மதுரை ஜில்லா உத்தமபாளையம் தாலு காவில் உள்ள ராமசாமிநாயக்கன் பட்டி என்கிற கிராமத்திற்கு 1876ஆம் ஆண்டு ஹென்றிவெல் மார்ஷெல் என்கிற ஆங் கிலேய மருத்துவர், காலரா peai_000தடுப்பு முகாம் ஒன்றை நிறுவி, மருத்துவம் செய்வதெற்கென வந்தார். அவருடன் பதினேழு உதவியாளர்களும் அவரது மகள் மேரிஜோசப்பின்னும் அவரது மகன் ஹென்றி லியோ போர்டும் வந்தார்கள். அவர்கள் கிராமத்திற்கு வந்தபோது நோய் முற்றிய பலரையும் கிராமத்தைவிட்டு வெளியேற்றி மயா னத்திற்கு அருகில் வைத்திருந்தனர். வெள்ளைக்காரர்கள் தங்களது நம்பிக் கைகளையும் தெய்வத்தையும் பழிக்கின் றனர் என்று கிராமத்தவர்கள் அவர்கள் தந்த மருந்துகளை உதாசீனப்படுத்தினார்கள். தெய்வத்திற்குத் தரும் கொடையைச் செய்யாததால் வந்த தவறென்று நம்பிய வர்கள், வயிற்றுப்போக்கிற்கும் வாந்திக்கும் இடையே விழாக்கள் கொண்டாடி சேவல் பலியும் கிடா பலியும் தந்தார்கள். பெருமழை பெய்து இந்தக் கிராமத்தை அழித்துச் சென்றால் தான் இங்குள்ள மற்றவர்கள் பிழைப்பார்கள் என்று ஹென்றிவெல் நினைத்தார்.

மார்ஷெலுடன் வந்த மருத்துவர் களுக்குக் கிராமத்தில் தங்கியிருக்கப் பிடிக்கவில்லை. அக்கிராமத்தில் துடியான தெய்வங்களும் இறந்துபோனவர்கள் மனித ரூபங்களிலும் மிருக ரூபங்களிலும் நடமாடுவதாக கேள்விபட்டிருந்தனர். அவர்கள் தங்களது பணியை முடித்துக்கொண்டு விரைவில் ஊர் திரும்ப வேண்டுமென்று பயந்தபடியிருந்தனர். ராமசாமிநாயக்கன்பட்டியில் தொடர்ந்து நான்கு நாட்கள் பெய்த மழையில் குளத்திலும் ஏரியிலும் புதிய நீர் ஊறத் தொடங்கியது. கடும்மழைக்குப் பயந்து அவருடன் வந்த மருத்துவ சிப்பந்திகள் அவரிடம் சொல்லாமல் கிராமத்தைவிட்டு வெளியேறினார்கள். பின்னர் தன் மகளையும் மகனையும் தனக்கு உதவியாக வைத்துக்கொண்டு ஜனங்களுக்கு சிகிச்சை செய்தார். மார் ஷெல்லிற்கு கிராமத்திலிருந்த முத்துசாமி என்பவர் மருத்துவ விடுதிக்குத் தேவை யானவற்றைச் செய்து தருவதிலும் பக்கத்து கிராமங்களுக்குச் சென்றுவர குதிரைவண்டி ஓட்டுவதுமாக மார்ஷெல்லிற்கு உதவியாக இருந்தார்.

காலராவில் இறந்துபோனவர்கள் பல ரும் தங்களுக்குப் பிரியப்பட்டவர்களு டன் பேசுவதற்கும் விருப்பமானவற்றை உண்பதற்கும் இரவுகளில் வருவார்களென கிராமத்தவர்கள் நம்பினார்கள். அவர்களின் நினைவாக அவர்களுக்குத் தேவையான பலகாரங்களைத் தயாரித்து வைத்தபடி காத்திருந்தனர். சேவல்களும் குருவிகளும் எங்கிருந்தோ பறந்து வந்து கூரைகளின் மேல் அமர்ந்து சப்தமிட்டுக் கொண்டிருந்ததை மேரிஜோசப்பின் தான் அகால வேளைகளில் பார்த்தாள். அவளுக்குக் கிராமத்தில் நடக்கும் எதுவும் ஆச்சரியத்தைத் தரவில்லை. பதிலாக இறந்துபோன தனது தாயின் நினைவாக அவளும் பலகாரங்களைச் செய்து ஏதாவது ரூபத்தில் தனது அம்மா வந்து தன்னைப் பார்ப்பாள் என்று காத்திருந்தாள்.

கிராமத்தில் காலரா மேற்கொண்டு பரவாமல் இருப்பதற்குச் செய்த முயற்சி வெற்றியடைந்த பிறகும் கிராமத்தை விட்டு வெளியேறாமல் தங்கிருந்தார் மார்ஷெல். அவரை பணியிடத்திற்குத் திரும்பும்படி உத்தரவு வந்தபோதிலும் அவர் ராமசாமிநாயக்கன்பட்டியை விட்டுச் செல்லாதது ஏன் என்று புரியாத தாகயிருந்தது. வேப்பமரமும் புளியமர முமாக இருந்த ராமசாமிநாயக்கன்பட்டி அவரை ஏனோ மயக்கி வைத்திருந்தது. மேரிஜோசப்பினுக்கும் கிராமம் பிடித்து விட்டது. தாய் இல்லாத தனக்கு ஊரின் மரங்களும் அதன் நிழல்களும் செம்மண் கட்டிடங்களும் போதுமான மன அமைதியைத் தருகிறதெனத் தன் தந்தையிடம் கூறினாள். ஹென்றி, தான் இந்தக் கிராமத்திலேயே கடைசிவரை வாழ்ந்து கழிக்க வேண்டுமென நினைத்தார். அப்போது அவரது மகன் லியோபோர்டிற்குப் பதினைந்து வயது முடிந்து பதினாறாவது வயது ஆரம்பித்திருந்தது. விக்டோரியாவின் விசுவாசியான அவர் தனது மகனுக்கு ராணியாரின் மாமா மற்றும் சாக்ஸிகோபர்க் இளவரசனின் பெயரையே சூட்டி அழைத்து மகிழ்ந்தார். மார்ஷெல் தனது மகன் லியோ போர்டையும் அவரது மனைவியின் தம்பியையும் தலைமையிடத்திற்குத் திரும்புவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு கிராமத்தில் தனக்கென வீடொன்றைக் கட்டி தங்கிக் கொண்டார்.

அவரது மகள் ஜோசப்பின் ஊரிலிருந்த பெண்களுடன் தானும் ஒருத்தியாக மாறியபடியிருந்தாள். அவளது உடம்பும் மனமும் ராமசாமிநாயக்கன்பட்டி கிராமத்துப் பெண்களின் செய்கைளையும் கனவுகளையும் கொண்டிருந்தது. தாயில்லாத ஏக்கமும் அவளிடமிருந்து எப்படியோ விடுபட்டுப் போனது. மரு தாணி வைத்துக்கொண்டு இரவில் உறங் குவதும் தாயம் விளையாடுவதும் வீட் டுக்கு விலக்காகியிருக்கும் பெண்களுக்கு உதவி செய்வதுமாக இருந்தாள்.

