கள்ள நாணயங்களைப் பார்த்ததும் கண்டுபிடிப்பதில் நிபுணனாக இருந்த மான்சிங் தனது ஊருக்கான பாதையில் நடந்து கொண்டிருந்தான். அவனுடன் நடந்து வந்த பல்லக்குடன் பேசுவதற்கு மனமேயில்லாமல் பீடியை பற்றவைத்துக் கொண்டான். ஊரின் எல்லையைத் தாண்டியதும் முதலில் கண்ணில் தெரியும் சோற்றுக் கற்றாழைப் புதர்களூடே இருளோடு இருளாக கற்றாழைகளின் நிழலைப்போல இறங்கி நடந்தார்கள். மான்சிங் தன்னிடமிருந்த செம்பு நாணயங்களையும் சில வெள்ளி நாணயங்களையும் பல்லக்கிடம் காட்டினான்.

பல்லக்கு சரிந்த வேட்டியைத் தூக்கிக் கட்டியபடி உன்னிடமே இருக்கட்டும் என்பது போல சைகை செய்தான். பல்லக்கு கோபமாக இல்லை என்பதை தெரிந்து கொண்டதும் ஊன்றி நடந்து கொண்டிருந்த கம்பை எடுத்து கையில் சுழற்றியபடி நிமிர்ந்து நடக்கத் தொடங்கினான் மான்சிங். சிங்குக்கு பல்லக்குடன் இணைந்து தொழில் செய்யவே விருப்பமில்லாது இருந்தது. தூரத்தில் மினுக்கும் வெளிச்சத்தைப் பார்த்ததும் அவர்களறியாமல் நடை கூடத் தொடங்கியது. நேர்கோடான ஒற்றையடிப்பாதை முடியும் பரந்த இடத்தை நிலவின் வெளிச்சத்தால் காணமுடிந்தது. நீரற்று செம்மணலாகக் கிடக்கும் ஓடையில் நடக்கவே முடியவில்லை. கால்களை பதித்துத் திரும்பவும் கால்களை எடுக்க நெடுநேரமாவது போல இருவரும் உணர்ந்தார்கள்.

அவர்களது கிராமத்தில் கடைசி தெருவாகவும் ஏழாவது தெருவாகமிருந்ததில் மான்சிங்கும் பல்லக்கும் வசித்து வந்தனர். பல்லக்கின் தகப்பனார் வடக்கிலிருந்து வந்த இருவரை வைரக்கல் வாங்கித் தருவதாகக் கூறி அவர்களை ஊருக்கு அழைத்து வந்து நாட்டுச் சாராயத்தை அளவுக்கு அதிகமாக ஊற்றிக் கொடுத்து அடித்து விரட்டி விட்டதாகப் பேசிக்கொள்வார்கள். மான்சிங் தனது தலையிலிருந்த வெள்ளை நிற டோப்பா முடியை எடுத்து உதறினான். கருகருவென சுருள்முடி அழுத்தமாக சீவப்பட்டிருந்தது, கலைந்துவிட்டதென கைகளால் சரி செய்தான். புருவங்களில் காதுகளில் ஒட்டியிருந்த வெள்ளை மயிர்களை புடுங்கி டோப்பா கூந்தலுக்குள் போட்டுக் கொண்டான்.

உடுத்தியிருந்த உடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி நிர்வாணமாக நின்றான். மான்சிங் தனது முகத்திலிருந்து செயற்கையாக வரையப்பட்டிருந்த வயோதிகனின் நிறத்தைக் கழுவிக் கொள்வதற்கென பல்லக்கிடமிருந்து புட்டியை வாங்கினான். திடீரென பல்லக்கு தன்னைப் பார்த்ததாலோ தான் நிர்வாணமாக நிற்பதாலோ வெட்கம் கொண்டவனாக சிரித்தான் சிங். மான்சிங் சிரித்ததும் கூடவே பல்லக்கும் சிரிக்கத் தொடங்கினான். அவர்களுடைய சிரிப்பு அரவமற்ற மணல் வெளியில் நிலவின் வெளிச்சத்தைப் போல பரவி நின்றது. ஒரு பருத்த கருநிறப்பன்றி குட்டிகளுடன் பயந்தபடி புதரைவிட்டு வெளியேறி ஓடி மறைந்ததை இருவரும் சிரித்தபடியே பார்த்தார்கள்.

அவர்கள் ஊருக்குள் நுழைந்ததும் நாட்டுச் சாராயம் விற்பவனான கோமாளி ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருப்பதை பார்த்தார்கள். கோமாளி அதிகாலையிலேயே ஊரைவிட்டுக் கிளம்பிவிடுவான். அவன் மேற்பக்கமாக ஊரைவிட்டுச் சென்று மலையடிவாரத்தைத் தாண்டி ஆடுகள் அதிகமுள்ள கிராமத்தில் காலை உணவை முடிப்பதோடு மட்டுமல்லாமல் அங்கேயே தனது வியாபாரத்தைத் துவக்கி கிராமத்தை அடுத்துள்ள நகரத்திற்குச் செல்வான்.

கிராமத்திலிருந்து நகரத்திற்குச் செல்லும் நபர்களிடம் சொல்வது போலத்தான் கோமாளியிடமும் சில வேலைகளையும் பல்வேறுப் பொருட்களையும் சொல்லி விடுவார்கள் கிராமத்தவர்கள். வெள்ளைக்காரர்கள் நாட்டைவிட்டுப் போய்விட்டார்களா என்பதை அவனிடம் தினந்தோறும் கேட்டுத் தெரிந்தபடிதான் இருந்தனர். நகரத்திலிருந்து அவ்வூருக்கு வரும் வியாபாரிகளிடமும் பரதேசிகளிடமும் விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டு வந்தான். ஆட்டுக்கிடாய்களையும் குட்டிகளையும் வாங்கிச் செல்வதற்கென வந்து சேரும் நகர வியாபாரிகள் ஒரு முறை நகரத்திலுள்ள சாராயத்தின் சுவையை விட கோமாளியிடம் பெற்றுப் பருகும் சாராயம் சுவையாகவும் மலிவாகவுமுள்ளது என அவனது சாராயத்தைப் பற்றி புகழ்ந்ததும் மேலும் கோமாளியைப் பற்றி கிராமத்தவர்கள் நகரின் பிரமுகர்களைப் பற்றியும் ஒவ்வொரு நாளின் பிரபல்யமான நிகழ்ச்சிகளைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்வதில் விருப்பமுடையவர்களாக இருந்தனர்.

தன்னுடன் வசிக்கும் கோமாளியிடம் "நூறு வயதைக் கடந்தவர்கள் யாரையேனும் இன்று பார்த்தாயா" எனக் கேட்டான் மான்சிங். பதிலேதும் சொல்லமுடியாதவனாக மான்சிங்கைப் பார்த்து நின்றான். நான்கு அறைகள் கொண்ட அந்த வீட்டில் அவனோடு சேர்ந்து நான்கு நபர்கள் வசித்து வந்தனர். ஆண்கள் மட்டுமே வசிக்கும் அவ்வீட்டில் பொல்லி இன்னும் வந்து சேரவில்லை. அவன் வருவதற்கு எப்போதும் தாமதமாகும். அவன் சேரும்போது மான்சிங் முழுவதுமாக ஒப்பனைகளை நீக்கிவிட்டு அமர்ந்திருப்பான். மான்சிங்கின் வயதிலிருந்து அவர்கள் மான்சிங்கைப்போலவே உயரமாகவும் இளமையாகவும் இருந்தனர். மான்சிங் நூறு வயதினன் போல ஒப்பனை செய்து பேரனாக பல்லக்கையும் உடன் அழைத்துக்கொண்டு கிழக்குப்பக்கமான நகரங்களுக்குச் சென்று ஏதேனும் சில பணங்கள் சம்பாதித்து வருவான். மான்சிங் நூறு வயதினன் போல பேசுவதற்கும் நடப்பதையும் நம்பியவர்களாக நூறுவயதினரை தான் சந்தித்துவிட்டால் இன்னமும் தனது ஒப்பனைகளையும் செய்கைகளையும் மேலும் நிஜமாக்கி விடலாமென நூறு வயதினர் யாரேனும் உயிரோடு இருக்கிறார்களா என தன் நண்பர்களை கேட்டு வந்தான். பொல்லியோ கோமாளியோ தாங்கள் சென்று வந்த ஊர்களில் நூறு வயதினர் என யாரையும் இதுவரை சந்தித்திருக்கவில்லை.

பல்லக்கு அவனுக்குத் தெரிந்த கனிகளையும் காய்களையும் சில பசும்இலைகளையும் லேகியமாகத் தயாரித்து மான்சிங்குடன் செல்லும் ஊர்களில் பேரனாக நடித்தபடியே தாத்தா தினந்தோறும் சாப்பிடும் மூலிகை எனவும் அவருக்குத் தெரியாமல் கொண்டுவந்துள்ளேன் என கிசுகிசுப்பான குரலில் தங்களை வேடிக்கைக் காணும் நபர்களுக்கு விற்றுவிடுவான். பல்லக்குக்கு தருவதற்கு பணமான செம்பு நாணயங்களைத் தவிர அதிகமாக ஒன்றும் இருப்பதில்லை அவர்களிடம். இன்று அவனுக்குக் கிடைத்த ஒரு செம்பு நாணயத்தைப் பார்த்தபடி அவனது அறையில் அமர்ந்திருந்தான். நான்கு அறைகளும் நான்கு திசையில் வாசல்களைக் கொண்டதாக இவர்கள் குடிவருதற்கு முன்பே இருந்த அறைகளையும் எட்டிப்பார்த்து விட்டு உள்ளே சென்றான். அவனது அறையில் மூன்று நண்பர்களுக்கும் தெரியாமல் பூமிக்குள் சாராயம் விற்ற பணத்தை தினந்தோறும் சேமித்து வைத்தான். என்றாவது ஒருநாள் ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுப் போனதும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழவேண்டுமென மலையடிவாரக் கிராமத்தை விட்டு ஊருக்கு வரும்போது கற்பனை செய்து கொள்வான்.

பொது வாசலாக இருந்த கிழக்கு அறையில் மான்சிங் தன் ஒப்பனைப் பொருட்களை அடுக்கி வைப்பதிலும் உடைகளின் ஈரம் உலரும்படி காற்றில் படிய விட்டபடியும் இருந்தான். பொல்லி வந்ததும் தன்னை அவன் சென்று வந்த கடலுள்ள நகரத்திற்கு அழைத்து செல்லும்படிகேட்க வேண்டுமெனக் காத்திருந்தான். அழைத்துச் செல்ல சம்மதிப்பானெனில் தனது பங்கு சாராயத்தையும் அவனுக்குத் தந்துவிடுவதென நினைத்தான். அறையை விட்டு மான்சிங் வந்த போது கோமாளி சாராயப்புட்டியோடு பல்லக்கு அறையின் வாசலில் நின்றிருந்தான். தன்னைப் போலவே இருவரும் பொல்லிக்காக காத்திருக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டதும் "அவன் வருவதற்கு தாமதமாகும் போல. நாம் சாராயத்தைக் குடிக்கலாம் என சொன்னான்".

