வரலாற்று வாக்கிலான வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட மாறுதல்கள், நெருக்கடிகள், எதிர் கொள்ளப்பட்ட சிக்கல்கள், ஈட்டப்பட்ட சாதனைகள், அனுபவித்த தோல்விகள், துயரங்கள், வர்க்கப் பிரிவினைகள், வர்க்க நலன்கள், சாதிப் பிரிவுகள், அதன் கொடுமைகள், தேசியக் கருத்தாடல்கள், மத, இன, மொழி புலங்களின் மீதான விவாதங்கள், அவை அனைத்தினூடாக மனித சமூகம், இன்றுவரை உண்மைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது. இதுவரை கண்டடைந்த தத்துவங்களுக்கும், தேடிக் கொண்டிருக்கும் உண்மைகளுக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவதால், மனித சமுகம் போலிகளிடம் தஞ்சமடைய நேரிடுகிறது. அத்தகைய ஆபத்துகளிலிருந்து மக்களை மீட்பவர்களே மாமனிதர்கள். சிந்தனை நேர்மையும் செயலூக்கமுமே மாமனிதனை உருவாக்குகிறது. அந்த வகையில்,

இந்தியத்தின் தேசியக் கவி பொதுவுடமை புரட்சிக்கவி என்றெல்லாம் புகழப்படும் சுப்ரமணிய பாரதியார் கூட மாமனிதர் தான். பாரதி மாமனிதராக உருவாக்கப்பட்டதில் நாம் வருத்தம் கொள்ளவில்லை. சாதிக்கொரு மாமனிதனைக் கொண்டிருக்கும் நாடல்லவா இது! மாமனித பீடத்தைக் கட்டிக் கொடுத்து அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும், பாரதி பற்றாளர்களிடம் நாம் சொல்ல விரும்புகிறோம்; பாரதியின் ‘மாமனிதர்’ பட்டம், அய்யத்திற்குரியது!

ஒரு முழுமையான ‘புரட்சிவாதி’ என்று கார்ல் மார்க்ஸால் புகழப்பட்ட ஷெல்லியின் ‘தாசன்’ என்று தன்னை அடையாளப்படுத்துவதில் பெருமை அடைந்திருக்கிறார் பாரதி. பாரதி, முதன் முதலாக ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திவந்த “சக்ரவர்த்தினி’’ என்ற மாதப் பத்திரிகையின் 1908ஆம் ஆண்டு ஜூலை இதழில் துளசி பாய் சரித்திரத்தின் இறுதிப்பகுதி வெளியிடப்பட்டுள்ளது. அதனடியில் ‘ஷெல்லி தாசன்’ என்று கையப்பமிடப்பட்டுள்ளது. அது பாரதி இட்ட கையொப்பமாகும். இளமைக்காலத்தில் எட்டயபுரத்தில் வாழ்ந்த நாட்களிலேயே ‘ஷெல்லியன் சங்கம்’ என்ற சங்கத்தை (Shelleyan Guild) பாரதி ஏற்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் ஷெல்லி மீது அளவற்ற பற்றுதல் கொண்டவராக பாரதி இருந்திருப்பதை அறியமுடிகிறது.

இயல்பான மக்கள் விடுதலையை, சமூக சமத்துவத்தைத் தனது கவிதைகளின் ஆதார சுருதியாகக் கொண்டவர் ஷெல்லி. தனது 18ஆவது வயதில் ‘உரிமைகளின் பிரகடனம்’ என்ற துண்டுப் பிரசுரத்தை எழுதி வெளியிட்டவர்.

ஷெல்லி இறந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் துண்டு பிரசுரத்தை அடிப்படையாகக் கொண்டு கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்தது. சோசிலிச கருத்துருவாக்கங்களின் முன்னோடியாக விளங்கிய ஷெல்லியின் ‘தாசராக’ இருக்க எண்ணிய பாரதியின் ஆழ்மனம், சனாதன இந்து தர்மத்தின் மீது வெறிகொண்ட பற்றுடையதாக இருந்தது. சனாதனத்தை வலியுறுத்தும் இந்து வேத இதிகாசங்களின் மீது ஆழ்ந்த பற்றுடைய ஒரு மனிதர், அதற்கு நேரெதிரான கொள்கைகளையுடையவருக்கு ‘தாசராக’ இருப்பது சாத்தியமற்றது.