அவளிருந்த வீட்டில் பௌர்ணமி இரவு ஒன்றில் தனது தாயைப் பார்த்ததாக ஹென்றியிடம் சொன்னாள். அவர் நம்ப வில்லை. அவள் தனது தோழிகளிடம் சொன்னதும் இந்தக் கிராமத்தில் இறந்து போனவர்கள் வேறு ஏதேனும் ரூபத்தில் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் வாழ்வார்கள் என்று சொன்னார்கள். ஜோசப்பின் தன் தாயைச் சந்தித்த அறை யில் கிராமத்துப் பெண்களைப்போல வேப்பெண்ணெய் விளக்கு ஏற்றுவதும் அரிசிமாவில் கோலமிடுவதுமாக இருந்தாள்.

காலரா மருத்துவ முகாம் முடிந்ததும் ஹென்றிமார்ஷெல் ஒரு நூலகத்தை நிறுவவேண்டுமென நினைத்தார். அப்போது அவரிடம் எந்தப் புத்தகமும் முன் யோசனையும் இல்லை. தனது வீட்டின் முன் அறையில் தன்னிடமிருந்த மருத்துவப் புத்தகங்களை மட்டுமே வைத்திருந்தார். அவரது நெருங்கிய நண்பர்களிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்கள் தந்த வரலாறு மற்றும் கடல் வழி பயணம் குறித்தப் புத்தகங்களைக் கொண்டு முதலில் நூலகம் தொடங்குவதென முடிவுசெய்தார். அதன் பிறகு மருத்துவ சேவைக்கென்று, தான் பெற்ற தங்கப் பதக்கங்களை விற்று நிலம் வாங்கினார். நூலகம் கிராமத்திற்கு வரும் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே முதலில் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.

ஹென்றிவெல், முத்துசாமியின் இரண்டாவது மகனை நூலகத்திற்கு தன் உதவியாளராக வைத்துக்கொண்டார். அவரது மகன் புலவர் பட்டம் பெற்றவர். முத்து.சொக்கன் தமிழ் நூல்களைத் தனது விருப்பத்திற்கு வாங்கி நூலகத்தில் அடுக்கி வைத்துக்கொண்டார். தமிழ் தெரிந்த ஆங்கிலேயே அதிகாரிகள் நகரத்திலிருந்து இங்கு வந்து புலவரிடம் நூல்களைப் பற்றித் தெரிந்து கொண்டதோடு நகலெடுத்தும் சென்றனர்.

இப்போதும் ஹென்றி எழுதிய நாட்குறிப்பு புத்தக வடிவில் மார்ஷெல் நினைவு நூலகத்தில், அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் அறையில் வைக்கப் பட்டிருக்கிறது. அதிலிருந்து சில வரிகள் பின்வருமாறு: "நூலகத்தின் கட்டடத் தினை விஸ்தரிப்பு செய்ய வேண்டு மென்ற ஆசை உண்டு. கட்டடத்தைச் சுற்றி கிராமத்திலிருப்பதுபோல புளிய மரங்களும் வேப்பமரங்களும் வைக்க விரும்பி ஏற்பாடு செய்தேன். இரண்டு தென்னைக் கன்று கிடைத்தன. முகப்பில் வைத்து வளர்த்தால் கட்டடம் முழுமையடைந்துவிடும். இப்போது கட்டடத்தின் பின்பக்கத்திலுள்ள தென்னையை முத்துசாமியின் மேற்பார்வையில் மேல் பரவையிலிருந்து வரும் நல்லகன்ணு சகோதரர்கள் தென்னங்காய்கள் பிடுங்கி, நூலகத்தின் கட்டட வேலை செய்யும் தொழிலாளிகளுக்குத் தருகிறார்கள். நூலகத்தின் கட்டடத்திற்கு முத்துசாமிதான் தேக்குக் கட்டைகளைக் கொண்டு வருவதற்கும் அதனை உள்ளூரிலிருந்த தச்சாசாரிகளை வைத்து ஜன்னல் மற்றும் கதவு நிலைபடி செய்ய ஏற்பாடு செய்தது. 12 தச்சாசாரிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக இரவும் பகலுமாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர் களுக்கு ஊதியமாக தினமும் மதிய நேர உணவும், இரண்டு அணா பணமும் தந்து வர ஏற்பாடு செய்திருக்கிறேன். ஒரு மேஜையை ஜோசப்பின் விருப்பத்திற்கிணங்க செய்து கொண்டிருக்கின்றனர். அந்த மேஜையின் மேல்மட்டம் கண்ணாடியைப் போன்று எதிரேயிருப் பவர்களைப் பிரதிபலிக்க வேண்டுமென நன்கு விளைந்த வேங்கை மரத்தில் செய்யத் தொடங்கியுள்ளனர். மேஜை யின் எதிரேயிருப்பவர்களின் உருவமும் முகமும் தெரியவேண்டும். அது மட்டு மல்லாது மேஜையில் விழும் உருவத் தின் பிம்பம் அறையின் மேலுள்ள கட்டடக் கூரையில் பிரதிபலித்து எனது அறைக்கு எதிரேயிருக்கும் மற்றொரு அறையிலிருந்து பார்க்கும்படியாக அமைத்துத்தர வேண்டியும் அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.

நூலகத்தின் முதல் உதவியாளர் முத்து. சொக்கன்:

ஹென்றிவெல் மார்ஷெல் நினைவு நூலகத்தின் முதல் உதவியாளராக இருந்தவர் முத்து.சொக்கன் என்பவர். இவர் முத்து சாமியின் இரண்டாவது மகன். மூத்தப் பிள்ளை பழனிச்சாமி கிராமத்தில் தச்சு வேலை செய்துகொண்டிருந்தார். பழனிச்சாமிக்கும் ஹென்றிவெல் துரைக்கும் பகையிருந்தது உண்மையே. தனது தந்தையும் தம்பியும் ஒரு ஆங்கிலேயனிடம் வேலை செய்வதை விரும்பவில்லை. ஊரிலிருந்த தச்சாசாரிகள் யாவரும் நூலக வேலைக்கென சென்றபோது பழனிச்சாமி மட்டும் வேலைக்குச் செல்லாமல் இருந்தார். அவர் சென்ற அறுவடை காலத்தின் போது வெள்ளை குல்லா அணிந்து கொண்டு ஆங்கிலேய சிப்பாய் வைத்திருக்கும் மிதி வண்டியைப் போல் ஒன்றை ஓட்டிக்கொண்டு சென்றார். தன்னைக் கடந்து மூவர்ணக் கொடியோடு மிதி வண்டியில் சென்ற வரை ஹென்றிவெல் அழைத்து ஓங்கி கன்னத்தில் அறைந்தார். மூவர்ணக் கொடியைக் கிழித்து தனது காலடியில் போட்டுக்கொண்டார். அன்றிலிருந்து பழனிச்சாமி வெல்துரையின்மீது கோபமாக இருந்தார். கிழித்துப் போட்டக் கொடியை எடுத்துக்கொண்டு சென்றதோடு, தைத்து தனது வீட்டில் வைத்துக்கொண்டார். முத்துச்சாமிக்கும் இதெல்லாம் தெரிந்துதான் இருந்தது. அவர் இரட்டைக்காளை மாட்டு வண்டியை சுத்தம் செய்வதும் வெல்துரைக்கு வண்டியோட்டிச் செல்வதுமாக இருந்தார்.

