‘தண்பொருநை‘, ‘பொருநை‘, ‘பொருநல்‘, ‘தண் பொருத்தம்‘, ‘தாமிரபரணி‘ என இலக்கியங்களும், ‘தண்பொருந்த ஆறு‘, ‘தண் பொருத்தப் பேராறு‘, ‘முடி கொண்ட சோழப் பேராறு‘ என்று கல்வெட்டுகளும் இன்றைய தாமிரபரணி ஆற்றினைச் சுட்டுகின்றன. இந்நதிக் கரையில்தான் ஆதிச்சநல்லூரும், கொற்கையும் பழந்தமிழர் நாகரிகத்தினை வளர்த்துள்ளன. கீழ்வேம்ப நாட்டுத் திருநெல்வேலி, குலசேகரச் சதுர் வேதிமங்கலம் எனக் கல்வெட்டுகள் கூறும் திருநெல்வேலியும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பழம்பெருமை மிக்க ஊராகும். திருநெல்வேலி பகுதியைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் பனைமரம் மிகுதி. அதனால் இங்குள்ள மக்கள் தமிழ் இலக்கியங்களையும் பிறகலைகளையும் பனை ஒலைகளில் பதிவு செய்து பாதுகாத்துள்ளனர்.

ஓலைச் சுவடிகள்

மக்கள் எழுதப் பயன்படுத்திய பொருள்களின் அடிப்படையில் சுவடிகளை ஓட்டுச்சுவடி, எலும்புச் சுவடி, மூங்கிற் சுவடி, லிபர் கவடி, மரப்பட்டைச் சுவடி, பூர்ச்ச மரப்பட்டைச் சுவடி, தோல் சுவடி, உலோகச் சுவடி, துணிச் சுவடி, பலகைச் சுவடி, பனைவோலைச் சுவடி, என பலவகைப் படுத்துகின்றனர். பனை மரங்களில் நாட்டுப்பனை (Borasus Flaballifer/Palmyar), சீதாளப்பனை எனப்படும் கூந்தற்பனை (Coripha umbra calibra) லந்தர்பனை (Coripha utan) ஆகிய மூன்று வகையான பனைமரங்களின் ஒலைகள் எழுதுவதற்குப் பயன்பட்டன. இவற்றில் நாட்டுப் பனையோலையே மிகுதி.

தென்னிந்தியாவில் நாட்டுப்பனை அதிகமாக ‘வளர்கிறது. இந்த ஒலைகள் மிகவும் தடிமனாகவும் நீளம் குறைந்தும் காணப்படும். இவ்வகைப் பனை மரங்களின் ஒலைகள் 4 செ.மீ முதல் 6 செ.மீ. வரை அகலமும் 60 செ.மீ. முதல் 90 செ.மீ வரை நீளமும் உள்ளதாக இருக்கும்.

இந்தியாவின் மேற்குக் கடற்கரை, இலங்கை, மலேசியக் கடற்கரை ஆகிய பகுதிகளில் கூந்தற்பனை மரங்கள் அதிகம் வளர்கின்றன. கூந்தற்பனையின் ஒலை மிக மெல்லியதாகவும் வழவழப்பாகவும் நன்கு வளைந்து கொடுக்கும் தன்மையும் கொண்டது.

மூன்றாவது வகையான லந்தர்பனை ஒலைகளும் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இவ்வகைப் பனை மரங்கள் இந்தியாவின் வடகிழக்கு

பகுதிகள், பர்மா, தாய்லாந்து ஆகிய இடங்களில் அதிகமாக வளர்கின்றன. ஓலைகள் எழுதுவதற்கேற்பப் பதப்படுத்தும் முறையை ‘ஏடு பதப்படுத்துதல்‘ அல்லது ‘பாடம் செய்தல்‘ என்று கூறுவர். எழுதுவதற்குத் தயாரிக்கப்பட்ட ‘ஒலை வெள்ளாலை‘ அல்லது ‘வெற்றெடு‘ எனப்படும் புத்தக ஏடுகளாக உதவும் படி ஒலையைச் சீவிக் செம்மையாக்குவதை ஒலை வாருதல் அல்லது ஏடு வாருதல் என்பர்.

