மனம், உள்மனம், கனவு, கற்பனை, உருவெளித் தோற்றம் ஆராய்ந்து உளஇயல் என்ற புது சித்தாந்தத்தையே உருவாக்கியவர் சிக்மண்ட் பிராய்டு.

மனிதனாகப் பிறந்து வாழ்கிற எல்லோருமே பைத்தியக்காரர்கள் தான். யாராவது ஒருவரிடம் பைத்தியம் இல்லை என்றால் அவர் வேறொரு வகைப் பைத்தியமாக இருப்பார்.

இப்படி ஒரு பிள்ளையார் சுழிபோட்டுத்தான் தன் சித்தாந்தத்தை நிலை நாட்டினார் பிராய்டு.

தெய்வப் புலவர் திருவள்ளுவரோ புத்திகெட்ட கிறுக்கனைப் பேதை என்கிறார். நன்மையை இழப்பதும் தீமையை வளர்ப்பதுந்தான் பேதையின் காரியம் என்கிறார் தெய்வப்புலவர்.

பேதைமை என்பது யாதெனில் - ஏதம் கொண்டு
ஊதியம் போக விடல்.

பலாப் பழத்தைக் கொடுத்தால் சுளையை எறிந்து விடுவான். கொட்டையைப் பொறுக்குவான்.

ஏதம் - துன்பம், அதாவது இழப்பு, ஊதியம் - லாபம், இன்பம்.

சாதாரணக் கிறுக்கன் காரியம் இப்படி.

ஓதி உணர்ந்தும், பிறர்க்குரைத்தும் தான் அடங்காப்
பேதையில் பேதையர் இல்.

படிப்பு, ஆராய்ச்சி, வியாக்யானம் எல்லாம் வளந்தான். ஆனாலும் அடக்க முடிகிறதா கிறுக்கை (பேதைமையை).

எந்த மருந்துக்கும் கட்டுப்படாத சீக்கு மனிதக் கிறுக்கு.

உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறது கிறுக்கு. அதிலும் பாரத நாட்டில், அதிலும் தமிழ்நாட்டில் உள்ள கிறுக்குக்கு வெறி அதிகம்.

இன்னும் கெடுவேன் பந்தயம் போடு என்கிற வெறி அதிகம். நான் கோமாளி, ஏமாளி என்று காட்டிக் கொள்வதில் எவ்வளவு இன்பம் பாரத தேசத்துக் கிறுக்குகளுக்கு.

தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம். அவியல், பொரியல், கூட்டு, பச்சடி என்று கமகம என்று மணக்கிறது நம் சாப்பாடு. சாம்பார், ரசம், தயிர், குழம்பு, நெய், பருப்பு, கீரை, வற்றல், வடகம், துவையல், ஊறுகாய் போல ருசி உள்ள பதார்த்தங்கள் உலகில் உண்டா?

இட்டிலி, தோசை போல உண்ண உண்ணத் தெவிட்டாத அமிர்தம் வேறு எங்கிருக்கிறது? பதநீர், இளநீர், மோர், கரும்புச்சாறு இவை எல்லாம் தேவாமிர்தம் அல்லவா.

வாழைப்பழத்துக்கு நிகராக ஒரு பழம் உண்டா. மாம்பழத்திலும், பலாப்பழத்திலும் உள்ள வாசனை தான் என்ன? ஆனால் இவற்றை மதிக்க தெரிகிறதா நமக்கு? கத்தியும், கப்படாவும் கரண்டியும், வைத்துக் கொண்டு எதை எதையோ வெட்டி, குத்தி, தொம்சம் பண்ணுவதும், பிறகு முள்க் கம்பியாலும், கரண்டியாலும் எடுத்து விழுங்குவதும், கடிப்பதும், வாய்க்குள் வைத்து அசைபோடுவதும், தொண்டைக்குள் இறக்குவதுமே பெருமையாகத் தெரிகிறது.

மணம் குணம் எதுவும் இல்லை என்றால் போராடித் தானே தொலைக்க வேண்டி இருக்கிறது. ஆனந்தமாய் உண்ணவேண்டிய உணவோடு சண்டை போடுகிறோம். இனி முட்டாளுக்கு முட்டாள் தெண்டனிட்டேன் என்பது போல உண்ட நாற்றத்துக்கு போட்டியாய் ஒரு படி மேலான நாற்றம் பிடித்ததைக் குடிக்கிறதிலும் புகைக்கிறதிலும் ஒரே கூத்து.