ஹென்றிவெல் மார்ஷெல்லைக் கொன்று விடுவதற்குப் பழனியும் அவரது நண்பர்களும் திட்டமிட்டிருந்தனர். இந்த ரகசியத் திட்டத்தை அவரது தந்தை எப்படியோ தெரிந்துகொண்டு துரையின் பயணத்தின்போது பாதுகாப்பாகக் கூடவே சென்று வந்தார். கிராமங்களிலிருந்து நகரத்திற்குச் சென்று வருவதே துரையின் நீண்ட தூர பயணமாகயிருந்தது. நகரத்தில் கடுமையான பாதுகாப்பும் சிப்பாய்களின் கண்காணிப்பும் இருந்தது. நகரத்தில் பழனிச்சாமி யினால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கிராமத்தில்தான் துரையைக் கொல்வதற்குத் திட்டமிடுவான் என்றும் அவர் நினைத்திருந்தார். முத்துசாமி இதனைத் துரையிடம் சொல்லியிருக்கிறார். துரையும் தன்னை பழனிச்சாமியினால் ஒன் றும் செய்யமுடியாது என்று சொன்னதோடு தனது தினசரி நாட்குறிப்பில் இதனை எழுதியிருக்கிறார்.

தனது தம்பி மார்ஷெல்லிடம் வேலை செய்வது பழனிச்சாமிக்குப் பிடிக்கவில்லை. சொக்கனிடம் PeoplesChoice-copyஎவ்வளவு சொல்லியும் அவன் நாற்காலியில் உட்கார்ந்து பணிபுரியும் அலுவலை விட்டு விடத் தயாராகயில்லை. பழனியும் அவரது நண்பர்களும் வெல் துரையைக் கொன்றுவிடுவதென முடிவு செய்து அதற்கெனக் கொல்லத்திலிருந்து நாட்டு வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் வரவழைத்தனர். அவர்கள் ஹென்றிவெல் நடமாடும் இடத்தில் சுடுவதற்கென மறைந்திருந்தபோது மேரிஜோசப்பின் தற்செயலாக அதனைக் கவனித்தவளாகத் தனது தந்தையைக் காப்பாற்றியிருக்கிறாள். இதனை மார் ஷெல் தனது நாட்குறிப்பில் 13.07.1926 என்ற தேதியில் எழுதியிருக்கிறார். அதே தேதியில் ஊரில் இருந்த கோயிலின் திருவிழாவிற்கு தலைமையேற்று விருந்துண்டு வந்ததாகவும் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்திற்குப் பிறகு பழனிச்சாமி ஊரைவிட்டுப் போய்விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது யாரும் அறியாத ரகசியமாக இருக்கிறது. பழனிச்சாமியை மதுரையில் பகத்சிங் இறந்தன்று ஹர்த்தால் செய்ய ஊர்வலமாகச் சென்ற கும்பலோடு கிராமத்தினர் சிலர் பார்த்தாகக் கூறியிருக்கின்றனர். அதற்குப் பிறகு யாரும் அவரைப் பார்க்கவில்லை. இச் சம்பவம் நடந்து முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஹென்றி மார்ஷெல் இயற்கையாகவே நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். அவரது உடலை மேரி ஜோசப்பின் விருப்பத்திற்கிணங்க நூலக மிருந்த கட்டடத்தின் பின்பகுதியில் அடக்கம் செய்தார்கள். அவ்விடத்தில் நினைவு சதுக்கம் ஒன்றையும் கட்டினார்கள்.

ராமசாமி நாயக்கன் பட்டியிலிருந்த முக்கியஸ்தர்கள் முத்து.சொக்கனை பணி நீக்கம் செய்துவிட்டு பொன்னம்பலம் என்பவரின் மகனைப் பணியில் அமர்த்தினார்கள். அவரது பெயர் செல்வ நாயகம் பிள்ளை என்பதாகும். தனது மகனைப் பணிநீக்கம் செய்தது முறையல்ல என்று ஊரின் நடுவே அமர்ந்து உண்ணாநோன்பு போராட்டமிருந்தார் முத்துசாமி. அவரது உடல் நலம் கருதி ஊரிலிருந்த பெரியவர்கள் போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டார்கள். அதற்குப் பிறகு அவர் ஊரைக் காலி செய்துவிட்டு அருகிலிருந்த பாளையத்திற்குச் சென்று தனது எஞ்சிய நாட்களைக் கழித்து இறந்தார்.

1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாத கோடை காலத்தில் ஹென்றி லியோபோர்டு ராமசாமிநாயக்கன்பட்டிக்கு வந்து சேர்ந்தார். அவர்தான் நூலகத்திற்குத் தனது தந்தையின் நினைவாக ஹென்றிவெல் மார்ஷெல் நினைவு வாசக சாலை என்று பெயரைச் சூட்டினார். தன் தந்தையின் நினைவுகளுடன் வாழ்ந்து விடவேண்டு மென்று விரும்பியவர் செல்வநாயகம் பிள்ளையைத் துணைக்கு வைத்துக் கொண்டு இருபது வருடங்கள் கிராமத்தில் வாழ்ந்து பிற்பாடு லண்டனிலிருந்த தனது நகரத்திற்குச் சென்றிருக்கிறார். முத்து.சொக்கனிடம் தனது தந்தையைப் பற்றி ஒன்றும் கேட்டுக்கொள்ளாமலும் தனது தங்கை ஜோசப்பினுடன் பேசாம லும் கடைசி வரை இருந்தார்.

மேரிஜோசப்பின் நூலகத்திற்கு எப்போ தேனும் வந்து செல்வாள். அவள் பெரும்பாலும் தனது தந்தையின் மருத்துவ நூல்களையே புரட்டிக் கொண்டிருப்பாள். அந்நூல்களைப் படிக்கும் போது தனது தந்தையின் ஞாபகம் தன்னை வந்தடைவதாகவும் தனது தந்தை தன்னுடன் பேசுவதாகவும் அவள் தன் தோழிகளிடம் சொன்னாள். நூலகத்தினுள் இருந்த புத்தக அலமாரிகளிலிருந்து கீழே விழும் புத்தகங்களை ஹென்றி மார்ஷெல் எடுத்துத் திரும்பவும் அடுக்கி வைப்பதுபோல பல முறை ஜோசப்பின் பார்த்திருக்கிறாள். அவள் அவ்விடத்தை நெருங்கும்போது உருவம் மறைந்துவிடுவது தான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதனை முத்து. சொக்கனிடம் கூறியபோது “தான் பணி புரிந்த நாட்களில் இதேபோல துரை அவர்களின் அறையில் ஒரு வெள்ளைக் காரப்பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பார். நான் உள்ளே சென்றால் அந்த பேச்சுக்குரலும் ஆளும் மறைந்திருக்கும்'' என்றார். ஜோசப்பின் தனது அறையில் தினமும் விளக்கேற்றுவதும் தனது அம்மா விரும்பிய பண்டங்களைச் செய்து வைப்பதுமாக இருந்தாள்.

