பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி தொடங்கி, நமது ஆக்கங்கள் அனைத்தும் சுவடிகளிலிருந்து அச்சுக்கு மாறத் தொடங்கின. இம் மாற்றம் உருப்பெற்றதற்கான துல்லியமான வரலாறுகள் இன்னும் எழுதப் பெற வில்லை. இனிமேல்தான் அவ்வரலாறு எழுதப்பட வேண்டும். அதற்கான தேவையும் அண்மைக்காலங்களில்தான் உருப்பெற்று வருகிறது.

சங்க இலக்கியப் பிரதிகள் ஆறுமுக நாவலர் தொடக்கம் இரா.இராகவையங்கார் முடிய 1851-1918 என்ற காலப்பகுதியில் அச்சு வாகனம் ஏறின. 1887இல் சி.வை.தா. தான் பிள்ளையார் சுழிப்போட்டார். அது உ.வே.சா.வின் அயராத உழைப்பால் முழுமைப் பெற்றது. உரைக்காரர்களால் பாட்டு, தொகை என்று அழைக்கப்பட்ட பிரதிகள், பேரா.ச.வையாபுரிப் பிள்ளை அவர்களால் ‘சங்க இலக்கியம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழ்விடு தூது ‘மூத்தோர் பாடியருள்’ ‘பத்துப்பாட்டும் எட்டுத்தொகை’யும் என்றே பேசுகிறது.

பேரா.ச.வையாபுரிப்பிள்ளையை முதன்மைப் பதிப்பாசிரியராகக் கொண்டு உருவாக்கப்பட்ட பழம்பாடல்களுக்குச் சங்க இலக்கியம் என்று பெயர் சூட்டப்பட்டதற்கும், அப்பிரதிகளைப் பதிப்பித்தற்கும் நெருங்கிய உறவு இருப்பதாகக் கருதலாம். பதிப்பாசிரியர் என்பவர், தாம் பதிப்பிக்கும் பிரதியின் பல்வேறு பரிமாணங்களையும் ஆய்வு செய்பவராக இருக்க வேண்டும். பதிப்பு என்பது வெறுமனே ஓர் ஊடகத்திலிருந்து பிறிதொரு ஊடகத்திற்கு மாற்றம் செய்யும் யாந்தீரிகப் பணியல்ல. அந்த வகையில்

பேரா.ச.வையா புரிப்பிள்ளை 1938இல் பதிப்பித்த ‘புறத்திரட்டு நூல்’, ஒரு சுவடியை எவ்வகையில் அச்சுக்குக் கொண்டு வருவது என்பதற்கான முழு வளர்ச்சியைக் காட்டு வதாக அமைந்துள்ளது. 1891இல் முதல் எழுதி அச்சிடப்பெற்ற மனோன்மணீயம் நாடகத்தை 1922இல் பேரா.ச.வையா புரிப்பிள்ளை பதிப்பிக்கிறார். அவருடைய முதல் நூலும் அதுவே.

“சென்னை சர்வகலா சங்கத்தாரால் பாடமாக நியமனம் பெற்ற பகுதிகளை ஆசிரியரவர்கள் தாமே நன்கு பரிசோதித்துச் சிற்சில இடங்களில் திருத்தஞ் செய்து பதிப்பித்திருந்தார்கள். இத் திருத்தமான பாடங்களையே இப்பதிப்பிற் கையாண்டிருக்கிறேன். ஆனால் ஒப்பு நோக்க விரும்புவார்க்கு முதற்பதிப்புப் பாடங்களும் விவரண குறிப்பில் தரப்பட்டிருக்கின்றன”. (மனோன்மணீயம்-முன்னுரை-2)

இவ்வகையில், அவர் பதிப்பித்த முதல் நூலான மனோன்மணீய நூலில் அநுபந்தம் பகுதியில் 24 பக்கங்கள், முதல் பதிப்பு, ஆசிரியர் திருத்திய பாடம், திருத்தம் செய்யப்பட்ட பகுதி என்று விரிவாகத் தந்திருக்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், தாம் பிறந்த ஆண்டில் எழுதப்பட்ட நூலை, தமது 31 வயதில் பதிப்பித்த அவரது அநுபவம், அதில் அவர் செயல் பட்டிருக்கும் முறை, தமது சமகால நூலையே மீண்டும் அச்சிடும் போது, அதனைப் பதிப்பிக்கும் மனநிலை என்பது, அவரது ஒரு வடிவத்தில் உரு வான ஒன்றை அடுத்த வடிவத்திற்குக் கொண்டு வரும் போது செய்ய வேண்டிய பணிகளைக் காட்டுவதாக அமைகிறது. மறுஅச்சையே மறுபதிப்பு என்று கொண்டாடும் எந்திரமய, சந்தையே முழுநோக்கமாகக் கொண்ட இன்றைய வணிக உலகில் இவ்வகைப்பணிகள் கூர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டியவை ஆகும்.

