இக்கட்டுரையில் புதுமைப் பித்தன் பற்றிய சில செய்திகளைப் பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். புதுமைப்பித்தனை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நானே அவரிடம் பழகியும் இருக்கிறேன். அவரைப் பற்றி எழுத்தாள நண்பர்கள் பலரும் ரசனையான செய்திகளைச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

சென்னையில் நான் வேலைபார்த்த தாம்ஸ்கோ வங்கியின் மாடியில் தான் புதுமைப்பித்தன் தங்கி இருந்தார். அவரது உண்மையான பெயர் சோ. விருத்தாச்சலம். நண்பர்கள் அவரை சோ.வி என்றும் அழைப்பார்கள். சோ.வி தான் பின்னாலில் பு.பி.யாகி விட்டார். விருத்தாச்சலம் தான் இலக்கியத்திற்காகப் புதுமைப்பித்தன் ஆகிவிட்டார்.

திருநெல்வேலி இந்துக் கல்லூரிக்கு ஒரு முறை புதுமைப் பித்தனை பேசுவதற்கு அழைத்திருந்தார்கள். ‘நானும் என் கதைகளும்’ என்ற தலைப்பில் பேசினார் புதுமைப்பித்தன்.

மேடைப் பேச்சாளர்கள் போன்று மேடையில் மைக்கின் முன்னால் நின்று கொண்டு பேசாமல் ஒரு நாடக நடிகனைப் போல, மேடையின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கும், மறுமுனையில் இருந்து இன்னொரு முனைக்கும் நடந்து கொண்டே பேசியது இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

ஆரம்ப காலத்தில் காரைக்குடியில் ‘ஊழியன்’ என்ற பத்திரிக்கையில் வேலை பார்த்தார். தமிழ் இலக்கியத்தை அவர் பாடமாகக் கல்லூரியில் படிக்க வில்லை. வரலாற்றுப் பாடத்தில் தான் பி.ஏ. படித்தார். இலக்கிய ஆர்வத்தால் தான் தமிழ் படித்து எழுத்தாளராகி விட்டார்.

புதுமைப்பித்தன் வெற்றிலைப் பிரியர், அங்குவிலாஸ் புகையிலையும் போடுவார். இலக்கிய நண்பர்களுடன் உறவாடுவதென்றால், அவருக்குக் கொள்ளைப் பிரியம். இலக்கியம், கலைகள் குறித்து பேச்சு என்றால் ஆகாரத்தைக் கூட மறந்து விடுவார். அவரும் சளைக்காமல் பேசுவார். பேச்சு என்பது அவருக்கு உயிர் மூச்சு மாதிரி.

எழுத்தாளர் கு. அழகிரிசாமிக்கு புதுமைப்பித்தன் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். ரகுநாதன் மேலும் புதுமைப்பித்தனுக்குப் பிரியம் இருந்தது. பின்னாளில் ரகுநாதன் புதுமைப்பித்தன் பற்றிய பல விஷயங்களை எழுத்தில் பதிவு செய்தார்.

அரசியல் ஈடுபாடும் பு.பி.க்கு இருந்தது. தேசிய இயக்கமான காங்கிரஸ் கட்சியின் மீது அவருக்கு ஈடுபாடு இருந்தது. ஆனால் எழுத்து என்று வந்து விட்டால், யாரையும் எதிர்த்து எழுதுவார். தமிழ்நாட்டில் தந்தைப் பெரியாரை பு.பி.க்கு ரொம்பப்பிடிக்கும். பெரியாரை மதித்தார். சர்வதேச அரசியலும் பேசுவார். ஹிட்லரை எதிர்த்தும் எழுதினார்.

பாரதி மேல் அவருக்கு ரொம்ப ஈடுபாடு இருந்தது. பாரதி ‘இன்பக்கேணி’ என்று எழுதினார். பு.பி. தனது ஒரு குறுநாவலுக்குத் ‘துன்பக்கேணி என்று தலைப்பிட்டார். புதிய புதிய வார்த்தைகளை தமிழில் உற்பத்தி செய்தார். ஒரு சிறுகதைக்கு ‘நாசகாரக் கும்பல்’ என்று வட்டார வழக்கு மொழி நடையில் உள்ள வார்த்தையை எடுத்து தலைப்பாக வைத்தார்.