முத்துவீரு.செல்வநாயகம்:

முத்துவீரு.செல்வநாயகம் பிள்ளை இரண்டு ஆண்டுகள் இந்த நூலகத்தில் பணிபுரிந்துள்ளார். இறந்துபோன ஹென்றிவெல் மார்ஷெல்லின் புகைப்படத்தை உள் அறையில் வைத்துக் கொண்டு அவரை நூலகத்தின் மேலதி காரியாகவும் தன்னை நூலகத்தின் உதவியாளராகவும் கருதி வேலை செய்தார். அவரது முயற்சியில் நூலகத்திற்குத் தேவையான சில நூல்கள் வாங்கியதைப் பற்றிய குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.

"நூல்கள் ஏதுமில்லாமல் வாசகசாலை பாழாகிவிடுமென கருதினோம். நூலகத்திற்கு வந்தமர்ந்து செல்பவர்கள் வெட்டி வீண்பேச்சுக்கும் அவர்களிடையே குரோதங்களை வளர்ப்பதற் கும் வாசகசாலை மாறிவிடும். ஆகையால் நூல்களை வாங்குவதென்றும் ஜனங்களைக் குறிப்பாக ஸ்தீரிகளை அங்கத் தினர்களாகச் சேர்த்துக் கொள்வதென்றும் நாம் முடிவு செய்திருக்கிறோம். நூல்களை வாங்குவதற்கென ஊர்களிலுள்ள பெரிய தனக்காரர்களைச் சந்தித்துப் பேசவும் அவர்களது உதவிகளைப் பெற்றுக்கொள்வதென்றும் முறையே அவர்களது பெயர்களை குறிப்பெடுத்துக் கொண்டோம்'.

பெரிய தனக்காரர்களின் பெயர்களும் அவர்கள் வாங்கித்தருவதாக உறுதி யளித்திருக்கும் நூல்களின் பெயர்களும் பின்வருமாறு:

1. ப.வை.கார்மேகம்: அமுத அடிகளார் எழுதிய தேன் தமிழ் இசை.

2. சி.மருதபண்டராம்: கோவிலூர் மணி எழுதிய திருக்குறள் என்னும் மாமருந்து.

3.க.பிச்சமூர்த்தி: பாரதிதாசன் எழுதிய கவிதை திரட்டு.

4. ர.பெரியஅம்பலத்தார்: பாரதியாரின் கவிதைகளும் கதைகளும்.

5.பெரியபட்டி நிலக்கிழார் மாந்தோப்பு முத்தப்பன்: தொல்காப்பியம்.

6.ப.வை. சூசையப்பர்: ந. மாணிக்கம் எழுதிய போராட்டமும் தியாகமும் (இந்த நூல் சுதந்திர போராட்டத்தின் போது தடை செய்யப்பட்டிருந்த போதிலும் செல்வநாயகத்தின் முயற்சியால் நூலகத்திற்கு வாங்கப்பட்டது.)

7.இ. அழகர்சாமி தேவர்: பகத்சிங்கின் கடிதங்கள்

8. பொ.மயில்சாமி: வேம்பு ஐயர் எழுதிய ஆரோக்கியத்தின் 1008 வழிகள்

9. க.வேங்கிடசாமி செட்டியார்: பட்டி னத்தார் பாடல்கள்

10. கோ.பெரியநாயகி: தெனாலிராமன் கதைகளும் மேலும் சிறுவர்களுக்குத் தேவையான கதைத் திரட்டும். செல்வநாயகம் சிலோனுக்கும் பர்மா வுக்கும் வியாபாரத்திற்கென சென்று விட்டதால் அவருக்குப் பின் சவரி முத்து பண்டாரம் என்பவர் லியோ போர்டிற்கு உதவியாளர் பணிக்கென அமர்த்தப்பட்டார்.

சவரிமுத்து:

1942ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு நாள் அதிகாலையில் மதுரையிலிருந்த சவரி யின் தங்கையும் அவளது குழந்தை களும் அவரது வீட்டிற்கு வந்தார்கள். நகரத்தில் சிப்பாய்களுக்கும் ஜனங் களுக்குமிடையே சண்டை நடந்து வரு வதாகவும் கல்எறிதல் கடைஅடைத்தல் என்று ஊரே களேபரமாக இருப்பதாகச் சொன்னார்கள். தனது வீட்டில் புகுந்து வீட்டிலிருந்த நெல்லையும் மண்பானை களையும் நடுதெருவில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர் என்று அழுதாள். சவரியின் கணவனுக்கு கையிலும் மண்டையிலும் அடி விழுந்திருந்தது. நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடந்தது என்றும் கலவரம் அடங்க இன்னும் சில நாட்களாகும் என்றும் சொன்னார்கள். சவரிக்கு கவலையாக இருந்தது. தனது வீட்டில் அவர்களை தங்க ஏற்பாடு செய்து தந்தார்.

சவரிமுத்து பண்டாரம் நூலகத்தில் அமர்ந்திருந்தபோது தந்தி செய்தி வந்தது. நூலகத்தை சில தினங்கள் அடைத்து வைத்திருக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. கலவரம் முடிந் ததும் செய்தி தருவதாக அதில் குறிப் பிடப்பட்டிருந்தது. மதுரையில் எல்லா இடங்களிலும் தந்திக் கம்பிகளை அறுத் தெறிந்துவிட்டு கடைகளை அடைக்கச் சொல்லி புரட்சியாளர்கள் தெருவில் ஓடிக்கொண்டிருக்கின்றனர். மேலும் வீடுகளில் புகுந்து கையில் அகப்பட் டதை எடுத்துக்கொண்டு செல்கின்றனர். சிப்பாய்கள் அவர்களை கைது செய்ய முயன்றுவருகின்றனர் என்று தகவல் அனுப்பியிருந்தார்.

லியோபோர்டு எவ்வளவு சொல்லியும் சவரிமுத்து நூலகத்தை மூடவில்லை. அவர்கள் தன்னை அடித்துக்கொன்றா லும் தான் நூலகத்தை மூடப்போவதில்லையென்று நூலகத்தைத் திறந்து வைத்திருந்தார். அன்றுதான் அவர் முதன் முதலாக வருகைப்பதிவேடு முறையை அறிமுகம் செய்துவைத்தார். அதன்பிறகு தினசரி நூலகத்திற்கு வருபவரின் பெயர் களை எழுதச்சொல்லி அவர்களைக் கையொப்பமிடச் சொன்னார். அவர் பணியிலிருந்த நான்கு வருடங்களில் நூலகத்திற்கு வந்து வாசித்துச் சென்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 1300. வரவு செலவு கணக்குகளை லியோ போர்டு எழுதியிருக்கவில்லை.