மூவரும் சாராயத்தைப் பருகத் தொடங்கினர். கோமாளி தான் கிராமத்திலிருந்து கொண்டு வந்த பச்சை வாழைப்பழங்களை உண்பதற்கென அவர்களுக்குத் தந்தான். வாழைப்பழத்தின் தொலியில் கரும்புள்ளிகள் விழுந்து உரிப்பதற்கு இலகுவாகவும் உண்பதற்கும் சுவையாகவுமிருந்தன. அவர்கள் மூவரும் பழங்களை தின்று முடித்தனர். பொல்லிக்கென இருந்த சாராயப்புட்டியையும் தீர்த்து விடக்கூடாதென கவனமாயிருந்த மான்சிங் அவனைப்பற்றிய விசாரணைகளைத் தொடங்கினான். "அவன் இன்று ஏதேனும் கடிதங்கள் கொண்டு சென்றிருக்கிறானா பல்லக்கு"

"இரண்டு நாட்களாக கடிதங்கள் எழுதுவதைப் பார்க்கவில்லை சிங். ஆனால் மிகுந்த கவலையோடும் யோசனையோடுமிருந்தான்" என மான்சிங் கேட்டதற்கு பதிலாக சொன்னான் பல்லக்கு. பொல்லியைப் பற்றி பேச்சு இத்தோடு முடிந்துவிடக்கூடாது என்பதற்காக மேலும் பேச முயன்றவன் கோமாளியிடம் வாழைப்பழங்களைப் பார்த்ததும் என் தந்தையின் ஞாபகம் வந்துவிட்டது. அவரும் உன்னைப் போலத்தான் ஊர்களுக்குச் சென்று வரும் ஒவ்வொரு முறையும் பச்சைப்பழங்களையே வாங்கி வருவார். அவர்தான் எனக்கு பொய்யான விலாசத்திற்கு பொய்யான கடிதம் எழுதக் கற்றுக்கொடுத்தது. பல்லக்கு அப்பேச்சைக் கேட்காதவன் போல அலட்சியத்துடன் எஞ்சிய சாராயத்தின் ஒரு மடக்கை விழுங்கி விட்டு அவன் அறைக்குச் சென்றான்.

கதவுகளற்ற நான்கு அறைகளிலும் காற்று அவர்களின் சுவாசத்தைப் போல இயங்கியது. பல்லக்கு தன்னை முழுமையாக மறந்தவனாக நித்திரை கொண்டான். பொல்லிக்காக அவன் வரும் பாதையான தெற்கு திசையினைப் பார்த்தவனாக அமர்ந்திருந்தான் மான்சிங். தான் முதன்முதலாக பொல்லி என்பவனை சந்தித்த போது கொண்டிருந்த வேதனையையும் மனத்துயரத்தையும் நினைத்தவனாக மான்சிங் வீட்டின் மையத்தின் திறந்த நிலையிலிருக்கும் வெளியில் நடக்கத் தொடங்கினான். சதுரமாகவும் நான்கு அறைகளுக்கு முன்பும் இருந்த அப்புல்வெளியில் மான்சிங் நடந்தான். அவன் பிறந்து வளர்ந்த ஊரில் அப்பாவும் மகனுமாக சேர்ந்து பொய் கடிதங்கள் எழுதி கைக்கடிதம் கொண்டு வருபவர்களாக வாழ்ந்தார்கள். யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு கடிதம் எழுதி அவர்களிடம் தந்து அனுப்பியது போல பொய்யான விலாசத்தைத் தேடியபடி வெவ்வேறு ஊர்களில் பகலிலிருந்து மாலை வரை இன்னொரு ஊரிலுமென விலாசங்களையும் விலாச வீட்டினர்களையும் தேடிச் செல்வர். அவர்களது தேடலையும் கடிதங்கள் தீர்மானிக்கும் ஏதோ ஒரு செயலையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்தோர் என இருவருக்கும் உதவியாக களைப்பாற்றிக் கொள்வதற்கும் உணவும் இடமும் தருவார்கள். வேறு ஊரில் வேறு சிலரோ உணர்ச்சிவசப்பட்டவர்களாக வரும் காலங்களில் தங்களுக்கு வரும் கை கடிதங்களைக் கொண்டு வந்து தருவதற்கென முன் பணமும் தங்கள் உண்மையான பெயர்களையும் விலாசங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்படி சொல்லியிருந்தனர்.

கைக்கடிதங்கள் தந்து விடுவதற்கும் கொண்டு சேர்ப்பதற்குமென ஊரில் யாரும் நிரந்தரமாக அவ்வேலையில் இல்லை. பொய்யான கைக்கடிதங்கள் எழுதி தந்தையும் மகனும் ஜீவனம் நடத்தினார்கள். யாரும் பொய்யை அறியமுடியவில்லைதான். தந்தை இறந்த பின் மான்சிங்கால் கைக்கடிதங்கள் எழுதுவதற்கு ஏனோ மனம் தளர்ந்து பின்வாங்கியபடியிருந்தது. தன்னால் இன்னொரு மனிதனின் உதவியில்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்பதைத் தெரிந்து ஊரினை விட்டு வேறு வேறு ஊர்களுக்கு அலைபவனாக மாறினான். மான்சிங்குக்கு கடல் நகரங்களை சென்று பார்த்துவிட வேண்டுமென அவன் சிறுவனாக இருக்கும் போதே ஆசையாக இருந்தது. கடல் நகரம் உலகின் கடைசியாகவும் அங்குள்ள வீடுகளே கடைசி வீடுகளாகவும் இருக்குமென அவனது தந்தை கடலைப் பற்றி அறிமுகம் செய்திருந்தார்.

ஏழு தெருக்கள் மட்டுமே உள்ள ஊருக்கு வந்து சேர்ந்த போது மான்சிங் தனக்கு கள்ள நாணயங்களையும் கள்ள ரூபாய் நோட்டுகளையும் பரிசோதனை செய்யத் தெரியுமென அங்குள்ளவர்களிடம் சொல்லிக் கொண்டான். தெற்குப் பக்கத்திலிருந்து பிழைப்புக்கென வந்து சேர்ந்திருந்த பொல்லி அவனை ஆச்சரியமாகப் பார்த்தான். இருவரும் சிநேகம் கொண்டு நாட்டுச்சாராயம் அருந்த கோமாளியிடம் சென்றனர்.

கோமாளியிடம் ஏற்கனவே சாராயம் பருகிக் கொண்டிருந்த பல்லக்கு தான் வைத்திருந்த ரூபாய் தாள்களை அனைவருக்கும் தெரியும்படி விரித்து வைத்து எண்ணிக் கொண்டிருந்தான். பல்லக்கு வைத்திருந்த ரூபாய் நோட்டுக்கள் கள்ள ரூபாயாக இருந்ததைத் தொடாமலே கண்டு கொண்ட மான்சிங் அவனிடம் சொல்வதற்கு முதலில் தயங்கியவனாகவும் சொல்லிவிட்டு வருந்தியவனாகவும் இருந்தான். பல்லக்கு தனக்கு இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகாதது தெரியுமென சொல்லி கள்ள நோட்டுக்களை கண்டுபிடித்ததற்காக மான்சிங்கிற்கு நாட்டுச் சாராயம் வாங்கித்தந்தான். நால்வரும் ஏதோ ஒன்றிற்கென அன்றிலிருந்து நேசங்கொள்ளத் துவங்கினர். கோமாளி நாட்டுச் சாராயத்தினை விற்பதற்கெனவும் சிங்க்கும் பல்லக்கும் தொலைவிலுள்ள ஊர்களுக்குச் சென்று வயதானவன் போல நடித்து சம்பாதித்துக் கொள்வதற்கும் பொல்லி கைக்கடிதங்களை பொய்யாக எழுதி ஊர்களுக்கு எடுத்து சென்று ஏதேனும் பணமும் சில சமயம் தானியமும் பெற்று வருவதும் தினச் செயலாக இருந்து வந்தது.

பொல்லி மிகத் தாமதமாக வந்து சேர்ந்த போது அவனுக்காக விழித்தபடி இருந்தான் மான்சிங். மூவரும் தூங்கியிருப்பார்களென தன் அறையின் வாசலுக்குள் ஒரு பூனையைப் போல நுழையப் போன பொல்லி தனக்காகத்தான் மான்சிங் இன்னமும் தூங்காமல் இருக்கிறான் என்பதை தெரிந்தவனாக அவனருகே சென்றான். தான் இன்னமும் நூறு வயதினர் யாரையும் சந்திக்கமுடியவில்லை என்பதை வருந்தியபடி கூறினான். அவனிடம் "கடல் நகரத்திற்கு எப்போது என்னை அழைத்துச் செல்லப் போகிறாய்" என சப்தமாகக் கேட்டான் சிங். சாராயம் பருகி போதையில் இருப்பவனிடம் எதுவும் பேசக் கூடாது என முடிவு செய்தவனாக தானும் சாராயம் பருக வேண்டுமெனவும் இன்று நகரத்திலிருந்து வறுத்த மக்காச்சோளம் கொண்டு வந்திருப்பதாகவும் அமைதியாகச் சொன்னான். பொல்லிக்கென எடுத்து வைத்திருந்த சாராயப்புட்டியைத் தந்து ஒரு கையளவு சோளத்தை வாங்கிக் கொண்டான் மான்சிங்.

போதை உடலில் பரவுவதை உணர்ந்தவனாக அமர்ந்திருந்தான் பொல்லி. சாராயப்புட்டியில் மீதமிருந்ததைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். வறுத்த சோளமணிகள் நல்ல சுவையாகவும் தின்றபின் மணமாகவுமிருந்தது. உறங்கிவிட வேண்டுமென்றுதான் நினைத்தான். ஏனோ அவனால் உறக்கம் கொள்ள முடியவில்லை. இன்று அவன் சென்று வந்த கிராமத்தில் முதுகிழவி ஒருத்தி இருப்பதாகவும் ஆனால் அவள் வீட்டிற்கு யாரும் சென்று வருவதில்லை, சென்றவர்கள் மதிகலக்கமுற்று திரும்புவதாகவும் வயதானவளின் முகத்தினைக் கண்டதும் பொய்களைப் பேசுவதற்கும் சூதான பணிகளைச் செய்வதற்கும் மதி ஒத்துழைப்பதில்லை எனவும் வியாபாரி ஒருவன் பொல்லியிடம் சொன்னான்.

பயந்து போனவன் கிராமத்தினைக் கடந்து விரைவில் வேறு கிராமத்திற்குச் சென்றான். தான் கேட்டதை மான்சிங்கிடம் சொல்வதற்கு பயந்தவனாக இருந்தான். பொல்லி சூதான தொழிலை செய்யாது போனாலும் மதிகலக்கமுற்று விடுவானோ என பயந்தவனாக சொல்லாமல் இருந்து விட முடிவு செய்திருந்தான். வரும் பௌர்ணமி அன்று கடல் நகரத்திற்கு செல்வதற்கெனப் பாதையை வியாபாரிகளிடமும் வழிப்போக்கர்களிடமும் கேட்டு வைத்திருந்தான். கடல் நகரத்தில் யாரேனும் ஒரு வீட்டில் கைக்கடிதம் தந்து பொருள் பெற்று திரும்பியதும் இனி பொய் கடிதம் எழுதுவதையே விட்டுவிட வேண்டுமென தன் அறைக்குள் சென்றான் பொல்லி. தனது அறையில் கடைசி முறையாக பொய் கடிதம் ஒன்றை எழுதத் தொடங்கினான். இந்தக் கடிதம் என் அருமை சகோதரனும் நண்பனுமான மான்சிங்கிற்கு எனத் தொடங்கியது......

