுமான ஒரு பக்குவ நிலையின் தீவிர பரிவர்த்தனையுள்ளவனுக்குத் தான் வாய்க்கும்.

கழுகு கண்ணுக்குத் தெரியாத உயரத்தில் பறந்தாலும் அதன் பார்வை மண்ணில் கிடக்கும் செத்த உடல்கள் மீதே பாயுமாம். அது தன்னளவில் ஒரு துப்புரவுத் தொழிலாளி. சாகும் பிணங்களால் மரியாதையாகப் பார்க்கப்படாத அரிய பணி. அர்த்தங்களால் சூலுற்ற தீவிர விமர்சனமும் அப்படியொரு பணிதான். நான் அந்தக் கழுகாய் இருப்பதில் இயல்பாய்ப் பொருந்தியவன். இப்படிப் பொருந்துவதில் தெளிவின்மை இருந்தாலும், வேல்சாமிகூட அப்படிப்பட்ட ஒரு கழுகாகச் செயல்படுகிறவர்தான். அவருடைய ஆய்வு ஒழுங்குகள் கடும் விமர்சனங்களைச் சாகுபடி செய்வதுதான் அவற்றின் புதுமையும் வலிமையும். ஆனால் தன் வாசிப்புச் செறிதிறன்களைக் கொண்டு கூட்டுவதில் தீவிர நுட்பம் காட்டுகிற வேல்சாமி தனக்கான சார்பும் சாய்மானமும் உள்ள தன் அரசியல் நிலைப்பாட்டிலும் அதன் நுண்ணலகுகளின் தெளிபொருளிலும் பெரும் போக்காகவோ அல்லது கவனமற்றவராகவோ ஒருவகை ஏமாற்றுத்தனத்தைப் பொதிந்து கொண்டிருப்பது எப்படி என்பதுதான் இங்கு வெளிச்சப்பட வேண்டிய புள்ளிகள்.

அவருடைய இன்றைய எழுத்துகளுக்கு வாசகர்கள்தாம் ஓர் அரசியல் நிலைப்பாட்டை அவருக்காகக் கற்பித்துக் கொள்கிறார்களே தவிர, அவர் அதற்குரியவர் அல்லர். அவர் ஒரு நிறப்பிரிகையாளராய் வண்ணம் கொண்டபோது பின் நவீனத்துவம், மறுவாசிப்பு, கட்டுடைப்பு என்றெல்லாம் நுரைத்தெழுந்த ஒரு அதி நவீன பிம்பத்தின் மாயத்தோற்றம்தான் அவர்மேல் ஒட்டிக் கொண்டிருக்கிறதே தவிர அது அவருக்கான அரசியல் நிலைப்பாடு அல்ல. பார்ப்பன எதிர்ப்பில் நீதிக்கட்சிக்காரர்களோடு பெரியார் உறவு வைத்துக் கொண்டிருந்தாலும் ஒட்டுமொத்த எதிர் நடவடிக்கைகளில் அவருடைய அரசியல் நிலைப்பாடு முற்றாக வேறுபட்டது என்பது போலத்தான் இதுவும். வேல்சாமி தன்னுடைய நிலைப்பாட்டை இன்னமும் உடைத்துச் சொல்லி விடவில்லை, அல்லது வாசகர்கள் அதை சரிவர உற்றறியவில்ல, அல்லது வேல்சாமிக்கே அது ஒரு விஷயமாகப்படவில்லை என்பதே உண்மை.

