கூதிர்கால பாலைவெளி

நெடிய பயணத்தைக் கழித்து வந்ததும்
உடலை தூக்கியெறிய விழைகிறாய்
ஆனாலும் இறுகப் பிடிக்கிறது அழுத்தம்.
அந்நாட்களில் பூமிப்பரப்பின் மறுபக்கத்தில்
நீ தென்படுவதாக பறவைகளும் ஆக்காட்டிகளும்
செய்தி சொல்லிக் கொண்டிருந்தன எனக்கு.
கூதிர்காலம் துடங்கிய பின்னொரு அந்தியில்
பூர்வீக மண் குறித்த விருப்பத்தில் திரும்ப வந்தாய்.
கணங்களையும் துயரங்களையும்
எனதருகாமையில் இறக்கி வைத்திட முயல்கையில்
உன் தொண்டைக் குழியிலிருந்து
எழும்ப மறுக்கின்றன சொற்கள்.
சொல்ல எத்தனித்தாலும் ஏதோன்றும் பேச இயலாது
எதற்காகவோ இப்பொழுதில் விசும்புகிறாய்.
நம் இருவருக்குமிடையே
யாராலும் கட்டப்படாத சுவரொன்று
இப்பாலைவெளியில் நெடுகியிருப்பது பற்றியிருக்கலாம்.


உன் பாடல்

துர்தேவதைகளால் சபிக்கப்பட்டவனாக
நான் இருக்கக் கூடும்.
சூறைக் காற்று வீசும் மணல்வெளியில்
ஒரு காகிதத் துண்டு போல்
சுழல்கிறது என் காலம்.
குருதி உறிஞ்சும் தாவர பூமிகளைத் தாண்டி
கொடிய விசப் பூச்சிகள் அரித்துத் தின்றுவிட்ட
மீதிவுடலை தூக்கி கொண்டு கடக்கிறேன்
என்னுடைய நாட்களை.
கணமெங்கிலும் உன்னை நினைந்துருகும்
சாயங்கால வேளையொன்றில்
வானம்பாடிகள் பிடுங்கிப் போய்விட்டன
நீ சொல்லித் தந்த பாடலை.
அப்பாடலின் கடைசி வரியைப் பிடித்தவாறு
திசையெங்கும் அலைவுறுகிறேன்
உன் பாடலை திரும்பப் பெற்று விடும்
பேராவலோடு.
Pin It