செம்மை செய்யப்பட்ட ஏடுகளின் இருபுறமும் அளவாகத் துளைகள் போடப்படும். இத்துளைகள் ஒலைக் கண்கள் எனப்படும். இரு துளையிடப்பட்ட ஒலைகளில் இடப்பக்கம் நூல் கயிறு கோர்த்தும் வலப்பக்கம் மெல்லிய குச்சியைச் செருகியும் சுவடி தொய்வடையாமல் காக்கப்படுகிறது. குச்சிக்குப் பதில் பித்தளை அல்லது இரும்பாலான கம்பியையும் பயன்படுத்துவதுண்டு. இந்தக் குச்சி அல்லது கம்பிக்கு நாராசம் என்று பெயர். இது கள்ளாணி என்றும் கூறப்படுகிறது.

ஓலைச் சுவடியில் எழுதுவதற்குப் பயன்படும் ஆணியை (styles), ஓலைதீட்டுப்படை, எழுத்து ஊசி, எழுத்தாணி என்பர். ஏட்டுச்சுவடியின் இருபக்கங்களிலும் இரண்டு மரச்சட்டங்களை சேர்ப்பர். இச்சட்டத்திற்கு கம்பை என்பது பெயர். ஏட்டிச்சுவடிகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தும் கயிற்றின் தலைப்பில் பனையோலையை அதன் ஈர்க்குடன் கிளிமூக்குப் போலக் கத்திரித்துக் கட்டியிருப்பர். அதற்குக் கிளி மூக்கு என்பது பெயர். சுவடிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்திய பலகையைத் தூக்கு என்றும் அசை என்றும் கூறுவர். கவளி என்பார் சேழக்கிழாரடிகள். தூக்குகளைத் தூக்கி செல்லும் ஆட்கள் தூக்குக் தூக்கி என அழைக்கப்பட்டனர். அரசர் கூறும் செய்தியை ஒலையில் எழுதுவார், திருமந்திரவோலை அவர்கள் தலைவன் திருமந்திர வோலை நாயகம்.

ஓலைச்சுவடி பாதுகாத்தல்

திருநெல்வேலியைச் சார்ந்த கவிராயர் ஒலைச்சுவடிகளில் எழுதி இலக்கியங்களைப் பாதுகாத்துள்ளார். எட்டையபுரம், சிவகிரி, சொக்கப்பட்டி, ஊற்றுமலை - குறு நில மன்னர்களும் வரதுங்கூராம பாண்டியன், அதிவீர ராம பாண்டியர் வடமலையப்ப பிள்ளையன் போன்றோர் ஏடுகளைத் தொகுத்துள்ளனர். திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், காஞ்சி ஞானப் பிரகாசர் மடம், மதுரை திருஞான சம்பந்தர் மடம் ஆகியனவும், குடந்தை, சிதம்பரம், திருவண்ணாமலை, துறையூர், மயிலம் முதலிய இடங்களில் உள்ள வீர சைவர்களும் ஏடுகளைத் தொகுத்தும் வெளியீடுகள் புரிந்தும் தமிழ்த் தொண்டு செய்துள்ளனர். (இரா.இளங்குமரன் 1991 : 109) அரசினர் கீழை நாட்டுக் கையெழுத்து நூல் நிலையம் (கர்னல் காலின் மெக்கன்சியின் சேகரிப்பு), சரசுவதி மகால் நூல் நிலையம், மதுரைத் தமிழ்ச்சங்கம், டாக்டர் சுவாமி நாதைய்யர் நூல் நிலையம் என பல இடங்களில் சுவடிகள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், அரசு அருங்காட்சியகம், தொல்பொருள் துறை, சித்த மருத்துவக் கல்லூரி போன்று பல இடங்களில் தனியார் பலரிடம் ஒலைச் சுவடிகள் உள்ளன. வெளி நாட்டு நூலகங்களிலும் தமிழக ஒலைச் சுவடிகள் இருக்கின்றன.

