அந்த வழியில் பயணிப்பவர்கள்
எல்லோருக்கும் அவனைத் தெரியும்
எனக்கும் கூட பரிச்சயம்
தள்ளுவண்டிக்காரனை இரந்தபடி
ஈஸ்வரன் கோயில் வாயிலில்
தெருமுனைக் கடையில் குவளையோடு
சத்திரங்களின் பின்னால்
இன்னும் எங்கெல்லாமோ அவனைக் கண்டு
பற்ற்றி அமிழ்ந்திருக்கிறேன்
ஒரு தீக்குச்சிபோல நிலை குலைந்து
அடர்ந்த சடைமுடியும்
அழுக்கேறிய ஆடையும் நீண்ட தாடியும்
அருவெறுப்பூட்டுவதாய் பேசுகையில்
அவனது கண்களோ
தீர்க்கதரிசியின் கண்களைப்போல்
என்னை பரவசப்படுத்தும்
நெருங்கி நிலைகுறித்து சினேகமாய்
பகிரத் துடிக்கும் மனசு
கல்லெறியப்பட்ட
குருட்டுநாயின் வாழ்வைப் போல்
துருப்பிடித்த - ஆணிகள் கழன்ற
அவனது ஒற்றைச் சக்கரத்தை
ஆழ்குள அலையின்
கடைசி வட்டத்துள் நகர்த்திக் கொண்டுள்ளான்
மரணத்தில் நாம் நிறைவாக்கப்படுகிறோம்
சரிதான்
தனக்கென இலக்கோ இருப்போ
எதுவுமே தெரியாத இவனை
இந்த சூன்யவெளி மரணம்
என்னவென்று நிறைவாக்கும்?



காற்றின் இசை லயத்தில்
ஓட்டு விளிம்பில்
வழிந்து கொண்டிருக்கும்
மழைச்சாரத்தில்
எரி நட்சத்திரங்களை விழுங்கிய
நிலவின் கூடுதல் மௌனத்தில்
உனக்கென உருண்டுகொண்டிருக்கும்
இக்கவிதை கணத்தில்
எப்படியெல்லாமோ என்னை
உள்சுழல்களில் நிறைத்து
தாய் தன் குழந்தையை
தேற்றித்தேற்றி பாலூட்டுவதுபோல்
ஆளுமை செய்கிறது
உன் இனிய காதல்



ஒரு இனியபறவை தன் வாழ்க்கையை
அலகுகளில் சுமந்தபடி
கூடடைகிறது உன்னை
சுழலும் திசையென
என் இரத்த நாளங்களில்
ஒற்றி எழுவதிலிருந்து
இறுக்கமற்ற எனதாடையை
காற்றுப் பிரதேசங்கள்
புடைத்துக் காட்டுவதிலிருந்து
குதிகாலுயர்ந்த என் செருப்புப் பட்டையை
குனிந்து தளர்த்தி விடுவதிலிருந்து
நான் கிராமத்துப்பெண் என்பதில்
சகல அலட்சியம் உனக்கு
போகிறபோக்கில் சடாரென அடித்துச்செல்லும்
என் வழிப்பயண முள்ளே
வயல்வெளிகளின் சாயல்களோடும்
ஓலைச்சரங்களின் சலசலப்போடும்
வளர்ந்து போன எனக்கு
உன் நாகரீகமுலாம் பூசி
நடக்கத் தெரியவில்லை அன்பே
என்றாலும்
நான் தனித்துவிழும் அந்தகாரச்சூழலில்
நீ தாங்கிக்கொள்வாய் என்றும்
நினைத்ததில்லை
ஏனெனில்
என்னை வீழ்த்துவது
உன் இயல்பல்லவா கண்ணா
பரப்பின் வீச்சமுணராது
எதிர்க்கொள்ளும் தெம்போடும் துணிச்சலோடும்
நீலத்திற்கும் நீலத்திற்கும்
விரிக்கப்பட்டள்ளன சிறகுகள்
Pin It