பொல்லி சென்று வந்த ஊருக்குள் அதிகாலைக்குச் சற்று பிந்தியே போய் சேர்ந்தனர் மான்சிங்கும் பல்லக்கும். ஊருக்குள் கிழவனும் பேரனுமாக அலைந்தனர். அவர்களை முதலில் கிராமத்தவர்கள் கண்டு கொள்ளாது தங்கள் வேலைகளில் கவனித்திருந்தனர். எரிச்சலும் கோபமும் கொண்ட பல்லக்கு "இந்த ஊரில் யாரேனும் இறந்து போய் விட்டார்களா இல்லை அதிசயமான வயதானவர்கள் யாரேனும் இருக்கிறார்களா" என மான்சிங்கிடம் ரகசியமாக கேட்டவனாக வேப்பமர நிழலில் அமர்ந்தான். அவ்வழியே கடந்து போனவர்களை அழைத்து "இவர் என் தாத்தா நூறு வயதினைக் கடந்தவர்" என தன் முன் நின்றிருந்த மான்சிங்கை அறிமுகம் செய்து வைத்தான் பல்லக்கு. அவர்கள் மான்சிங்கை கூர்ந்து கவனித்தவர்களாக நின்றார்கள். நிற்கக்கூட முடியாத நடுக்கமும் தன் முன் ஏதும் நடக்காததைப் போன்ற தன்மை கொண்ட முகமும் அதில் பரவியிருந்த சுருக்கங்களும் மிகச் சரியாக பொருந்தியிருந்தன.

அவர்கள் நூறு வயதையோ முதுமையையோ பொருட்கொள்ளாமல் இங்கே நூறு வயதினைத் தாண்டி எத்தனையோ வருடங்களும் காலங்களும் கடந்த முதுகிழவியொருத்தி வசிக்கிறாள். நாங்கள் அவளையே பொருட்படுத்துவது கிடையாது. முதுமை எங்களுக்கு ஆச்சரியமோ மகிழ்வோ அல்ல. முதுமை எங்களுக்கு அதிர்ஷ்டமில்லாதது முதுமையான உயிர்களைப் பார்ப்பது கிடையாது. அவர்களுடன் பழகுவதை தவிர்த்துவிடுவோம் என்றனர். மான்சிங் தன்னையும் தனது ஒப்பனையையும் உணர்ந்தவனாக பல்லக்கைப் பார்த்தபடியிருந்தான். அவனது கண்களில் நூறு வயதினைக் கடந்த கிழவியை சந்திக்கப்போகின்ற மகிழ்வு அரும்பத் தொடங்கியிருந்தது. தனது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் காட்டிக்கொள்ளாமல் தவிர்த்தான். அவனைப் புரிந்து கொண்டவனாக பல்லக்கு அக்கிழவியை சந்திக்கலாமா என அவர்களிடம் கேட்டான். அவர்களோ தாங்கள் உடன் வர இயலாது என்றும் வீட்டின் பாதையை வேண்டுமானால் கூறுகிறோம் என பாதையைக் காட்டினார்கள்.

அவர்கள் காட்டிய பாதையில்தான் இரட்டை மரம் இருந்தது. இருபக்கமும் வேம்பும் செம்மணலுமான பாதையாகயிருந்தது. வேப்பமுத்துக்கள் வழி நெடுக தூவிக் கிடந்தன. நீரின் ஓட்டமும் நீர் பொங்கி வடியும் சப்தமும் அவர்களுக்கு மிக அருகாமையில் கேட்டதோடு ஓடிக்கொண்டிருக்கும் நதியை ஞாபகங்கொள்ளச் செய்தது. அப்பாதையில் சில அடி தூரம் சென்றபின் விசித்திரமாக வேம்போடு பிணைந்து முறுக்கேறி வளர்ந்திருந்தது மாமரம். மரத்தின் முன்பாகத்தில் மாமரமும் பின்பாகத்தினைப் போல வேம்பும் உயரமாக வளர்ந்து நின்றிருந்ததை ஆச்சரியமாகப் பார்த்து நின்றனர். அந்த மரத்தின் முன் நிழலில் நின்றிருந்தான் பல்லக்கு பின் நிழலில் நின்றிருந்த மான்சிங்கிற்கு வேம்பின் கசப்பும் பிசுபிசுப்பும் கூடியதாக இருந்தது. அவர்கள் ஒரு முறை மாறி நின்றும் பிறகு முன் நிழலில் இணைந்து நின்றும் அதே போல பின் நிழலிலும் நின்றும் அபூர்வமாயிருப்பதை அவர்களுக்குள் பேசியபடி முதுகிழவியின் வீட்டினை நோக்கி நடந்தார்கள்.

முதுகிழவியின் வீட்டில் முன் பகுதியில் தானியங்களை பெண்கள் உலர்த்தியபடியும் உலர்த்திய தானியங்களை மண்பாண்டங்களில் நிரப்பிக் கொண்டும் இருந்தனர். பல்லக்கு வீட்டின் வாசலில் நின்று நாங்கள் நூறு வயதினைக் கடந்த முதுகிழவியைப் பார்ப்பதற்கென வந்திருக்கிறோம்.. என்னுடன் நூறு வயதினைக் கடந்த எங்கள் தாத்தாவும் வந்திருக்கிறார். என சப்தமாக வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு கேட்கும்படி கூறினான். பதிலேதும் வராததால் வீட்டிற்குள் இருவரும் சென்றனர். முதுகிழவியென யாருமில்லை. யுவதிகள் சிலர் இருந்தனர். பல்லக்கு தானியங்களை சிகப்பு நிறத்திலிருந்த மரப்படியில் நிரப்பிக்கொண்டிருந்த யுவதியிடம் "இங்கு நூறு வயதினைக் கடந்த முதுகிழவியொருவர் இருப்பதாகச் சொன்னார்களே நாங்கள் முதுகிழவியைக் காண வந்திருக்கிறோம்" என்றான்.

மூங்கில் பட்டைகளில் மிகவும் நெருக்கமாகப் பின்னப்பட்டக் கூடையில் தானியங்களை நிரப்பிக் கொண்டிருந்தவள் "இன்று யார் முறை" என ரகசியமாக கேட்டாள் தனக்கு அருகாமையிலிருந்தவளிடம். மூங்கில் கூடையை வைத்திருந்த யுவதி அமைதியாக இருந்தாள். அவள் தன்னை முதுகிழவியாக ஒப்பனை செய்து கொள்ள வேண்டிய தினம் இன்று. நேற்று அவ்வீட்டில் வேறொருத்தி முதுகிழவியாக ஒப்பனை செய்து ஈசானிய அறையில் இருந்தாள். அவ்வீட்டில் மூன்று யுவதிகள் இருந்தார்கள். மூவரும் முறை வைத்து ஒவ்வொரு நாளும் முதுகிழவி போல ஒப்பனை செய்து யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்தார்கள். அவ்வூரின் ஆண்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் வெள்ளைக்காரர்கள் தங்களை தூக்கிக்கொண்டு போகாமல் இருப்பதற்கும் இப்படி சூதுத்தனதாக வாழ்ந்தார்கள். முதுகிழவியைப் பார்ப்பவர் மதி கலக்கமுற்று திரும்புவதாகவும் அவளின் முகத்தைப் பார்ப்பவர்கள் பொய் பேசுவதற்கும் சூதானத் தொழிலைச் செய்வதற்கும் மதி ஒத்துழைப்பதில்லையென அவர்களாகவே ஊரில் செய்திகளைப் பரவவிட்டனர்.

ஊருக்குள் வரும் வியாபாரிகளை பயமுறுத்தி செய்திகளைக் கூறி வருவது நாள்தோறும் நடந்து வந்தது. கூடை வைத்திருந்தவள் உள்ளறையில் முதுகிழவி உறக்கம் கொண்டிருப்பதாகவும் தான் சென்று அழைத்து வருவதாகவும் கூறி அவள் மட்டும் தனியே ஈசானிய அறைக்குச் சென்றாள். சிவப்பு நிற மரப்படி வைத்திருந்த யுவதி சமையலறையிலிருந்து இரண்டு மண் குடுவைகளை எடுத்து வந்து இருவரிடமும் தந்தாள். அவர்கள் குடிப்பதற்கு என கையில் தந்து "இந்த ரசத்தைத்தான் தினமும் முதுகிழவி குடித்து திடகாத்திரமாக உயிர்வாழ்கிறாள். உங்களுக்கு வேண்டுமானால் ரகசியமாக தருகிறேன் இதற்கு பதிலாக நீங்கள் கொண்டு வந்த பொருட்களையோ அல்லது பணமோ தரலாம்" என்றாள். ஆச்சரியமும் பயமும் கொண்ட பல்லக்கு மான்சிங்கை பார்த்தவனாக நின்றான். மான்சிங்கோ மண் குடுவையிலிருந்த ரசத்தைக் குடித்தபடியிருந்தான். அந்த ரசமானது கொஞ்சம் புளிப்பாகவும் துவர்ப்பாகவும் இருந்தது.

அந்த ரசத்தை முழுமையாக குடித்து முடித்திருந்தபோது பல்லக்கு கோபம் கொண்டவனாக மண்குடுவையை கையில் ஏந்தி பருகத் தொடங்கினான். அந்த ரசத்தை சுவைக்கத் தொடங்கியதும் அதில் கலந்துள்ள வஸ்துக்களை அவன் நாவானது கண்டறியத் தொடங்கியது. பச்சிலையும் வேப்பங்கொழுந்தும் கலந்திருப்பதை தெரிந்து கொண்டான் பல்லக்கு. அந்த ஸ்திரியிடம் தான் கண்டறிந்ததைச் சொன்னான். அந்த ஸ்திரி மறுத்தவளாக தான் கையில் வைத்திருக்கும் தானியத்தைக் காய்ச்சி வடிகட்டிய நீர் இதுவென சொன்னாள். இருவரும் மேலும் ஏதும் பேச முடியாதவர்களாகத் தரையில் உலருவதற்கென கிடந்த தானியத்தைப் பார்த்தபடி இருந்தனர். அந்த ஸ்திரி எஞ்சிய தானியங்களை அள்ளி முடித்திருந்தவளாக அறைகளினுள் சென்றாள்.

அவர்கள் நுழைந்த அறைக்கு அடுத்து சென்று நெடுநேரம் கழிந்து வெளியே வந்த ஒரு ஸ்திரி உறக்கம் கொண்டிருந்த முதுகிழவி எழுந்துவிட்டாள் என்றும் உள்ளே சென்று பார்க்கும்படிச் சொன்னாள். இருவரும் ஆர்வமாய் ஈசானிய அறைக்குள் நுழைந்தனர். அவள் இருவரின் மீதும் பரிதாபம் கொண்டவளாக தங்கள் பாட்டியை பார்ப்பவர்கள் சிலசமயம் மதிகலக்கமுற்று திரும்புகிறார்கள் என்றும் சிலசமயம் பொய்யைக் கூறவோ சூதானத் தொழிலை செய்யவோ மதி ஒத்துழைக்காது இருக்கிறது என்றும் சொன்னாள். பல்லக்கு முதலில் பயந்து பின்வாங்கியவனாகத் தான் இருந்தான். ஆனால் மான்சிங் தன் கண்களினாலேயே தைரியப்படுத்தி வேறு ஜாடைகள் செய்தும் அறைக்குள் அழைத்துச் சென்றான்.

அந்த அறையில் முதுகிழவியாக தன்னை ஒப்பனை செய்திருந்த ஸ்திரி தரையில் அமர்ந்திருந்தாள். தன்னை சந்திக்கும் இருவரையும் ஏற்கனவே பார்த்திருந்த போதிலும் அவள் புதிதாகப் பார்ப்பவள் போல பாவனை செய்து கொண்டாள். ஸ்திரி மான்சிங்கை உண்மையிலேயே வயதானவன் என்று நம்பினாள். அவள் நம்பிக்கையைப் போலத்தான் மான்சிங்கும் ஸ்திரியை முதுகிழவியென நினைத்தான். இருவரும் ஒப்பனைகளை மறந்தவர்களாக ஒருவரை ஒருவர் ஆச்சரியமாகவும் வியப்பாகவும் பார்த்தபடி இருந்தனர். எவ்வளவு பொழுது தங்களை மறந்தவர்களாக யிருந்தார்களோ அவர்களுக்குத் தெரியாது.