ஷெல்லியிடமிருந்து பாரதி கற்றுக் கொண்ட ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்,’ ஆகிய வார்த்தைகளுக்கு எதிரான சனாதன இந்து மத கருத்தை தீவிரமாக வலியுறுத்தி கொண்டிருந்தார் பாரதி. அதன் பின்னும் ஏன் ஷெல்லியின் மீது தன் மரணகாலம் வரை பற்றுடையவராக பாரதி இருந்தார் என்பதற்கு வேறு காரணமிருந்தது.

ஷெல்லியின் கவிதை வளமும், உவமை வேகமும், நவீன மொழியாடல்களும் பாரதிக்குத் தேவைப்பட்டன. பாரதியின் கவிதைகளில் மேலோங்கி நிற்கும் ‘சுட்டுணர்ச்சிக் குறியீடுகள்’ ஷெல்லியிடமிருந்து எடுத்தாளப்பட்டவை. அதற்காக, பாரதி எந்த இடத்திலும் ஷெல்லிக்கு நன்றி பாராட்டவில்லை. ‘பாரதிக்காக தமிழ்மொழி காத்துக்கிடந்தது’ என்று எழுதத் துணியும் தமிழ் மரபுக் காவலர்கள், பாரதியின் கவிதாளுமை ஷெல்லியிடமிருந்து திருடப்பட்டவை என்பதை ஏற்றுக் கொள்ள முன்வருவார்களா?

சனாதன தர்மத்தின் மீது ஆழ்ந்த பற்றுடைய ஒருவர் தன்னை முற்போக்குவாதியாக காட்டிக் கொள்ள முயற்சித்தால் அது அவருக்குச் சிரமமான வேலையாக இருக்கும். ஆனால், பாரதிக்கு அது சுலபமான வேலையாக இருந்தது. ஷெல்லியிடமிருந்து கற்றுக்கொண்ட பொதுவுடைமை முற்போக்குத்தனத்திற்கும், தன் பாரம்பரிய பார்ப்பன சனாதனத்திற்கும் இடையே தாவித் தாவித் திரியும் பாரதியின் ‘கவிதாளுமை’ உண்மையில் அவருடையதுதான்.

அவரது முற்போக்கான சிந்தனைகள்கூட, அவர் உயிரினும் மேலாக நேசித்த நால்வருண சமூகத்தை காப்பாற்றவே முயற்சித்தன. இதைத் தான் புரட்சியாளர் அம்பேத்கார், ‘அறிவு விபச்சாரம்’ என்றார். அவர் பாரதியை நோக்கி இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை, இந்தியா வின் ‘மகாத்மா’வைப் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொன்னார்.

1906ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாரதி தொடங்கிய ‘இந்தியா’ பத்திரிகையின் முகப்பில், ‘ஸ்வதந்திரம் ஸமத்துவம் ஸகோதரத்துவம்’ என்ற முழக்கத்தை பதித்தார். அப்போதே. அவருக்கு மிக உயர்ந்த மனித மதிப்பீடுகளின்பால் அக்கறையும், அதையே நோக்கமாகவும் கொள்ளும் உறுதியும் ஏற்பட்டதாக நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், 1917 ஆம் ஆண்டிலே நடந்த ரஷியப் புரட்சி பற்றி, ‘‘கொலையாலும், கொள்ளையாலும், அன்பையும், ஸமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத்தாமே உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்’’ என்று எழுதுகிறார். பதிலாக, சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அடைய பாரதி சொல்லித்தரும் பாடம் அபத்தமானது என்பதைவிட ஆபத்தான நால்வருண வழி என்று சொல்ல வேண்டும்.

“மிராசுதாரர்கள் அவர்களாகவே முன்வந்து ஏழைகளிடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும்.’’, “தொழில் நிர்வாக சங்கம் அமைக்க வேண்டும்’’, “இன்னின்ன தொழிலிற்கு இன்னின்னார் தகுதி உடையவர் என்று தீர்மானம் செய்ய வேண்டும்’’, “கிராமத்தில் உள்ள அத்தனை பேருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்துவிடுகிறோம்’’, பிள்ளை பிள்ளை தலைமுறைக்கு இந்த ஒப்பந்தம் தவற மாட்டோம். இந்த படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் எங்கள் குழந்தைகள் மேல் ஆணையிட்டு பிரதிக்ஞை செய்துகொடுக்கிறோம்’’, “செப்புப் பட்டயம் எழுதி இந்தக் கோயிலில் அடித்து வைக்கிறோம்’’ இதில் கண்ட கொள்கைகளின்படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின் வறுமையாவது, அதைக் காட்டிலும் கொடியதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும் பரஸ்பர நட்பும் பரிவுணர்வும் உண்டாகும். அதனை உலகத்தாரெல்லாருங்கைக் கொண்டு நன்மையடைவார்கள்’’ என்று எழுதுகிறார்.

