எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்றும் எதுவுமே சரியில்லை என்றும் மாறி மாறி நினைப்பது இயல்புதான். ஆனால் எனக்கு இயல்பில்லாதது என் மரணத்தை நான் கொண்டாடுவது.

Sad lady உதாரணத்திற்கு நேற்றைக்கு வந்த கனவு. கனவுகள் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டியவை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

அந்தக் கனவில் மிக உயரமான கட்டிடமொன்றில் ஏதோ விசயமாகச் சென்றிருக்கிறேன். ஒரே சமயத்தில் பரிச்சயமானதும், பரிச்சயமில்லாத கட்டிடமாகத் தோன்றியது. அதிர்ஷ்டவசமாக கடற்கரையொட்டி அமைந்திருந்ததால் சுகமான காற்று தழுவியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடல் திடீரென கொந்தளித்துப் பொங்கியது. கீழ்த்தளத்தை தண்ணீர் நனைத்ததும் எங்கும் கூச்சல் குழப்பம். அடுத்த தளம் நோக்கி விரைகின்றனர் மக்கள. அடுத்த தளமும் அதற்கடுத்த தளமும் தண்ணீர் பெருகியதும் பிணங்கள் மிதக்க ஆரம்பித்து விட்டன. மரக்கிளைகளையும் கொம்புகளையும் பற்றிக்கொண்டு பலர் தத்தளித்தனர். எனது கணுக்கால் வரை நீர். அருகே ஈரமற்ற விறகின் உடம்பைக் கொண்ட முதலை விழுங்கத் தயாரான நிலையில் இருந்தது. ஒரு நொடிதான், நான் நண்பர்கள் என்று எனது பிடரிப்பகுதியில் அழுத்தமாக எழுதிவைத்தும் என்னை அவர்களது நண்பராக இதுவரை கருதாத அவர்கள் வருகிறார்கள். “நாமெல்லோரும் இறக்கப் போகிறோம். இது உறுதி. குதித்து விடுங்கள்” என்றதும் நான் குதிக்கிறேன். கரங்கள் இணைகின்றன.

அப்போது மென்மையாகக் கிளம்பிய வெப்பம் இறுக்கமான நரம்புகளைத் தளர்த்துகிறது. லல்லல்லா... லல்லல்லா... லல்லல்லா நான் பாடியவாறு இறக்கத் தயாராகிறேன். அப்போது இதுகாறும் நான் அனுபவித்த பல்வேறு உணர்வுகளிலிருந்து விடுபட்டு நிரந்தரமான அமைதிக்குள் செல்கிறேன்.

கனவிலிருந்து விழித்து நெடுநேரமாகியும் அதன் தாக்கம் குறையவில்லை.

என்னவாயிற்று எனது தற்காப்புணர்வுக்கு? என்னைக் காப்பாற்ற ஏன் முனையவில்லை அது? என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.

நாளதுவரை எனது கனவுகளில் அச்சமூட்டும் வகையில், தீ, வெள்ளம், பிசாசுகள், முதலைகள், சிங்கங்கள், உயரமான கட்டிடங்கள் வந்து போயிருக்கின்றன. அப்போதெல்லாம் பயந்து தப்பி ஓடுவது போல், திகிலில் உறைந்து ஓட முடியாமல் தரையில் படுத்துக்கொண்டு தவழ்வதுபோல், பறக்கமுயன்று வேகமாக முட்டிக்கொண்டு கீழே விழுவதுபோல், மிருகங்கள் கடித்துக் குதற ஊளையிடுவது போல், அய்யோ என்று அலறி விழிப்பது போல்... இப்படி ஏதாவது போல் தான் நடந்துகொள்வேன். ஆனால் இப்போது மட்டும் மாற்றம் வந்தது எப்படி? என்னை சந்தோஷமாக மரண மேடைக்கு அழைத்துச் செல்வது யார்? என் தன்னுணர்வைக் கொன்றது யார்? தன்னுணர்வு கொல்லப்படும் போது மரணம் துச்சமாகும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் எனக்குள் இருந்து என் மரணத்தைக் கொண்டாடுவது யார்?

