கனவின் பாதைவழி நீந்தி
பட்டாம்பூச்சிகள்
அற்புதங்கள் விதைந்தவுலகில்
பிரவேசித்திருக்கின்றன
நெரிசல்களுக்கப்பால் தெரிகிறான்
நீலநிற மேல்கோட்டும் தொப்பியுமணிந்த
மாயவித்தை காட்டுபவன்
அந்நிலம் கொண்டாட்டங்களின்
வாசனையில் மயங்கிக்கிடக்க
தன் கைத்தடியால்
எல்லோருக்குமான அக்கரியவெளியில்
சிருஷ்டிக்கிறான் முறையே
கேட்கும் அவரவர்க்கான சித்திரங்களை
அச்சின்னஞ்சிறு தேவதை
தனித்து நிற்கிறாள்
அவர்கள் தொடர்ந்து
பரவசத்தில் நிரம்பிவழிந்தபடி
அவனது கண்கள் கண்டுகொள்கிறது
மகிழ்ச்சியின் நிழல்படாத பிரதேசத்தில்
தேவதையலைவதை
மென்கரம்பற்றி அழைத்துச் செல்லுமவனைப்
பின் தொடர்கிறாள்
ஓவியப்பாதம் வரைந்த சித்திரம்
பதிய
தன்னன்பை பருகி மகிழ
தேவதைமுன் மண்டியிட்டு
இறைஞ்சுகிறான்
முகத்தில்
துக்கத்தின் நிறம் அடர்ந்திருக்கிறது
அவர்களைச் சூழ்ந்த யாவரும்
மௌனக்குளத்தில் மிதக்கின்றனர்
இப்போது
அவளுக்கு பிடித்தமானதென
யூகித்தவைகள் நிரம்பி அந்தரவெளியில்
சுழல்கிற கைத்தடி
அவன் கைகளிலிருந்து
மறைகிறது.
உன்னதம் - நவம்பர் 2005
சின்னஞ்சிறு தேவதையும் சித்திரங்களும்
- விவரங்கள்
- ஸ்ரீஷங்கர்
- பிரிவு: உன்னதம் - நவம்பர் 2005
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.