இதில் வெளிப்படுவது அவரது அறியாமை என்று நீங்கள் சொல்லுவீர்களா? சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவமும், பண்ணையார்கள் பட்டயம் எழுதி கோயிலில் சத்தியம் செய்வதன் மூலம் கிடைத்துவிடுமா? இதை படிப்பறிவற்ற பாமரனின் தற்குறித்தனம் என்பீர்களா? அல்லது மகா கவியாகவும், பத்திரிகையாளனாகவும் பொதுவுடைமை பெண்ணிய புரட்சிக்கவியாகவும், மாபெரும் தேச விடுதலைப் போராட்ட தியாகியாகவும் வாழ்ந்த ஒரு மனிதரின் வாக்குமூலம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது இரண்டுமல்ல என்று நான் துணிந்து சொல்கிறேன். மாறாக, சாதிய ஒடுக்கு முறையும், பண்ணை நிலவுடைமைச் சுரண்டலும் தங்கு தடையற்று நிகழ்ந்துகொண்டிருந்த கிராமங்களில் சமூக மேலாண்மை செய்து கொண்டிருந்த ஆச்சாரம் மிகுந்த ஒரு பார்ப்பனரின் குரல் அது. அக்குரலை புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்லது மறுப்பவர்கள் இந்துப் பார்ப்பனியத்தின் சுமை தாங்கிகள்தானே தவிர வேறில்லை.

சுதந்திரத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னூறாண்டுகளுக்கும் மேலாகக் போராடி வருகிறார்கள். மனித உரிமைகள் மறுக்கப்பட்டுவரும் ஒரு நாட்டில் வாழும் அம்மக்கள் எல்லாராலும் ஏமாற்றப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதற்கு யார் பொறுப்பு என்று நீங்கள் கேட்கக் கூடும். சாதி இழிவில் அம்மக்களை அமிழ்த்தி வைத்திருக்கும் சக்தி எது என்ற வினாவுக்குப் பதில் இல்லாமல் இல்லை. “சாதிக் கருத்தியலை மக்கள் சிந்தனையிலே பதித்து வைத்திருக்கிற இந்துமதமே அல்லது இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற வேத சாஸ்திரங்களே ஒடுக்கப்பட்ட மக்களின் பயங்கர எதிரி’’ என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். “ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் வேத சாஸ்திரங்களின் பிடியிலிருந்து விடுவியுங்கள்; மக்களின் மனங்களில் சாஸ்திரங்கள் உருவாக்கி வைத்திருக்கின்ற நாசகரமான கருத்தமைவுகளை நீக்கித் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று வழிகாட்டுகிறார் அம்பேத்கர்.

வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி இந்து வேதங்களையும் இதிகாசங்களையும் நால்வருண முறையையும் போற்றிப் புகழும் ஒரு பார்ப்பனக் கவிஞனிடமிருந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன கிடைக்கும்? என்ன கிடைத்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்!
“பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நமது முதற் கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்துப் பட்லர்களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களில் உள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றி பேச்சு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச் சொல்லு. அவர்களோடு ஸமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன்; அவர்களையெல்லாம் உடனே ஒன்றுசேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள்; மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டைச் செட்டிகளே! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள்.’’

பூதாகரமான எதிரியாக நம் கண் முன்னே விரிந்து நிற்கும் பாரதி அதோடு நிற்கவில்லை.

