இரவிற்கு வெளியே
என் புறாக்கள்
சிறகடிக்கின்றன உறங்காமல்.
மரங்களின் கனிந்த நிழலில்
இளைப்பாறுகிறது இரவும்.
அலைகளும், மலைகளும்
நெருங்கவியலாத இந்த அறை
மரங்களின் கரிய கிளைகளால்
நெருப்பூட்டப் படுகிறது.
இமைக்காத நட்சத்திரங்கள்
உருவாக்குகின்றன
முத்தங்களின் ஓசையை.
வண்ணத்துப் பூச்சிகள் வராத வனம்
பூத்துக் கொண்டேயிருக்கிறது.
உறங்கும் குழந்தையின்
உதட்டோரப் பாலென
நிலவு தீற்றிய முன்னிரவில்
அலைக்கழியும் புறாக்களோடு
கருங் கிளைகளசைய
மயானமாகி விட்ட
அறைக்குள்
நுழையவே முடிவதில்லை ஒருவராலும்.



ரணம் குதறத் தொடர்ந்து
வாழ்ந்து
காலங்கள் உதிர்ந்த பிறகும்
நினைக்க எதுவுமற்று
தேய்மானமுற்ற பதிவுகளைப்
பொறுக்கித் திறந்து
முதலில் கண்டேன்
உன் புதிய முகமொன்றை.
பூரித்த தசைகள்
புன்னகையில் மினுங்க,
அரண்களின் உடைவில்
நுழைந்து கசிந்து
பெருகினாய் மறுபடி நீ.
சுறாக்கள் அசையும்
ஆழ் கடலாக
உவர்க்கத் தொடங்கியது
என் உலகம்.



பொய்களும், நிஜங்களும்
கலந்து குழம்பும்
உறவுகளின் குடுவை
நிரம்பி வழிய,
உதாசீனமாய் ஆடுகின்றன
பிரபஞ்சத்தின் மாபெரும் பாதங்கள்.
கைதவறி உடைந்த
கண்ணாடிக் கிண்ணத்தின்
சில்லுகள்
சிதறிப் பறக்கின்றன
நான்
துடைத்துத் தூய்மைப் படுத்த முடியாத
சிக்கலின் வெளி நோக்கி.



கனவிற்குள் உருளும்
கனியின் புளிப்பை
அடி நாவில் உணர்கிறேன்.
மோன வானை அசைக்க முனையும்
முட்டாள் மரம் போல்
உயரே உயரே
எம்பிச் சரிகிறேன்.
நடனமிடும் கோலமயிலை
பென்சில் டப்பாவிற்குள்
அடைத்து வைக்கிறான் என் மகன்.
ஆடிக் களிக்கிறது அது
பிளாஸ்டிக் சுவர்களுக்குள்.
அரைத் தூக்கப் புணர்ச்சியின் போது
அது பறக்கக் கண்டேன்
அந்தர மலைகளுக்கு அப்பால்.
Pin It