வருக ! வருக !

தஞ்சை காட்டு மன்னார்கோவில் தொகுதியிலிருந்து நிறப்பிரிகை ரவிகுமார் தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியைப் பார்த்தேன்.

ஒரு எழுத்தாளர் இப்படி சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது பாராட்டத்தக்கது. நினைத்து பார்க்கும் போது ஒரு பிரபல எழுத்தாளர் ஒருவர் சென்னையில் - அவர் யோசனைப் பிரகாரம் அல்லது நண்பர்களும் சேர்ந்து - பேரவைத் தேர்தலில் நின்று தோற்றது ஞாபகத்துக்கு வருகிறது.

நூலகத்துக்கு என்று வரிவசூலிக்கும் அரசுகள் அவைகளை சரியாக பரிபாலனம் பண்ணுவதில்லை. படிப்பு பரவியுள்ள அளவுக்கு நூலக இயக்கம் கிடையாது. பதிப்பகங்கள் எழுத்தாளனுக்குச் சரியாகப் பணம் தருவதில்லை. சிறு பத்திரிக்கைகளுக்கு சரியான பாதுகாப்பு இல்லை.

மாநில அரசு தரும் விருதுகள் - ராஜராஜன் விருது உட்பட - ஒழுங்குப்படுத்தப்பட வேணும். நலிந்து கிடக்கும் கூட்டுறவு எழுத்தாளர் சங்கத்தைத் தூக்கி நிறுத்த வேணும் (ஒரு போட்டி எழுத்தாளர் கூட்டுறவு சங்கம் தோன்றினால் கூட நல்லது தான்)

சொல்லுவதற்கு இப்படி எத்தனையோ விசயங்கள் உண்டு.

எழுத்தாளர் ரவிக்குமாரின் வரத்து சட்டப் பேரவைக்குப் பொலிவு தரும் என்பதில் சந்தேகமில்லை. கதை சொல்லி இதழ் அவருக்கு நல்வருகை கூறி வரவேற்கிறது.

- கி.ரா

Pin It