சமகாலப் பிரதி குறித்த மறு அச்சாக்கத்தில் பதிப்பைச் செயல்படுத்திய பேராசிரியர், பழம் பிரதிகள் அச்சாக்கத்தில் எவ்வகையில் செயல் பட்டார் என்பதையே புறத்திரட்டு தெளிவுபடுத்துகிறது. பதிப்புப்பணியில் ஈடுபட விரும்பும் எவரும் பேராசிரியரிடன் ‘புறத்திரட்டை’ பல முறை வாசித்துவிட்டுச் செயல்படலாம். புறத் திரட்டு என்னும் தொகுப்பு நூலைப் பதிப்பித்தப் பேராசிரியர், தொகுப்பு மரபு என்பதை மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார். இவ்வகைத் தொகுப்பு மரபு, உலகம் சார்ந்த செந்நெறி மரபில் எவ்விதம் இடம்பெறுகிறது. அது தமிழில் எவ்வகையில் உருப்பெற்றுள்ளது. சங்கத் தொகுப்பு மரபிலிருந்து புறத்திரட்டு தொகுப்பு மரபு எவ்வகையில் வேறுபடுகிறது என்பது குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார். புறத்திரட்டு வழியாகப் பேசப்படும் அறம், பொருள், இன்பம் என்ற பாகுபாடு தமிழ் மரபில் தொடக்க காலம் முதல் செயல்பட்டு வருவதாக வும், வட மொழி மரபிலிருந்து தமிழ் பெறப் பட்டது அன்று என்றும் புறத்திரட்டு பதிப்புரையில் பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

புறத்திரட்டைப் பதிப்பித்த செழுமையான அநுபவத்தோடு பேராசிரியர் சங்கப் பிரதிகளின் பதிப்புப்பணியில் ஈடுபடுகிறார். 1922இல் மனோன்மணீயம் பதிப்பித்த பிறகு, அகராதியின் ஆசிரியராகச் செயல்பட்ட காலங்களில் 24 பிரபந்தங்களையும் இரண்டு நிகண்டுகளையும், கம்பனின் பதிப்பை எவ்வகையில் கொண்டு வருவது என்பது குறித்த விரிவான ஆய்விலும் அவர் ஈடுபட்டிருந்தார். அவரது கம்பன் பதிப்பு பற்றிய திட்டங்கள் மிக விரிவானவை. அது குறித்த விரிவான தகவல்களை பேரா.ச.வையாபுரிப்பிள்ளை நூற்தொகுதி ஐந்தில் உள்ள இராமாயணப் பதிப்பு முயற்சிகள் (ப.396) என்ற கட்டுரையையும், அதன் பின்னிணைப்பில் நாங்கள் தொகுத்துத்தந்துள்ள, பேராசிரியர் கம்பன் பதிப்பு தொடர்பாக மேற் கொண்ட முயற்சிகள் குறித்தக் கடிதங்களையும் வாசிக்க வேண்டுகிறேன். ஒரு பதிப்பாசிரிய னின் செயல்பாடு என்பதைப் புரிந்துகொள்ள அது உதவக்கூடும்.

பேராசிரியருக்கு இவ்வகையில், அகராதிப் பணியில் 1926 முதல் செயல்பட்டு 1936இல் முடித்திருந்த அநுபவம், நிகண்டுகள், பிரபந்தங் கள், கம்பன் பதிப்பு தொடர்பாக அவர் கொண்டிருந்த கோட்பாடுகள், குறிப்பாக அவர் பயன்படுத்திய ‘ஆதார நூற்றொகுதி பதிப்பு வரிசை’ என்று நிகண்டுப் பதிப்பு முறையை குறிப்பிட்டமை போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம். இதன் விரிவை அறிய முனைவர் பு.ஜார்ஜ் அவர்களின் நூல் வடிவில் வெளிவந்துள்ள ‘பேரா.ச.வையாபுரிப்பிள்ளையின் பதிப்புப்பணி’ என்ற நூலை வாசிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை விவரித்த பின்புலம் என்பது ஒரு பதிப்பாசிரியன் செயல்பட்ட விரிந்த உலகை காட்சிப் படுத்தவே ஆகும். இந்தப் பின்புலத்தில் தான் அவர் சங்கப் பிரதிகளின் பதிப்பில் ஈடுபடுகிறார்.

