எல்லாருக்கும் வணக்கம்.

ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படுகிறார்கள்; வரைமுறையற்றுச் சீரழிக்கப்படுகிறார்கள்; பல்லாயிரக்கணக்கில் தங்கள் மண்ணிலிருந்து அகதிகளாகப் பிடுங்கியெறியப் படுகிறார்கள். சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மேல் அறிவிக்கப்படாத போரைத் துவக்கி, சர்வதேச நெறிமுறைகளையெல்லாம் மீறி நடத்திக்கொண்டிருக்கும் ஈனத்தாக்குதல்களைக் கண்டிக்கவே இங்கே நாம் கூடியிருக்கிறோம்.

கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் தமிழ்ச்சமூகம் ஒன்றுக்கு மேற்பட்ட தருணங்களில், ஒற்றைக்குரலில் வெகுண்டு எழுந்ததென்றால் அது ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாகத்தான். இடையிலே சில ஆண்டுகள் இந்தியத் தமிழர்கள் தலைகுனிந்து குரல் இழந்து வெக்கையில் புதைந்திருந்தோம். இன்றைக்கு செஞ்சோலையில் கொன்று குவிக்கப்பட்ட செல்வங்கள் 61 பேரின் ஆற்றவொண்ணாப் பேரிழப்பு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் அணைகடந்த வெள்ளமாய்த் திரட்டித் தந்திருக்கிறது. இந்த நல்லுறவுச் சங்கமத்திற்காக ஈழம் கொடுத்த விலை ஈடுகட்ட முடியாத பேரிழப்பு என்பதுதான் தேற்றிக்கொள்ள முடியாத வரலாற்றுச் சோகம்.

போரில் கல்விக் கூடங்கள், வழிபாட்டிடங்கள், மருத்துவமனைகள், தொல்பொருள் சேகரிப்பு மையங்கள் போன்றவை தாக்கப்படக் கூடாது என்று வீதி செய்திருக்கிறார்கள். ‘அவை நாகரிகம் பேணுகிறவர்களுக்குத்தான் - எங்களுக்கல்ல’ என்று அறிவிப்புச் செய்து கொண்டவர்களைப் போல சிங்கள வல்லாதிக்கவாதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சின்னஞ்சிறுமிகளைக் கொன்றது மட்டுமல்லாமல் ‘அதற்காக வருத்தப்படுவது எங்கள் வேலையல்ல’ என்றும் சொல்வது அவர்களது ஆகக் கீழ்மையான ஆணவத்தின் வெளிப்பாடு.

லெபனானின் ஹிஸ்புல்லாவுக்கெதிராக என்று சொல்லிக்கொண்டு இஸ்ரேல் நடத்தும் கோரத்தாண்டவத்தை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கை வல்லாதிக்கம் ஈழத்தமிழர்களின்மேல் தன் கொலைவெறித் தாக்குதலை நடத்திவருகிறது. லெபனானின் ஹிஸ்புல்லாவும் இலங்கையில் LTTE யும் பயங்கரவாத இயக்கங்களாம். ‘பயங்கரவாதம்’ என்பது இன்று ஒரு சர்வதேசக் குறியீட்டுச் சொல்லாகியிருக்கிறது. நாமும் அதை அப்படியே பயன்படுத்தலாம் - தப்பில்லை. அது ஒருவகையில் புத்திசாகத்தனம்கூட. குறிப்பாக LTTE ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதை நாம் ஏற்றுக்கொண்டே பேசலாம். அப்படி ஏற்றுக்கொள்ளும்போது நமது தேசபக்தி ஜெகஜோதியாய்ப் பிரகாசிக்கும், நம் தலையைச் சுற்றி ஒளிவட்டம் சுழலும் என்பதை மறந்துவிடக்கூடாது. நமது தேசம் அப்படித்தான் நமக்கு வழிகாட்டுகிறது. கலைஞர் முதல் எல்லா தலைவர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். ‘இந்து’ ராம் இதை ஒரு வேள்வியாகவே செய்து கொண்டிருக்கிறார். ‘பயங்கரவாத இயக்கத்தோடு தொடர்புள்ள வைகோவால் என் உயிருக்கு ஆபத்து’ என்று சொல்லி தயாநிதி மாறனும்கூட அப்படித்தான் வலியுறுத்துகிறார். அவர்களெல்லாம் நல்ல தேசபக்தர்கள். நம் தேசபக்தி அதை விட ஏன் குறைந்ததாக இருக்க வேண்டும்?