வணிகர்களாகவும் பார்ப்பனர்களாகவும் தங்களுள் இயல்பு காக்கிறவர்கள் அடிப்படையில் ஒற்றைத் தன்மையில் பொருந்துபவர்கள். ஒற்றைத் தன்மையில் குவிவதற்கே அவர்கள் பல திசைகளிலுமிருந்து பாய்ந்து வருவார்கள். அதுதான் அவர்களது அறிவிக்கப்படாத அரசியல் நிலைப்பாடு. அவர்களுக்கான நுண்ணரசியல், மெகா அரசியல் எல்லாம் ஒன்றுதான். அதுதான் ஒற்றைத் தன்மையுள்ள, நேர்மை, உண்மை, நன்மை போன்ற சொல்”மைஃகள். இல்லாத ஒன்றைக் கற்பிக்கும் பொய்மைகள். அதைக் கட்டமைப்பதற்காக அவர்கள் தீவிரப் போர்க்கோலம் பூணுவார்கள். அதி தீவிர லட்சியவாதிகளாக அவதாரம் எடுப்பார்கள். ஆனால் அடிப்படையில் அவர்கள் ‘களிம்பேறிய அசைவின்மையைக் கோரும் இருப்பை’ நேசிப்பவர்கள். வேல்சாமியும் அப்படியொரு இருப்பின் நேசத்தில் குவிகிறவராகத்தான் எனக்குப் படுகிறார். இந்த இருப்பின் சாய்மானங்கள் எப்போதும் பார்ப்பனத் தன்மையின் பராமரிப்பில் அர்த்தமும் சுகமும் காணும் அடங்கல்கள்.

வேல்சாமியுடனான உரையாடலில் இதுபற்றிய விவாதங்களுக்கு நான் தயாராகும்போது, “எவங்க யோக்கியன்? எல்லாரும் களவாணிப் பயல்கதாங்க, போங்க,” என்று ஒரு வியாபாரிக்கே உரிய பதிலோடு கடந்துவிடுவார். எழுத்து இந்த ஒற்றைப் பதிலோடு முடிந்து விடுவதற்கல்ல, அல்லது அதை உறுதி செய்வதற்கல்ல. பன்மைப் பரிமாணங்களோடு ஒற்றைக் கொடுமையை உரித்துக் காட்டுவதற்காகத்தான் நமக்கான, அல்லது எனக்கான எழுத்து. வேல்சாமியிடம் அப்படியோர் எழுத்தை எதிர்பார்த்துத்தான் இந்த விளம்பல். எழுத்தைத் தன் முதன்மைப் பணியாக, அல்லது தன் வணிகத்துக்கிணையான பணியாகவேனும் ஆழக்கால் பதிக்கும் மன எழுச்சியில் இருக்கும் ஒருவர் நாற்சந்தியில் கிளைக்கும் தனக்கான பாதையை நின்று நிதானிக்கும் தேவையை நினைவுபடுத்தும் கேள்விகள் இவை.

வேல்சாமியின் இதுவரையிலான ஆய்வுகளைப் படித்த ஒரு வாசகனின் முதல் அபிப்பிராயம் “அவர் வித்தியாசமாகச் சிந்திக்கிறார்” என்பதாக இருக்கும். இது வேல்சாமியின் வெற்றி. சிந்தனை சமூக வளப்பத்துகான மனிதனின் உயர்ந்தபட்ச அறிவார்த்தம். எழுத்து அதன் மொழியாக்கம். எழுத்து, மொழியின் போதாமைகளால் வரையறை செய்யப்படுகிறது. சிந்தனை, சமூக மனத்தின் அரசியல் நிலைப்பாடுகளால் பின்னப்படுகிறது. எழுத்துள் சிந்தனையின் பொருத்தப்பாடு என்பது அதன் ஒவ்வொரு முற்று வாக்கியமும் அரசியல் ஓர்மையில் பொருந்தி நிற்பதே. மேலும் வித்தியாசமான சிந்தனை என்பது தன்னளவில் சிறப்புக்குரியது. ஆனால் வித்தியாசத்திற்காகவே சிந்தனை என்பது ஒருவகை வித்தை. உத்திகளால் வெற்றிகரமாக நடத்தப்படும் அரசியலற்ற வித்தை. கோமாளியின் வெற்றி சிரிக்க வைப்பதுதான் என்னும்போது அவன் தன்னைத்தானே பரிகசித்துக் கொள்ள வெட்கப்படுவதில்லை.