நான் ஆழங்களில் நீந்தத் துவங்கினேன். ஆழங்களில் நீந்துவதென்பது அறுவை சிகிக்சையைப் போல் எல்லாமே ஒருவித மயக்கத்தில் நடப்பது. ஆனால் அச்சிகிச்சையை நாமே நம்மீது நிகழ்த்திக் கொள்கிறோம் என்பதுதான் விசேஷமானது.

என் அம்மாவுக்கு முதுகில் வீக்கம் கண்டிருந்தது. கைகால் அல்லது வேறு இடமாக இருந்தால் நானே வைத்தியம் செய்து கொள்வேன், வந்திருக்கும் இடம் முதுகல்லவா என்ற அம்மாவின் முதுகில் புறப்பாடு கண்டிருந்த சிறு கட்டிக்கு சுண்ணாம்பு கலந்த எருக்கம்பால் புகட்டினேன், சில நாட்களுக்குள் பழுத்து வெடித்து சீழை வெளித்தள்ளும் என்ற நம்பிக்கையில். ஆனால் அதுவோ அப்படிச் செய்யாமல் உபரியாக இரண்டு சிறு கட்டிகளை பக்கத்திலேயே குட்டி போட்டிருந்தது. மேலும் தமது நூதன சக்தி மூலம் அவையே தலையில் விண்விண்ணெனத் தெறிக்கவும் மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். இரண்டு நாட்கள் சோதனைக்குப் பிறகு மருத்துவர் எங்களிடம் பட்டியல் ஒன்றைத் தந்தார். அந்தப் பட்டியலுக்கு முதுமை அல்லது மரணம் என்று தலைப்பிடலாம் என்று எண்ணுமளவு அதற்கான அறிகுறிகளைத் தாங்கிய நோய்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டன. பட்டியலைப் பார்த்தும் எனது மூச்சுக்குழலுக்குள் யாரோ கனமான காரீயக் குண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுக் கொண்டே இருப்பது போல் தோன்றியது.

அண்ணனுக்கு ஐம்பத்தியெட்டு வயதாகும்போது தான் டண்டணக்கு தனக்கு என்ற நம்பிக்கையுடன் இருந்தாள் அம்மா. அண்ணனுக்கு ஐம்பத்தியெட்டு நிறைவுற்றபோது அம்மா சொன்னாள், நான் சோசியக்காரனைப் பார்த்து கேட்பேன், ஏன் என்ஆயுளைக் குறைத்துவிட்டாய் நீயாகவே என்று. நான் கூட, அம்மா, நீங்கள் நூறு வயது வரை இருப்பீர்கள் என்று உற்சாகமளிக்கும் வகையில் சொல்லிவந்ததை நம்ப ஆரம்பித்தேன். அண்ணனுக்கென்னவோ அறுபது முடிந்து விட்டது. அதனாலென்ன, அம்மாவுக்கு இன்னும் நூறு வயதாகவில்லையே, அதற்குள் எப்படி இப்படி நடக்கலாம்? நான் என் விருப்பத்தையே உண்மையாகக் கண்டு, பெயர் தெரியாத வஸ்துவிடம் வாக்குவாதம் நிகழ்த்திக் கொண்டிருந்தேன். ஆனால் அம்மாவுக்கும் முன்பாக, என் மரணத்தைக் கொண்டாடுவது யார்? ஒருவேளை நான் இறந்ததைக் கேட்டால் அம்மாவும் இறந்துவிடுவாளா, அவளைக் கொல்லும் சதிதானா என் கனவில் வந்த என் மரணமும்? பாவம் அம்மா, அவளுக்குப் பின் இப்படி ஒரு சதி நடப்பதை அறியாமலே இருக்கிறாள்.

