கொண்டல் வண்ணனைக்
கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டக்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே!

“உன்னை பார்த்த கண்கள் வேறு எவற்றையும் கண்டு மகிழாது’’ என்று பிரபந்தம் அமலனாதிபிரானில் பாடுகிறார் திருப்பாணாழ்வார். அந்தக்காலத்தில் மண்டல் வர்ணத்தில் பிறந்துவிட்ட பாணாழ்வாரை, கோயில் உள்ளே விட 144 தடை. காவிரிக் கரையிலே நின்றுகெண்டு அரங்கனை நோக்கி மெய்மறந்து அன்றாடம் பாடிக்கொண்டிருக்கிறார் பாணன். அரங்கன் மனம் இளகாமல் போகுமா? ஒரு நாள் லோகசாரங்க முனிவரின் கனவில் வந்த பெருமாள், அந்த பாண பக்தனை உன் தோளில் சுமந்துகொண்டு சன்னதிக்கு வாரும் என்று கட்டளையிட்டு விட்டார். வேறுவழியில்லாத முனிவர் பாணரைக் கொண்டு சன்னதியில் நிறுத்த, பாதாதி கேசமாக அவருக்கு காட்சியளித்தார் பெருமாள். உருகிப்போன பாணர், பெருமாள் மீது பத்து பாசுரங்களைப் பாடி எல்லோரையும் புல்லரிக்க வைத்துவிட்டார். பிரபந்தத்தில் அரங்கன் பாசுரங்கள்தான் அதிகம். ஆழ்வார்கள் மங்களா சாஸனம் செய்த 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் 54வது திவ்ய தேசம் ஆகும்.

பூலோக வைகுண்டம் என்று வைணவர்களால் போற்றப்படும் திருவரங்கன் ஆலயத்தில் பல புரட்சிகளைச் செய்திருக்கிறார் ஸ்ரீராமானுஜர். ஸ்ரீரங்கம் கோயிலின் அன்றாட பரிபாலனம், நியமனங்கள், விழாக்கள் ஆகியவற்றைப் பற்றி தெளிவான ‘கைடை’ப் போட்டுச் சென்றிருப்பவர் அவர்தான். சமூகத்தின் எல்லா பிரிவு மக்களுக்கும் அந்த நியமனங்கள், விழாக்களில் முக்கிய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டவரும் அவர்தான். இன்றும்கூட அந்த வகையில் அருந்ததியர் பிரிவு மக்களுக்கு உரிய மரியாதை செய்யப்படுகிறது. பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்களால் அபிவிருத்தி செய்யப்பட்ட அரங்கன் கோயிலின் விசேஷம் என்னவென்றால், கட்டிடக் கலையில் கொஞ்சம் கூட பிசிறடிக்காமல் முழு கோயிலும் ஒரே காலத்தில் கட்டப்பட்டதோ என்று வியக்க வைப்பதுதான்.

அரங்கன் கோயிலின் உள்ளே பல அறியப்படாத செய்திகள், கொஞ்சம் கொச்சையாகச் சொன்னால் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. அதில் மிகவும் கிசுகிசுவாகப் பேசப்படுகிற விஷயம் பெரிய திருவடி (கருடாழ்வார்) சன்னதி குறித்து. சன்னதியின் பின்புறச் சுவரை ஒட்டியில்லாமல் நடுவிலேயே இருக்கிறார் கருடர். அவரது பின்புறம் மற்றொரு சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. கருடரின் பின்னால் ஒரு ரகசிய அறை இருப்பதாகவும், அதில் தங்கம், வெள்ளி என்று பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல். அந்த சந்தேகத்துக்கு வலு சேர்ப்பதுபோல் ஜன்னல்களின் இடைவெளிகளும்கூட கற்களால் அடைக்கப்பட்டு விட்டன. முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின்போது, கோயில் நகைகளைக் காப்பாற்ற அங்கே பொக்கிஷங்கள் குவிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஊகங்களுக்கு சரியான ஆதாரம் இல்லை.