உணவில் தான் கிறுக்கு என்றில்லை. உடையில் அதை விடக்கிறுக்கு. வேட்டி, சட்டை, துண்டு, தலைப்பாகை இவற்றில் என்ன அழகு, என்ன கம்பீரம், என்ன சுகம், என்ன வசதி, எப்பேர்ப்பட்ட பண்பாடு, இதை மதிக்கத் தெரிகிறதா நமக்கு.

பெண்களுக்கு அழகு அவர்களின் மேனியில் உள்ள தங்க ரேக்குப் போன்ற ஒளியும். அதை மூடி மறைத்து ஜொலிக்கச் செய்யும் சேலைக்கட்டும். கருநெடும் கூந்தலும், அதில் சூடும் மலரும், திலகமும், குழைந்து குழைந்து நடக்கும் நடையும், புன்முறுவலும், நாணமும், கூச்சமுமே. இவற்றை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டோம்.

கூந்தலை மட்டுமா வெட்டித் தொலைத்தோம், எல்லாவற்றையுமே ‘கட்’ பண்ணிவிட்டோம் பெண்களிடமிருந்து.

தமிழ்நாடு வடதுருவத்திலோ, தென் துருவத்திலோ இல்லை. வெப்ப மண்டலப் பகுதியில் தான் இருக்கிறது. அதற்கு உகந்த உணவு தான் அரிசிச் சோறும் காயும், கனியும், நீரும். அப்படியே உடையும்.

இது விளங்கவில்லை. அழகைத் தொலைத்து ஆரோக்யத்தைத் தொலைத்து அலங்கோலத்தைக் கட்டி அழுவதில் எவ்வளவு வெறி நமக்கு. அதாவது நம்மிடம் உள்ள கிறுக்குக்கு.

பரத நாட்டியம் எப்பேர்ப்பட்ட கலை. பக்தி வரும், பண்பாடு வரும், புத்தி வரும் அதைப் பார்த்தால். ஆனால் அதைப் பார்த்து அனுபவிக்க விடுகிறதா கிறுக்கு. அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம் என்று பேயாட்டம் ஆடுகிற டான்ஸுக்கு இழுத்துக் கொண்டு போய் விடுகிறது. சாப்பாட்டு ருசி தெரியவில்லை, ஆடை அலங்காரம் புரியவில்லை. கலை நலம் விளங்கவில்லை.

அப்படிப் புத்தியைப் பறிகொடுத்த கிறுக்குக்கு கோவில், குளம் (தீர்த்தம்) தேர், திருவிழா, கவி, இசை, விளையாட்டு, மானம், வீரம், மரியாதை என்று எதுதான் விளங்கும். எதைத்தான் மதிக்கத் தோன்றும்.

தமிழ் விளங்கவில்லை என்று கூச்சம் இல்லாமல் சொல்ல முடிகிறது. தமிழனால் தான் தமிழிசையில் என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. வெறிக் கூச்சல், அலறல், பேய் இரைச்சல், கத்தல், கதறல், கூப்பாடு இவைதான் இசை என்றே அவற்றைக் கட்டி அழ வைக்கிறது.

இந்த லட்சணத்தில் தமிழர்கள் வளர்த்த விளையாட்டு நலம் தமிழர்களுக்கு விளங்கவில்லையே என்று கையை நெரிப்பதில் என்ன பலன்?

சடுகுடு, கிளியன் தட்டு, வரகன் தட்டு, சிலம்பு, காவடியாட்டம், யானை ஏற்றம், குதிரை ஏற்றம், தேரோட்டம், வாட் பயிற்சி, வில் பயிற்சி, மற்போர், ஊஞ்சல், நலுங்கு, பாவைக் கூத்து, கழைக் கூத்து, புனல் (நீர்) விளையாட்டு, பூக் கொய்தல், கும்மி, கோலம், குரவை, பந்துவீசல், கம்பு வீசல், நடனம், கோலாட்டம் என்று எத்தனை விளையாட்டு நம்மிடம், இப்படியொரு விளையாட்டுக் கலையை அபூர்வமான முறையில் வளர்த்து வந்திருக்கிறார்கள் முன்னோர்.