முதுகிழவியாகயிருந்த ஸ்திரி மான்சிங்கைக் கண்டு தன் ஒப்பனையை வெறுத்தாள். அந்த ஸ்திரி சிங்கின் கண்களையும் நகங்களில் ஓடும் ரத்தத்தின் சிவந்த நிறத்தையும் பார்த்து ஆச்சரியம் கொண்டாள். அவர்கள் இருவரும் சென்ற பிறகு தன்னுடன் வசிப்பவர்களிடம் வயதான கிழவனின் கண்களில் இளம் வயதினனுக்குரிய கண்களுக்கான அபூர்வம் இருப்பதைச் சொல்ல வேண்டுமென நினைத்தாள். அவள் நினைத்துக் கொண்டிருந்தது போலத்தான் மான்சிங்கும் நினைத்தான். ஸ்திரி உண்மையாகவே முதுகிழவியென நம்பியிருந்தவன் அவள் வாழ்ந்து கடந்து வந்த காலத்தின் முன் தன் ஒப்பனையெல்லாம் கலைக்கப்பட வேண்டியது என முடிவு செய்தவனாக தன் நடுக்கத்தையும் வயோதிகத்தின் உடலசைவுகளையும் கூட்டியபடி இருந்தான். அவன் உடனடியாகத் தோல்வியை ஒப்புக் கொண்டு முதுகிழவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென நினைத்தான். நாளை முதல் தான் வயோதிகனாக ஒப்பனை செய்து ஜீவிக்க வேண்டியதில்லை எனவும் முடிவு செய்தான் மான்சிங்.

மான்சிங்கின் முடிவைப் போலத்தான் அந்த ஸ்திரியும் தீர்மானித்திருந்தாள். தான் இனிமேல் நூறுவயதினைக் கடந்த முதுகிழவியைப் போல வேடமிட்டு வாழக்கூடாது என்றும் தான் இரவோடு இரவாக ஊரைவிட்டு ஓடிப் போய் விடவேண்டுமென நினைத்தாள். உண்மையாகவே நூறு வயதினைக் கடந்து உயிர் வாழும் இம்மனிதனின் முன் தான் போலியாக ஒப்பனை செய்து நூறு வயதினைக் கடந்தவள் என நம்பும்படியானதற்கு வருந்தினாள். உடனடியாக கிழவனின் முன் தன் ஒப்பனைகளை களைத்துவிட்டு உண்மையான வயோதிகம் கொண்டுள்ளது நான் அல்ல நீங்கள் தான் என சொல்லி போலியான செய்கைக்காக அழுது தீர்த்துவிட வேண்டுமென நினைத்தாள்.

பல்லக்கும் மான்சிங்கும் ஊருக்குத் திரும்புவதென அவ்வீட்டை விட்டு வெளியேறிய போது மாலை முழுமையாக மறையத் தொடங்கியது. அந்த வீட்டின் ஸ்திரிகளுக்குத் தெரியாமல் திருடி எடுத்துக் கொண்டு வந்த தானியங்களை பல்லக்கு தனது பையில் பத்திரப்படுத்தியவனாக "இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது" என மான்சிங்கிடம் கூறினான். சிங் "முதுகிழவியின் கண்களைப் பார்த்தேன். அந்தக் கண்கள் வயதானவர்களுக்கானது அல்ல? நீ அந்தக் கண்களைப் பார்த்தாயா" "இல்லை சிங் ஆனால் கிழவியின் நகங்களைப் பார்த்தேன் ரத்தம் ஓடும் நிறம் தெளிவாக இருக்கிறது ". "ஆமாம், ஆமாம் நானும் அதைப் பார்த்தேன் அவள் நிஜமாகவே வாழ்ந்த காலத்திற்கு முன் என் ஒப்பனை எல்லாம் கலைக்கப்பட வேண்டியது ". "சிங் உனக்கு ஏதும் மதி கலக்கமுறவில்லையே " "இல்லை இல்லை இருந்தாலும் உண்மை உண்மைதானே ".

அவர்கள் இருவரும் பேசியபடி நதியின் கரைக்கு வந்து சேர்ந்தனர். நதி வெண்மையான நீரோடும் மென்மையான ஒலியோடும் ஓடிக்கொண்டிருந்தது. நிலவின் வெளிச்சம் தெரியத் தொடங்கியது. நதியின் இடது கரையில் கூழாங்கல்லின் மேல் வெண்மையாகவும் கைகளால் தடவினால் மணல் தன்மை இல்லாதது போலிருந்த வழியில் நடக்கத் தொடங்கினார்கள். நதியில் ஓடிய நீர் நிலவின் ஒளியால் நீல ஒளியாக மாறியிருந்தது. நதியின் கரையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள் மூன்று பெண்கள்.

முதலில் அந்தப் பெண்களைப் பார்த்தது மான்சிங் தான். அவன் பல்லக்கிடம் மெதுவாக கூறினான். தூரத்தில் தெரியும் மூன்று பெண்களை நதியில் குளிக்க வந்தவர்கள் என நினைத்தான் பல்லக்கு. மூவரும் நதியில் இறங்கியவர்களாகவும் கூந்தலை கலைத்து விட்டு ஒருவரை ஒருவர் பொய்யாக ஏசியபடியும் பொய்யாக அடித்தபடியும் குளிக்கத் தொடங்கினார்கள். மான்சிங் முடிவு கொண்டவனாக நதியில் இறங்கத் தொடங்கினான். அவனைத் தடுப்பதற்கு மனமில்லாத பல்லக்கு நதியினை வேடிக்கை காண்பவனாக நின்றிருந்தான். நதியில் குளித்து எழுந்த பெண்களின் குரல் அரவமேயில்லாத கரையில் தெளிவாக அவனது காதுகளில் கேட்டது. அவர்களின் குரல் முதுகிழவியினது இல்லத்திலிருந்த ஸ்திரிகளின் குரலைப் போலவே இருந்தது. மான்சிங் குளித்து எழுந்துக் கரையில் நின்றான். அவனது ஒப்பனை முழுவதும் கலைந்திருந்தது. உடலிலிருந்தும் உடையிலிருந்தும் சொட்டிய நீரின் வேகம் குறைந்தபடியே இருந்தது. பல்லக்கு ஏதும் பேச மனமில்லாதவனாக குனிந்து நீரை அள்ளிப் பருகினான். நதியின் அணைப்பில் ஒப்பனையின் வண்ணங்கள் நீரின் ஓட்டத்தில் கலைந்து ஓடத்தொடங்கியிருந்தது.

அதிகாலையிலேயே தனக்கும் மான்சிங்கிற்குமென இரண்டு பெரிய அளவிலான ரொட்டிகளை சுட்டு எடுத்திருந்தான் பொல்லி. இருவரும் கடல் நகரத்திற்கு சென்று வர முடிவு செய்தவர்களாக தயாராகிக் கொண்டிருந்தனர். கைக்கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தான் பொல்லி. மான்சிங் என்ற பழைய மாலுமிக்கு தெற்கிலிருந்து மீன் வியாபாரி பொல்லி என்பவர் எழுதி அனுப்பியதாக இருந்தது அக்கடிதம். அவர்கள் கைக்கடிதத்தை எடுத்துக் கொண்டு நகரத்திற்குச் சென்றனர். ஊரிலிருந்து மேற்குப் பக்க பாதையில் கடல் நகரம் இருப்பதாக மான்சிங்கிடம் கூறியபடி நடந்தான் பொல்லி. அவனிடம் "உனக்கு இங்கு யாரேனும் தெரிந்தவர்களென இருக்கிறார்களா" எனக் கேட்டான் மான்சிங். அங்கு தனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனவும் ஆனால் அவ்வூரில் மான்சிங் என்றொரு பழைய மாலுமி இருப்பதாகவும் சிரித்தபடி கூறினான் பொல்லி.

இருவரும் சிரித்துக் கொண்டனர். சிங் "நாம் ஏன் இப்படியான வாழ்க்கையை தேர்வு செய்து கொண்டோமென எப்போதாவது யோசித்திருக்கிறாயா பொல்லி" சிரிப்பதை நிறுத்தியவனாகவும் சிங்கின் மேல் கோபம் கொண்டவனாகவும் முகத்தை வைத்துக் கொண்ட பொல்லி "முதுகிழவியின் வீட்டிற்குச் சென்று வந்ததிலிருந்து நீ குழப்பமிகுந்தவனாக இருக்கிறாய். நேற்றும் சாராயத்தைக் குடித்து விட்டு ஓய்வு கொள்ளாமல் புலம்பியபடியே இருந்தாய்" என அவனை ஏசினான். சிங் அமைதியாக நடக்கத் தொடங்கினான். அவர்கள் நடக்க நடக்க சாலை நீண்டபடியே இருந்தது. வேப்பமரங்களின் வரிசை முடிந்துவிட்டது. வாசமேயில்லாத மணலின் மேல் நடந்தபடி இருந்தார்கள். மணலின் மேல் நடப்பதற்கு கடினமாகவே இல்லையென்பதை இருவரும் உணர்ந்து கொண்டு நடையில் துரிதம் கொண்டனர்.

வெள்ளையர்கள் வசித்து வந்த பகுதியாகவும் வெள்ளையர்களின் வியாபார ஸ்தலமாகவும் இருந்தது கடல் நகரம். நகரத்தில் வீடுகளின் வாசலருகே தென்னை மரம் அல்லது பனை மரம் ஏதேனுமொன்று வளர்ந்திருப்பதைப் பார்த்தபடி நகரத்திற்குள் நுழையத் தொடங்கினார்கள். ஒற்றைக் குதிரை பூட்டிய சாரட் வண்டிகளில் வெள்ளைக்கார ஸ்திரிகள் நகர வீதி முழுக்கத் திரிந்தனர். தொப்பி அணிந்திருந்த வெள்ளைக்கார ஸ்திரி ஒருத்தி சாரட்டின் திரையினை விலக்கியபடி வீதியை வேடிக்கைப் பார்த்தவளாக இருந்தாள். அவள் அமர்ந்திருந்த சாரட் மெதுவாக நகர்ந்தபடி இருந்தது. அவள் யாரையோ தேடுவது போன்ற முகபாவத்துடன் அமர்ந்திருந்தாள். சாரட் சென்ற திசைக்கு எதிர் திசையிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்த பொல்லியும் சிங்கும் தாங்கள் கொண்டு வந்த கைக்கடிதத்தைப் பற்றி விசாரணையை அந்த வீதியிலிருந்து தொடங்கலாமென முடிவு செய்தவர்களாக விசாரிக்க ஆரம்பித்தனர்.

பலர் அவர்கள் கேட்ட நபர்களில் ஒருவரும் தங்கள் ஊரில் அந்தப் பெயரினைக் கொண்டவர்கள் என யாருமில்லை என கூறியபடி அவர்களை விட்டு கடந்தனர். அவர்கள் அவ்வீதியில் இருந்தவர்களிடம் விசாரித்தபடி நகர்ந்து வந்து கொண்டிருந்த சாரட்டின் அருகாமைக்கு வந்து சேர்ந்தனர். சாரட்டின் மெல்லிய கரும்பச்சை நிறத் திரையை விலக்கி இவர்கள் விசாரித்து வருவதை நோட்டமிட்டவளாக இருந்தாள் வெள்ளக்கார ஸ்திரீ. அவளால் முழுமையாக தமிழில் பேச இயலாததால் தன்னுடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசி எழுதத் தெரிந்த சாஸ்திரி என்ற துபாஷியை எப்போதும் உடன் அழைத்து சென்றபடி இருந்தாள்.