தன் கதைகளில் மிகக் கவனமாக வட்டார வழக்கு மொழி நடையைப் பதிவு செய்தார். திருநெல்வேலிக்காரர்களின் பேச்சுத்தமிழ் அவரது சிறுகதைகளில் கொஞ்சி விளையாடியது. அவரது கதைகளில் சில சிவந்திபட்டி, வல்லநாடு போன்ற கிராமத்தில் நடந்ததாக களமமைக்கப் பட்டுள்ளது.

அந்தக் காலத்தில் ஆண்களில் சிலர் மூக்குத்தி அதில் தங்க வாளியும் அணிந்திருப்பர். அப்படிப்பட்ட ஒரு நபரை ‘மூக்கபிள்ளை’ என்று குறிப்பிடுகிறார்.

பிரம்மராச்சஸ் பற்றியும் பு.பி. ஒரு கதையில் குறிப்பிட்டுள்ளார். புராண மரபுக் கதைகளுக்கு ஒரு மறுபார்வையைத் தன் கதைகளில் வைத்தார். அதற்குச் சான்றாக ‘சாப விமோசனம்’ என்ற கதையைக் கூறலாம்.

கிராமத்து மக்களின் வாழ்வியலை தன் படைப்புகளில் சிலாகித்துள்ளார். அதே சமயம், நகரத்து மக்களின் வாழ்க்கையை கடுமையாக விமர்சனமும் செய்துள்ளார். சென்னை மெளண்ட் ரோட்டில் ஒரு முஸ்லிம் பிச்சைக்காரன். பசியால் மயங்கி விழுந்து விடுகிறான். அவனைப் பட்டணத்துக்காரர்கள் கண்டும் காணாமல் போகிறார்கள். அத்தகைய பட்டணத்து மக்களை மகா மசானம் என்று பு.பி. குறிப்பிடுகின்றார்.

ஏசு கிறிஸ்து ஒரு புகைவண்டியில் பயணம் செய்து பெற்ற அனுபவத்தைக் கற்பனை செய்து ஒரு ஆங்கிலேயர் எழுதிய நூலை, அடிப்படையாகக் கொண்டு, கடவுள் இந்த பூமிக்கு வந்து படும் பாட்டைப் பற்றி ஒரு சிறுகதை எழுதினார் பு.பி. அந்தக் கதை தான் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ அந்தக் கதை கல்கிக்கு ரொம்ப பிடித்த கதை.

தானே சமையல் செய்வார். நிறைய புத்தகங்கள் வாங்குவார். எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். புதிய, புதிய நூல்களைத் தேடித் தேடிப் படித்தார். நண்பர்களுடன் பேசி அளாவளாவதில் அவருக்கு அலாதியான இன்பம் இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து, ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுவார். நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவிற்கும் செல்வார்.

தான் எழுதிய கதைகளை முதலில் நண்பர்களிடம் காட்டி, அபிப்பிராயம் கேட்பார். அதன் பிறகு தான் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவார். அந்தக் காலத்தில் பு.பி.யின் கதைகளும் பத்திரிக்கைகளில் பிரசுரமாகாமல் திரும்பி வந்ததுண்டு.

நகைச் சுவையாகக் கேலியும், கிண்டலும் கலந்து பேசுவதில் வல்லவர். நீர் ஆத்திகனா? நாத்திகனா? என்று ஒருவர் கேட்ட போது, பு.பி. அவரிடம், “நான் ஆத்திகனும் இல்லை ; நாத்திகனும் இல்லை சந்தேகவாதி” என்று பதில் கூறினார்.

இன்னொரு முறை கொத்தமங்கலம் சுப்பு அவர்கள், “பேய் .. இருக்கிறதா ? இல்லையா” என்று கேட்டதற்குப் பு.பி. “பேய் இருக்கா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் பேயை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது, அது மட்டும் உண்மை” என்று கூறினார்.