வெறும் கும்மாளம் மட்டும் இல்லை நம் விளையாட்டில். பக்தியை, வீரத்தை, பண்பாட்டையே வளர்க்கிற ஞானக் களஞ்சியம் நம் விளையாட்டு. உடல் நலத்தைப் பேணுவது போலவே மனநலத்தையும் பேணி உபசரிக்கிற அற்புதம் நம் விளையாட்டில் இருக்கிறது. வாழ்க்கையே விளையாட்டு. விளையாட்டே வாழ்க்கை என்கிற ஞானம் நம் விளையாட்டில் தான்.

எல்லாம் வல்ல இறைவனையே ஆடிஆடிக் களிக்க வைக்கிற ஆட்டம் நம் விளையாட்டில் தான் உண்டு.

என்ன இருந்து என்ன பலன்? கிறுக்கன் கையில் இருந்த வயிரம் போலப் புறக்கணிக்கப்படுகிறது நம் விளையாட்டு. கலை வைரத்தை எறிந்து விட்டுக் கண்ணாடிக் குண்டுகளைப் பொறுக்கும் கிறுக்குத் தான் நம் காரியம். பேரின்பம் தரும் விளையாட்டை வேண்டாம் என்று உதறிவிட்டு கைப்பந்து, கால்பந்து, மட்டைப்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து என்று எதை எதையோ கட்டி அழுகிறோம். கிறுக்குப் பிடித்தே அலைகிறோம்.

பந்து விளையாட்டே ஆதியில் நம் நாட்டில் தான். அதுவும் பெண்களின் விளையாட்டாகவே இருந்தது பந்து விளையாட்டு, மகளிர் எப்படி மென்மையானவர்களோ, இனிமையானவர்களோ அப்படியே அவர்களுக்கே உரிய பந்து விளையாட்டும் இருந்தது.

எப்படியோ அது ஆடவர் கைக்குள் சிக்கி விட்டது. கால்பந்து, மட்டைப்பந்து என்று பெயர் பெற்று விட்டது. பெயர் பெற்றது மட்டுமே உலகையே குடுமியைப் பிடித்து ஆட்டுகிறது. சூது, மோசடி, துரோகம் எல்லாம் அதன் கைப் பாவைகள், அதனிடம் கிறுக்கு எவ்வளவு இருக்கிறதோ தெரியாது. ஆனால் உலகையே கிறுக்குப் பிடிக்க வைக்கிறது. குடி, சூது, கூத்தியாள் இவைகள் மூன்றும் தோற்று ஓடிவிடும். ஆக்கி முதலிய விளையாட்டிடம்.

இவ்வளவு தெரிந்தும் ஆக்கி முதலிய சல்லியத்தை விட முடிகிறதா? கிளியந்தட்டு, சடுகுடு, சிலம்பம், என்று விளையாடமுடிகிறதா ?

அது தான் கிறுக்கு, இதற்குத்தான் வினைப்பயன் என்று பெயர்.

அடிமைப்பட்டுக் கிடந்ததின் பயன்

“வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ”

என்று ஆங்காரமாய்ப் பிடரியைப் பிடித்து வெளியே தள்ளுகிறார் பாரதியார், இந்தக் கிறுக்கை. ஆனாலும் போகமாட்டேன் என்று சண்டித்தனம் செய்கிறது கிறுக்கு.

காத்திரமான உடம்பு, தெளிவான உறுதியான உள்ளம் இரண்டையும் கொடுத்து வளர்த்தது நம் நாட்டு விளையாட்டு.

பள்ளிக் கூடமே, படிப்பே, உடல் நலமும் மன நலமும் பேணும் விளையாட்டுக் கலையை ஒட்டியே இருந்தது. எப்படி ஓங்கு தாங்காய் ஒய்யாரமாய் நம் முன்னோர் இருந்தனர் என்பதை நம் ஓவியங்களில் பார்க்கலாம். சிற்பங்களில் பார்க்கலாம். கோயில் தோறும் வீரர்களின் பெருமிதமும், அழகிய நங்கையர்களின் ஆனந்த பரவசமும் ஓவியங்களாய், சிற்பங்களாய் எழுந்து நிற்கின்றன. இளமை, அழகு, வீரம், பணிவு, பக்தி, காதல், உண்மை எல்லாம் அவற்றில் பொங்கித் ததும்புகின்றன.