வேல்சாமி எல்லா பத்திரிகைகளிலும் ஒரே மாதிரியாகவே எழுதுவதாகச் சொன்னாலும் அது உண்மையல்ல. அல்லது அவரது வாசகப் பிரதி அப்படியொரு கற்பித வெளிச்சத்தில் உள்வாங்கப்படுவது சரியல்ல. அதை அவர் விளங்கப் பண்ணவில்லை எனில் அதுதான் அவரது அரசியல் நிலைப்பாட்டின் மௌனப்புள்ளி. ஒருமுறை காலச்சுவடுவில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் பெரும்போக்காய் திராவிடக் கட்சிகளைச் சாடியிருந்தார். நான் அவரிடம் சொன்னேன்: “இந்தக் கட்டுரை கவிதாசரணில் வந்திருந்தால் சில சொற்களின் தொனிப் பொருள் மாற்றப்பெற்றிருக்கும். உங்கள் விமர்சனமும் தீர்வைக் கோரும் சக பங்காளியின் ஆற்றாமையாக அர்த்தம் பெற்றிருக்கும். காலச்சுவடுவில் வரும்போது அது காட்டிக்கொடுக்கிற வேலையாகத்தான் கணிக்கப்படும்.” “நான் சரியாகத்தாங்க சொலலிகயிருந்தேன். நீங்க சொல்றமாதிரி எக்ஸ்ட்ராவா ஒண்ணும் சொல்லலியே,” என்றார்.

“ஒவ்வொன்னுத்துக்கும் இடம் பொருள் ஏவல்னு ஒன்னு இருக்கில்லையா? அதைக் கணக்குல எடுத்துக்கச் சொல்றேன்.” ஆனாலும் நான் சொன்னதை முழுமையாகப் பரிசீலித்தாரா என்பதை என்னால் உய்த்துணர முடியவில்லை. அதனால்தான் அதை வெளிப்படையாக இங்கு விவாதிக்கத் தோன்றுகிறது. அடிப்படையில் அவருக்கு திராவிட இயக்கம், பெரியார் முழக்கம் பற்றியெல்லாம் ஒரு மரியாதையான பார்வை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதற்காக பார்ப்பனக் கடுங் காப்பித்தான் அவருக்கு உகந்தது என்பதாகவும் என்னால் உறுதியிட முடியவில்லை. இந்த ஈரொட்டுதான் அவர் என் மனிதராக இல்லாமல் எதிர் முகமாகத் திரிந்துவிடக் கூடாதே என்று பதைக்க வைக்கிறது.

ஜூலை காலச்சுவடு இதழில் என்று நினைக்கிறேன். காலச்சுவடு கண்ணன் தன் ஒரு பக்கக் கட்டுரையில் அ.மார்க்ஸ், கொளத்தூர் மணி போன்றவர்களை நம்பகத் தன்மையற்றவர்கள் என்பதாக நையாண்டி செய்து எழுதியிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு அதே விஷயங்களை என்னிடம் அதே விமர்சனங்களோடு சொல்லி, “இதையெல்லாம் எழுதலாம்னு நெனக்கிறேன். நல்லா இருக்காது?” என்று கேட்டார். “நல்லாத்தாங்க இருக்கும். ஏற்கனவே யாராவது எழுதியிருந்தாலும் நீங்களும் எழுதலாம்தான். ஒன்னை மனசுல வையிங்க. நீங்களும் நானும் இன்னும் சூத்த்திரப் பயலுகதான். நமக்குன்னு ஒரு வட்டம் இருக்குது. அதுகூட நாம போட்டுக்கிட்ட வட்டம் இல்ல. நம்மள ஒதுக்கி எவனோ போட்ட வட்டம். வட்டம் கெட்டியா இருக்கிறவரைக்கும் நாம அந்த வட்டத்துக்கு உள்ள நின்னு எழுதறமா, வெளிய நின்னு எழுதறமாங்கிறதுதான் நம்ம அரசியல். “உலகத்தில் இருக்கிற எல்லா மதங்களும் போலத்தான் இந்து மதமும்”னு நம்புறவனும் நம்மை நம்ப வைக்கிறவனும் போலவே நீங்களும் எழுதுவீங்கன்னா அதை நீங்க எழுதினா என்ன, காலச்சுவடு கண்ணன் எழுதினா என்ன?” என்றேன். பிறகு அவர் வேறெங்கும் அதை எழுதினாரா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆறுமுகத்தமிழனின் “திருமூலர்: காலத்தின் குரல்” என்னும் நூலுக்கு ஓர் அருமையான ஆய்வுரை எழுதியிருந்தார், ஒரு தவறான சுட்டுதலுடன். ஆறுமுகத் தமிழன் போன்றவர்கள் என்னதான் எதிர்வினையாற்றினாலும், வேல்சாமி போன்றவர்களின் விமர்சனங்களைத் தீர்க்கமாக உள்வாங்கிக் கொண்டு தங்களைச் செழுமைப்படுத்திப் புத்தாக்கம் செய்துகொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். அதைவிடுத்து முச்சந்தியில் நின்று துணியைக் தூக்கிக் காட்டுவதுபோல் தன் பெயரிலுள்ள தமிழன் முத்திரையைத் தங்க அரைமுடியாகப் பாவித்துத் தூக்கிக் காட்டிக்கொண்டு திரியக்கூடாது.

