அடையாளப் பறவையின் அடைப்புமொழி

எருக்கந்தூரிலும், சங்கம் புதரிலும்
ஒளிக்கப்படும் உந்தன்
நான்காம் நாள் பறவையின்
பச்சையமற்ற பிஞ்சுடல்
அருகியிருக்கும் யாரொருவனாலும்
கிளரப்படலாம்
சடலத்தின் நேர்த்தியுடன்
புதைக்கப்படும் போதும்
கிளரப் படலாம்
எரிக்க மிஞ்சும்
கனலைப் போன்றும்
கிளரப் படலாம்
உன் பறவை வேதனையுடன்
கிளரப்படும் போது
கிளரும் உருப்பை சிதைத்து
சுவைக்க நினைக்கும் நீ
ஒரு உருப்பையாவது
விரல் விட்டு எண்ணிக்கொண்டே
சிதைத்துப் பாரேன்
உன் பிஞ்சுப் பறவையின்
பறத்தல் வழி அங்கே அடைபட்டிருக்கலாம்.


பூட்ஸ் கால்களால் உடைபடும் பூக்களின் அரண்

உன் வசந்தத்தை முறிக்கும்
பிரயத்தனங்கள மிதமிருக்க
துன்புறுத்தும் அதிகாரம்
எனக்கு அளிக்கப்பட்டிருக்கும்
தருணம் காத்து பூத்திருக்கிறாய்
தெளி நீரோடையின்
வெளிச்சி மீன் கனலாய்
பளீரிட்டு போகும் உன்யவனம்
நதிகளின் சாத்யங்களை
மூலமெனக் கொண்டது
விசும்பி விசும்பி விதிமீறும்
மீறல்கள் நாணை முறிக்கிறது
நீரிலான கத்தியை போன்ற
உன் கோவங்கள்
மார்பை துளைக்கிறது
பூட்ஸ் கால்களின் உதை அறியாததல்ல
உன் மென்னுடல்
மீண்டும் நிறைவேற்ற துடிக்கும்
உன் செல்லக் குடமுடைப்புகள் மூலம்
இனியொரு கொலை நமக்குள்
நிகழ்த்து படாமலிருக்க
இனியாவது என்னுடைமைகளை
மஞ்சள் படிமங்களற்றுத் தா...
Pin It