“இனிமேல் பறையன் கை நீட்டாமல் இருப்பதற்கு வழிவகை தேடிக்கொள்ளுங்கள். சென்னைப் பட்டணத்திலே நாலு பட்லர்கள் ஹிந்து மதத்தை உல்லங்கனம் செய்தபோதிலும் நாட்டிலுள்ள பறையர்கள் எல்லாரும் உண்மையான ஹிந்துக்களே என்பதை மறந்துவிடக்கூடாது’’ என்ற தனது முன்னோர்களின் சதிச்செயலை வழி மொழிகிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களை இந்து சாதியக் கட்டமைப்பில் நிலை நிறுத்திவைத்து, அதன் மூலம் தனது சமூக மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கும் இந்துப் பார்ப்பன சாதிப் பயங்கரத்தின் நிழலாய் பரவும் பாரதி,

“சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’’

என்று குழந்தைத் தாலாட்டுப் பாடுகிறார். அதையும் நமது முற்போக்கு வாதிகள் பாரதியின் ‘சாதி எதிர்ப்பு’ என்ற கணக்கில் கொண்டு வருவதை எப்படி புரிந்து கொள்வது! இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும்!

நால் வருண விதிமுறைகளைச் சட்டங்களாக்கிய மநுவின் வாரிசாகவே வந்து நின்று, வகை பிரிக்கிறார் பாரதி. “போலீஸ் வேவுத் தொழில் செய்பவன் பிராமணன் ஆகமாட்டான். குமாஸ்தா வேலை செய்பவன் ஷத்திரியன் ஆகமாட்டான். சோம்பேறியாக முன்னோர் வைத்து விட்டுப் போன பொருளையழித்துத் தின்பவன் வைசியன் ஆகமாட்டான். கைத்தொழில்களையெல்லாம் இறக்கக் கொடுத்து விட்டு சோற்றுக்குக் கஷ்டமடைவோர் சூத்திரர் ஆகமாட்டார். இவர்களெல்லாம் மேம்பாடுடைய சூரிய வர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீச கூட்டத்தார். நமது தேசம் முன்போலக் கீர்த்திக்கு வர வேண்டுமென்றால், உண்மையான வகுப்புகள் ஏற்பட வேண்டும்.’’ இவ்வாறு நால்வருண படிநிலைச் சமூகத்தைக் கொண்டுவரத் துடிக்கும் பாரதிக்கும், இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதிகளுக்கும் வேறுபாடு இருக்கிறதா? இந்து அடிப்படைவாதத்தை நூறாண்டுகளுக்கு முன்பு மிகத் தீவிரமாக வலியுறுத்திப் பேசிய பாரதி, ஒரு மதச்சார்பற்ற நாட்டின் தேசிய கவியாக கருதப்படுவதை வெட்கக் கேடு என்று சொன்னால் அது தவறாகிவிடாது.

கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்ததினால், மிகப்பெரும் புரட்சி நடத்திவிட்டதாக பாரதியும் கருதினார்; அவரது ஆதரவாளர்களும் கருதுகிறார்கள். அத்தகையப் பூணூல் வெட்டப்படும் ஆட்டிற்குப் போட்ட மாலையாகத்தானிருக்குமே தவிர, கனகலிங்கம் பார்ப்பனராகி விட்டாரா? சாதி இழிவிலிருந்து மீண்டுவிட்டுரா? பாரதியால் அதை உறுதிசெய்ய முடிந்ததா? பாரதி வழியில், அவரது பற்றாளர்கள் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் அணிவிக்க ஏற்பாடு செய்திருக்கலாமே! கனகலிங்கத்திற்குப் போடப்பட்ட பூணூல், பெரும் ஆச்சார மாற்றமாக கருதப்படுகிறது.

வேத இதிகாசங்களில் ஆழ்ந்த பற்றுடைய பாரதி, குரூரமும் அழுக்கும் நிறைந்த பார்ப்பன பழமைவாதிகளை வெறுத்தார். இந்திய தேசத்தின் கீர்த்தி மீண்டும் வருவதற்கு நால்வருண சமூக அமைப்பு மீண்டும் ஒழுங்கு செய்யப்படவேண்டும்; அதற்கு தீனிக்காக அலையும் வயிறு தள்ளிய பழமை ஆச்சார சடங்குகளை உயர்வாகக் கருதிய பார்ப்பனர்களை எதிர்க்கத் துணிந்தார். அதன் வெளிப்பாடாக, பல சூழ்நிலைகளில் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமானார். மீண்டும் தெளிந்தார். கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்தது இந்தப் போராட்டங்களினூடாக நிகழ்ந்த கூத்து. அவ்வளவே! அதைப் புரட்சி எனச் சொல்லுவோரின் முகம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பாரதியின் தேசாபிமானமும், இந்து மதப்பற்றும், பவுத்த எதிர்ப்புக் கருத்து நிலையும், மீண்டும் மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் மிகப்பெரும் எதிரியாக கொண்டு வந்து நிறுத்துகின்றன. அவற்றைப் பற்றிய விவாதங்களை, நேரங்கருதி விலக்குகிறேன்.