வேல்சாமியைப் பற்றி நான் இன்னொன்றும் சொல்லவேண்டும். அவர் நவீன தமிழுலகுக்குக் கிடைத்த அரும்பெரும் ஆய்வாளர். (இதை என் காலம் பூராவும் சொல்லிக் கொண்டிருக்க இவர் திரிதலின்றி ஒருமையுற வேண்டுமே என்னும் விழைவுதான் இந்தக் கட்டுரையே. அதெல்லாம் புயல் கரையைக் கடந்தாச்சுய்யா என்றால், அதுவும் சரிதான்) துறைசார் தமிழ்ப்புலமைகளையெல்லாம் ஒரு கைவீச்சில் ஓரம்கட்டிவிட்டு உலகளாவிய ஆய்வுநெறிகளை எந்தப் பிரயாசையுமின்றித் தன் பார்வையில் கோர்த்தெடுத்து மொழியக்கூடிய காத்திரமான தமிழ் ஆளுமையாகத் தன்னை உருப்பெருக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறார். (இருக்கட்டும் ஐயா. அதனால் எனக்கென்ன ஊதியம்? புஷ் கேட்டானே உலக நாடுகளைப் பார்த்து நீ என் பக்கமா, எதிரி பக்கமா என்று? அது நான் கேட்க வேண்டிய கேள்வி. 'இனியும் இழிவோம் என்றெண்ணினையோ’ என அறைகூவிக் கிளர்ந்தெழும் இந்திய வெகுமக்களின் ஓங்காரக் குரல் கேட்கம் கேள்வி. இதிலுள்ள சமூகக்கொடுமை என்னவெனில் இதை என் சகோதரனிடமே கேட்கும்படியானதுதான்.)

இந்தப் பேராளுமையுடன் கூடவே ஒரு கொடுக்கும் உண்டு. பிறவிக் கொடுக்கு. பராக்கு பார்க்கிறவனின் குண்டியை நறுக்கென்று கிள்ளிவிட்டு அவன் துள்ளுவதைப் பார்த்து எள்ளுகின்ற கொடுக்கு. அந்தக் கொடுக்கு எப்போது ஆய்வுக் கட்டுரை எழுதும், எப்போது கிள்ளும் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு கட்டத்தில் அவரையே கவிழ்க்கவும் அந்தக் “கொடுக்கால்”தான் முடியும். அந்தக் கொடுக்குதான் ஆறுமுகத் தமிழனிடம் “பதிலுக்குப் பதில்” வாங்கிக் கட்டிக்கொள்ள வைத்தது. ஆனால் ஆறுமுகத் தமிழனுக்கு தீவிர சைவனாயிருக்கவே ஒரு பிறவி போதாது என்பதால் தன் கிள்ளலை சமூகச் சீர்மையோடு அர்த்தப்படுத்தவே இல்லை என்பதோடு அந்த நுண்ணரசியலுக்கு அவர் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவே இல்லை.