1933ஆம் ஆண்டில் ‘சங்க நூற் புலவர்கள் அகராதி’ என்ற தொகுப்பு பேராசிரியர் அவர்களால் உருவாக்கப்பட்டது. சைவ சித்தாந்த சமாஜத்தால் வெளியிடப்பட்டது இத்தொகுப்பு. தமிழில் முதல் முதல் சங்கப் புலவர்கள் அனைவரையும் அகராதி முறையில் ஆவணப்படுத்தியது இப்பணி. ஏறக்குறைய இக்காலம் முதல் சங்கப் பதிப்புப்பணி, சமாஜத்தால் மேற் கொள்ளப்பட்டது. ஏழாண்டுகள் தொடர்ச்சியாக நடை பெற்ற இப்பணியில் முதன்மையானவராக செயல்பட்டவர் பேரா.ச.வையாபுரிப்பிள்ளை என்பதை அதன் 1940 முதல் பதிப்பு உறுதிப் படுத்துகிறது.

பல வடிவங்களிலும் சிதறிக்கிடந்த 18 நூல்களை ஒரே பெயரில் வடிவமைத்த பேராசிரியரின் நுட்பம் மிக முக்கியமானது. அந்த நுட்பம் சார்ந்தே அவர் பதிப்பையும் மேற்கொண் டிருக்கிறார். 1920க்குள் ஏறக்குறைய இப்பிரதிகள் அனைத்தும் அச்சுக்கு வந்துவிட்டன. இவற்றில் இருந்த சொற்கள் இவர் உருவாக்கிய அகராதியில் பெரும் பகுதி இடம்பெற இயலாமல் போனது குறித்தும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அகராதி உருவாக்க முறையில் ஏற்பட்ட சிக்கல் அது.

தமிழில் இதுவரை அறியப்படாத பிரதிகளை அறியும்போது, அது வாசிக்கப்படும் முறைமை என்பது தனித்தே அமையக்கூடும். அண்மையில் அயோத்திதாசர் ஆக்கங்கள் புதிதாக அச்சு க்கு வந்தபோது ஏற்பட்ட புதிய வாசிப்பும் அதன் ஊடாக ஏற்பட்ட சமூக இயங்கு தளங்களையும் நாம் நேரடியாகப் புரிந்துகொள்கிறோம். ஏறக்குறைய இவ்வகையான இயங்குதளம் நிலவிய சூழலில், பேரா.ச.வையாபுரிப்பிள்ளை சங்கப் பிரதிகளுக்குப் ‘புதிய அடையாளம்’ வழங்குகிறார். இவ்வகை அடையாளத்திற்கு அவர் கைக்கொண்ட முறைமைகள் என்பது, தொகுப்பு நெற் சார்ந்த அகராதி முறையியலை உள்வாங்கியதாகும். உ.வே.சா. தமது பதிப்புகளில், அடுத்தடுத்து பல்வேறு பதிப்புகளைக் கொண்டு வரும்போது, பல்வேறு தொகுப்பு களை மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட தொகுப்புகள் ‘ஒரு நிகண்டுக் கலைஞன்’ மேற் கொண்ட தொகுப்பு நெறிசார்ந்தவை. நிகண்டு என்பது அகராதியின் முன்வடிவம். நிகண்டி லிருந்து அகராதியை உருவாக்க வேண்டும். பேராசிரியர் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் நிகண்டுகளைப் பதிப்பித்து ஆதார நூற்றொகுதி என்று குறிப்பிட்டதை இங்கு நினைவுப் படுத்திக்கொள்ளலாம். உ.வே.சா. நிகண்டு வழிப்பட்ட தொகுப்பை மேற்கொண்டார் என்றால்,

