குதிரை சவாரி


புத்தக அட்டைக்குள்ளாக ஓடிக்
கொண்டிருந்த குதிரையொன்று தரை
இறங்கி என்னை
சவாரிக்கு இழுத்தது.
பல காலங்கள் ஒரே
இடத்தில் நின்றே சலிப்புற்றுப் போனதாக
சொன்னது
கடிவாளம் இல்லாமல்
தன் போக்கில் ஓடிய குதிரை
பிடறி மயிர் நீவி
சவாரிக்கு ஆயத்தமாக்கினேன்
உன் சௌகர்யம் எனை
பாடாவதியாக்குவதாகச் சொல்லி - புத்தக
அட்டைக்குள் புகுந்து கொண்டு
சவாரி செய்ய ஆரம்பித்தது.


தைல வண்ண மனிதன்

சிதிலமாகிக் கிடக்கும் சித்திரத்தோடு
கொஞ்ச நேரம் உரையாடிச் திரும்பலா மென்று
புத்தக அட்டைக்குள் போனேன்.
ஓரிடத்தில் தனை கல்மாதிரி
சமைத்தவனை நினைத்து
நொந்து பேசியது அது
கலை நாகரீகம் பண்பாடு என்று
என்னவெல்லாமோ உளறிக் கொட்டினேன்
ஆத்மாக்களுக்கு அவசியமற்றது என்றது
போன கையோடு உரியவர்கள் வசம்
தெரிவிக்கிறேன் என்றேன்
ஆகட்டும் ஆகட்டும் என்று தலையாட்டியது
சித்திரமானதில் உள்ள கொடூரம் பற்றி
நீண்ட மணித் துளிகள் பிரஸ்தாபித்த
சித்திரத்தை நேற்று
கனடாவுக்கு கடத்திவிட்டதாக செய்தியில்
சொன்னார்கள் மாலை
வேறு சேனலில்
கட்டாயம் மீட்டே தீருவோம் என்று
பதிலுரைத்துக் கொண்டிருந்தார்கள் சிலர்.

நீராடும் மங்கை

நளினமாக
இரு முலைகள் தெரிய
புத்தக அட்டையில் நீராடினாள்
மங்கை
தலை சாய்த்து
நாணம் தரை பாவ
நீரனைத்தும் அவளுக்கு
உடை இராதது ஒரு
குறை போல் இல்லை
பல வருடங்கள் நீராடிச் சளைக்காத இந்த
கோபியரின் குளியலுக்கு
விழியினால் நீரிறைத்து ஊற்றுகிறேன்
நிதமும்.
Pin It