திருநெல்வேலி ஓலைச் சுவடிகள்

இலக்கியம், கலை, மருத்துவம், ஜாதகம், ஜோதிடம், கணிதம், நிகண்டு, நாட்டார் வழக்காறுகள் என பலவகைச் செய்திகள் எழுதப்பட்ட ஒலைச்சுவடிகள் திருநெல்வேலியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிகுதியாக உள்ளன. திருநெல்வேலி பகுதியில் கவிராயர் குடும்பங்களில் மிகுந்த ஒலைச் சுவடிகள் உள்ளன. அண்ணாவிகள் எனப்படும் ஒலைச்சுவடி பள்ளி ஆசிரியர்கள் களியாட்டம், போன்றவற்றையும் நாட்டார் நாடகம் நிகழ்த்தும் அண்ணாவிகள் நாடகச் சுவடிகளையும் பாதுகாத்து வருகின்றனர். வைத்தியர்கள் எனப்படும் நாட்டு மருத்துவர்களும் ஒலைச் சுவடிகளில் இருந்து மருத்துவத்தை அறிந்து மருந்து கொடுத்து வருகின்றனர்.
ஜோதிடர்கள், புதிரை வண்ணார், குறி சொல்லும் குறவர், வில்லிசை கலைஞர், கணியான் என பலர் ஓலைச் சுவடிகளைப் பரம்பரை பரம்பரையாகப் பாதுகாத்து வருகின்றனர். ஜமீன்தார், பண்ணையார் வீடுகள், கோவில்கள், தனியார் பலரின் வீட்டு பூஜை அறைகளிலும் ஒலைச் சுவடிகளைக் காணலாம். பழைய பொருட்களை வாங்கி விற்பவர்களிடமும் ஒலைச்சுவடிகள் உள்ளன. புலவர்கள், அண்ணாவிகள், இறந்த வீடுகளில் ஏடுபடிப்போர்கள் என பலரும் ஒலைச்சுவடிகளை வைத்துள்ளனர்.

உ.வே.சாவும் திருநெல்வேலி ஒலைச்சுவடிகளும்

தமிழ்த்தாத்தா என பெருமையாகப் போற்றப்படும் உ.வே.சாமி நாதைய்யர், பல அறிய இலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிட்டார். அவற்றை அவருக்கு வாரி வழங்கியது திருநெல்வேலி என்பதனை “என் சரிதை” என்ற நூலில் விளக்கமாக எழுதியுள்ளார் கி.பி. 1888 ஆம் ஆண்டில் திருநெல்வேலியின் பல பகுதிகளுக்குச் சென்று ஒலைச் சுவடிகளைத் தேடியவர் உ.வே.சா. திருநெல்வேலி மேலை வீதியில் இருந்த கவிராஜ ஈசுவரமூர்த்தி பிள்ளை வீட்டில் ஏடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து “தமிழ்த் தெய்வத்தின் கோயிலென்று சொல்லும்படி இருந்தது அவ்விடம்” என்று எழுதியுள்ளார்.

சிறீவைகுண்டத்தில் முன்ஸீபாக இருந்த ஏ. இராமசந்திரைய்யர், கவிராயர் ஒருவரிடமிருந்து சீவக சிந்தாமணி ஏட்டுச் சுவடியை முப்பத்தைந்து ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ளார். திருநெல்வேலியிலிருந்து சுப்பிரமணிய தேசிகர் சில ஏட்டுச் சுவடிகளை வருவித்துக் கொடுத்தார். திரிகூட ராசப்பகவிராயர் வீட்டில் உள்ள பழைய ஏடுகளைப் பார்த்து விட்டு செங்கோட்டை கவிராச பண்டாரம் பரம்பரையினர் வீட்டிற்கும் சென்றார் உ.வே.சா. அவர்கள் வீடுகளில் எவ்வளவோ பிரபந்தங்களும் புராணங்களும் இருந்தன. சிந்தாமணியில் சில பகுதிகள் கிடைத்தன என எழுதியுள்ளார். கிருஷ்ணாபுரம், கடையநல்லூர் என்னும் ஊர்களில் இருந்த கவிராயர்களிடம் இருந்த ஏடுகளைப் பார்வையிட்டு சிந்தாமணியின் சில பகுதிகளைப் பெற்றுள்ளார்.

திருநெல்வேலி கவிராஜ ஈசுவரமூர்த்தி பிள்ளையும் அவரது சகோதரர் கவிராஜ நெல்லையப்ப பிள்ளையும் உ.வே. சாவிற்கு பேருதவி செய்துள்ளனர். அவர்கள் வீடு திருநெல்வேலி, தெற்குப் புதுத் தெருவில் இருந்துள்ளது. சிறீவைகுண்டம் முதலிய ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏடுகள் இருந்ததாய் உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி தெற்குப் புதுத் தெரு கிருஷ்ணவாத்தியார், தொல்காப்பியச் சுவடியைக் கொடுத்துள்ளார்.