பேரா.ச.வையாபுரிப்பிள்ளை அகராதி நெறியில் செய்லபட்டார் என்று கருதலாம். ‘சங்க நூற்புலவர்கள் அகராதி’ இவ்வகையில் அமைந்ததே. இதனை அடிப்படையாகக் கொண்டே பாட்டையும் தொகையும் சங்க இலக் கியமாகப் பேராசிரியர் பதிப்பிக்கிறார். புலவர் அகர வரிசையில் சங்கப் பாடல்கள் பதிப்பிக்கப் பெற்றன. முதல் முறையாக அனைத்து சங்க நூல்களும் ஒருவரின் நேரடிக் கவனத்தில் கொண்டு வரப்படுகிறது. புதிதாகக் கண்டுபிடிக் கப்பட்ட பிரதி முழுமை ஆக்கப்படுகிறது, தரப் படுத்தப்படுகிறது, அதற்கென ஒரு கோவை (Corpus) வழங்கப்படுகிறது. இந்நிலையில், அவர் செய்த பதிப்புப் பணிகள் பின்வருமாறு அமைகின்றன.

-1300 பக்கங்களில் சங்கப் புலவர் அகர வரிசையில் பாடல்கள் அச்சு வடிவம் பெறு கின்றன. ஆசிரியர் பெயர் உள்ளவை, பெயர் இல்லாதவை என்ற விவரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்படுகின்றன.

-எந்தெந்தப் பிரதிகள் எவ்வளவு பாடல்கள் விடுபட்டுப் போயின என்ற கணக்குக் கிடைக் கிறது.

-இப்பாடல்கள் குறித்தக் கர்ணபரம்பரை செய்திகள், தனிப்பாடல்கள் வழி பதிவு செய்யப் படுகின்றன.
-1940 வரை பதிப்பித்தவர்களின் விவரங்கள் தொகுத்தளிக்கப்படுகின்றன.

-சிறப்புப் பெயர் அகராதி தொகுக்கப்படுகிறது.

-புலவர்கள் பாடிய பாடல்களின் எண் ணிக்கை வரையறுக்கப்படுகிது.

-புலவர்களின் பெயர்வகை குறித்தப் பட்டியல் தரப்படுகிறது.

-புலவர்களும் அவரால் பாடப்பட்டவர்களும் குறித்தல் பட்டியல் தரப்படுகிறது.

-அரசர் முதலியோரும் அவர்களைப் பாடியோரும் குறித்த விவரங்கள் தரப்படு கின்றன.

-புலவர்கள் அகராதி, விரிவாகத் தரப்படு கிறது.

-பாட்டு முதற்குறிப்பும், பாட்டெண்களை ஒப்புநோக்கும் அகராதியும் தரப்படுகிறது.

-இப்பதிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பிரதிகளின் அட்டவணை வழங்கப்படுகிறது.

இவ்வகையில் சங்க இலக்கியப் பிரதி அச்சு வடிவில் இதுவரை இல்லாத புதிய பரிமாணத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு 1940இல் கிடைக்கிறது. இப் பணியின் முதன்மையராக பேராசிரியர் செயல்பட்டிருக்கிறார். பேராசிரியரின் இப்பணி குறித்து இக்காலங்களில் அவர் உடனிருந்த அவரது மாணவர் மு.அருணாசலம் அவர்கள் தமது ‘அகராதி அளித்த அறிஞர்’ (நூல்: குமரியும் காசியும்: ப.164) என்ற கட்டுரையில் விரிவாகப் பேசுகிறார். வையாபுரியார் தான் இப்பணியைச் செய்தாரா? ஒரு குழு அல்லவா செய்தது? என்ற கண்ணோட்டத்தில் பின்பு ஆய்வு செய்திருப்பவர்களுக்குச் சமகாலப் பதிவாகிய அக்கட்டுரை சிறந்த ஆவணம்.

பேராசிரியரின் இப்பதிப்பின் மூலமாக அவர் சங்க நூல்களின் காலம் குறித்த மதிப்பீட்டைத் தெளிவுபடுத்துகிறார். (பார்க்க: வையாபுரிப் பிள்ளையின் நூற்களஞ்சியம்-இலக்கியச் சிந்தனை-நூற்தொகுதி ஒன்று) பதிப்பின் மூலம் பிரதிகளின் காலத்தைத்தேடும் பணியை பேராசிரியர் எவ்விதம் சாத்தியமாகியுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது. உ.வே.சா. இப்படியான சிக்கல் பிடித்த வேலைகளில் தமது மூளையைப் போட்டுக் குழப்பிக்கொள்வதில்லை. எந்த ஆண்டில் வந்தால் நமக்கென்ன? என்ற காலப்பிரக்ஞை இல்லாத மரபில் உருவானவர் அவர். வையாபுரிப்பிள்ளை காலப்பிரக்ஞையோடு செயல்பட்டார்.