பு.பி.க்கு முதலில் மூன்று குழந்தைகள் பிறந்து மூன்றும் இறந்து விட்டது. தினகரி, நான்காவதாகப் பிறந்த பிள்ளை. எனவே, தினகரியைப் பற்றித் தன் நண்பர்களிடம் கூறும்போது, “அவள் வழிச்சி விட்ட தோசை” என்று நகைச் சுவையாகக் கூறுவார்.

திருலோக சீத்தாரமிடம் மிகவும் அன்பாகப் பழகுவார், பு.பி. சீத்தாராம் இராகத்துடன், பாரதியாரின் பாஞ்சாலி சபதம் பாடல் முழுவதையும் பாடுவார். பு.பி. திருலோக சீத்தாராமை, பாரதியின் பாஞ்சாலி சபதம் பாடலை இசையுடன் பாடக் கேட்டு ஆனந்தித்து ரசிப்பார்.

கொத்த மங்கலம் சுப்புவை, ‘மொட்டைத் தலையன்’ என்று தான் பு.பி. செல்லமாகக் கூப்பிடுவார்.

இளம் எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படித்து தனது அபிப்பிராயங்களைக் கூறினார். உதாரணமாக லா.சா. ராவின் சிறுகதைகளைப் படித்து விட்டு நண்பர்களிடம் சிலாகித்துப் பேசினார். ரகுநாதனின் எழுத்துக்களைப் பாராட்டி இருக்கிறார்.

எப்போதும் எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர் அல்ல பு.பி. எப்போதாவது ஒரு கதை எழுதுவார். ஆனால் அது காலத்திற்கும் நிற்கக்கூடியதாக இருக்கும். எழுத்தை நம்பி வறுமையுடன் தான் வாழ்ந்தார், கேலியும் கிண்டலுமாகப் பேசுவதில் பு.பிக்கு நிகர் பு.பி. தான்.

தி.ந. சுப்பிரமணியம் என்பவர் ஒரு வரலாற்று ஆய்வாளர், கட்டபொம்மன் வரலாற்றை எழுதியவர். அவரிடம் பு.பி. ‘வரலாற்றில் ஏதாவது தில்லு முல்லு பண்ணி கம்பன் திருநெல்வேலிக்காரன் தான் எனறு நிருவ ஏதாவது வழி இருக்கிறதா?’ என்று கேட்டாராம். அதற்கு தி.ந.சு “அதற்க்கெல்லாம் வரலாற்றில் வழி இல்லையப்பா” என்றாராம்.

தழுவல் இலக்கியம் பற்றிப் பேச்சு வந்த போது ஒருமுறை நண்பர் ஒருவர் ‘எழுத்தில் தழுவல் செய்யலாமா?’ என்று கேட்டதற்கு, பு.பி. சிரித்துக் கொண்டே, “தழுவல் செய்யலாம். அது தழுவல் செய்கிறவர்களின் கைப்பலத்தைப் பொறுத்தது” என்று இரட்டை அர்த்தத்தில் பதில் கூறினாராம்.

சுதந்திரப் போராட்ட காலத்தைக் களமாகக் கொண்டு, சுதந்திர போராட்டத்திற்கு, முன்பும், சுதந்திர போராட்ட காலமும், அதற்குப் பின்னும் என்று மூன்று தலைமுறை சார்ந்த தமிழர் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பெரிய நாவல் எழுத வேண்டும் என்று பு.பி. திட்டமிட்டிருந்தார். அது கடைசி வரை நிறைவேறாத ஆசையாகவே போய்விட்டது.

மாப்பசான் கதைகள் பேரில் அவருக்கு பிரியம் அதிகம். கா.நா.சுவின் நண்பராக இருந்தார். உலகத்தரம் வாய்ந்த நிறைய கதைகளை மொழி பெயர்த்தார். எழுத்தின் எல்லா விதமான ஆளுமைகளிலும் ஈடுபட்டார். ‘எழுத்தை மட்டும் நம்பி வாழாதே ! எழுத்து உன்னைக் கொன்று விடும் !’ என்று எழுத்தை மட்டும் நம்பி வாழும் நண்பர்களிடம் கூறினார். ஆனால், அவர் வாழ்நாளெல்லாம் எழுத்தை நம்பியே வாழ்ந்தார்.

Pin It