பாரதி மிகத் தீவிரமாக இயங்கிய காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் இயக்கங்கள் ஏராளமாகச் செயல்பட்டன. பண்டிதர் அயோத்திதாசர், சென்னைப் பட்டிணத்திலே யாவரும் அறியும்படி இயக்கம் நடத்தியவர். 1907 லே சென்னை ராயப்பேட்டையில் சாக்கிய பவுத்த சங்கத்தை நிறுவி, ஜி. அப்பாத்துரையார், பெரியசாமிப்புலவர், குருசாமி, முருகேசம் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டுள்ளார்கள். அவர்களோடு எவ்வித தொடர்பும் இல்லாமல், இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு எதிராக எழுதி வந்தவர் பாரதி.

ரெட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றோர் இந்திய அளவில் பலரும் அறிந்திருக்கக்கூடிய வலிமையான தலைவர்களாகச் செயலாற்றினர். அவர்களோடும் பாரதிக்குத் தொடர்பு இருந்ததாக ஆதாரங்கள் இல்லை. தென்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் மறுமலர்ச்சிக்குத் தீவிரமாகச் செயலாற்றிய பெருமாள் பீட்டர் போன்றவர்களுடன் பாரதிக்கு அறிமுகம் கிடைத்ததற்கான ஆதாரங்களும் இல்லை. எனவே பாரதியின் வாழ்வும் எழுத்தும், அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு ஆக்கப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக அம்மக்களை, சாதிப்படி நிலைச் சமூகத்தில் அமிழ்த்தி, இந்துப் பார்ப்பன சாதியமைப்பிற்குள்ளாகவே அவர்களுக்கு நியாயம் வழங்க துடித்தார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் என்று சொல்லித்தான், போராடிப் பெற்ற இரட்டை வாக்குரிமையை வஞ்சகமாகப் பறித்தார் காந்தி. அக்கொடுஞ்செயல் நடந்து முடிந்து முக்கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனாலும் தங்களின் அரசியல் உரிமைகளுக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதே தளத்தில்தான் பாரதியும் நிற்கிறார். ஆனால், அவர் பறித்தது எதுவுமில்லை. ஆனால் அவரது கருத்துகளை, வாழ்வியலை புதுப்பித்துக் கொண்டிருப்பதன் மூலமும், போற்றிக் கொண்டிருப்பதன் மூலமும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான பார்ப்பன சாதியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதுதான் இங்கே வேதனையுடன் குறிப்பிடவேண்டியதாக இருக்கிறது.

வேத இதிகாசப்பற்று, இனவெறி, சமஸ்கிருத மோகம், சனாதனப் பற்று, மூடநம்பிக்கை, ஆணவம், சூழ்ச்சி, தந்திரம், பாரத சிந்தனை, பவுத்த எதிர்ப்பு போன்ற அனைத்துப் பார்ப்பனத் தன்மையோடும் வாழ்ந்து முடித்த பாரதியை தேசியக் கவியாக்கி வைத்திருப்பதன் பொருள் என்ன? முற்போக்குவாதியாகவும் பொதுவுடைமையாளராகவும், பெண்ணிய சிந்தனையாளராகவும் சித்திரித்துக் கொண்டிருப்பவர்களின் நோக்கம் என்ன? கவிதை பாடியதற்காகவும் பூணூல் அணிவித்ததற்காகவும், இன்னும் சில உளறல்களுக்காகவும் பாரதிக்கு சாதி எதிர்ப்பாளர் என்ற பட்டம் சூட்டி மகிழ்வதன் பின்னணி என்ன? என்பதைப் பற்றியே நாம் பெரிதும் கவலையுறுகிறோம்.