அதேசமயம் மற்றொரு சம்பவத்துக்கு சரியான ஆதாரம் இருக்கிறது. பன்னிரண்டாம் நூற்றாண்-டின் மத்தியில் ஜடாவர்மன் சுந்தரவர்மன் சாம்ராஜ்யம் பரந்து விரிந்திருந்தது. சிதம்பரம் தெற்கு வாசல் கோபுரத்தை கட்டியவன் இந்த பாண்டியன்தான். இவன் காலத்தில்தான் திருவரங்கன் கோயிலின் மூலஸ்தானக் கூரை, துவஜஸ்தம்பம் ஆகியவற்றுக்குத் தங்க முலாம் பூசியதுடன், கருடாழ்வார் மேனியையும் தங்கத்தால் போர்த்தி சந்தோஷப்பட்டான் ஜடாவர்மன். இதற்காக தங்கம் எப்படி வழங்கப்பட்து என்பது குறித்தும் சுவையான செய்தி இருக்கிறது. காவிரியில் ஒரு படகை நிறுத்தி அந்த படகின் மீது யானையை ஏற்றினார்களாம். அதில் பாண்டியன் ஏறி அமர்ந்துகொண்டான். பின்னர், படகு எவ்வளவு தண்ணீரீல் மூழ்கியிருக்கிறது என்று பக்கவாட்டில் குறித்து வைத்துக் கொண்டார்களாம்.

அப்புறம் யானையை இறக்கி படகில் தங்கக்கட்டிகளை ஏற்றியிருக்கிறார்கள். யானை இருந்தபோது எந்த அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கியதோ அந்த அளவு வரும் வரை தங்கக்கட்டிகளை ஏற்றினார்களாம். அப்படி எடை பார்த்து கொடுத்த தங்கத்தை வைத்துத்தான், தங்க முலாம் பூசப்பட்டதாம். இதில் வியப்புக்குரிய மற்றொரு செய்தி யானையைப் படகில் ஏற்றும் அளவுக்கு காவிரியில் அந்தக் காலத்தில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது என்பதுதான். அது சரி, கருடாழ்வார் மீது பூசப்பட்டிருந்த தங்க முலாம் என்னவாயிற்று? மாலிக்காபூர் படையெடுத்தபோது பல கோயில் நகைகளை சூறையாடிச் சென்றான் என்பது வரலாறு. அந்த மாலிக்காபூர் கண்ணில் திருவரங்கமும் தப்பவில்லை. கருடாழ்வார் மேலிருந்த தங்கத்தை எப்படி எடுப்பது என்று யோசித்த மாலிக்காபூர் நிலையின் மேல் நெய் அபிஷேகம் நடத்தியிருக்கிறான். பின்னர் நெருப்பைப் பற்ற வைத்துவிட்டான். உருகி ஓடிய தங்கத்தை கட்டிகளாக்கி எடுத்துக் கொண்டு போய்விட்டான்.

அரங்கன் கோயில் வளாகத்துக்குள் இப்படி பல சுவையான செய்திகள் அநேகம் உண்டு என்பதற்கு இது ஒரு உதாரணம்தான். விஜயநகர பேரரசு ஆட்சியின்போது, அரங்கன் சொத்துக்கள் சிவன் கோயிலுக்கு கொடுக்கப்பட்டபோது, அதைத் தடுக்க முயற்சித்து வெள்ளைக் கோபுரத்தின் மீதிலிருந்து உயிரை மாய்த்துக்கொண்டார்கள் இரு ஜீயர்கள். உலுக்கான் என்ற முஸ்லிம் அரசன் படையெடுத்தபோது, வெள்ளைக் கோபுரத்தின் மேலே தங்கப் புதையல் இருக்கிறது என்று அவனது தளபதியை அழைத்துப்போய் மேலிருந்து அவனைக் கீழே தள்ளிவிட்டு தானும் இறந்துபோன தேவதாஸிப் பெண், உறையூருக்குச் சென்று தன் மற்றொரு நாயகியைப் பார்க்கப் போன அரங்கனை திரும்பி வரும்போது ஒளிந்திருந்து தாயார் பார்த்தபோது, ஒரு சம்பவத்தைச் சொல்லும் ஐந்து குழி, மூன்று வாசல் இப்படி பல அறியப்படாத செய்திகளைத் தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு அதிசயிக்க வைக்கிறது அரங்கனின் ஆலயம்.

Pin It