ஐயா பழ. நெடுமாறன் அவர்களுடைய மேற்கண்ட நூலைக் கொஞ்சம் தாமதமாகத்தான் படித்தேன். அவர்களுடைய நூல் வெளியீட்டு விழாவில் எனக்குத் தரப்பட்ட படியில் முதல் அத்தியாயத்தின் சில பகுதிகள் அச்சிடப்படாமல் வெறுமையாய் இருந்தன. இதனால் முதல் அத்தியாயத்தைப் படிக்காமல் நூலுக்குள் நுழைவதற்கு ஒருவகையான மனத்தடை இருந்தது. எனினும் முதல் அத்தியாயத்தை விடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். படிக்கத் தொடங்குமுன் இதற்கொரு திறனாய்வு எழுத வேண்டும் என்ற சிந்தனை எல்லாம் இல்லை. இதனுடைய தலைப்புக்கு நூலாசிரியர் என்ன நியாயம் செய்கிறார் என்-பதை அறிந்துகொள்ளும் ஆவல் மட்டுமே இருந்தது. ஆனால், நூலின் பக்கத்திற்குள் படர்ந்தபோது, இது தலைப்பால் மட்டும் துணிவு கொண்ட நூலன்று - விரித்துச் சொல்கிற செய்திகளாலும் விளக்கங்களாலும் துணிவு கொண்டது என்பதை உணர்ந்து கொண்டேன். எனினும் நூலை வெறும் வாசிப்பாகவே செய்து முடித்தேன்.

முக்கியச் செய்திகள் எதையும் குறித்துக் கொள்ளவில்லை. நூலாசிரியர் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு நூலின் முதல் அத்தியாயத்தைப் படிக்கவில்லை என்பதையும் சொன்னேன். பின்னொரு சமயம் நூலாசிரியரைச் சந்தித்தபோது, நூல்குறித்துப் பேசினேன். அவர் வேறொரு படியைத் தந்து படித்துப் பார்க்கச் சொன்னார். மறுபடியும் நூலைத் தொடக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். ஆனால் இம்முறை குறிப்புகளோடு படிக்க ஆரம்பித்தேன். இரண்டாம் முறை வாசித்தது நூலின் பல்வேறு பகுதிகளை இன்னும் தெளிவுபடுத்தியது. படித்து முடித்தபின், எனக்குத் தோன்றியது, இந்த நூலை இந்தியத் துணைக்கண்டத்தின் மறுபக்க வரலாற்று ஆவணமாகப் பேண வேண்டும் என்பதுதான்.

“சுருக்கமாகச் சொன்னால் தேசியப் புரட்சியை உருவாக்க விழைந்தார்களே தவிரச் சமூகப் புரட்சியை அவர்கள் வரவேற்க-வில்லை. இதன் காரணமாகச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாடு முழுவதிலும் வேறுபட்ட போக்குகள் காணப்பட்டன. “வெள்ளையரை விரட்ட அணிதிரள்வீர்’’ என்ற முழக்கத்துடன் தேசீய சக்திகள் ஒரு புறமும், சமுதாயச் சமத்துவத்திற்காகக் களம் இறங்கிய பிற்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் இயக்கங்கள் மறுபுறமும் போராடின. சாதி ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயம் காணப் போராடிய சக்திகளை அரவணைத்துக்கொள்ள இந்தியத் தேசியவாதிகள் அடியோடு தவறிவிட்டனர்." (ப.13)

விலை ரூ.350

Pin It