பாட்டியின் சரிதம்

பாட்டி
பிறந்த வீட்டிலிருந்து
புகுந்த வீட்டிற்கு உள்ளதூரம் எச்சில் காயும் நேரம்
வீட்டிலிருந்து
கூப்பிடுதூரம்தான் அவள் பயிர்செய்த நிலம்
மகன்களுக்குப்
பெண்ணெடுத்ததெல்லாம்
சிலமைல்கள் தள்ளியுள்ள பக்கத்து ஊர்களில்
சின்ன மகனுக்கு மட்டும்
சென்னையில் பெண் பார்த்தாள்
ஆனால் அவள் போனதில்லை
ஒரு மகளைத்
தந்தது ஓர் ஊர்தள்ளி
இன்னொரு மகளுக்கோ இன்னொரு மாவட்டம்
கட்டிய வீட்டை விட்டு
காத தூரம் போனதில்லை கடல்களைக் கடந்ததில்லை
உயிர்த்திரண்ட சுழற்சியில்
தெறித்த அவளின் துணுக்குகள் உலகம் சுற்றுகின்றன
தொலைவுகளைக்
குறுகத்தறித்து
இரண்டடியில் உலகளந்த
அவளுக்கும் காலத்துக்கும் உள்ள தூரமோ ஒரு நூற்றாண்டு.


--------


என் முத்தாத்தன் எழுதிய
பாறை ஓவியங்களின் கீழமர்ந்து
நான் எழுதும் இந்தக்கவிதை
பெரு மழையில் நனைந்து
காற்றுடன் சலியாது பேசி
வெயிலில் ஒரு விதை போல் உலரட்டும்
அடர்ந்த மரங்களிடை
அவன் சித்திரம் இருப்பது போல்
இருக்கட்டும் என் கவிதையின் பொருளும்
அந்தப் பாறையில் வந்து சேரும்
பறவைகளின் குரலில்
இழையட்டும் அதன் ரகசியம்
இரவு தன் எல்லாக் கண்களையும்
திறந்து படிக்கட்டும் என் கவிதையை
அவன் சித்திரத்துக்கு
விம்மி எழுந்த மலைநெஞ்சுகள்
என் கவிதைக்கு
மேலும் எழும்பட்டும்
ஆடுகளையும் மாடுகளையும்
சுனைக்குப் பத்திவிட்டு
பாறையடியில்
படுத்துப்புணர்ந்த இடைச்சோடிகள்
சொக்கின் உச்சத்தில் விழியிழந்து
தடவிப் பார்க்கட்டும் அக்கவிதைகளை
விலங்குகள் உரசும்
பேறு பெறட்டும்
மனசில் காடடர்ந்து திரியும்
ஆதிவாசியொருவனால்
திரும்பவும் கண்டு பிடிக்கப்படட்டும்
என் கவிதையும்.

--------

குழந்தை 1-

அடம்பிடிக்கும் அந்தக் கண்கள்
அதிகாலை வெள்ளியின் கூர்மையுடன்
இடைவிடாது என்னைப் பார்க்கின்றன
காட்டோடை மணலின் வெண்மையிலும்
கசிந்து அடங்கிய காயத்தின் அமைதியிலும்
இருக்கின்றன அக்கண்கள்
காகத்திடம் தின்பண்டம் இழந்ததைப்போன்ற
பரிதவிப்பும்
பலவீனமான கோபமும்
அதிசயிக்கும் தன்மைகொண்ட பேராவலையும்
துக்கத்தின் ஈரத்தையும்
கொண்டிருக்கின்றன அவை
ஒரு பிரம்பின் வீசலை போல்
வலியுண்டாக்கும் அக்கண்களை
பலமுறை பார்த்திருக்கிறேன்
குடும்பத்துடன் சுட்டுக் கொல்லப்பட்டு
பெற்றோர்களின் உடல்களுடன் சேர்த்து
கிடத்தப்பட்டிருந்தபோது
குழியுள் வைத்து
மண்ணிடும்போது
தீயில் கருகி விறைத்திருந்த
சிதிலங்களிலிருந்து
சாலையின்
எதிர்பாராத முனைகளில்
கையேந்தியபடி
என் மகனை
முதுகில் விரல்பதிய நான் அடிக்கும்போது

----

-குழந்தை 2-

குடிசைகளுக்குள்
பெற்றவர்களைத் தழுவியபடி
உறக்கத்தில் இருந்தவரை
நள்ளிரவில் இழுத்துவந்து கொன்றார்கள்
அம்மாக்களை அக்காக்களை
அவர் முன்பாய் புணர்ந்தபின்பு
வாயில் பெட்ரோல்நிரப்பி தீவைத்தார்கள்
லத்திகளைச் சுழற்றிக்கொண்டு
வீடுகளினுள் ஓடி
தாயின் மார்புகளிலிருந்து
பிய்த்துக்கொண்டு போய்
சிறைவைத்தார்கள்
நீரில் மூழ்கடித்தார்கள்
கூடப்பிறந்தவரையும்
கூட்டாளிகளையும் இழந்தோர்
பொம்மைகளுடன் பேசியபடி
தனிமையில்
விளையாடுகிறார்கள்
உண்ணப்படாத
கூட்டாஞ்சோற்றுப் பருக்கைகளை
இழுத்துப்போகின்றன எறும்புகள்
ஊரூராய் தெருத்தெருவாய்
கண்ணீர் அஞ்சலிக்கு மட்டும்
குறைச்சலில்லை.
காலத்துள் புகுந்து
ஓடிக்கொண்டிருக்கிறது ரயில்.
Pin It