ஒரு நூற்பதிப்பில் இடம் பெறும் “ககைசபை” என்னும் சரியான பெயரை “கனகசபைப்பிள்ளை” என்று இருக்கவேண்டும் என்பதாக வேல்சாமி தவறாகக் கணித்துக்கொண்டு தன் விமர்சனத்தை முன் வைக்கிறார்: “கனகசபைப் பிள்ளை என்பதில் பிள்ளையை எடுத்துவிட்டு இவ்வாறு (கனகசபை என்று) எழுதுவது பதிப்பு நேர்மை அல்ல. இந்த நிலை தொடர்ந்தால் உ.வே. சாமிநாதய்யர் என்பது வருங்காலத்தில் உ.வே. சாமிநாதன் என்று குறிப்பிட வாய்ப்புள்ளது.”

இதில் முதல் வாக்கியம் சரி. ஆனால் இரண்டாவது வாக்கியம் என்ன அரசியலை முன் வைக்கிறது? சாதியையும் சாதிப்பட்டத்தையும் விட்டுவிடக் கூடாது என்னும் அரசியலையா? உ.வே. சாமிநாதய்யரை உ.வே சாமிநாதன் என்று சொல்லிவிட்டால் என்ன வர்ணாசிரமக் குலைவு வந்துவிடும்? பிள்ளையும் ஐயரும் அவனவன் தன் பேரோடு சேர்த்துக் கொண்ட தொங்கு சதைதான். பள்ளிச் சான்றிதழ்ப் பெயரல்ல. வெட்டியெறிந்து விட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? பார்ப்பானாய்ப் பிறந்துவிட்டால் அவனது ஒட்டுப் பெயர் ஐயர். ஐந்து வயது சிறுவனுக்குக்கூட “ஐயர்”தான், “ஐயன்” அல்ல. ஆனால் பறையனாய்ப் பிறந்துவிட்டால் அவனது ஒட்டுப்பெயர் “சாம்பான்.” படுகிழவனுக்குக்கூட “சாம்பான்”தான். ஒரு மரியாதைக்காக “சாம்பார்” அல்ல.

இதிலுள்ள கயமையும் சிறுமையும் கருதித்தானே பறையர்கள் தங்கள் ஒட்டுப்பெயரை சென்ற நூற்றாண்டின் ஐம்பது அறுபதுகளிலேயே பிடிவாதமாக உதிர்த்து விட்டார்கள். ஆனால் பிள்ளையும், ஐயரும் இன்னும் பெருமைக்குரியவையாகவே தொடர்கின்றன. தொடர வேண்டும் என்கிறார் வேல்சாமி. எனில் வேல்சாமிக்குள் விவரங்கெட்ட தனமயாய் அல்லது விவரத்தோடு உட்கார்ந்து கொண்டிருக்கிற சமூக மனிதன் யார்? பதிப்பு நேர்மையை இந்த சாதிப் பெயர்களுக்குள்தான் தேடியாக வேண்டுமா? ஒரு சுட்டல் குற்றமாக்கப்படும்போது அதன் அரசியல் வண்ணம் ஒரு மனிதனை ஆகக்கீழாக அடையாளப்படுத்த வில்லையா?

நேற்று முன்தினம் பேசும்போது இரண்டு விஷயங்களைச் சொன்னார். ஒன்று, எழுத்தை முழுநேரப் பணியாக மேற்கொள்வது பற்றி. என்னை மகிழ்வித்த யோசனை அது. மற்றொன்று எழுதுவதற்கான விஷயங்களை அவ்வப்போது அடுக்கிப் பார்த்துக் கொள்ளும் முகமாக முன்னுரிமை கொடுத்து எழுத வேண்டிய ஒரு கட்டுரை பற்றி. வழக்கமாக ஒரு கட்டுரை எழுதத் தேவையான முழுத் தகவல்களும் அவர் நாவின் நுனியில் சேமிக்கப்பட்ட பிறகுதான் (அவர் பெரும்பாலும் தன் கைப்பட எழுதுவதில்லை. தன் வாய்மொழியை பிறர் மூலம் எழுதுவித்துக் கொள்கிறவர்.) அதைப்பற்றி என்னோடு அல்லது பிறரோடு ஒரு சரி பார்ப்புக்காகப் பேசுவார். அவர் எழுத உத்தேசித்த கட்டுரை பாரதியை உயர்த்திப் பிடிப்பது பற்றி.