கூடவே நாம் இன்னொன்றையும் கவனப்படுத்தலாம். ஹிஸ்புல்லா இயக்கம் இரண்டு இஸ்ரேலிய படைவீரர்களைக் கடத்திச் சென்றுவிட்டது. அது ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதால் உடனே அவர்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மிகுந்த பாதுகாப்போடும் மரியாதையோடும் பராமரித்தார்கள். அவர்கள் கடத்தப்பட்டதைக் காரணமாகக் கொண்டு, இஸ்ரேல் பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொன்று குவித்தது. இரண்டு நகரங்களை ஏறக்குறைய தரைமட்டமாக்கிவிட்டது. அது தன் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் வரை ஐ.நா. அவை போர் நிறுத்தத் தீர்மானம் போடாமல் அமெரிக்கா பார்த்துக்கொண்டது. அடுத்து தீர்மானம் வந்த பிறகும் கூட இஸ்ரேல் தன் தாக்குதலை நிறுத்தவில்லை. இதிலுள்ள சிறப்பு என்னவென்றால் ஹிஸ்புல்லா ஒரு பயங்கரவாத அமைப்பு.

இஸ்ரேல் ஒரு பொறுப்புள்ள, சர்வதேச சமூகம் ஒப்புக்கொண்டுள்ள இறையாண்மையுள்ள அரசு. இலங்கையிலும் அதே கதைதான். LTTE பயங்கரவாதிகள் மாவிலாறு அணையை மூடிவிட்டார்கள். பயங்கரவாதிகள் என்ன செய்திருக்க வேண்டும்? அணையை உடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. பாதுகாத்தார்கள். அதன் பிறகு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கேட்புக்கிணங்க அணையைத் திறந்துவிட்டார்கள். இதையே காரணமாக வைத்து - அதாவது அணையை மூடியதற்கும், பின்னர் தங்கள் பொறியாளர்களால் அல்லாமல் அவர்களாகவே திறந்ததற்கும்தான் - ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கிறார்கள். பள்ளிகள், தேவாலயங்கள், மருத்துவமனைகள் மீதெல்லாம் குண்டு மாரி பொழிந்து, தமிழர்களைத் தேடித்தேடி கொல்கிறார்கள்.

யாழ் நகரைக் கைப்பற்ற முன்னேறும் LTTE ஐத் தடுத்து நிறத்தவும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் தமிழ் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள். சொந்த மக்களைக் கொல்லாதிருக்க LTTE என்னும் அந்தப் பயங்கரவாத அமைப்பு பாரிய இழப்புகளைத் தாங்கிக்கொள்வதாகப் பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். LTTE பல நாடுகளால் தடை செய்யப்பட்ட இயக்கம். இலங்கை அரசோ சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அதன் இறையாண்மையைக் காப்பதில் இந்தியா ஆற்றும் பங்கு அற்பசொற்பமல்ல. ஈழத்தமிழர்களுக்கு எதிரான அதன் வல்லாதிக்கப் போரில் இந்தியா தன் ஆலோசனைகளாக, ஆயுதங்களாக, படைப்பயிற்சியாக, படைவீரர்களாக, ராஜதந்திர நிர்பந்தமாக, கப்பல்படை ரோந்துப் பணியாக, பற்பல வழிகளிலும் கைகொடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் LTTE பயங்கரவாதிகள் தனி ஈழம் அமைத்திருப்பார்கள். அதைத் தடுத்துக் காத்த பெருமை இந்தியாவுக்கு மட்டுமே உண்டு. 100 கோடி மக்களில் ஒருவனான எனக்கும் அதில் பங்கு தரப்படும்.