விளையாட்டிலேயே பிறந்து விளையாட்டிலேயே வளர்ந்தவர்கள். இருந்தும் அவற்றை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை நமக்கு.

“வகுத்தான் வகுத்த வகை அல்லால் - கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.”

பாலும் பழமும் வண்டி வண்டியாய் இருக்கிறது வீட்டில். அவற்றை விற்று அந்தப் பணத்தில் நஞ்சை விலை கொடுத்து வாங்கிப் பருகுகிறது கிறுக்கு.

அப்படி விளையாடுகிறது விதி மனிதனோடு.

இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகள் இருக்கும் என்று சொல்கிறார்கள் திருமூலர் காலத்தை, அவர் சொல்கிறார் :
“உடம்பினுக்(கு) உள்ளே
உறுபொருள் கண்டேன்”
என்று,
மேலும் சொல்கிறார்.
“உடம்பை வளர்த்தேன்
உயிர்வளர்த் தேனே” என்று.

ஆட்டமும், பாட்டமும் இல்லை என்றால் தொந்தியும் தொப்பையுமாய் ஊளைச் சதைதானே பெருகும். அதைச் சுமந்து கொண்டு என்ன செய்ய முடியும். ஒன்றுக்கும் பிரயோசனப்படாது அது, முயற்சி எது, ஊக்கம் எது, தெளிவு எது, உறுதி எது அதனிடம். உறு பொருள் உண்மையின் ஒளியே, வாழ்க்கையின் லட்சியமே போய்விடும் அதனிடமிருந்து, இன்பமாக வாழவேண்டும் என்றால் மன நலம் முக்கியம், மனநலத்துக்கு உடல் நலமே ஆதார சுருதி.

“பூட்டைத் திறப்பதும் கையாலே - மன
வீட்டைத் திறப்பதும் மெய்யாலே”

என்கிறார் சித்தர் ஒருவர். நடைசாத்தாத திறந்த கோவிலாக இருக்க வேண்டும் மனம். அப்பொழுது தான் ஒளிவீசும். மனதை எதைக் கொண்டு திறப்பது, திறந்து வைப்பது. வயிரம் போல், கட்டி வயிரம் போல் ஒளி வீசும் சுத்தமான உடம்பின் (மெய்) மூலந்தான் திறக்க முடியும். உழைப்பு, விளையாட்டு, உல்லாசம், நிம்மதி இவையோடு கூடிய உடம்பு தான் உடம்பு. இவை இல்லாத உடம்பு பெரும்பாரம், தீராநோய், புழுமலி சாக்கடை, ஆறாத புண், உடனிந்தே கொல்லும் உயிர்கொல்லி.

உடலுழைப்பையும் விளையாட்டையும் இரண்டு கண்களாகவே வளர்த்து வந்தார்கள் முன்னோர். உழவர்கள் இருக்கிறார்களே, நாம் ஏன் வேலை செய்யவேண்டும் என்று வசதி மிக்கவர்கள் கூடச் சும்மா இருக்கவில்லை. சோம்பேறியாய்ப் பொழுதுபோக்குவதில்லை, உழுவது, விதைப்பது, நூற்பது, நெய்வது, பசுவைத் தேய்த்துக் குளுப்பாட்டுவது, ஏன், விறகை அடுக்கி வைப்பது முதல் எல்லா வேலைகளையும் உத்சாகத்தோடு செய்தார்கள்.

வேலை செய்வது போலவே விளையாண்டார்கள். குழந்தைகள் போலவே விளையாண்டார்கள்.

பெண்களும் அப்படியே. உழைப்பு, ஓயாத உழைப்பு, கணவன், குழந்தை என்று குடும்ப நலம் பேணல், உற்றார் உறவினரை உபசரித்தல், வீடு, கோவில், மாடு, கன்று, புஷ்பம், தீபம், வழிபாடு, இப்படி ஒரு லட்சிய நோக்கோடு எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் பெண்கள்.

ஆடல், பாடல் என்று விளையாட்டுமயமாகவும், உல்லாசமாகவும் இருப்பார்கள்.

குருகுலக் கல்வி என்று சொல்கிறோமே அந்தக் குருகுலக்கல்வியில் தத்துவப் பயிற்சி ஓரளவுதான். உடலுழைப்பும், விளையாட்டுமே அதிகம்.