“பாரதிய ஜனதா பார்ட்டி எழுதிய வே. மதிமாறன், புதிய கலாச்சாரம் மருதையன் போன்றவர்களின் பாரதிக்கு எதிரான கடும் விமர்சனங்களுக்குப் பின்னாலும் வாலசா வல்லவன் போன்ற ஆட்கள் பாரதியாரைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தன் அதிருப்தியைத் தெரிவித்தார். ஒரு நல்ல கவிஞனை இப்படிக் கிறுக்குத்தனமாகத் தாக்குவது பொறுப்பற்ற செயல் என்றார். அவர்கள் விமர்சனங்களுக்குப் பதில் தருவதற்காக அவர் பாரதியையும் பெரியாரையும் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதப் போவதாகச் சொன்னார். “இருவரும் சமகாலத்தவர்கள். பாரதி பட்டினி கிடந்தபோது பெரியார் நூற்றுக்கணக்கான பதவிகளை வகித்துக் கொண்டிருந்தவர். சுகபோகங்களில் திளைத்துக் கொண்டிருந்தவர். பாரதி சிறையில் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு வெளிவந்தவர் என்கிறார்கள். அப்போது பெரியார் ஷோக்குப் பேர்வழியாக வலம்வந்து கொண்டிருந்தார். இந்த ஒப்பீடுகளை நாமக்கல் நண்பர்கள் நன்கு ரசித்தார்கள்” என்றெல்லாம் சொல்லி அதை எழுதி அனுப்புவதாகவும் என்னைப் படித்துப் பார்க்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

நான் ஒரு நிலைக்கு வர சில கணங்கள் ஆயின. அவர் கணக்கு என்னவென்றால், பாரதியைச் சாடுகிறவர்கள் யாவரும் பெரியார் பக்தர்கள்; ஆகவே பெரியாரைத் தூக்கிப்போட்டு மிதித்து, பாரதிக்குப் பெருமை சேர்க்க நினைக்கிறார். “ஏங்க, இது என்னங்க நியாயம்? பாரதிக்கும் பெரியாருக்கும் என்னங்க சம்பந்தம்? திடீர்னு பெரியாரை இழுத்து வந்து எதுக்குங்க ஒப்பிடுறீங்க?” என்றேன். “பாரதி இருந்த வரைக்கும் பெரியார் ஒன்னுமில்லிங்க”, என்றார். “அதாங்க நான் சொல்றதும். அப்போ அவர் பெரியாரே இல்கங்க. யாரோ ஒரு ராசாமி நாய்க்கர்ங்க. எங்க அப்பா, ஒங்க அப்பா மாதிரி. அவரை எதுக்கு பாரதியோட ஒப்பிட்டு வம்புக்கு இழுக்குறீங்க? சீட்டுக் கவி எழுதிக்கிட்டு அலைஞ்சவனைக் கூப்பிட்டு சோறு போடலேன்னா? பதவி கொடுக்கலேன்னா? கூத்தியா தேடி வைக்கலன்னா? என்ன பயங்கரங்க இது? பாரதியைக் கொண்டாடுங்க. ஒங்க விருப்பம், உரிமை. அதுக்குப் பெரியாரை என்னத்துக்கு அசிங்கப்படுத்தறிங்க? கைமாறாவா? பெரியாரைக் கேவலப்படுத்தி பாரதியைத் தூக்கிப்பிடிக்கிற செயல் யாருக்கு நன்றிக் கடன் செலுத்துங்க? உங்க செயல் பொறுப்புள்ளதுதானா? அர்த்தமுள்ளதுதானா?”