முன்பெல்லாம் அம்மா என்னை கண்டிப்பாள். குறிப்பாக நான் கடும் வார்த்தைகளைச் சொல்லும் போது. நான் வாக்குவாதத்தில் இறங்கும் போது அவள் கலவரப்பட்டு வெளிறிப் போவாள். என் வார்த்தைகளினால் நான் காயப்படுவேன் என்பதனால், வார்த்தைகளை விடாதிருக்கும்படி என்னைக் கெஞ்சுவாள். அவள் கண்முன்னே இருந்தால் நானும் அசைவற்ற குளம்போல் கிடப்பேன்.

ஆனால் ஒரு வார்த்தைக்குப் பின் பெரிய சமுத்திரமே இருக்கிறதல்லாவா?

அம்மாவும் நானும் திருமணத்திற்கு சென்றிருந்தோம். அங்கே உறவினர்கள் சிலர் விரோத மனப்பான்மையுடன் இருந்தார்கள். அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்று முன்கூட்டியே அம்மா தெரிவித்திருந்தாள். அவர்களின் விரோதத்திற்கு காரணம் அம்மாதானாம், அதுவும் அவள் உயிரோடு இருப்பதுதானாம். இதையும் அம்மாதான் சொன்னாள். அம்மா பாவம் யாருக்கும் தீங்கு இழைக்காதவள். ஆனால் மரக்கிளையிலுள்ள இலையின் சிறு அசைவுகூட அவளிடமிருந்து தப்பாது. அவளுடைய கூர்ந்த கவனிப்பின் விளைவாக எழும் முகபாவனைகளே போதும். இப்போதெல்லாம் அம்மா ஒரு ரூபாய் தட்சணைப் பெற்றுக்கொண்டு பிணியுற்ற குழந்தைகளை சொஸ்தமாக்குகிறாள். திருடனை, நீ திருடன்தான் என்று சொல்லும் பார்வையை திருடன் அறிவான்தானே? அப்படித்தான் அம்மாவைப் பலர் அறிந்து வைத்திருந்தனர்.

வெளியூருக்கு கணவன் சென்ற போது மனைவி இரவின் சாமத்தில் கள்ளக்குரலில் பேசுவது அவள் காதுக்கு எட்டிவிட்டது. பட்டினியின் குரல் தெரியும்தானே அவளுக்கு. சோறள்ளும் கைகளில் சுருக்கமில்லாதவள் எனினும் வட்டிலில் விழும்போது சுருக்கமுறும் கைகளை அறிந்தவள்தானே அவள்.

அப்படியும் நான் அம்மாவின் பேச்சைக் கேட்காது வலிய போய் பேச்செடுத்தேன்.

“எப்படியிருக்கீங்க?”

“பிள்ளைகளை அழைச்சிட்டு வந்தப்போ தகவல் ஒண்ணுமில்லே, இப்ப மட்டும் வந்து எப்படியிருக்கீங்கன்னு என்ன கேள்வி?”

“நீ வந்து பாத்திருக்கலாம்தானே”- இது அம்மா.

“ஆமா, வந்தா போனா தகவல் சொன்னாத்தானே, உங்க பிள்ளைய நீங்களே பூட்டி வச்சி அழகு பாக்குறீங்க”

எதிராளி வெடித்த விதம் எனக்குக் கோபமூட்டுவதாக இருந்தது.

“சரிசரி, நீங்க காரியத்துக்காக உறவு பிடிக்கிறவங்க. அப்போவெல்லாம் தகவல் அனுப்பிச்சா வந்தீங்க”-நான்

“யாரு, யாரு காரியத்துக்கு உறவு புடிக்கிறவங்க, என்ன காரியத்துக்கு வந்தோம்?” திடுக்கிட்டது போல் எதிராளி கேட்டதும் எனக்கு மலைப்பு ஏற்பட்டது. எதிராளியின் குரல் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது.