இடைப்பட்டி மங்களம் சுந்தர பாண்டி யன் ராவ்பகதூர்:

ஆங்கிலத்தில் பண்டித்தியம் பெற்ற சுந்தரபாண்டியன் ராவ்பகதூர் என்பவர் ஹென்றி லியோபோர்டிற்கு உதவி யாளராகப் பணிக்கு வந்தார். ராவ் பகதூர் அவர்கள் பொறுப்பிலிருந்தபோது ராம சாமிநாயக்கன்பட்டியில் பெரிய அம்மை பரவி குழந்தைகளும் முதியவர்களும் இறந்துள்ளனர். இதனை ராவ் அவர்கள் தனது சொந்த நாட்குறிப்பில் பதிவு செய் துவைத்துள்ளார். பெரிய அம்மைக்கு பயந்து ஊரையும் வீட்டையும் விட்டுச் செல்லும் ஜனங்களைப் பார்ப்பதற்கு மனமில்லாமல் வாசகசாலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வேறு ஊரில் போய் தங்கியிருந்து வருவதென்று முடிவு செய்து சென்றுள்ளார்.

அவர் திரும்பி வரும்போது ஆடுகளும் பூனைகளும் கோழிகளும் கேட்பாரற்று வாசக சாலையின் முகப்பில் திரிந் ததைப் பாடலாகவும் பின்னர் கதை யாகவும் எழுதியிருக்கிறார். (பார்க்க ராவ்பகதூர் pirakoru-iravuகதைகள் வெளியீடு, முத்துமீனாட்சி வெளியீடு மதுரை 1946ஆம் ஆண்டு.) ராவ்பகதூர் எழுதிய நூல் ஹென்றி வெல் நினைவு நூலகத்தில் இல்லை. இந்த நூலை உறுப்பினர்கள் விலை கொடுத்து வாங்கவேண்டுமென்றே நூலகத்தில் இடம்பெறாமல் செய்திருக்கிறார். ராவ் பகதூரின் மனைவி முத்து மீனாட்சி இந்தப் புத்தகத்தின் சில பிரதிகளை எரித்துவிட்டதாகவும் அதற்குக் காரணம் தனது கணவனுக்கும் கங்குவார்பட்டி பாளையப் பகுதியிலுள்ள பெண்களு டன் தொடர்புள்ளதாகச் சந்தேகப்பட்டு ஆத்திரத்தில் இப்படி செய்துவிட்டதாக வும் ஒரு தகவல் உண்டு. உண்மையில் அத்தகைய பெண்கள் என யாரு மில்லை. அவரது பாதுகாப்பிலிருந்தப் பெண்கள் பெரிய அம்மை நோயுற்ற வர்களே. அதில் கணவனை இழந்தவர் களும் பிள்ளைகளை இழந்தவர்களுமாக பல பெண்கள் இருந்தனர். அவர் எழுதிய நூலில் மொத்தம் 40 கதைகள் உள்ளன. நாற்பது கதைகளும் பெரிய அம்மையில் உயிரிழந்தவர்களைப் பற்றி யும் அநாதையாக இருக்கும் அவர்களது குழந்தையைப் பற்றிய சித்திரங்களாக வுமே உள்ளன.

இந்நூல் பரவலாக நகரங்களிலும் பின் னர் ராமசாமிநாயக்கன்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமத்திலும் வாசிக்கப்பட்டு கவனமானதும் முத்து மீனாட்சி தனது உறவினர்களுடன் சேர்ந்துகொண்டு கள்ளப்பிரதிகளை தயாரித்திருக்கிறார். (பார்க்க: ராவ் பகதூர் கதைகளும் கள்ளப்பிரதிகளின் புராணமும். தேசிகன் எழுதியது ராவ் பகதூர் கதைகளின் இரண்டாம் பதிப் பிற்கான (1947ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்) முன்னுரை. இந்த நூல் இப் போது நூலகத்தில் உள்ளது.) தேசிகனின் முன்னுரையிலிருந்து சில வரிகள்:

ராவ்பகதூர் எழுதிய கதைகள் அச்சு அசல் தமிழ்நாட்டின் வறுமையையும் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டு வந்த தன் பலாபலனையும் அவலத்தையும் வெளிப்படுத்துகின்றன. அவர் 40 கதை கள் மட்டுமே எழுதியுள்ளார். 44 கதை கள் கொண்டதாக வரும் பனுவல் உண் மையில் மேற்படியாரின் உரிமம் பெறா மலேயே அச்சிட்டு வெளிவந்ததாகும். வாசகர்கள் அதனை அறிந்து புரிந்து கொள்ளும்படி இதன் மூலம் அறிவுறுத் தப்படுகிறார்கள். உண்மையான கதைத் தொகுப்பில் நாற்பது கதைகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள கதைகளான நான் கும் அவர் போலவே எழுத முயன்று தோல்வியுற்றப் படைப்பாகும். இதனை அவரது துணைவியார் செய்தது தமிழுக்கு ஒரு துரதிருஷ்டமே. அந்த நான்கு கதைகளும், இத்தொகுப்பின் ஆசிரியரை வஞ்சித்து, திட்டமிட்டு மானபங்கம் செய்ய முயல்பவையே. அஃதொரு படைப்பே அல்ல. திட்டித் தீர்க்கும் வசைச்சொல் வார்த்தைக் கூட்டமே. இதனை வாசகர்கள் யாரும் வாங்கி இத்தகைய நூல்களுக்கு ஆதரவு தந்து வளர்ச்சிக்கு உதவக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

சின்ன தவசியாப்பிள்ளை:

ராவ்பகதூருக்குப் பிறகு சின்ன தவசியா பிள்ளை என்பவர் லியோபோர்டிற்கு உதவியாளராக பணிபுரிந்தார். அவர் எழுதிய நாட்குறிப்பிலிருந்து சில வரிகள்: நூலகத்துக்கு வருபவர்கள் சுத்த மின்மையால் நூலகமும் வந்து செல் லும் மனுஷாள்களின் சுகாதாரமும் கெடு கிறது. காலணிகளுடன் வருவதைத் தவிர்க்க வேண்டி பலதடவை எழுதி வைத்த அறிவிப்புப்பலகையை யாரோ கிழித்துவிடுகின்றனர். நுழைவுக் கட்டணத்தை உறுப்பினர்கள் யாரும் இதுவரை சரிவர செலுத்தவில்லை. (நுழைவுக் கட்டண முறை எப்போது கொண்டுவரப்பட்டது என்பது சரியாக எந்தக் குறிப்பிலும் இல்லை) நிலுவை யிலுள்ள தொகையை வசூலிக்கவும் கட்டணம் செலுத்தவும் வேண்டி வைத்த அறிவிப்புப்பலகையைக் கூட வரும் ஜனங்கள் கிழித்துப்போட்டுச் சென்றுள்ளனர் என்பது வெட்கக் கேடா னதாகும். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1478. கையிருப்பு பணம் 1600. லியோபோல்டு செலவு கணக்கை காட்டவில்லை.