சாஸ்திரியிடம் இருவரும் வீதியில் எதன் பொருட்டு விசாரணை கொண்டிருக்கிறார்களென அறிந்து வரும்படி கூறி அனுப்பினாள். சாஸ்திரிகளும் சாரட்டிலிருந்து இறங்கி வீதியில் நடந்து கொண்டிருந்த பொல்லி மற்றும் மான்சிங்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபடி அவர்களைப் பற்றியும் அவர்கள் ஊருக்கு வந்த காரணம் பற்றியும் தெரிந்து கொண்டார். சாரட்டிலிருந்த தன் எஜமானியிடம் அவர்களைப் பற்றிச் சொன்னதும் ஆர்வமில்லாதவளாக சாரட்டை நகர்த்தச் சொன்னாள். சில அடிகள் சாரட் நகர்ந்து சென்றதும் கைக்கடிதத்திலுள்ள செய்திகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் கைக்கடிதத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை குறிக்கப்பட்டிருக்குமோ என ஐயம் கொண்டவளாக அவர்களை தனது விடுதிக்கு அழைத்து வரும்படி சொன்னாள்.

கடல் நகரத்தின் தலைமைக் காவலனும் வெள்ளைக்கார ஸ்திரீயின் கணவனுமான வில்லியம்ûஸ அவனது சக ஊழியர்கள் "கோல்டன் வில்லியம்" என்றும் கடல்நகரத்தவர்கள் "தங்க அரக்கன்" என்றும் அழைத்து வந்தனர். வில்லியம் நகரத்திலுள்ளவர்களிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்து தனது நாட்டிலுள்ள பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் கப்பல்களில் அனுப்பிக் கொண்டிருந்தான். தங்கத்தின் மேல் மோகம் கொண்டவனாகத்தான் நகரத்திற்கு வந்தான். அவன் தங்கத்தை திருடுவதற்கும் எந்த வீடுகளில் யாரிடம் தங்கம் பதுக்கப்பட்டுள்ளது என அறிந்து கொள்ள ஆங்கிலேயர் சிலரையும் தமிழ்மொழி தெரிந்திருக்காத இந்தியர்கள் சிலரையும் துப்புக்கென தன்னிடம் பணிக்கு வைத்திருந்தான்.

பொல்லியும் மான்சிங்கும் கடல் நகரத்திற்கு வருவதற்கு சில தினங்கள் முன்பு பிரசவத்திற்கென கணவனுடன் தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தவளிடம் தங்கம் இருப்பதாகக் கிடைத்த துப்பின் பேரில் கோல்டன் வில்லியம் அவள் வீட்டிற்குத் திருடச் சென்றான். அந்த வீட்டில் சில அறைகளே இருந்தது. இரவு நேரத்தில் அவன் முகமூடி அணிந்தோ மாறுவேடம் கொண்டோ திருடுவதில்லை. சாதாரணமான உடையிலேயே தான் திருடச் செல்வான். அன்று தனக்கு ராசியாக இருக்கும் நிறமான கரும்பச்சை நிறத்தில் உடையணிந்து அவ்வீட்டிற்குள் நுழைந்திருந்தான். அந்த வீட்டில் எங்கு தேடியும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தினை அறிய முடியவில்லை.

தோல்வியோடு வெளியேறினான் கோல்டன் வில்லியம். பொழுதெல்லாம் எப்படியாவது தங்கத்தை கைப்பற்றிவிட வேண்டுமென்ற வெறியோடு துப்பு தரும் பணியாளர்களை ஏவிக்கொண்டிருந்தான். மூன்று தினங்கள் கழித்து ஒரு மாலையில் துப்பு கிடைத்தது. பிரசவ வலி உண்டாகி அவள் வீட்டிற்கு மருத்துவச்சிகள் இரண்டு பேர் சென்றிருப்பதாகத் தகவல் கேட்டு அவ்வீட்டிற்குச் சென்றான். அவ்வீட்டின் வாசலுக்குள் நுழைந்தபோது அவள் ஆண் குழந்தையை பிரசவித்திருந்தாள். மருத்துவச்சிகளில் ஒருத்தி சர்க்கரையை நீரில் கரைத்து சிசுவுக்குப் புகட்டுவதற்கென தயாராகிக் கொண்டிருந்தாள். மற்றொருவளானவள் நீரினை சூடுபடுத்திக் குழந்தையை தூய்மை செய்ய வேண்டுமெனவும் அடுப்பில் தீ இல்லையே என்ன செய்வது என கேட்டாள். அவ்வீட்டிலிருந்த தாயானவள் அடுப்பைப் பற்றவைத்து தருவதாகச் சொல்லி உடன் சென்றாள். கோல்டன் வில்லியம் ஒரு அறையில் இருந்து அதையெல்லாம் பார்த்தவனாக நின்றிருந்தான். அடுப்பைப் பற்ற வைக்க சென்றவள் வெளிமதிற் சுவரில் உலர்வதற்கென வரிசையாக ஒட்டி வைக்கப்பட்டிருந்த வரட்டிகளை உதிர்த்து எடுத்தாள். அடுப்பில் தீ உண்டாக்கி நீரினை சூடு செய்யத் தொடங்கினாள். பிறந்த குழந்தையை காண்பதற்காக தெருவிலுள்ளப் பெண்கள் வரத்தொடங்கினார்கள்.

கோல்டன் வில்லியம் வீட்டை விட்டு வெளியேறி வரட்டிகள் ஒட்டி வைக்கப்பட்ட இடத்திற்கு சென்றான். வரட்டிகளை பார்த்துக்கொண்டே சென்றவன் ஏனோ நின்று ஆங்கிலத்தில் ஒன்று மூன்று என எண்ணினான். உதிர்ந்து எடுக்கப்பட்டது ஒற்றைப்படையாக இருந்ததையும் எடுக்கப்படாமல் ஒட்டியிருந்தது இரட்டைப்படை இலக்காகவும் இருந்ததையும் அறிந்தான். இரட்டைப்படையில் எடுக்கப்படாமல் இருந்த ஒன்றை எடுத்து பிய்த்தான். இரண்டாக உடைந்ததும் உள்ளே இருந்த தங்க நாணயங்கள் உதிரஆரம்பித்தன. சாணவரட்டிகளை முழுவதும் பிய்த்துக் கொண்டிருக்கும்போது அவ்வீட்டிலுள்ளப் பெண் வந்து, "வரட்டிகளை எடுக்காதே, வரட்டிகளை எடுக்காதே' என கத்தினாள். மீறியும் எடுத்துக்கொண்டேயிருந்தான் வில்லியம். என் தங்கத்தை கொடுத்துவிடுடா வெள்ளைக்கார நாயே என கத்தியபடி நின்றிருந்தாள் அப்பெண். விடியற்காலை வந்த சிப்பாய்கள் இருவர் அவளை சாட்டையால் அடித்து மயக்கமடையச் செய்தனர். குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகளின் விட்டைகளை கரைத்து அவள் மேல் ஊற்றி விட்டு தங்கள் கூடாரத்திற்குத் திரும்பினார்கள்.

திருமதி. கோல்டன் வில்லியம் அவர்கள் இருவரையும் விடுதிக்கு அழைத்துச் சென்றதும் மான்சிங்கிற்கு உடல் வியர்த்ததைப் போலத்தான் பொல்லிக்கும் வியர்த்திருந்தது. இருவரும் தங்களை வெள்ளைக்கார அதிகாரிகள் யாரும் அழைத்து விசாரிக்கமாட்டார்கள் என்றுதான் நம்பியிருந்தனர். திருமதி. வில்லியத்தின் விடுதிக்கு தங்களை அழைத்துச் செல்லப்பட்டதும் அங்கிருந்த சிப்பாய்களின் வரிசைகளையும் அவர்கள் பேசிய ஆங்கிலமும் இருவருக்கும் பயத்தை உண்டாக்கியது. சாஸ்திரி அவர்களிடமிருந்து கைப்பற்றிய கைக்கடிதத்தை வாசித்தபடி அமர்ந்திருந்தார். கடிதத்தை படித்து முடித்ததும் கடிதத்திலுள்ளதை முழுமையாக நம்பியவராகத் தான் இக்கடிதத்தில் ஏதும் அரசுக்கு விரோதமானது ஏதுமில்லை என திருமதி. வில்லியத்திடம் அவர்களைப் பற்றி சிபாரிசு செய்தார். சாஸ்திரியார் இரண்டு சிப்பாய்களை அழைத்து, "நகரத்தில் பழைய மாலுமியென யார் இருந்தாலும் அழைத்து வாருங்கள்' என உத்தரவிட்டார். பொல்லி இதனை எதிர்பார்க்கவில்லை தன்னையும் தன் நண்பனின் எதிர்காலத்தையும் நினைத்து பயந்தவனாக சிங்கின் அருகே நின்றான். மான்சிங் என்றொரு மனிதன் இந்நகரத்தில் இருக்கப்போவதில்லை என்ற நிம்மதியில் அவர்கள் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தார்கள்.

கோல்டன் வில்லியத்தின் துப்புப்பணி சிப்பாய்களில் ஒருவன் இருவர்களிடமும் தங்கம் உள்ளதா என அறியும் பொருட்டு அவர்களை சோதனை செய்தான். மான்சிங்கிடம் சிவப்பு நிறத்தில் இரண்டு கற்களும் சில தானியமணிகளும் பொல்லியிடம் கடிதம் எழுதாத வெற்றுக் காகிதம் இரண்டும் ஒரு காகிகதத்தில் தங்கள் ஊரிலிருந்து கடல்நகரத்திற்குச் செல்லும் பாதைகள் பற்றிய குறிப்பும் அதன் வரைபடமும் இருந்ததை சோதனையிட்டு எடுத்துக் கொண்டான். அவர்கள் இருவரும் கலகக்காரர்கள் என எந்த முடிவும் ஊர்ஜிதமும் செய்யப்படவில்லை என சாஸ்திரி ஆங்கிலத்தில் எச்சரித்தார். அவரின் சொல்லை கவனத்திற்கு எடுத்துக்கொண்டதாகவே சிப்பாய் காட்டிக்கொள்ளவில்லை. மான்சிங் என்றொரு நபர் வராமல் போய்விட்டால் தாங்கள் உடனடியாக இந்நகரத்தை விட்டு போய்விடலாமென யோசித்தபடி இருந்தான் பொல்லி.

நகரத்தில் மாலுமியை தேடி அழைப்பதற்கெனச் சென்றிருந்த சிப்பாய் வயதான மனிதன் ஒருவனை அழைத்து வந்தான். அவன் கப்பலில் செல்லும்போது அணியும் உடையையும் தலையில் தொப்பியும் அணிந்திருந்தான். அவன் விடுதிக்குள் நுழைந்ததும் திருமதி. வில்லியத்திற்கு மரியாதை தெரிவித்துக் கொண்டான். தான் கடல் பிரயாணத்தில் முழுமையாக தேர்ச்சிப் பெறவில்லையென்றும் கடல் காற்று தன்னுடைய உடல் நலத்திற்கு கேடு விளைவித்து விட்டதால் கடல் பிரயாணத்தில் தொடர்ச்சியாக ஈடுபடமுடியவில்லையென அவன் மரியாதையுடன் தெரிவித்தான். "உன் பெயர் மான்சிங் தானா" என சாஸ்திரியார் கேட்டதும் "இல்லை" என்றான் அந்த மனிதன். "மான்சிங் என்ற மாலுமியைப் பற்றி ஏதேனும் உனக்குத் தெரியுமா?"என்று கேட்டதும் தனக்கு ஏதும் தெரியாது என்றும் இந்தப் பெயரையே இப்பொழுதுதான் கேட்கிறேன் எனவும் பதில் சொன்னான் அந்த வயதான மனிதன்.