வெற்றுப் பயங்கரவாதம் எப்போதும் ஓர் இயக்கமாக இருக்க முடியாது. இருக்க முடியும் எனில் அதை அரசுகளாகத்தான் இருக்க முடியும். அரசுக்கு இருக்கிற கட்டமைப்பு, ஆள்பல, பொருள்பல வாய்ப்பு வசதிகள், மனிதம் மரத்துப்போன நியதிகள், எந்திரத்தனமான அதன் அதிகாரப் பாய்ச்சல் ஆகிய அனைத்தும் அதற்குத் துணை புரியும். அப்படிப்பட்ட அரச பயங்கரங்களை எதிர்க்கிறவர்களும் எதிர் கொள்கிறவர்களும் தீவிரவாதிகளாக வேண்டுமானால் இயக்கம் கட்டலாம். தன் உயிரையும் தன் உயிருக்கு அறைகூவலாக வரும் பிற உயிரையும் துச்சமாக மதிக்கும் தீவிரவாத இயக்கம். பாமரக் கண்களுக்கு அது தன் குறிக்கோள் மீது வெறி கொண்டியங்கும் வெறும் கொலை பாதகக் கும்பலாகத்தான் சித்திரப்படும். அரசுகள் அப்படியொரு சித்திரத்தைத்தான் கட்டியெழுப்பித் தங்களைக் காத்துக் கொள்கின்றன. இந்திய அரசும் அதற்கு விதிவிலக்கல்ல.

இலங்கையில் எப்பொழுதெல்லாம் போர் வெடித்து, ராணுவம் தமிழர்களைக் கொல்கிறதோ, அப்பொழுதெல்லாம் இலங்கையிலிருந்து ஒரு அரசு பொறுப்பாளரோ, ராணுவப் பொறுப்பாளரோ, இந்தியாவுக்கு வருவார். பிரதமர் வரை பார்த்துப் பேசிவிட்டுச் சொல்வார். அதன் பின் ஏதேனும் மாற்றம் நிகழுமா எனில் ஒன்றும் இருக்காது. அவர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் நியாயத்தைச் சொல்லி இந்திய அரசின் ஒப்புதலை பெற்றுச் செல்வதாகத்தான் அதை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கே வருகிறவர்கள் தங்களுக்கு ஆதரவாய்ச் செயல்படும் - அதாவது தமிழர்களுக்குப் பாதகமாய்க் கொம்பு சீவிவிடும் துறைச் செயலர்கள், ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையாளர்கள், அறிவுஜீவிகள், செய்தியாளர்கள் என்று ஒரு தீவிர வட்டத்தைச் சந்தித்து அவர்கள் வழிகாட்டுதலோடு மேகடத் தலைவர்களை நம்பவைத்துவிட்டுச் செல்கிறார்கள் என்பதாகப் பத்திரிகையாளர்கள் சொல்லக் கேட்டதுண்டு. ‘இந்து’ ராம் போன்றவர்களுக்கு இதன் சூட்சுமங்கள் நன்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இல்லையென்றால் தமிழக அரசியல்வாதிகளுக்கு இந்திய ஆட்சியாளர்கள் சாதகமான பதிலைச் சொல்லும்போது, வெளிஉறவுத்துறை செயலர் சியாம் சரண், இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனர் நிருபமா ராவ் போன்றவர்கள் இலங்கை அரசைத் தட்டிக்கொடுப்பது எவ்வாறு சாத்தியப்படும்?

இப்போது நமக்கு அல்லது வேறெவருக்கும் வேறுவழி இல்லை என்பதால், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவும் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதிலிருந்து மீளவும் இந்திய அரசைத்தான் தலையிடக் கோரவேண்டியிருக்கிறது. கூடவே இந்தியாவில் வந்திறங்கும் அகதிகளை மனிதர்களாக நடத்தவும், லஞ்சம் கொடுக்க முடியாத இளைஞர்களை LTTE என்று முத்திரை குத்தி அகதிச் சிறையில் தள்ளாதிருக்கவும், சர்வதேச விதிமுறைகளின்படி அகதிகள் நடத்தப்படவும் அகதிகளை மணந்துகொள்ளும் தமிழ்நாட்டவருக்கு உரிம அங்கீகாரம் கிடைக்கச் செய்யவும் உதவும்படி நாம் வேண்டுகோள் விடுவோம். இவற்றை கவனிக்காத பட்சத்தில் இந்தியாவும் இலங்கையைப் போலத்தான் பழிபாவத்துக்கு அஞ்சாத அரசு என்று பழி வந்துசேரும். அந்த அவமானத்திலிருந்தாவது இந்திய அரசு நம்மைக் காக்க வேண்டும்.

குறிப்பு : 21.8.2006 திங்கள் மாலை 6.30 மணிக்கு தேவநேயப் பாவாணர் அரங்கில் சிற்றிதழ்கள் (கலை, கவிதாசரண், முகம், யாதும் ஊரே, மெய்யரிவு, கல்வெட்டு பேசுகிறது) நடத்திய ஈழத்தமிழர் ஆதரவுக் கூட்டத்தில் பேசிய பேச்சு.

Pin It