தவசிப்பிள்ளை:

சின்ன தவசியாபிள்ளைக்குப் பிறகு அவரது மகன் நூலகத்திற்கு உதவியாள ராகப் பணிக்கு வந்தார். அவரது பணி நாட்களின்போது கலவரக் கும்பல் ஒன்று நூலகத்திற்குள் புகுந்து புத்தகங் கள் அடுக்கிவைக்கபட்டிருந்த அலமாரி களைச் சரித்துவிட்டு புத்தகங்களை எடுத்துக் கீழே போட்டுவிட்டுப் போயி ருக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை; என்ன காரணம் என்றும் புரியவில்லை. அவர்களைப் பற்றிய குறிப்புகள் எதுவும் நூலகத்தின் குறிப்புப் புத்தகங்களில் இடம் பெறவில்லை. (நகரத்திலிருந்த வர்களில் சிலர் வாசக சாலையில் சர்க்க ரையையும் கோதுமையையும் அரிசியை யும் பதுக்கிவைக்க வேண்டுமெனக் கேட்டதாகவும் அதற்கு லியோபோர்டு மறுத்ததாகவும் பின்னர் தகவல் தெரிய வந்தது.) அவர்கள் வந்து சென்ற திலிருந்து பெண்கள் யாரும் வாசக சாலைக்கு வருவதில்லை. நகரத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் சரிவர அடையாளம் காணமுடியவில்லை. சேதமடைந்த பொருட்களின் மதிப்பைக் கருதி உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்தார் தவசிப் பிள்ளை. போலீஸ்காரர்களும் ஆட்களை அடையாளம் கண்டு ஆவண செய்வ தாகத் தகவல் தெரிவித்தனர். சேதமானப் பொருட்களின் விவரம் பின்வருமாறு: இரும்பு நாற்காலிகள் மொத்தம் பனிரெண்டு. மரத்தில் செய்யப்பட்ட நாற்காலிகள் ஏழு. இது தவிர லியோ போர்டின் அறையிலிருந்த மான் கொம்பு திருடுபோயுள்ளது. சுதந்திரத் தின்போது ஹென்றிவெல் மார்ஷெல் லிற்கு அன்பளிப்பாக வந்த காட்டு மூலிகைகளால் வரையப்பட்ட இந்திய வரைபடம் இரண்டு மூன்றாகக் கிழிக்கப்பட்டிருந்ததைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அன்றைய நிலவரப் படி மொத்த உறுப்பினர்களின் எண் ணிக்கை 1650. கையிருப்பு பணம் 2000. தினசரி செலவு 5 ரூபாய்.

சிங்கராயர்:

தவசிப்பிள்ளைக்குப் பிறகு நெடுநாட் களாக நூலக பராமரிப்புக்கென யாரு மில்லாமல் அலுவலகத்தை லியோ போர்டு மட்டும் தனியாக கவனித்து வந்துள்ளார். அவர் நகரத்திற்குச் சென்று தனக்குத் தேவையான பொருட்கள் வாங்கும் நாட்களில் நூலகத்தை பூட்டி விட்டுத்தான் செல்வார். பிறகு ஜோசப் பின் சிபாரிசின் பேரில் சிங்கராயர் என்பவரைப் பணியில் தற்காலிகமாக அமர்த்தினார். சிங்கராயரின் சகோதரி யும் மேரிஜோசப்பினும் தோழிகளாக யிருந்திருக்கின்றனர். அதனடிப்படை யில்தான் இந்தப் பணி வழங்கப் ட்டி ருக்கிறது என்று ராமசாமிநாயக்கன் பட்டியிலிருந்தவர்கள் பேசினார்கள். சிங்கராயருக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது. ஆனால் ஞாபகத் திறனுக்குப் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் இரண்டு மாதங்கள் மட் டும்தான் பணிபுரிந்தார். பிறகு உள்ளூரி லிருந்த காங்கிரஸ்காரர்கள் கேட்டுக் கொண்டதன்படி, அப்போதிருந்த அந்நகர சட்டமன்ற உறுப்பினரின் சிபாரிசின்பேரில் லியோபோர்டு அவரை பணிவிலக்கினார். இவர் பணி புரிந்த நாட்களில் கீழே தவறி விழுந்த நூல்களை ஹென்றிவெல் மார்ஷெல் எடுத்து அலமாரிகளில் வைத்ததாகவும் அதனைப் பார்த்தவர்கள் அலறி ஓடிய தாகவும் ஒரு செய்தி உண்டு. உண்மை யில் அப்படியாக ஏதுமில்லை என்று லியோபோர்டு தனது நூலகத்திலுள்ள தினசரி குறிப்பேட்டில் இதனைப் பதிவு செய்திருக்கின்றனர். மொத்த உறுப்பி னர்களின் எண்ணிக்கை 1800. கையிருப்பு பணம் 2500. தினச்செலவு 7 ரூபாய்.

இடைபட்டி மங்களம் சு.பா. சுருளிமணி:

ராவ்பகதூர் சுந்தர பாண்டியனின் மகன் சுருளிமணி என்ற மணி தன் தந்தையைப் போலவே தானும் நூலகத்தில் பணிபுரிய வேண்டுமென விரும்பி விண்ணப்பித்துள்ளார். இவர் பணியில மர்ந்ததும் முதல்வேலையாக ராவ் பகதூர் எழுதிய கதைகளை எடுத்து அதிலிருந்த இரண்டாவது கதையின் நான்காவது பக்கத்தைக் கிழித்து எறிந்தார். அக்கதையில் முத்துமீனாட்சியைப் பற்றிய தவறான தகவல் ஒன்று இருந்ததாக லியோபோர்டு கருதினார். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1845. கையிருப்பு பணம் 2500. தினச்செலவு 7 ரூபாய்.

ஆவடையம்மாள் பெரியநாயகி:

ஹென்றிவெல் மார்டிஷெல் நினைவு நூலகத்தில் உதவியாளர்களாக பணி புரிந்தவர்களில் முதல் பெண்மணி இவர்தான். அதுமட்டுமல்லாது விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்தவரும் இவரே. சிறந்த நூலகருக்கான பரிசினை இரண்டு முறை பெற்றிருக்கிறார். இவரது மகளுக்கு நூலகத்தின் உதவியாளர் பணி வழங்கப்பட்டது. இவரது மகளின் பெயர் கவிக்குயில். சுதந்திரப் போராட் டத்தின்போது இவரது கணவர் இரண்டு முறை கொடி பிடித்து ஊர்வலமாக சென் றதால் பாளையங்கோட்டை சிறையில் அடைத்திருக்கிறார்கள். இன்றும் பெரிய நாயகிக்கு தியாகிகளுக்கு வழங்கப் பட்டு வரும் பென்ஷன் பணம் வந்து கொண்டிருக்கிறது. இது தவிர உள்ளூ ரில் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினரின் நெருங்கிய உறவினர் என்பதால் ஹென்றிவெல் மார்ஷெல் நினைவு நூல கத்தில் நூலக உதவியாளராக பணிக்கு அமர்த்தப்பட்டார். மேலும் அதுவரை இருந்த 458 ரூபாய் ஊதியத்தை 765 ரூபாயாக உயர்த்தப்பட்டதும் இவரது பணிக் காலத்தில்தான். தனது மகளை யும் நூலகர் பணிக்கு அமர்த்தப்பட வேண்டுமென பல்கலைக் கழகத்தில் அஞ்சல்வழி கல்வி மூலம் பயிலச் செய்து தேர்வுத் தாளை பணம் தந்து திருத்தச் செய்திருக்கிறார். இது மிகவும் ரகசியமாகவே நடந்து முடிந்த செயலா கும். ஆனால் கவிக்குயிலின் கணவரின் மூலம் இந்த ரகசியம் வெளியாகிவிட்டது அவளுக்கு வெட்கமாகப்போய்விட்டது.