அவன் விடுதியை விட்டு போன போது தனது மாலை நேர ஓய்வுக்கென விடுதிக்குத் திரும்பினான் கோல்டன் வில்லியம். அவன் வந்து சேர்வதற்கு முன்பே பொல்லி மற்றும் மான்சிங்கைப் பற்றிய செய்தியைத் தந்திருந்தனர் அவனது பணியாட்கள். இருவரிடமும் தங்கத்தைப் பற்றிய தகவல் ஏதுமில்லை என்பதாலும் அவர்களிடம் தங்கம் இல்லையென்பதாலும் வில்லியம் அவர்களை கவனிக்காமல் கடந்து சென்றான். பிறகு மாலை நேர ஓய்வுக்குப்பின் விடுதியை விட்டு பணிக்குத் திரும்பும்போது அவர்கள் இருவரும் இன்னமும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவனாக சாஸ்திரியிடம் ஏன் இன்னமும் இவர்கள் இங்கு இருக்கிறார்கள் என கேட்டான். சாஸ்திரியிடம் அவர்கள் வசமுள்ள கடிதம் போராட்டக்காரர்கள் கடிதம் என சந்தேகம் கொண்டுள்ளதால் மேல் விசாரணைக்கென நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்களென பதில் தந்தார்.

தங்களை சுதந்திர போராட்டக்காரர்கள் என கேட்டதும் மேலும் பயந்த பொல்லியும் சிங்கும் தங்களை சிறையில் அடைத்து விடுவார்களென வருத்தம் கொண்டனர். பொல்லி தன் நண்பர்களான கோமாளியையும் பல்லக்கையும் பிரிந்து விடுவோமோ என கவலை கொண்டவனாக என்ன செய்ய வேண்டுமென யோசிக்கத் தொடங்கினான். தனது ஊரும் ஊரில் தான் வசித்து வந்த ஏழாவது தெருவும் தெருவில் தனது வீடும் வீட்டின் நான்கு அறைகளும் அறைகளில் படித்தபடியிருக்கும் கோமாளியும் பல்லக்கும் தான் ஞாபகத்திற்குள் வந்தார்களே தவிர வேறு ஏதும் யோசனைக்கு அவன் மனம் செல்லவில்லை.

சாஸ்திரியிடம் கடிதத்தைப் படிக்கச் சொன்னான் கோல்டன் வில்லியம். சாஸ்திரி இரண்டாவது தடவையாக கைக்கடிதத்தைப் படிக்கத் தொடங்கினான். அவர் படிக்கப் படிக்கப் பொல்லிக்குச் சிரிப்பும் கூடவே பயமும் வந்துவிட்டது. கைக்கடிதம் பொல்லி என்கிற மீன் வியாபாரி தன் கடல் பிரயாணத்தின் நண்பனான மாலுமி மான்சிங் என்பவனுக்கு எழுதியனுப்பியதாக அமைந்திருந்தது. அக்கடிதத்தை கேட்டு முடித்ததும் நம்ப முடியாதவனாக கோல்டன் வில்லியம் "உண்மையிலேயே இப்படியொரு தானியம் இருந்ததா?" எனக் கேட்டான்.

தன்னைப் பற்றியும் தனக்கு வரப்போகும் தண்டனையைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்த பொல்லி இக்கேள்வியால் உற்சாகமடைந்தவனாக அக்கடிதத்தைப் பற்றிக் கூறத் தொடங்கினான். பொல்லி என்பவர் கடிதம் எழுதி தங்களுக்கு தருவதற்கு முன் சொன்னதாக சில தகவல்களையும் சம்பவங்களையும் கோல்டன் வில்லியத்திடம் கூறலானான். கடல் பிரயாணத்தில் ஒருமுறை மாலுமி மான்சிங்கை மீன் வியாபாரி பொல்லி சந்தித்திருக்கிறான். அவர்கள் சந்தித்துக் கொண்ட முதல் நாளில் முதல் நிமிடத்திலேயே நெருங்கிய நண்பர்களாகப் பழகத் தொடங்கி விட்டனர். சந்திக்கும் வேளையில் மீன்களைப் பற்றியும் கடல் பிரயாணங்களைப் பற்றியும் பேசிவந்தனர்.

இருவருக்குமே திருமணமாகியிராததால் ஒருவரின் வாழ்வைப் பற்றி ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. ஒருநாள் மாலைப் பொழுதில் கப்பலில் சூதாட்டக்காரர்கள் சண்டைப்போட்டுக் கொண்டதன் பொருட்டு அவர்களை சமாதானம் செய்யவும் சண்டையை விலக்கவும் மான்சிங் கப்பலை அப்போதைய பயணத்தின் திட்டத்தில் இல்லாத இடத்தில் நிறுத்தினான். கப்பல் நின்ற கரையோரம் அமைந்திருந்த தீவுக் கிராமத்தில் பண்டிகை வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. வாத்திய இசையில் தங்களை மறந்து சண்டையை நிறுத்திய சூதாட்டக்காரர்கள் கிராமத்தினுள் சென்றுத் திரும்ப மான்சிங்கிடம் அனுமதி கேட்டனர். மான்சிங் எவ்வித யோசனையுமின்றி சண்டை நின்று சமாதானமாகி விட்டால் போதுமென நினைத்து அனுமதி தந்தான். சூதாட்டக்காரர்களோடு கப்பலிலிருந்த பயணிகளும் சிறிது ஓய்வுக்கெனவும் கடல் கிராமத்தில் ஒலிக்கும் இசையைக் கேட்பதற்குமெனவும் சென்றனர். கடல் கிராமத்தில் தானிய பண்டிகை விழா தொடங்கியிருந்தது. மண் கலயங்களில் மூன்று தினங்களுக்கு முன்பே மண் இட்டு விதை தூவியிருந்தனர். விதை தூவியிருந்த தானியமணிகள் வேர்விட்டு வளர்ந்திருந்தன.

கப்பலிலிருந்து இறங்கிய பயணிகளை எதிர்ப்பார்த்திருந்தவர்களைப் போல வரவேற்று உபசரித்தனர் கிராமத்தவர்கள். வருடத்தில் ஒருமுறை மட்டுமே தானியப் பண்டிகை நடப்பதாகவும் இத்தானியத்தைப் பெண்கள் மட்டுமே உண்ண வேண்டும். உண்டதும் உண்டவர்கள் தாங்கள் மனதில் நினைத்திருந்த ஆண்மகனைப் போல கருவுற்றுப் பிள்ளை பெறுவார்கள் எனவும் முதியவர் சொன்னார். பயணிகளில் உற்சாகம் கொண்ட சில பெண்கள் தாங்களும் உண்ண வேண்டுமென அவரிடம் கேட்டதற்கு இந்த தானியத்தை இம்மண்ணில் பிறந்த பெண்கள் மட்டுமே உண்ண வேண்டும். வேறு யார் உண்டாலும் அதற்கு ஏதும் பலன் இல்லையெனவும் வருந்திச் சொன்னார். தானியத்தைக் கண்டு வியப்பும் பயமும் கொண்டவர்களாக உடனே கப்பலை நோக்கி திரும்பிவிட்டனர். ஆனால் பொல்லி மட்டுமே சில தானியங்களை திருடிக்கொண்டு கப்பலுக்கு வந்துவிட்டான்.

பொல்லி தன் நண்பனான மான்சிங்கிற்கு தானியத்தைக் காட்டி கிராமத்தவர்கள் சொன்னதைச் சொன்னான். ஆச்சரியமடைந்தவனாக மான்சிங் இதேபோல இல்லாவிட்டாலும் தனக்கும் ஒரு கடல் கிராமத்திற்குச் சென்றிருந்தபோது சிவப்புக்கல் ஒன்று கிடைத்ததாகவும் அதனைப் பார்த்துக் கொண்டே இருந்தால் பார்ப்பவர்களின் நினைவுகள் முழுதாக மறதியாகி அவர்களின் பூர்வீகத்தைப் பற்றியும் முன்னோர்களையும் அறிந்து கொள்ளமுடியுமென சொன்னான். இருவரும் வியப்பும் பயமும் கொண்டவர்களாக இருந்தனர். பிறகு கடல் பிரயாணத்தை முடித்துக் கொண்டு திரும்பியவர்கள் தானியத்தையும் சிவப்புக்கல்லையும் விலைகூறி விற்றுவிடலாமென பேரம் பேசி வந்தனர். இப்போது நீங்கள் என்னிடம் கைப்பற்றிய தானியமும் சிவப்புக்கல்லும் அவர்களுடையது தான். நாங்கள் விற்பதற்கெனவும் எழுதியதை ஒட்டிக் கூறிய பொய்களைத் தனக்குத்தானே வியந்தவனாக ஆங்கிலேயர்களிமிருந்துத் தப்பிப்பது இனி பெரிய காரியமில்லை என வில்லியத்தைப் பார்த்தபடி இருந்தான்.

சற்றுநேரம் தன்னை மறந்தவனாக இருந்த வில்லியம் தன்னை சரி செய்து கொண்டு பொல்லியிடம் "அந்த கடல் கிராமம் எந்த திசையில் இருக்கிறது" எனக் கேட்டான். பொல்லி தனக்கு தெரியாது என்றும் ஒருவேளை கடற்பயணம் செய்த மான்சிங், பொல்லி இருவரில் யாருக்காவது தெரியுமெனச் சொன்னான். இந்த நகரத்தில் மான்சிங் என எவருமில்லையா என சாஸ்திரியிடம் கேட்டான் வில்லியம். சாஸ்திரியார் நகரத்தில் யாருமில்லை, ஆனால் நகரத்தை விட்டு தொலைவிலுள்ள தலைநகருக்குப் போகும் சாலையில் அமைந்துள்ள கிராமத்தில் எவரேனும் இருக்கலாமென கூறியதை நம்பினான் வில்லியம். மாலுமியைத் தேடிக்கொண்டு வரும்வரை இருவரையும் பாதுகாப்பில் இருக்க வேண்டுமென சொல்லியவனாக அவர்களை விட்டுச் சென்றான்.

மான்சிங்கைப் பற்றித் துப்பு சேகரித்து வந்தப் பணியாட்கள் கோல்டன் வில்லியத்திடம் மாலுமி மான்சிங் என்ற பெயரில் யாரும் இந்தப் பகுதியில் இல்லையென்றும் கைக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது போன்ற தானியங்களும் சிகப்புகற்களும் கட்டுக்கதையாக இருக்க வேண்டுமென கூறினார்கள். வில்லியம் நீண்ட நேரம் யோசனை செய்தவனாக இருந்தான். அவன் சாஸ்திரியிடம் யோசனை பெறுவதற்கு முன் தன் உடன் பணிபுரியும் நண்பர்களை அழைத்து ஆலோசனை செய்தான். தங்களிடம் யாரேனும் பொய்யாக கடிதம் கொண்டு வந்து தந்து ஏமாற்றுகிறார்களென புகார்கள் வந்துள்ளனவா, பொய் கடிதங்கள் பற்றிய விபரங்கள் ஏதேனும் சேகரிக்கப்பட்டுள்ளதா? பொய் கடிதங்களினால் பாதிப்புற்றோர் என யாரேனும் உள்ளார்களா உண்மையிலேயே கடிதத்தைப் பொய்யாக எழுதிவிட முடியுமா என்றும் யோசனைகள் நடந்தன.