இவ்வகையில் பேராசிரியர் உருவாக்கிய பதிப்பு என்பது எவ்வகையில், பிற்கால சங்க இலக்கிய ஆய்வுகளில் தாக்கம் செலுத்தியது என்பது சுவையான வரலாறு ஆகும். அவ்வகையில் உருப்பெற்ற இரண்டு ஆய்வுகளை மட்டும் இங்கு சான்றாகக் கொண்டு விவாதிக்கலாம். பதிப்பு என்பது எவ்வகையில் ஆய்வுக்கு மூலமாக அமைகின்றது என்பதற்கு இதனைச் சான்றாகக் கொள்ளலாம். உ.வே.சா.வின் தொகுப்புகள் கூட, பின்னர் பல சங்க ஆய்வுகளாக வடிவம் பெற்றதைக் காண முடியும். தொகுப்பே ஆய்வாக வடிவம் பெறும் போது, பேராசிரியர் தொகுப்பு நெறி சார்ந்த அகராதி வகையில் அமைத்த பதிப்பு, ஆய்வுக்கு மூலமாக அமைந்ததில் வியப்படைய ஒன்றுமில்லை.

-பேரா.ந.சஞ்சீவி அவர்களின் சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணை

-பேரா.மொ.அ.துரை அரங்கசாமி அவர்களின் சங்க காலச் சிறப்புப்பெயர்கள்

ஆகிய இரு ஆய்வுகளுக்கம் வையாபுரிப் பிள்ளை பதிப்புகளுக்குமான உறவு சுவையாக இருக்கிறது. பேரா.ந.சஞ்சீவி அவர்களுடையது ஆய்வு நூல். துரை அரங்கசாமி அவர்களது நூல் எம்.ஓ.எல் பட்டத்திற்காக பேராசிரியர் தெ.பொ.மீ வழிகாட்டுதலில் எழுதப்பட்ட நூல்.

இவ்விரு நூல்களின் மூல ஆதாரம் அனைத்தும் பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளையின் பதிப்பே. இவ்வகையில் செயல் பட்டுள்ளதை விரிவான ஒப்பு நோக்கின் மூலமாகத் தெளிவுபடுத்த முடியும். பேராசிரியர் ந.சஞ்சீவி அட்டவணை என்பது பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளையின் அட்டவணைகளின் விரிவாக்கமே மொ.அ.துரை அரங்கசாமி அவர்களின் ஆய்வு என்பது ‘சிறப்புப்பெயர் அகராதி’யின் விரிவாக்கமே ஆகும்.

இவ்வகையான ஆய்வு வளர்ச்சி சாத்தியமே. எடுத்துக்காட்டாக, பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் கட்டுரைகளில் ஒரு குறிப்பிட்ட துறை தொடர்பான தொடர்ச்சியான வரலாற்று ஓட்டத்தைப் பதிவு செய்வார். அவரது காலம் வரை அவர் பதிவு செய்வார். ஆனால், அம்மரபுத் தொடர்ச்சி என்பது அத்தோடு நின்றுவிடுவதில்லை. அவர் விட்ட இடத்திலிருந்து அடுத்த நிலைக்கு தொடர வேண்டியது நமது கடமை. ‘புலைபாடியும் கோபுர வாசலும்’, ‘அகலிகையும் கற்பு நெறியும்’ என்ற அவரது ‘அடியும் முடியும்’ தொகுப்பு உள்ள கட்டுரைகளை எனது மாணவர்களைக் கொண்டு மேலாய்வைத் தொடர்ந்தேன். ‘காலந்nhறும் நதந்தன் கதை’ என்ற நூல் அப்படி உருவானது தான். அச்சாகாத ஆய்வேடான நூலில் ‘அகலிகை கதைகள்’ என்பதும் அவ்வகையில் அமைந்தது தான்.

