கீற்றில் தேட...

உங்களுக்கு குணசேகரனைத் தெரியுமா?
ஆத்மாநாம், கோபி கிருஷ்ணன்
ஆகியோர் வாழ்ந்து வந்த மகாகவி
பாரதியார் வீதியின் கடைசி குடியிருப்பு
அவனுடையது.
எங்கும் தூசிகள் விரிக்கப்பட்டிருக்கும்
சின்னஞ்சிறு அறை
பூச்சுக்கள் திறந்து செவ்வண்ணம் காட்டும்
மண் சுவர்கள்.
புகைத்தொழித்த பீடித்துண்டுகள்
குடித்தொழித்த மதுக்குப்பிகள்
தேவைகளின் போது அலசிக் கொள்கிற
ஐந்தாறு பிளாஸ்டிக் டம்ளர்கள்
(பிளாஸ்டிக் பொருட்கள் மனித குலத்திற்கு
இழைக்கும் தீங்குகள் குறித்து அவனுக்கு
நீங்கள் அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை)
குணசேகரனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர்
நண்பர்களுக்கு மனைவிகளும்
காதலிகளும் செல்லக்குட்டிகளும்
பையன்களும் இருந்தனர்
ஒரு விடுமுறை ஞாயிறு
குதூகலத்தின் வெள்ளம்
பெருக்கெடுக்கத் துவங்கியது
இரண்டு பெரிய புட்டியில்
அடைத்துவைக்கப்பட்டிருந்த
சொற்கள் முழுதையும் காலி செய்தனர்.
பேச்சுக்கள் பேச்சுக்கள் பேச்சுக்கள்
நிலா உதிக்கத் துவங்கிய பொழுதில்
நண்பர்கள் ஒவ்வொருவராக
வற்றத்தொடங்கினர்
அருகிருக்கிற
நீலகண்டேஸ்வரர் திருக்கோவில்
மணி தனியனின் செவிகளில் ஒலித்தது.
பல்லாண்டுகளுக்கு பிறகு கடவுளுக்கு
காட்சியளிப்பது குறித்து அவன் யோசித்தான்
வழியில் ஆளில்லா லெவல் கிராஸிங் ஒன்று
குறுக்கிட்டது
ரயில் கடக்கட்டும் என்று காத்திருந்தவன்
கடைசிப் பெட்டிக்கும் முந்தைய பெட்டிக்குமிடையே
ரயிலைக் கடந்தான்.