தனிப்பட்ட உரையாடலை வாசக அரங்கில் கொண்டுவந்தமைக்காக வேல்சாமி என்மேல் கோபம் கொள்ளலாம். அதன் பலன்களைச் சுமக்கும் வல்லமை என் தோள்களுக்கு இருக்க வேண்டும். அவர் இதை ஒரு பூச்சாண்டியாகக்கூட சொல்லியிருக்கலாம். (இப்படியெல்லாம் சொல்லிக்கொள்வது என் ஆசைக்குத்தான்.) ஆனால் நான் பயந்துவிட்டேன். பயங்கரவாதிகள் வெறும் பொழுதுபோக்குக்காகப் பயங்கரவாதிகளாவதில்லை. ஆகவே அவர்கள் என்னைப் பயப்பட வைத்ததில்லை. ஆனால் இதுபோன்ற எழுத்துக்குண்டுகள் அவை உருவாகும் முன்னே என்னை அச்சுறுத்துகின்றன. அவற்றை ஏற்றுச் செயலிழக்க வைக்கும் சக்தி எனக்கில்லை. மற்றபடி வேல்சாமி எப்போதும் அரிய ஆய்வாளராய்த் தொடரவேண்டியது காலத்தின் கட்டாயம். கூடவே என் நண்பராகவும். முடிந்தால் என் சகோதரனாகக்கூட. யாரும் யாரோடும் நண்பராய்த் தொடரலாம். ஆனால் சகோதரனாய்த் தொடர மரபொருமை தேவைப்படும்.

வேல்சாமியின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வர அலைகள் சிவம் முன்வந்ததாகக் கேள்விப்பட்டேன். அப்படி நேரவில்லை. வேல்சாமியைக் கேட்டால், “எல்லாக் கள்ளன்களும் எனக்கு ஒன்னாத்தாங்க தெரியிறான்,” என்று வணிக மொழி பேசி என் வாயை அடைத்துவிடுவார். வணிகர்களுக்குப் புரியக்கூடிய ஒரு வழக்கு மொழி நினைவுக்கு வருகிறது. அன்னையர்கள் என்னை மன்னிக்க வேண்டும். “சொந்தப் புருஷன்கிட்ட சோரம் போக முடியாமத்தானே கள்ளப் புருஷன்கிட்ட கற்போட வாழுறா.” ஒரு நண்பர் சொன்னார்: “சூத்திரனும் பார்ப்பானும் வெளியில சண்டை போட்டுக்குவான். ஆனால் உள்ள உறவாடிப்பான்னு வேல்சாமி ஐயா சொல்வாரு. அதுக்கு அவரே உதாரணமா இருக்கும்போது நாம நம்பாம இருக்க முடியுமாய்யா?”

அவரவர்க்கும் ஓர் அபிப்பிராயம் இருக்கும். வேல்சாமியின் காதில் போட்டு வைப்பதில் தப்பில்லை. இன்னொரு நண்பர், “வேல்சாமி தன் புத்தகத்தில் எழுதப் போகும் முன்னுரையைக் கொண்டு நாம் அவரை ஒருவாறு மதிப்பிடலாம் என்று நினைக்கிறேன்,” என்றார். அவர் பிறகு தன் மதிப்பீட்டைச் சொல்லவே இல்லை.

நான் அவர் புத்தகத்தை இன்னும் பாரக்கவில்லை.

“உங்கள் நூலை விலை கொடுத்து வாங்கிப் படிக்கிற நிலையில நான் இல்லிங்க,” என்றேன். “என்னங்க நீங்க. எதுக்கு நீங்க விலை கொடுத்து வாங்கணும்? நான் அனுப்பி வைக்கிறேன்க,” என்றார்.

இன்னும் அனுப்பவில்லை. பல சோகக்காரர். மறந்திருக்கலாம். அல்லது அவரது பொற்காலங்கள் நான் படிக்காததனால் ஒன்றும் இருண்ட காலமாகிவிடப் போவதில்ல என்று இறுமாப்போடு விட்டிருக்கலாம்.

நாங்கள் வாரத்துக்கு இரண்டு மூன்று முறையாவது பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.

காற்றுப் புகாமல்
கட்டிப்பிடித்துக் கொண்டு
துருவத்திற்கொருவராய்
நிற்கும் தோழர்கள்

என்று ஒரு கவிஞன் எழுதியிருந்தான். என் அறியாமை, இன்னும்கூட அது அபத்தமாய்த்தான் ஒலிக்கிறது.

வேல்சாமியைப் பற்றி என்னைவிட்டால் வேறு யாரால் சரியாகவோ சரிக்கு வெகு நெருக்கமாகவோ இவ்வளவு துல்லியமாகச் சொல்லிவிட முடியும் என்கிறீர்கள்? எனக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

Pin It