கோல்டன் வில்லியம் முடிவு செய்தவனாக அவ்வறையை விட்டு வெளியேறினான். சாஸ்திரியிடம் ஆங்கிலத்தில் கடிதம் எழுத வேண்டுமென்றும் அதற்கென தயாராகும்படிச் சொன்னான். பாதுகாப்பில் இருக்கும் இருவரையும் அழைத்து, "எனது நண்பனும் மேலதிகாரியுமான ராபர்ட் என்பவருக்கும் கைக்கடிதம் எழுதி உங்கள் மூலம் தந்து அனுப்பினால் கொண்டுபோய் சேர்ப்பீர்களா?" எனக் கேட்டான். இருவரும் ஒன்றும் புரியாதவர்களாக குழம்பியபடி பேசாமல் நின்றிருந்தனர். சாஸ்திரி கடிதம் எழுதுவதற்கென பிரிட்டிஷ் முத்திரைப் பதிக்கப்பட்டிருந்த வெள்ளை காகிதங்களையும் வில்லியத்தின் அடையாள முத்திரையையும் கொண்டு வந்தார். சாஸ்திரி எழுதி முடித்தவுடன் அவரது உடல் வியர்த்திருந்தது. தன் முகத்தில் எந்த பாவனையையும் வெளிக்காட்டாதிருக்க கையொப்பமும் அடையாள முத்திரையும் இடப்பட்டது.

எந்த விசாரணையுமின்றி கடிதத்தை கொண்டு வருகின்ற இந்த இருவரையும் தூக்கிலிட வேண்டுமென ஆணையிட்டுள்ள கடிதத்தை உறையிலிட்டு பயணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் என்ன எழுதப்பட்டிருக்குமோ என்ற பயமுமாக பயணத்திற்குத் தயாரானார்கள். அந்தமானிற்குச் செல்லும் கப்பல் பயணத்திற்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருப்பதாகவும் அதுவரை எங்கும் செல்லாதிருக்கவும் கடற்கரையிலேயே இருக்கும் விடுதிகளில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

கடற்கரையிலுள்ள விடுதியில் தங்கியிருந்தவர்கள் முழுக்க அந்தமான் கடல்நகரத்திற்குச் செல்லும் கப்பலுக்காக காத்திருந்தனர். அவர்கள் அனைவரும் தூக்குக்கைதிகளாக இருந்தபோதிலும் தாங்கள் இன்னொரு கடல் நகரமான அந்தமான் என்ற நகரத்திற்குக் கப்பலில் செல்லுகிறோம் என்ற தகவலைத் தவிர வேறு ஏதும் தெரியாதவர்களாக இருந்தனர். புதிதாக வந்த இருவரின் பெயரினை எழுதிக்கொண்டு அவர்களுக்கு உணவு தருவதற்கென உணவு கூடத்திற்குச் சென்ற வெள்ளைக்காரச் சிப்பாய் "தூக்கிலிடுவோர் பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது" என ஆங்கிலத்தில் சகப்பணியாளனிடம் கூறினான். விடுதியில் இரவு உணவு வழங்கப்படும் நேரம் சிப்பாயினால் அறிவிக்கப்பட்டது. பொல்லிக்கு தந்த உணவில் உப்பில்லாமலிருந்தது. பொல்லி தனது உணவில் மேலும் உப்பு வேண்டுமென தனக்கு உணவு வழங்கிய சிப்பாயிடம் கேட்டான்.

உப்பு தர மறுத்தவனாக, "இங்கு எல்லோருக்கும் உப்பில்லாத உணவு தான்" என்றான். மேலும் பேச முடியாதவனாக மான்சிங்கின் அருகில் அமர்ந்து உண்டான். மான்சிங் அவனிடம் "இந்த கடல் நகரத்திற்குப்பிறகு உள்ள புதிய நகரத்திற்குச் செல்வதற்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளன. அங்கும் உப்பில்லாத உணவு தான் தருவார்களோ? என்றான். பொல்லி அவனை வெறுமையாகப் பார்த்தவனாக உணவை விழுங்கினான். அருகில் அமர்ந்திருந்த இரண்டு நபர்களுக்கு சற்றுத் தள்ளி ஒரு பெண் உப்பைக் கள்ளத்தனமாக விநியோகம் செய்தபடி இருந்தாள். உப்பினை அவள் தரும்போது சொல்லும் நிபந்தனைக்கு சரியென்றோ முடியாது என்றோ ஏதும் பதில் கூறாதவர்களாகவே அவர்கள் உப்பினை வாங்கிச் சென்றனர். அவளும் வாங்குபவர்களிடம் தனக்குப் பதில் சொல்ல வேண்டுமென்ற கட்டாயமும் இல்லாது உப்பினை விநியோகம் செய்தாள். அவளுக்கு ஆண்குழந்தை பிறந்து இரண்டு தினங்கள் கழிந்திருந்தது. தன் பிரசவத்திற்கென தாயின் வீட்டிற்கு வந்தவள் தான் கொண்டு வந்த தங்க நாணயங்களையும் ஆபரணங்களையும் பறிகொடுத்தவளாகவும் தாயினை இழந்தவளாகவும் கப்பலில் அனுப்பப்போகும் பயணிகளோடு பயணியாகவும் இருந்தாள். அவள் தாயின் மரண துக்கத்தை இன்னமும் நினைவில் கொண்டிருந்தாள்.

கள்ளத்தனமாக தன்னிடம் உப்பை வாங்கிக் கொள்பவர்களிடம், "நீங்கள் வெள்ளையர்களைக் கொல்வீர்களா"என்று கேட்டுக்கொண்டு அவர்களின் சம்மதத்தைக் கூடப் பெற்றுக் கொள்ளாமல் உப்பைத் தந்தபடி சென்றாள். அந்த விடுதியில் உப்பை பல இடங்களில் ஒளித்து வைத்திருந்தாள். பொல்லிக்கு உப்பை தந்த போதும் அவள் கேள்வியைக் கேட்டுக் கொண்டபடி அவனது சம்மதத்தைக் கூட பெறாமல் அடுத்துவந்து தன்னிடம் உப்பைப் பெறக் கையேந்தும் நபரிடம் வெறியோடு, "வெள்ளையர்களை கொல்வீர்களா"எனக் கேட்டாள். அவளிடம் உப்பை வாங்கி உண்ணாதவர்கள் வெகு சிலரே அவ்விடுதியில் இருந்தனர். தாங்கள் கப்பலில் தொலைவிலுள்ள கடல் நகரத்திற்குச் செல்லுகிறோம் என்பதை மறந்தவர்களாக இருந்தனர். ருசியோடு உணவினை உண்பதும் களைப்பில்லாமல் விடுதியில் உற்சாகமாகயிருப்பதைக் கண்டு சந்தேகம் கொண்ட வெள்ளைக்காரச் சிப்பாய்கள் தட்டினை சோதித்தனர். உப்பின் சுவை இருப்பதைக் கண்ட சிப்பாய்கள் தங்கள் மேல் அதிகாரிகளிடம் கூறிவிட்டு விடுதியில் புழங்கும் உப்பினை கண்டறியத் தொடங்கினர். உப்பு வியாபாரிகள் யாரும் விடுதிக்கு வரவில்லை. ஆனால் உப்பு மட்டும் எங்கிருந்தோ வந்தபடியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

ஆண் குழந்தை பெற்ற ஸ்தீரியின் கணவன் நடு இரவுக்கு மேல் உப்பு மூட்டைகளோடு விடுதிக்கு வந்தான். அவன் குழந்தையின் மேல் பிரியமாக இருந்தான். குழந்தையோடு தன் மனைவியையும் அந்தமானுக்கு கப்பலில் கொண்டு போகின்ற செய்தியை எப்படியோ அறிந்திருந்தான். அவளையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டுமென தினந்தோறும் இரவில் வந்து தனது மனைவியையும் குழந்தையையும் கண்டு சென்றான். அவன் நகரத்தில் ஒளிந்திருந்த இடத்தில் உப்பு வியாபாரிகள் அதிகமாக இருந்தனர். உப்பு வியாபாரிகள் சிலர் கோல்டன் வில்லியத்தை தீர்த்துக்கட்ட வேண்டுமென ஆள் தேடி வந்தனர். ஒரு வேளை உப்பில்லாமல் உண்ண நேரிடும் வேளை கலகத்தை உண்டாக்கி விடும். அவ்வேளையில் அங்கிருந்து மனைவியையும் குழந்தையையும் தப்பிக்க ஏற்பாடு செய்யலாமென திட்டமிட்டிருந்தான் அவன்.

ஆனால் அவர்கள் நினைத்தது போல கலவரம் ஏதும் நடக்கவில்லை. பயணிகள் ஏதோ ஒன்றை ஏற்க விரும்பி தங்கள் பயணத்திற்கு தயாரானபடி இருந்தனர். உப்பில்லாத உணவின் சுவையை அவர்கள் அப்போதைய நிலையில் பொருட்படுத்தக் கூடியதாக இருக்கவில்லை. ஸ்திரீயானவள் மட்டும் உற்சாகமும் வெறியும் கூடிய மனநிலையில் உப்பை விநியோகித்துக் கொண்டிருந்தாள். அவள் ஆவேசத்துடன் வெள்ளையர்களை கொல்வீர்களா? என கேட்டபடி இருந்தாள். அவள் கணவனும் அவனுக்கு உதவி புரியும் உப்பு வியாபாரிகளும் திட்டங்கள் ஏதுமற்று கைதிகளை விடுவிப்பது குறித்து யோசித்தபடி இருந்தனர்.

தன் மகனின் அழுகையை சமாதானம் செய்யும் பொருட்டு அவள் குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தாள். "மகனே நாம் உலகின் கடைசி வீட்டுக்குப் போகப் போகிறோம் அழாதே" என்றாள். மான்சிங் அழுகின்ற குழந்தையையும் அவள் பேசியதையும் பார்த்தவனாக அமர்ந்திருந்தான். அவனுக்குத் தன் தந்தையின் ஞாபகம் மனதில் அரும்பத் தொடங்கியது. தனது தந்தையை கள்ள நாணயங்கள் செய்பவன் என கைது செய்யப்பட்டு அழைத்துக் கொண்டுப் போனபோது வலது கண்ணில் வழிந்த கண்ணீர் துளி தான் சிங்கின் ஞாபகத்தில் உருவாகியபடியே இருந்தது திரும்பத்திரும்ப.

அவனது தந்தையை அழைத்துச் சென்ற வெள்ளைக்காரச் சிப்பாயின் முகத்தை மறந்து இருந்தான். தந்தையும் மகனுமாக இருந்த வீட்டில் மொட்டைத்தலை ராசா நாணயங்களின் போலி அச்சு இருந்தது. அந்த அச்சைத் தயாரித்த சிங்கின் தந்தையும் தந்தையின் நண்பர்களும் இரவு நேரத்தில் வீட்டின் பின் பக்கத்தில் கள்ள நாணயங்களை அச்சடித்து வந்தனர். தாமிரத்தின் மேல் நாள் கணக்கில் பிடித்துக் கிடக்கும் பச்சை களிம்பைத் தட்டி விட்டு மரப்பட்டை அடுப்பில் தீப்பொறிகளின் ஊடே உருக்கி ஊற்றி அச்சடித்தனர். தாமிரத்தினை வெள்ளி நாணயங்களாக மெருகு ஏற்றி மக்களிடையே மலிவான விலைக்கு விற்று வந்தனர். மான்சிங்கிற்கு கள்ள நாணயங்களைக் கண்டுபிடிப்பது எப்படியென அவனது தந்தை சொல்லியிருந்தார்.