“என்ன காரியம், எப்ப வந்தீங்கன்னு என்னால பட்டியல் போடமுடியாது. உங்க லெவலுக்கு என்னால பேசமுடியாது”

“என்ன லெவல் எங்க லெவல்?”

“நான்தான் பேசமுடியாதுன்னு சொல்லீட்டன்ல”

“என்ன காரியம், எப்ப வந்தோம் உங்கக்கிட்ட, எல்லோருக்கும் தெரியட்டும் சொல்லுங்க”

“என்ன கூட்டத்தைப் பார்த்ததும் தலைகால் புரியலையா?”

“யாருக்கு தலைகால் புரியல, லெவலாமே லெவல், என்ன லெவல்?”

“ஷட் அப், நான்தான் பேசமுடியாது உங்ககூடல்லாம்னுட்டேன்ல போ இங்கெருந்து”

“என்ன போச்சொல்றதுக்கு நீங்க யாரு? உங்க வீட்டு கலியாணத்துக்கா வந்தோம், போகணுமாமே”

“நீங்க போவேண்டாம், நான் போறேன். வாம்மா”

நானும் அம்மாவும் மண்டபத்திற்கு வெளியே வந்தோம். எங்களை யாருமே தடுக்கவில்லை.

“நாங்களென்ன அவுங்களுக்கு ஆடுமாடு மேய்ச்சுட்டிருந்தமா? கைகால் கொண்டு உழைச்சித்தானே சாப்பிடுறோம்? இவுங்க இங்கிருந்து போயிட்டா, உலகம் கீழது மேலதாவும், மேலது கீழதாவும் மாறிடுமா? பேசுறதப்பாரு...”

லெவல் என்ற வார்த்தைக்குப்பின் ஒரு சமுத்திரம் ஆர்ப்பரிப்பதை காதால் கேட்டவாறு வெளியேறினேன். அம்மா எதுவுமே வாய்திறக்கவில்லை. என் வார்த்தைகளை அவள் அங்கீகரிக்கவில்லை என்பதை உணர்ந்து பேசாமல் படுத்துக்கொண்டேன்.

செய்தி வந்தது முக்கியஸ்தர் ஒருவர் இறந்துவிட்டார் என்று. நான் முக்கியஸ்தர் பற்றி யோசிக்கத் துவங்கினேன். பிணத்தை எடுப்பதற்குள் நான் வந்தாக வேண்டும் என்று பலதரப்பிலிருந்து செய்திகள் வந்த வண்ணமிருந்தன. நான் போவதென்று முடிவு செய்தபோது நண்பர்கள் சிலரும் என்னுடன் கிளம்பினர்.

ஊர் நெருங்க நெருங்க கறுப்புக்கொடி கட்டிய வாகனங்கள் தென்பட்டன. மலர்மாலை ஒன்று வாங்கிக் கொண்டோம். கண்ணீர் அஞ்சலி வழியெங்கும் கறுப்பில் எழுதப்பட்டிருந்தன.

மாலையை எடுத்துக் கொண்டு பூதவுடலை நெருங்கத் தலைப்பட்டோம். மக்களின் ஆரவாரங்களுடன் இடநெருக்கடியும் சேர்ந்து கொண்டது.

இறந்த முக்கியஸ்தர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்னிடம் முக்கிய விசயம் பேசவென்று. என்னால் போக முடியவில்லை. அது என்னவாயிருக்கலாம் என்று யோசித்தவாறே நடந்தேன்.