உ.வே.சா. திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் இருந்த திருப்பாற்கடல்நாதன் கவிராயர் வீட்டிலும் ஒலைச் சுவடிகளைப் பார்த்துள்ளார். 200 ஆண்டுகள் பழமையான பத்துப் பாட்டு ஏடுகளைக் கண்டார். சிந்தாமணியும் கொங்குவேள் மரக்கதையும் சில பிரபந்தங்களும் அங்கு இருந்ததுள்ளன.

சிறீவைகுண்டம், வெள்ளுர், கரிவலம்வந்த நல்லூர், ஆழ்வார் திருநகர், நான்குநேரி, களக்காடு, விக்கிரமசிங்கபுரம், ஊத்துமலை, சொக்கம்பட்டி, தென்காசி என பல ஊர்களுக்கும் சென்று ஆயிரக்கணக்கான ஒலைச்சுவடிகளைப் பார்த்துள்ளார். பல்லாயிரக் கணக்கான ஒலைச் சுவடிகளைக் கண்ட உ.வே.சா. தனக்குத் தேவையான காப்பியங்கள், சங்க இலக்கியங்கள் போன்றவற்றை மட்டும் சேகரித்துப் பதிப்பித்துள்ளார். மற்றவற்றின் நிலை என்ன ? நிகண்டுகள், மருத்துவம், ஜோதிடம் என பல்வகைச் சுவடிகளும் திருநெல்வேலிப் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட வேண்டும். முக்கூடற் பள்ளு, குற்றாலக் குறவஞ்சி போன்ற சிற்றிலக்கிய சுவடிகள் திருநெல்வேலி பகுதியில் உள்ளன.

நாட்டார் வழக்காற்று ஒலைச்சுவடிகள்

மொழி, இனம், ஜாதி, மதம், இடம், வேலை, பால் போன்ற ஏதாவது ஒரு பொது, பண்பு கொண்ட ஒரு குழுவினரை ‘நாட்டார்‘ என்பர். வழக்காறுகள் என்பது இத்தகைய மக்கள் மத்தியில் நிலவும் வாய்மொழி இலக்கியம் அல்லது வெளிப்பாட்டிலக்கியம், பொருள் சார் பண்பாடு, சமூகப் பழக்க வழக்கங்கள், நிகழ்த்து கலைகள், போன்றவற்றைக் குறிக்கும். நாட்டு புற இலக்கியம், பாமர இலக்கியம், கிராமப் புற இலக்கியம் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுவனவற்றை நாட்டார் இலக்கியம் என்பர். கதைப் பாடல்கள், கழியல் ஆட்டப் பாடல்கள், நாட்டார் நாடகப் பாடல்கள், அழிப்பாங்கதைப் பாடல்கள், கும்மிப்பாடல்கள், திருமண வாழ்த்துப் பாடல்கள், சித்த மருத்துவம், மந்திரப் பாடல்கள் போன்றவை எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் திருநெல்வேலிப் பகுதியில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. ஜோதிடம், விலங்கு, பறவை மருந்தும், கணிதம் என பல நாட்டார் சுவடிகள் இன்றும் உள்ளன.

கேரளப் பல்கலைக்கழகக் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ள சுவடிகளில் அகச்சான்றுகளாகக் காணப்படும் குறிப்புகள் கொண்டு தமிழக ஊர்களைச் சேர்ந்த (கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை மாவட்டங்கள், இதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்கள் மிகுதி) சுவடிகள் இவை எனத் தெரிய வருகிறது. (நிர்மலா தேவி 1996:28) இவை வில்லுப்பாட்டுக் கதைச் சுவடிகள். திருநெல்வேலிப் பகுதியில் இசக்கியம்மன், வண்டி மலைச்சியம்மன், பேச்சியம்மன், முத்தாரம்மன், முப்பிடாதியம்மன், பார்வதியம்மன் கதை, சுடலை மாடன்கதை, முத்துப்பட்டன் கதை, மாரியம்மன் கதைப்பாடல் சுவடிகள் பலவேஞ் சேர்வைக்காரர் கதை, தடிவீர காமி கதை, சங்கிலிப் பூதத்தாற் விற்கதைப் பாட்டு, போன்ற பல கதைப் பாடல் சுவடிகள் வில்லிசை புலவர்கள் பலரிடமும் உள்ளன. வீரபாண்டிய கட்டபொம்மன் கதையை வ.உ. சிதம்பரம் பிள்ளை எஸ். வையாபுரி பிள்ளைக்கு வழங்கியுள்ளார்.

