ஒரு கவிதை எழுதி முடித்தேன்
எக்காலத்தைக் கையிலெடுத்து ஊத
ஆயத்தமாகிக் கொண்டிருந்தது அது

வாள் பிடுங்கி
காகிதப்பூ கற்றையும், சாணமும்
கையில் கட்டாயமாகத் திணித்து
ஒதுக்கப்பட்டு நோய்க்காரனென
சொல்லப்படும் அவன்
எம் வேட்டைக்கார கூட்டத்தின் வீரனொருவனென
சொல்லியா தெரிய வேண்டும் உங்களுக்கு?

இன்றவன் திரிகிறான்
இவ்வனமெங்கும்
அறிவு சிதைக்கப்பட்ட கால்நடை போல்

வரிகள் செத்துக் கிடந்தன
தாள் கோடித்துணியை ஞாபகப்படுத்தியது
சுயத்தை கை கொண்டு
இழப்பை மீட்க
உசுப்பி வீரனாக்கும் நோக்கில்
சொல்லாலடித்தேன்
வைதேன்
விரட்டினேன்
நிராகரித்தான் எல்லாவற்றையுமே

பக்க அடையாளத்திற்காய்
கூர் வாளொன்றை வைத்துவிட்டு
எழுந்து சென்று விட்டேன்
சிறுநீர் கழிக்க

மீண்டு கண் திரும்பியபோது
வாளும் அவனும்
அங்கில்லை.
Pin It