ஆ.பெ.கவிக்குயில்:

கவிக்குயிலுக்கு இளம் வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது. அவளது திருமணம் ஊரில் ஒரு முன் உதார ணமாக இருக்கவேண்டுமென்று குயில் காதலித்தவனையே திருமணம் செய்து வைத்தாள் பெரியநாயகி. ஆனால் கவிக் குயிலுக்கு ஏற்கனவே அவன் தாலிக் கட்டிவிட்டான் என்றும் அதனை மறைக் கவே அவள் திருமணம் நடத்துவது போல நாடகமாடியிருக்கிறாள் என்றும் பேசிக்கொண்டனர். அதுவும் நூலகத்தில் வைத்து திருமணம் செய்து வைத்ததுதான் மறுநாள் செய்தித்தாள் முழுக்க வெளியாகி பரபரப்பாக பேசப் பட்டதற்குக் காரணம். கவிக்குயில் காத லித்த பையன் வீட்டில் அவர்களை நுழையவிடவில்லை. பிறகு பெரிய நாயகி பெரியவர்களின் கால்களைப் பிடித்துக் கெஞ்சிக்கூத்தாடி தன் மகளை அவர்களுடன் வாழ பிரயாசைப்பட்டி ருக்கிறாள்.

கவிக்குயிலின் கணவன் வீட்டில் தின மும் சண்டையும் சச்சரவுமாக இருந்தி ருக்கிறது. ஒருவர் மாற்றி ஒருவர் சண்டையிட்டுக்கொள்வதும் அதற்கு பஞ்சாயத்து செய்துவைப்பதற்கென யாரையாவது அழைத்துவருவதுமாக இருந்திருக்கிறார்கள். இதனை பயன் படுத்திக்கொண்ட பெரியநாயகி தன் மகளுக்குத் தனியாக வீடு பார்த்து குடி வைத்தாள். இருந்தபோதிலும் அவர் களது சண்டை ஓயவில்லை. அவர்களை சமாதானப்படுத்த ஒரு நாள் பெரிய நாயகியும் ஒரு நாள் பக்கத்து வீட்டுக் காரர்களை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள்.

குயிலுக்கு அவனுடன் வாழ்வதற்கே பிடிக்கவில்லை. ஏன்தான் இவனைப் போய் காதலித்துத் தொலைத்தோமோ என்று தினமும் அழுதாள். அப்போது தான் நூலகத்தில் தின சம்பளத்தின் அடிப்படையில் பெரியநாயகி அவளை பணியில் அமர்த்தினாள். தினமும் அவ ளுக்கு இருபது ரூபாய் என்று கையெ ழுத்து வாங்கிக்கொண்டு அந்தப் பணத்தை அவளே வைத்துக் கொண் டாள். மாவட்டமைய நூலகத்திற்கு பெரியநாயகி செல்லும்போது அவள் தான் நூலகத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பாள். அப்படி பெரியநாயகி சென்றிருந்த ஒரு நாள் மாலை நேரத்தில் நூலகத்தின் உள் அறையில் விளக்கு எரிந்துகொண்டி ருப்பது போன்று வெளிச்சம் தெரிந்தது. கவிக்குயில் அந்த அறைக்குச் சென்று பார்த்தாள். யாருமில்லை. ஆனால் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவ ளுக்கு பயமும் பதற்றமும் கூடியது. உடனே நூலகத்தை விட்டு வெளியே வந்து வாசலில் நின்றுகொண்டாள். தனது அம்மா வரும்வரை அவள் நூல கத்திற்குள்ளேயே செல்லவில்லை.

பெரியநாயகியும் அவளும் உள்ளே சென்று பார்த்தபோது சிட்டி விளக்கில் வேப்பெண்ணெய்யில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுண்டக் காய்ச்சிய பாலின் வாசம் அறை முழுதும் நிறைந்திருந்தது. அதற்குப் பிறகு அவர்கள் அந்த அறையைப் பூட்டிவைத்துவிட்டார்கள்.

பெரியநாயகிக்கு யாரோ மையநூலகத்தில் தபால் வழி கல்வியைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். தனது மகளையும் நூலகருக்குப் படிக்க வைத்துவிட வேண்டுமென படிக்க வைத்தாள். அவளது தேர்வுத் தாள்களைத் திருத்தும் இடத்திற்குச் சென்று பணம் தந்து பாஸ் செய்ய ஏற்பாடு செய்தாள். பிறகு யார் யாரையோ பிடித்து வேலையில் அமர்த்திவிட்டாள். பெரிய நாயகியான தனக்கு இதயத்தில் ஓட்டை உள்ளது. உயர்ரத்த அழுத்தம் உள்ளது. எப்போது இதயம் பலஹீனமாகும் என்று சொல்ல முடியாது. தனக்குப் பிறகு ஆண் வாரிசு இல்லாத தனது குடும்பத்தைக் காப்பாற் றும் பொருட்டு தனது மகளுக்குப் பணி யில் முன் உரிமை தரவேண்டுமென மனு மேல் மனு எழுதிப்போட்டு கவிக் குயிலுக்கு வேலை வாங்கித்தந்து விட்டாள். அவளுக்கு வேலை வாங்கித் தந்த கையோடு தனக்கும் விருப்ப ஓய்வும் வாங்கிக்கொண்டாள்.

கவிக்குயில் வேலை கிடைத்த மறு தினமே தனது கணவனுடன் சேர்ந்து வாழப்பிடிக்கவில்லை என்று ஊர் பஞ் சாயத்தில் புகார் செய்தாள். இப்போதும் கணவனும் மனைவியும் பிரிந்து தனித் தனியாகத்தான் வாழ்கின்றனர். அவன் இன்னமும் திருமணம் செய்துகொள்ள வில்லை. என்றாவது நூலகத்திற்கு வந்து செய்தித்தாளை எடுத்து வைத்துக் கொண்டு தன் முகத்தை மறைத்தபடி அவளைப் பார்த்தபடியிருப்பான். அவ ளும் தன்னைப் பார்ப்பதைக் கண்டும் காணாதது போல் விட்டுவிடுவாள்.