சிலகால முன்பு அவரை பொதுக்கூட்டம் ஒன்றில் சந்தித்தேன். “வாயுள்ள பிள்ளை பிழைக்கும்”என்றார் என்னைப் பார்த்து. இது எனக்கு அதிர்ச்சி அளித்தது. ஏனெனில் எங்களிருவரையும் நன்கு தெரிந்த நபர் சொல்லியிருந்தார் “நான் எனது வாயாலே கெட்டுப் போவேன்” என்று அவர் சொன்னதாக. ஆனாலும் நான் எதுவும் கேட்கவில்லை அவரிடம். அவர் மிகுந்த நோய்வாய்ப்பட்டிருந்தார். இருவர் அவரைத் தாங்கிப் பிடித்து வந்து மேடையேற்றினர். அவ்வப்போது தூங்கிவிட்டார். கீழே வைத்திருந்த தண்ணீர் தம்ளரை எடுப்பதற்குள் அவரது கைகள் கிடுகிடுவென நடுங்கின. “ஐயா, உங்கள் ஆசீர்வாதத்தால் நல்லபடியாக இருக்கிறேன்” என்று அவர் காதில் பலர் உரக்கச் சொல்லினர். கூட்டத்தில் நான் பேசி முடித்ததும் “தவறான எதையும் நீ பேசிடவில்லை” என்றார். பிறகு அவரது பார்வை எங்கோ வெறித்துக் கிடந்தது.

மாலை பூதவுடலைத் தொடாது மேலிருந்த கண்ணாடித் தளம் மீது சுருண்டு கிடந்தது. அதைச் சரி செய்ய நேரமில்லாது பின்னால் வந்த கூட்டம் நெட்டித் தள்ளியது. வெளியில் வந்தபோது பல முக்கியத் தலைவர்கள் தெரிந்தனர். அவர்களைச் சுற்றிலும் சிறுசிறு கூட்டங்கள். நான் திணறலுடன் வெளியேறினேன். வெறித்திருந்த வானில் சூரியன் காய்ந்ததில் என் உடலெங்கும் நீர்முத்துக்கள்.

வந்தவழியே திரும்பினோம். வழியில் சில வேலைகள் முடித்துக் கொண்டு ஊர் வர இரவு பன்னிரண்டு மணியாகி விட்டது. அம்மா தூங்கியிருப்பாள், நெடுநேரம் கதவைத் தட்டியவாறு வெளியில் நிற்க வேண்டுமே என நினைத்து சோர்ந்தேன்.

எண்ணெய் வைத்து வாரி முடிந்த கொண்டையுடன் வாசலில் நின்றிருந்தாள் அம்மா. எனக்குள் எழுதப்படாத வழுவழுப்பான வெள்ளைத்தாள் விரிந்தது.

“சாப்பிடு”

நான் ஏற்கனவே சாப்பிட்டு முடித்திருந்தேன். ஆனாலும், எனக்காக அவள் சமைத்திருந்த உணவு வகைகளை ருசி பார்க்கத் துவங்கினேன். அம்மா தம்ளர் ஒன்றை நீட்டினாள். என்ன இது என்ற கேள்வி என்னைத் தாண்டு முன் திரவநெடி அடர்ந்து நிறைத்தது. நான் மடக்மடக்கென குடித்து முடித்தேன்.

நான் அம்மாவைப் பார்த்தேன். அம்மா சுத்தமாக முகம் கழுவியிருந்தாள். அழுகையின் சுவடு தெரியாமலிருக்க.

எனக்கு மெல்ல ஞாபகம் வந்தது. திருமண மண்டபத்திலிருந்து திரும்பி வந்த நான் பேசாமல் படுத்துக் கொண்டிருக்கவில்லை. புலம்பிக் கொண்டிருந்தேன்.

“அம்மா, நீ சீக்கிரம் செத்துப் போயிட்டா, நான் இந்த ஊருக்கு வரவேண்டியிருக்காது. யாரிடமும் பேச்சு வாங்க வேண்டியிருக்காது”.

இது எனது ஞாபகத்தில் இடறியதும்,

கனவின் ரகசியமும், யார், ஏன் என் மரணத்தைக் கொண்டாடுகிறார் என்பதையும் அறிந்து, உறங்கச் சென்றேன்.

Pin It