இன்னும் கொஞ்ச நேரம்

Faces என் வீட்டின் முன்
அமர்ந்திருக்கும் நான்
ஒரு யாத்ரீகனுக்காக காத்திருக்கிறேன்.

குடை ரிப்பேர் செய்பவனுக்காகவும்
சாணை பிடிப்பவனுக்காகவும்
பிச்சைக்காரனுக்காகவும்
குறி சொல்பவனுக்காகவும்
விற்பனை பிரதிநிதிக்காகவும்
தபால்காரனுக்காகவும்
வீட்டு வரி வசூல் செய்பவனுக்காகவும்
குடும்ப நபர் கணக்கெடுப்பாளனுக்காகவும்
காத்திருக்கிறேன்
என் வீட்டின் முன்
அமர்ந்திருக்கும் நான்
ஒரு கடவுளுக்காக காத்திருக்கிறேன்.

மண்சுமப்பவர்கள்

கட்டிட வேலைக்காக
மண் சுமப்பவர்களை
இன்று கண்டேன்.
வயதானவர்கள்
நடுத்தர வயதினர்
வாலிபர்கள்
பெண்கள்
இன்னும்
சிறுவர்..சிறுமியர்
வெயிலின் பாரம்
உடம்பெங்கும் வழிய
கழுத்து நரம்புகள் தெறிக்க
கால்கள் நடுங்க
மண் சட்டியில்
மண் சுமந்தபடி செல்லும்
அவர்களைக் கண்டேன்.
கூடவே
வேறு சிலரையும்
இவர்களும்
மண் சுமப்பவர்களே.
இவர்கள்
இடம் விட்டு
இடம் பெயர்வதில்லை
பேசுவதில்லை
அழுவதில்லை
சிரிப்பதில்லை
கட்டிடங்களுக்கு
மண் சுமப்பவர்கள்
அல்ல இவர்கள்...
கட்டிடங்களையே சுமப்பவர்கள்.

கறுப்பு தினம்

நம் நெருங்கிய நண்பனொருவனின்
மரணம்
ஒரு குவளை பீர் அருந்த
நமக்கொரு
வாய்ப்பு ஏற்படுத்தி தருமெனில்
அது குறித்துப் பரவசமடைகிறோம்
இப்படி ஒரு வாய்ப்பை நல்கிய
அவன் கருணை மனதுக்கு
அஞ்சலி செலுத்துகிறோம்
ஆசுவாசமாக நாம் விடும்
சிகரெட் புகையினூடே
அவன் ஆன்மா
நம்மை ஆசிர்வாதம் செய்கிறது
சாவதற்கு
மிகவும் தகுதியானவன்தான் அவன்
என்றும்
தன் சாவின் மூலம்
இந்த உலகத்தைப்
பழி தீர்த்துக் கொண்டான்
என்றும்
அறிக்கை வாசிக்கிறோம்
உண்மையிலேயே
நம் நண்பனின் மரணம்
நம்மை
மிகவும் சாந்தப்படுத்துகிறது
அடுத்த நண்பனின் மரணத்திற்கு
காத்திருக்கிறோம்.
Pin It