ஆறுமுகப்பெருமாள்:

ஹென்றி லியோபோர்டு இந்தியாவை விட்டுச் சென்றபோது அவரது இளமை காலம் முழுதும் கழிந்திருந்தது. தனது இளமை காலத்தையும் தனது வாலிப பருவத்தையும் இந்தியாவில் குறிப்பாக தென்தமிழ்நாட்டில் கழித்துவிட்டுச் சென்றதைப் பற்றி அவர் ஏராளமான நூட்கள் எழுதியுள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் தனது தங்கையுடனும் கடைசி வரை ஒன்றும் பேசாமல் இருந்து வந்த அவரைப் பற்றி கதைகள் ராமசாமிநாயக்கன்பட்டியில் ஏராளமாக இருந்துவந்துள்ளன.

அவர் சென்ற பிறகு நூலகத்திற்கு நிர்வாக கமிட்டி ஒன்று நகரத்தின் சட்ட சபை உறுப்பினரால் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து அந்த நிர்வாகமே ஹென்றிவெல் மார்ஷெல் நினைவு நூலகத்தைப் பராமரித்து வருகிறது. நூலகத்தில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் மட்டுமல்லாது ஆயுத பூஜை தீபாவளி பொங்கல் ஆடிப் பெருக்கு ஆகிய நாள்களில் பூஜை செய்து குங்குமம் வைத்து வழிபாடு செய்வார்கள். நூலகத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 3125. சந்தா செலுத்தி புதுப்பித்துக் கொண்ட வர்கள் 2078. ஆண்கள் 1060. பெண்கள் 1018. 1147 உறுப்பினர்கள் யார் என்றே தெரியவில்லை. அவர்களது பெயரும் விலாசமும் பொய்யானதாக இருக்கிறது.

இந்த நூலகத்தின் தற்போதைய நூலகர் ஆறுமுகப்பெருமாள். அவருக்கு உதவி யாக சரவணன் என்கிற இளங்கலை பொருளாதாரம் படித்த இளைஞனும் நூலகத்தைப் பெருக்கி சுத்தம்செய்து தண்ணீர் எடுத்து வருவதற்கு மங்கை யர்க்கரசி என்கிற பெண்ணும் பணியில் இருக்கின்றனர். சரவணனுக்குத் தின சம்பளமாக ரூபாய் 30ம் மங்கையர்க் கரசிக்கு மாதச்சம்பளமாக ரூபாய் 250ம் வழங்கப்பட்டுவருகிறது. இந்த நூலகத்தின் தினசரி வருகைப் பதிவேட்டில் கையெழுத்தைப் பதிவு செய்வதற்காக சரவணனும் மங்கையும் முறையே இருபது கையொப்பங்கள் காலையிலும் மாலையிலும் வெவ்வேறு பேனாக்களில் தங்களது கைப்படவே எழுதி வருகின்றனர். நூலகத்திற்கு வழக்கமாக வரும் நபர்களில் முத்திரு ளாண்டி, தங்கமுத்து, கார்மேகம் ஆகியோர் கையொப்பமிடும் பழக்கம் இல்லாதவர்கள். நூலகத்தின் அலுவலக நேரம் முடிந்த பிறகும் அவர்கள் மூவரும் வெளியே வந்து அமர்ந்து பேசுவது தினசரி வாடிக்கையாக இருக்கிறது. அவர்களில் கன்னித்தீவு படக்கதை பார்க்கும் பழக்கம் கார்மேகத்திற்கு மட் டும்தான் இருக்கிறது. முத்துருளாண் டிக்கு குமுதமும், சினிமா எக்ஸ்பிரசும் பார்க்கும் பழக்கமிருக்கிறது. நூலகத்தில் சினிமா இதழ்களே அதிகமாக திருடு போகிறது. வார இதழ்களில் குமுதத்தை யும் ஆனந்த விகடனையும் அதிகமாக திருடிச் செல்கின்றனர். திருடு போகின்ற புத்தகங்களைக் கணக்கெடுத்தால் வருடத்தில் வந்திருக்கின்ற பத்திரிகைகளில் பாதிக்கு மேல் காணாமல் போயிருக் கிறது. புத்தகங்களில் தமிழ்வாணன் எழு திய கதைப்புத்தகங்களும் லெட்சுமியின் நாவல்களும் அதிகமாக திருடு போயி ருக்கின்றன. சரவணனும் ஆறுமுக பெரு மாளும் பலமுறை திருட்டைக் கண்டு பிடிக்க முயன்றிருக்கின்றனர். யார் தொடர்ந்து திருடுகிறார்கள் என்று ஆறு முகத்தினால் கண்டுபிடிக்க முடியவில்லை. சரவணனுக்குத் தெரியாமல் மங்கையர்க் கரசியின் 10 வயது மகனை வேவு பார்க்க நூலகத்தில் உட்கார வைத்தார்.

புதிதாக புத்தகங்கள் தேடிவருபவர்களிள் எண்ணிக்கை இவர்களது பணி நாட்களில்தான் அதிகமாகயிருந்தது. தேடி வருபவர்கள் கேட்கும் புத்தகங் களின் பெயர்கள் அவர்கள் இதுவரை கேள்விப்படாததாகவும் நூலகத்திற்கு வராததாகவும் இருந்தது. பாலாஜி அந்த புத்தகங்களைக் குறிப்பெடுத்து வைத்து அடுத்த வருடாந்திரக் கூட்டத்தில் வாங் குவதற்கு ஏற்பாடு செய்வதாக சொன்னான். அந்தப் புத்தகத்தின் பெயர் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

1. ஹென்றிவெல் மார்ஷெல் எழுதிய நூலகக்கோட்பாடுகளும் மேலாண்மையும்.

2. மேரி ஜோசப்பின் எழுதிய தென் தமிழக கிராமப்பெண்களும் நம்பிக்கைகளும்.

3. ராவ்பகதூர் சாஸ்திரிகள் எழுதிய ராவ் பகதூர் கதைகள்.

இந்தப் புத்தகங்கள் எதுவும் நூலகத்தில் இல்லை. சரவணனும் ஆறுமுகப்பெரு மாளும் பழைய அறைகளிலிருந்த புத்தக அடுக்குகளில் தேடியும் இந்தப் புத்தகம் கிடைக்கவில்லை.

நூலகத்தின் பின்னாலிருந்த கல்கட்டட சமாதியில் ஹென்றிவெல் மார்ஷெல் என்று பொறிக்கப்பட்டிருந்ததையும் சிலுவைக் குறியிடப்பட்டிருந்ததையும் எப்போதாவது சில வெள்ளைக்காரர்கள் கூட்டமாக வந்து பார்வையிட்டதோடு பிரார்த்தனையும் நடத்திச் செல்கின்ற னர் என்பது எல்லோரும் அறிந்த விசய மாக இப்போதும் இருக்கிறது. தங்கள் பால்யகால வயதில் ஹென்றிவெல் மார்ஷெலைப் பார்த்த சில வயதானவர் களுக்கு மட்டும் எப்போதாவது கீழே கிடந்தப் புத்தகங்களை ஹென்றிவெல் துரை அவர்கள் எடுத்துப் புத்தக அலமாரியில் அடுக்கி வைப்பதைப் பார்த்திருக்கிறார்கள்.

Pin It