கட்டபொம்மன் கும்மிப்பாடல் பாளையங்கோட்டை திரு. சுப்பையா கோனார் அவர்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்டுள்ளது. பணங்குடி, வள்ளியூர், நான்குநேரி, கூடன்குளம், உவரிக்குட்டம், திசையன்விளை, சாத்தான்குளம், இராதாபுரம், தென்பத்து - வடபத்து, மாநாடு, திருச்செந்தூர், குரும்பூர், உடன்குடி, தாமிரபரணியின் தென்கரை வடகரை நாடுகள், காயல் - கொற்கை, கயத்தாறு, பாஞ்சாலம் போன்ற பகுதிகளில் வரலாறு பொதிந்துள்ள ஆயிரக்கணக்கான சுவடிகள் இப்பொழுது கிடைத்து வருகின்றன. (ஆ. தசரதன் 1988 : 102) பேராசிரியர் வையாபுரி பிள்ளை இராமப் பையன் அம்மானையைப் பதிப்பித்தார். நா. வானமாமலை வரலாற்றுக் கதைப் பாடல் சுவடி பதிப்பிற்கு வழி காட்டியவர். ஏ.என்.பெருமான், தி. நடராசன், சு.சண்முகசுந்தரம் போன்ற பலர் கதைப் பாடல் சுவடிகளைச் சேகரித்துப் பதிப்பித்துள்ளனர்.

அழிப்பாங்கதைப் பாடல்கள் போன்ற பல நாட்டார் வழக்காற்றுச் சுவடிகளைச் சேகரித்துப் பதிப்பித்தவர் ஆ.தசரதன். இவர் நாட்டார் வழக்காற்றுச் சுவடிகளைச் சேகரிப்பதில் பெரும் பங்கு வகித்து வருகின்றார். கழியல் ஆட்டப்பாடல்கள், கும்மிப் பாடல்கள், கிறித்துவ நாட்டார் நாடகங்கள் என நாட்டார் சுவடிகளைச் சேகரித்து வருபவர் ஆய்வாளர் வே. கட்டளை கைலாசம். மேலும் பல ஆய்வாளர்கள் நாட்டார் வழக்காற்று ஒலைச் சுவடிகளைத் திருநெல்வேலி பகுதியிலிருந்து சேகரித்து வருகின்றனர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும், ஆசியவியல் நிறுவனமும் பல சுவடிகளைப் பதிப்பித்துள்ளன.

இன்னும் பலரிடம் ஒலைச் சுவடிகள் மூடங்கிக் கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து வெளிக் கொண்டு வர வேண்டும். இன்றைக்கும் எத்தனை கிராமங்களில் நாட்டுப்புறத்து வீடுகளில் எத்தனை சந்து பொந்துகளில் என்னென்ன ஏடுகள் கறையானுக்கு இரையாகி வருகின்றனவோ? மிஞ்சிய மீதம் இன்னும் எத்தனை இருக்கின்றனவோ? ஐயரவர்கள் செல்லாத இடங்கள் இன்னும் எத்தனையோ? அங்கெல்லாம் என்னென்ன இலக்கியங்கள் புழுங்கி மடிந்து கொண்டிருக்கின்றனவோ யார் கண்டார்கள்? விஷயம் தெரியமாலும், பண்டித புத்திரர்களின் அறியாமையினாலும் ஏடுகள் எப்படிச் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனவோ பரிதாபம்” என (மீ.ப. சோமு 1980:11) கூறுவது சிந்தனைக்குரியது. மத்திய அரசின் கலாச்சார துறையின் தேசிய ஓலைச்சுவடிகள் மையம் மற்றும் தமிழ்நாடு அரசும் இணைந்து ஓலைச் சுவடிக் கணக்கெடுப்பை இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒன்று முதல் ஐந்தாம் தேதிவரை நடத்தியது. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இரண்டு லட்சம் ஓலைச் சுவடிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, சங்கரன் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் முப்பதினாயிரம் ஓலைச் சுவடிகள் இருப்பதாய் அறியப்பட்டுள்ளது. (தினமலர் 7.2.2006 ப.7).

Pin It