காலத்திற்குப் பொருந்தாத பயன்பாடற்ற பாரதியின் தத்துவவியல் கோட்பாடுகளும் கண்ணோட்டமும் இன்றைய இந்து மதவெறி அடிப்படைவாதிகளுக்கு மட்டுமே பயன்தரத்தக்கன. பாரதியின் கவிதைகள் காலச்சாற்றை இழந்து நிற்கின்றன. அத்தகையவற்றை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அதனடியில் மறைந்து நிற்கும் நவீன இந்துத்துவ பயங்கரவாதத்தின் தளபதிகள், இந்திய போலிப் பொதுவுடைமைவாதிகள், தமிழ்மரபுக் காவலர்கள் தான் இன்றைய காலச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் முன் நிற்கும் பாரதிகளாகத் தெரிகிறார்கள். பாரதியின் விசம் தடவிய வார்த்தைகளைப் போலவே, இவர்களது வார்த்தைகளும் வெளிப்படுகின்றன.

பாரதி மீதான விமர்சனங்களுக்கு இவர்கள் தரும் பதிலுரைகளில் வெளிப்படும் ‘தலித் எதிர்ப்புணர்வும்’, ‘பார்ப்பனப் பற்றும்’ அவர்களை யார் என அடையாளப்படுத்துகிறது. அவர்களின் இனமரபுக் குறியீடாய் பாரதி வீற்றிருப்பது புரிகிறது. பொதுவுடைமைக் கருத்தியல்களையும், பெண்விடுதலை முழக்கங்களையும், சாதி எதிர்ப்புக் கருத்துகளையும் தனது படைப்புகளில் கொண்டு வந்ததற்காக பாரதிக்குப் புகழ் மகுடம் சூட்டப்படுகிறது என்றால், பாரதியைவிட மிக அழுத்தமாக, துல்லியமாக, அர்ப்பணிப்புடன் தனது கவிதைகளில் பதிவு செய்த பாரதிதாசனுக்கல்லவா இந்த போலி முற்போக்குவாதிகள் மகுடம் சூட்டியிருக்க வேண்டும். அவர்கள் நோக்கம் அதுவல்ல!

நீண்ட நெடுங்காலமாக கொடிகட்டிப் பறக்கும் பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவாகத்தான் பாரதி இன்று வரையிலும் பீடத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறார். பாரதிக்கு வழங்கப்பட்டிருப்பது இலக்கிய மதிப்போ, தத்துவ மதிப்போ, அரசியல் மதிப்போ அல்ல. தங்களை சமத்துவச் சிந்தனையாளர்களாக, சமூக உணர்வாளர்களாக காட்டிக் கொள்ள எத்தனித்தவர்களால் வழங்கப்பட்ட போலி மிகை மதிப்பு! பார்ப்பன அறிவுஜீவிகளாலும், இடைநிலைச் சாதிய தமிழாளர்களாலும், போலிப் பொதுவுடைமைவாதிகளாலும் பாரதிக்கு கட்டியெழுப்பப்பட்ட மகாகவிப் பீடம், ஒடுக்கப்பட்ட மக்கள், சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களை பெரும் வீச்சாகக் கிளம்பி நிறைக்கிறபோது தகர்ந்து சரியும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

பயன்பட்ட நூல்கள்:

1. பாரதியும் ஷெல்லியும், ரகுநாதன், நியு செஞ்சுரி புக் ஹஷஸ், 1979.
2. சுப்பிரமணிய பாரதி கட்டுரைகள், ஸ்ரீ. சி. சுப்பிரமணிய பாரதி, பாரதி பிரசுராலயம், 1946.
3. பாரதியார் கவிதைகள், சி. சுப்பிரமணிய பாரதியார், பாரதி பதிப்பகம், 1960.
4. தமிழ் கவிதைகளில் பாரதியின் தாக்கம், க.த.திருநாவுக்கரசு, தமிழ்க் கடல் பதிப்பகம், 1984
5. The works of P.B. Shelley. The wordsworth Poetey library
6. திராவிட இயக்கப் பார்வையில் பாதியார், வாலாசா வல்லபன், தமிழ்க் குடியரசு பதிப்பகம், 2005
7. பாரதிய ஜனதா பார்ட்டி: விமர்சனமும் விளக்கமும், தொகுப்பு கலகம், 2004
8. பாரதி வளர்த்தது பார்ப்பனியமே: வெற்றிமணி பெரியார் நெறியன் பதிப்பகம், 1987
9. பாரதியின் தத்துவ இயல் கோட்பாடுகள், முனைவர், து.மூர்த்தி, புலமை வெளியீடு, 1994

Pin It