பரம்பரை பரம்பரையாக இப்படித்தான் நம் கல்வி இருந்தது. நம்மைப் போலவே கிரேக்கர்களும் கல்விமுறையை ஓரளவுக்குத் திருத்தி வைத்திருந்தார்கள் என்று தெரிகிறது. மாணவர்களுக்குக் கலைப் பயிற்சியோடு உடற்பயிற்சியும் இருக்க வேண்டும். அதுதான் மனிதனை, உண்மையாக உருவாக்கும் கல்வி என்று பிளேட்டோ கற்பனாராஜ்யம் என்ற தம் நூலில் வலியுறுத்திச் சொல்கிறார்.

தேக நலமும் இதய வளமும் சம சீராக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சமுதாயம் உருப்படாது.

உழைக்கப்பயப்படுகிற சமுதாயத்துக்கு உயிர்வாழத் தகுதி இல்லை. அதனிடம் தியாக புத்தி இருக்குமா, ஊக்கம் இருக்குமா? தேசபக்தியோ, தெய்வ பக்தியோ ஒன்றும் இருக்காது அதனிடம். இந்த உண்மையை மகாத்மாகாந்தி சொல்லிக் கொண்டே இருந்தார் நாட்டுக்கு. தம் வாழ்க்கையையே பாடமாக, உபதேசமாக காட்டிக் கொண்டிருந்தார் காந்தி.

உழைப்பே விளையாட்டுத் தான். விளையாட்டின் ஆன்மா எது என்றால் சமுதாயத்தை உருவாக்கும் செயல்தான். இது தான் காந்தி சொல்லாமல் சொன்ன கலை. இதைக் கற்றவர்கள் (பின்பற்றியவர்கள்) சிலர். கல்லாதவர் பலர்.

பெரும்பாலார்க்கு இந்த உண்மை விளங்கி இருந்தால் இந்தியா உண்மையான ராமராஜ்யமாக, தர்மராஜ்யமாகவே உயர்ந்திருக்கும்.

சமீப காலம் வரை சிறிய ஊரோ பெரிய ஊரோ எல்லா ஊர்களிலும் இளவட்டக்கல் என்று ஒன்றிருக்கும். இரும்புக் குண்டாகவோ, கருங்கல் உருளையாகவோ இருக்கும் அது. இளைஞர்கள் அதனிடம் வந்து பழகுவார்கள், உறவாடுவார்கள். இளவட்டக் கல்லைத் தூக்கித் தூக்கி பயிற்சி கொடுப்பார்கள். பழகப் பழக வாலிபக்கல் குழைந்து வசியமாகும். பிறகு செந்தூக்காகத் தூக்கி உச்சிக்கு மேலே கொண்டு போய் பின்பக்கமாக வீசி எறிவார்கள்.

பளுதூக்கும் கலை நடந்து கொண்டே இருக்கும். கிராமங்களில், திருவிழா போலவே நடக்கும். இனி, சிறுவர், வாலிபர், வயது வந்தோர் எல்லோருமே ஊர் ஊருக்கு சடுகுடு முதலிய விளையாட்டை ஆடுவார்கள். சிலம்பு, மற்போர், ஓடல், தாண்டல் முதலிய விளையாட்டுகளையும் ஆடுவார்கள்.

நிலாக்காலம் வந்து விட்டால் போதும் ‘ஒரே ஆட்டமும் பாட்டமுமாக இருக்கும் ஊர்களில். சடு குடு விளையாட்டுப் பற்றி நாடோடிப் பாடலில் ஒரு பகுதி :

“சுடுகுடு மலையிலே ரெண்டானை
தவறி விழுந்தது கிழட்டானை.”

ஆட்டத்துக்குப் பாட்டு ஊக்கம் கொடுக்கும். பாட்டுக்கு ஆட்டம் ஊக்கம் கொடுக்கும்.

இனி வழிப்பாட்டில் காவடி எடுத்து ஆடுவது ஒரு தனி அழகு. காவடி ஆட்டத்துக்கென்று தனியான தனித்த சந்தத்தில் பாட்டு வரும். அந்தப் பாட்டும் இசையும் எல்லோரையும் ஆட வைக்கும்.

Pin It