இந்தப் பின்புலத்தில் மேற்குறித்தப் பேராசிரியர் ந.சஞ்சீவி, மொ.அ.துரை அரங்கசாமி ஆகியோர் இந்த நேர்மையை தமது ஆய்வில் புலப்படுத்தி யதாக அறிய முடியவில்லை. பேரா.ந.சஞ்சீவி நூலில், இணைப்பு-3 ஆக உள்ள சங்க இலக்கியப் பதிப்புகள் என்ற அட்டவணையில், சமாஜப் பதிப்பு இடம்பெறவில்லை. புலியூர்க் கேசிகனுக்குக்கூட இடம் அளித்த பேராசிரியர் சமாஜப் பதிப்புக்கு இடமளிக்காத சோகம், ஆய்வு உலகில் சோகம். இது குறித்தப் பேராசிரியர் ந.சஞ்சீவியின் 1973இல் வெளிவந்த நூலின் மௌனம் தமிழ் ஆய்வு உலகைக்காட்டும். பேரா.ந.சஞ்சீவி தமது நூலில் பேரா.ச.வையாபுரிப்பிள்ளை குறித்த செய்தி களைக் கமுக்கப்படுத்தியிருப்பதை, ஆதவனை கருமேகங்கள் சூழும் சணநேர நிகழ்வாகக் கருது வோமாகா. இம்மரபை நாம் கைக்கொள்ளாது தவிர்ப்போமாக.

பேரா.தெ.பொ.மீ. வழிகாட்டுதலில் நிகழ்ந்த மொ.அ.துரை அரங்கசாமி அவர்களின் ஆய்வும் இவ்வகையில் அமைந்தது. இதனை நீங்கள் இரண்டு நூலையும் எடுத்து ஒப்பிட்டு வாசித்து மகிழ்க. நான் மகிழ்ந்தேன். அந்நூலின் முன்னு ரையில் காணும் குறிப்பு சுவைப் பயப்பதாக உள்ளது.

“காலம் சென்ற மஹாவித்துவான் ரா.இராகவ ஐயங்கார் அவர்கள் செந்தமிழ்ப் பத்திரிகையில், ‘செந்தமிழ்ச் சான்றோர் திருப்பெயர்’ என்ற தலைப்பில், முதன் முதலில், சங்கக்கால இலக்கியச் சார்பான பெயர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்கள். (செந்தமிழ்: 1: 9: 387) சங்க நூலைப் பதிப்பித்த ஆசிரியர்கள் பலர், இப்பெயர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றுள் சைவ சித்தாந்த மகா சமாஜத்தார் வெளியிட்ட சங்க இலக்கியப் பதிப்பே காலத்தால் பிந்தியது. அதன் பதிப்பாசிரியர் நாற்பத்து மூன்று இலக்கிய இயற்பெயர்களையே கொடுத் திருப்பவும், யாம் அறிந்த அளவில், பாடல்களில் உயிர் நாடியாக வந்துள்ள தொடர்கள் அவற்றை இயற்றிய ஆசிரியர்களின் பெயர்களாக அமையும் அளவிற்குச் சிறந்திடுந்தலை இதுவரையில் யாரும் விளக்கவில்லை. முன்னைய ஆசிரியர்கள், கவிஞரின் பெயராகவுள்ள சொற்றொடர் கவிதையில் அமைந்திருத்தலைக் காட்டுவதோடு அமைந்தனர். எனவே இந்த ஆராய்ச்சி புதுத்துறை ஒன்றை இலக்கிய உலகிற்குக் காட்டுகிறது எனலாம். (மொ.அ.துரை அரங்கசாமி: சங்கக்காலச் சிறப்பு பெயர்கள்: 1980: இரண்டாம் பதிப்பு: முன்னுரை)
இவ்வகையில் பதிப்பு ஆய்வாக எவ்வகையில் அமைய முடியும். அதற்குப் பேராசிரியர் எப்படி வழிகாட்டியுள்ளார் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள முடியும்.

சான்றாதார நூல்கள்:

- உ.வே.சா.சங்க இலக்கியப் பதிப்புகள்
பின் அட்டவணைகள்.

- ச.வையாபுரிப்பிள்ளை-சங்க இலக்கியம்-1978.

- ச.வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியத் தொகுதி ஒன்று.

- ந.சஞ்சீவி சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணை-
1973.

- மொ.அ.துரை அரங்கசாமி. சங்க இலக்கியச் சிறப்புப்பெயர்கள்-1980. இரண்டாம் பதிப்பு.

Pin It