கள்ள நாணயங்களைப் புழக்கத்தில் இருப்பதைக் கண்டுபிடித்து விட்ட வெள்ளைக்கார அதிகாரிகள் ரகசியமாக விசாரணை செய்து மான்சிங்கின் தந்தையையும் அவனது கூட்டாளிகளையும் சிறையிலிட்டனர். சிறைக்கு அழைத்துச் சென்ற போது தன் தந்தையைப் பார்த்தவன் பிறகு என்றும் தந்தையைப் பார்க்க முடியவில்லை. அவனை தூக்கிலிட்டு விட்டார்கள் என்றும், வேறு எங்கோ நாட்டிற்கு கடத்திக்கொண்டு சென்றுவிட்டனர் என்றும் வெள்ளி நாணயங்களை அச்சிடும் தொழிற்சாலைக்கு வேலைக்கென கொண்டு சென்றுவிட்டனர் என்றும் ஊரில் பேசிக்கொண்டனர். வெவ்வேறு ஊர்களுக்கு பரதேசி போல திரிந்த மான்சிங் இன்று வரை தன் தந்தையைக் காணமுடியாது போனதற்காகவும் வருந்தி ஞாபகம் வந்து அழுதவனாக இருந்தான்.

4

உப்பு வியாபாரிகளையும் தொழிலாளிகளையும் உப்பு காய்ச்சி விற்கக்கூடாது என்றும் அபராதமும் மீறினால் அவர்களுக்கு 16 படி அரிசி தண்டமும் 50 கசை அடியும் தண்டனையாக வழங்கப்படுமென கோல்டன் வில்லியம் தெரிவித்திருந்தான். உப்பு வியாபாரிகள் சாஸ்திரிகளின் மூலம் வில்லியத்திடம் மத்தியஸ்தம் செய்து கொள்ள விரும்பினார்கள். ஆனால் கோல்டன் வில்லியம் ஆங்கிலேயர்கள் சிலர் காய்ச்சிக் கொண்டு வரும் உப்பை மக்கள் விலை கொடுத்து வாங்க வேண்டுமென கண்டிப்புடன் இருந்தான். மீறி காய்ச்சிய மூன்று நபர்களைப் பிடித்து முச்சந்தியில் கட்டி வைத்து நோயுற்ற வெள்ளையர்களையும் சில நாய்களையும் அவர்களது முகத்திலும் வாயிலும் மூத்திரம் பெய்யச் செய்து அனுப்பினான். இச்சம்பவத்திற்கு பிறகு மனம் இறுக்கமடைந்தவர்களாக வீட்டிற்குள்ளேயே இருந்தனர். அவர்கள் மூவரும் எப்படியாவது வில்லியத்தைக் கொன்று அதே முச்சந்தியில் அவன் பிணத்தைப் போட வேண்டுமென்று திட்டமிட்டபடி இருந்தனர்.

கடைவீதிகளில் மூவரும் ஒரு கூலியாளை ரகசியமாகத் தேடி வந்தனர். அவர்கள் தொடர்ந்து பத்து தினங்கள் தேடியும் வில்லியத்தைக் கொல்வதற்கென பொருத்தமான நபர்களாக எவரும் கிடைக்கவில்லை. மூவரும் தாங்களே வில்லியத்தைக் கொன்றுவிடுவதென முடிவு செய்தபோது காவலாளிகள் சிலர் ஒருவனை விரட்டிக் கொண்டு வந்தனர். ஓடி வந்தவன் மூவரும் ரகசியமாக சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த வீட்டில் வந்து ஒளிந்து கொண்டான். வந்தவன் தான் போராட்டக்காரன் என்றும் சுதந்திரத்திற்காக வடக்குப் பக்கமாக உள்ள ஊர்களுக்குச் செல்ல உள்ளதால் விடியும் வரை இங்கு தங்கிக் கொள்ளலாமா எனவும் கூறி அனுமதிக் கேட்டான்.

கோல்டன் வில்லியத்தை கொன்று விடப் போகிற திட்டத்தை அவனிடம் கூறினார்கள். அவன் தனது பெயர் மலையரசன் என்றும் தனது மனைவியுடன் பிரசவத்திற்காக அவளது வீட்டிற்கு இங்கு வந்தபோது கோல்டன் வில்லியம் தங்க நாணயங்களையும் ஆபரணங்களையும் பறித்துக் கொண்டதோடு தனது அத்தையை அடித்து கொன்றுவிட்டு தனது மனைவியையும் மகனையும் தூக்கிலிட வேண்டுமென்று கப்பலேற்றி விட கொண்டு வந்து விட்டான் எனவும், அவர்கள் இந்த நகரத்தை விட்டுச் செல்வதற்கு முன் எப்படியாவது காப்பாற்றி தன்னுடன் வடக்குப் பக்கமாக உள்ள ஊர்களுக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டுமென அவர்களிடம் சொன்னான். கப்பலில் அழைத்துச் செல்ல உள்ள கைதிகள் அடைத்து வைத்துள்ள விடுதிக்கு ரகசியமாக உப்புமூட்டையை தனது மனைவி மூலம் விடுதியின் பின் பக்கமாக உள்ள கழிப்பறைகளின் எலி பொந்துகளின் வழி அனுப்பிக் கொண்டிருந்தான். இன்று இரவு அப்படி செய்து கொண்டிருக்கும் போது காவலாளிகளால் பிடிக்கப்பட்டு பின் தப்பி இங்கு ஓடி வந்ததாகவும் மூவரிடமும் சொன்னான்.

அம்மூவரும் வில்லியத்தைக் கொல்வதற்கு முன் மலையரசனின் மனைவியையும் அவனது ஆண் குழந்தையையும் காப்பாற்றித்தர வேண்டுமெனவும் அதே போல கடற்கரை விடுதியிலுள்ளவர்கள் அனைவரும் தாங்கள் கடல் நகரத்திற்கு கப்பலில் செல்வதாக மட்டுமே நம்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் அவர்கள் தூக்குதண்டனை கைதிகள் என்று அவர்களுக்குத் தெரியாது. எனவே அவர்களை தப்பிக்கச் செய்தால் என்ன என்றும் அதற்கான திட்டத்தைப் பற்றியும் பேச ஆரம்பித்தனர். அதன் படி மலையரசன் உப்புமூட்டையைச் சுமக்கும் நூறு கோவேறுக் கழுதைகளை ஓட்டிக் கொண்டு விடுதிக்குச் சென்றான்.

கோவேறு கழுதைகளில் மூன்று நான்கு கழுதைகளில் சில வெடிகளைக் கட்டி வைத்திருந்தனர். அதோடு மட்டுமில்லாது கழுதைகளுக்கு நாட்டுச் சாராயத்தை பருகச் செய்திருந்தனர். விடுதியின் வாசல் அருகே சென்றதும் வெடியை வெடிக்கச் செய்தான் மலையரசன். வெடிச்சத்தத்தினால் சிப்பாய்களின் கவனம் முழுதாய் கழுதைகளின் மேல் இருந்த சமயம் கழுதைகளின் பின்னால் வந்த உப்பு வியாபாரிகள் மூவரும் மலையரசனுடன் விடுதியின் உள்ளே சென்றனர். அதற்கு முன்பாகவே பத்துக்கு மேற்பட்ட கழுதைகள் விடுதியினுள் நுழைந்து திசை தெரியாது ஓடிக் கொண்டிருந்தன. சிப்பாய்கள் கழுதைகளை விரட்டுவதா பிடிப்பதா என்ற குழப்பத்தில் விடுதியில் நுழைந்த உப்பு வியாபாரிகளையும் மலையரசனையும் கண்டு கொள்ளவில்லை. மலையரசன் தனது மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு திரும்பும்போது நள்ளிரவில் வந்த பெண் கைதிகளான மூவரும் அவர்களுடன் தப்பித்துக் கொண்டனர். அவர்களை முதுகிழவி இல்லத்தில் பார்த்த ஞாபகம் மான்சிங்கிற்கு இருந்தது.

உப்பு வியாபாரிகள் மற்ற கைதிகளை இங்கிருந்து தப்பித்துப் போங்கள் என விரட்டினார்கள். அவர்கள் கழுதைகளின் சப்தத்திலும் சிப்பாய்களின் ஓட்டத்திலும் குழப்பம் கொண்டிருந்தனர். உப்பு வியாபாரிகள் மூவரும் உங்களை அந்தமானுக்கு கப்பலில் கொண்டு சென்று தூக்கிலிடப் போகிறார்கள். இப்போதே தப்பித்துக் கொள்ளுங்கள் என கைதிகளைப் பிடித்து வெளியேற்றிக் கொண்டிருந்தனர். கைதிகளில் சிலர் அவர்களது சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் போல வெளியேறினர். சிலர் நம்ப முடியாத ஆச்சரியத்துடனும், பயத்துடனும் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தனர். கைதிகளில் பாதிப்பேர் தப்பித்துக் கொண்ட பிறகு தான் சிப்பாய்களால் நிலவரத்தினை அறியமுடிந்தது. உடனடியாக அபாய சங்கை ஒலிக்கச் செய்து விடுதியின் வாசல் கதவுகளை அடைத்தும் விட்டார்கள்.

மான்சிங்கும் பொல்லியும் தங்களிடம் இருந்த ராபர்ட்டிற்குத் தரவேண்டிய கடிதத்துடன் அவர்களது இருப்பிடத்திலேயே குழப்பத்துடன் நின்றிருந்தனர். பொல்லி இதுவரை தான் பொய் கடிதத்தையே இல்லாத நபர்களுக்கு தந்து வந்ததும் இப்போதுதான் உண்மையிலேயே இருக்கும் நபருக்கு உண்மையான கைக்கடிதத்தைத் தரப்போகின்ற உற்சாகத்தில் இருந்தாலும் கூட தங்களை தூக்கிலிடப் போவதாகக் கூறுவதை பாதி நம்பியும் நம்பாமலும் நின்றிருந்தான். உப்பு வியாபாரியிடம் மான்சிங், "தாங்கள் கைகடிதம் கொண்டு செல்பவர்கள்.

உலகில் கடைசியாக இருக்கும் ஊரில் உள்ள வீட்டிற்கு அக்கடிதத்தைக் கொண்டு போகிறோம். உலகின் கடைசியிலுள்ளவர்களைப் பார்க்கப் போகிறோம்" என்றான். உப்பு வியாபாரிகள் அவனை ஏசிவிட்டு இருவரையும் பிடித்து வெளியே தள்ளினார்கள். உப்பு வியாபாரி ஒருவன் பொல்லியிடமிருந்த கடிதத்தைப் பிரிக்க முயற்சித்தான். ஆனால் பொல்லி தர மறுத்தவனாகவும் விடுதியை விட்டுச் செல்ல மறுத்தவனாகவும் நின்றான். துப்புப் பணியாளர்கள் மூலம் கலவரத்தை அறிந்து வந்து சேர்ந்த கோல்டன் வில்லியம் தன்னுடன் இருபது குதிரை வீரர்களையும் ஐம்பது துப்பாக்கி ஏந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்திருந்தான்.

உப்பு வியாபாரிகள் மூவரும் வில்லியத்தைக் கொல்ல இதுதான் தருணமென நினைத்துப் பிடிவாதமாக வெளியேறாமலிருந்த இருவரையும் விட்டுவிட்டு விடுதியின் வாசலுக்கு வந்தனர். விடுதியை விட்டு வெளியேறும் அனைவரையும் சுட்டுக் கொன்றபடி இருந்தனர் சிப்பாய்கள். கோல்டன் வில்லியத்தை நெருங்கியபோது, உப்பு வியாபாரி மூவரையும் சுட்டு விட்டனர். மூவரது கையிலும் கத்திகள் இருந்ததையும் அப்போதுதான் பார்த்தான் வில்லியம். அதன் பிறகு அவன் காசநோய் வந்து இறக்கும் வரை கத்தியும் உப்பு வியாபாரிகளின் முகங்களும் கடற்கரை சம்பவமும் நினைவிற்கு வந்தபடியே இருந்தது. கடைசி வீட்டிற்கான கடிதம் - அது நிஜமாகவே போய்ச் சேர்ந்தது.

Pin It