எனக்கு மேடையும் வேண்டாம்
 உப்பரிகையும் வேண்டாம்
கீழேயே அமர்ந்து கொள்கிறேன்
இது எனக்கு சௌகரியமாக இருக்கிறது
என்னை அடையாளங்கண்டு
அழைக்கவும் வேண்டாம்
தோழமை பூண்டொழுகும் எனது சகாக்கள்
கற்றுத்தருவது போல்
இருந்துவிட்டுப் போகிறேன்
மேடையேற்றும் உன் எண்ணம்
தோழமையைப் பழிப்பது
என்னைப் பொறுக்கியெடுப்பதில்
உடன்பாடு இல்லை
நீ மேடையில் இருந்துவிட்டுப் போவதுபற்றி
எனக்கு எவ்வித
காழ்ப்புணர்ச்சியுமில்லை
கவலையுமில்லை
விலைமதிப்பற்ற கல்லாக
ஒளியிடும் பேராசை எதுவுமில்லை
உன் கைகளுக்கு கிடைக்கப்போவது
நீரோட்டத்தில் உருண்டோடும்
பட்டைதீட்டிய கற்களே
நானோ நீரோட்டத்தில்
தரையிலிருந்து கிளம்பாத
எப்பயனுமற்ற புதைந்திருக்கும்
கரடுமுரடான கல்
என்னை அறுக்கவும் தீட்டவும்
ஏன் முயற்சிக்கிறாய்
நீ மேடையைவிட்டு
கீழிறங்கி நடக்கும்போது
உன்னைப் பதம்பார்க்கும்
பழிச்சொற்கள் ஏதுமில்லை என்னிடம்
நீ நடக்க நடக்க நான் மேலும் மேலும்
புதைந்து கொண்டுதான் இருக்கிறேன்
எள்ளளவும் உன்னைத்
துன்புறுத்தாத ஆழத்தில்
மேடையிலிருக்கும் உன்னிடம்
கேள்வி எழுப்பப்போவதில்லை
உன்னை உயர்த்திட
போற்றிடப் புகழப்போவதுமில்லை
நீ என்னைக் கண்டுகொண்டது போலவே
நானும் உன்னைக் கண்டு கொள்கிறேன்
எனது அமிழும் உணர்வு புதை ஆழம் நோக்கியே
தான் சுமந்து நிற்கும்
எவற்றையும் வீழ்த்தாமல் இருப்பதைத்தவிர
எந்த ஒரு சிறப்பையும்
புதிய கண்டுபிடிப்பையும்
வெளிக்காட்டிக்கொண்டு
அமிழவில்லை புதைபாறை
எரிமலைக் குழம்பாகி வெடித்து சிதறி
சாம்பலாகும் அமிலப்பாறையுமல்ல
அகழ்ந்தெடுத்த அருங்காட்சியகத்தில்
வைத்து பாதுகாக்குமளவுக்கு
எத்தகுதியும் எத்தரமும் வாய்ந்ததுமல்ல
சுற்றிச்சுற்றி பார்ப்பதற்கு
மேடை எப்படி இலேசானதோ
அப்படியே உப்பரிகையும்
குறிபார்த்து எறிவதற்கும்
கைகூப்பி கும்பிடுவதற்கும்
எவரும் அணுக முடியாத அளவுக்கு
மேடையைப் போன்றே
உப்பரிகையும் பாதுகாப்பானது
மேடையேற்றமும் உப்பரிகைவாழ்வும்
ஒப்பனையே பாவனையே
மேடைக் குரல்கள் கட்டளைகளே ஆணைகளே
செவிமடுப்பதும் மேடையேற்றமே
காணுவதும் பங்கேற்பே
மேடைக்காட்சி போட்டி ரசனையே
விருதும் தண்டனையுமே
மேடைப் பார்வை சொர்க்கமே பாதாளமல்ல.
Pin It