குழந்தைப் பருவத்தில் உங்களை ஈர்த்தவர்கள் யார்?

Rosa Barx என் குடும்பம் என்றுதான் சொல்வேன். என்னுடைய அம்மாவும், அம்மா வழித் தாத்தா பாட்டியும் என்னை ஈர்த்தவர்கள். அவர்களோடுதான் நான் வளர்ந்தேன்.

அம்மா ஒரு சிறிய பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். மக்களின் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. நாங்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தோமோ அப்படியே வாழ வேண்டியவர்கள்தான் நாங்கள் என்பதை அவர் நம்பவில்லை. சட்டப்பூர்வமான ஒரு இனப்பாகுபாடு அமலாக்கப்பட்டுவந்தது. அதற்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டியவர்கள்தான் நாங்கள் என்பதை ஏற்க மறுத்தவர் அவர்.

அந்தச் சிந்தனையை எவ்வாறு உங்கள் மனதில் பதித்தார்?

தன்னுடைய அணுகுமுறை மூலமாகவும், தன்னுடைய பேச்சின் மூலமாகவும்தான். "நாம் மனிதப் பிறவிகள், அப்படித்தான் நாம் நடத்தப்படவும் வேண்டும்"...என்றெல்லாம் பேசுவார்.

அந்த உணர்ச்சியை அவர் உங்கள் மனதில் ஊன்றினார் இல்லையா?

அப்படித்தான் நான் வளர்ந்தேன். ஆம், அவர் அந்த உணர்ச்சியை ஊன்றினார்தான். அதோடு, என் தாத்தா அதே போன்ற கருத்துக்களைக் கொண்டிருந்தார். என் பாட்டிக்கும் அத்தகைய சிந்தனைகள் இருந்தன.

அவர்களுடைய பின்னணி என்ன?

அவர்கள் இரண்டுபேருமே விடுதலைக்கு முன், அடிமை முறை ஒழிக்கப்படுவதற்கு முன் பிறந்தவர்கள். அடிமைத் தனத்திற்குள்தான் அவர்கள் குழந்தைகளாக இருந்தார்கள், அதன் வேதனைகளை ஏராளமாக அனுபவித்தார்கள். அடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகும் கூட நிலைமையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை. எனினும் ஓரளவுக்கு பரவாயில்லை எனலாம். அலபாமா மாநிலத்தின் ஒரு கிராமப்புறத்தில் விவசாயிகளாக இருந்தவர்கள் அவர்கள்.

நிச்சயமாக அவர்கள் கடும் துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் இல்லையா?

ஆம். குறிப்பாகத் தாத்தா மிகவும் அனுபவித்திருக்கிறார்.

நீங்கள் வளர்ந்துகொண்டிருந்த நாட்களில் மோன்ட்கோமரி நகரத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது?

மோன்ட்கோமரியில் நான் வளர்ந்த அந்த நாட்களில் ஒரு முழுமையான இனப்பாகுபாடு சட்டப்பூர்வமாகவே அமலாக்கப்பட்டுவந்தது. ஆம், அதை எதிர்த்து நான் நீண்டகாலமாகப் போராடி வந்தேன். வீரத்தின் தாயகம், சுதந்திர பூமி என்று போற்றப்படும் நாட்டில் நாங்கள் வாழ்கிறபோது எங்களது சுதந்திரம் பறிக்கப்படுவது சரியல்ல என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அன்று அந்தப் பேருந்தில் ஒரு வெள்ளைக்காரப் பயணிக்காக, ஓட்டுநரின் கட்டளைப்படி, எழுந்து நிற்க நான் மறுப்புத் தெரிவித்தேனே-அப்போது நான் (வெள்ளையருக்காக ஒதுக்கப்பட்ட) முன் வரிசையில் உட்கார்ந்திருந்ததாகப் பலரும் சொன்னார்கள். ஆனால் நான் அப்படி முன் வரிசையில் உட்கார்ந்திருக்க வில்லை. பலரும் சொன்னதுபோல் என் கால் பாதம் ஒன்றும் யாரையும் நசுக்கிக் கொண்டிருக்கவில்லை. ஆனால், சட்டப்பூர்வமாகவே திணிக்கப்பட்ட இனப் பாகுபாட்டிற்கு அடிபணிவதில்�
��ை என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதற்காக நான் கைது செய்யப்பட்டேன். அதை எதிர்த்த இயக்கங்கள் ஓராண்டு காலத்திற்கும் அதிகமாக எங்கும் நடந்தன. அந்தப் போராட்டங்களை மற்ற பலரோடு சேர்ந்து தலைமை யேற்று நடத்தியவர்தான் டாக்டர் மார்ட்டின் லூத்தர் கிங். அந்தப் போராட்டத்தால் அவர் முன்னணிக்கு வந்தார். எனக்கு நேர்ந்த இந்த அனுபவம் அமெரிக்கா முழுவதிலும், மற்ற இடங்களிலும் பெரியதொரு இயக்கம் பரவு வதற்குத் தூண்டுதலாக இருந்தது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அந்த மோன்ட்கோமரி பேருந்தில் அன்று என்ன தான் நடந்தது என்பதைச் சொல்ல இயலுமா?

அது 1955ம் ஆண்டு டிசம்பர் 1-ம் நாள். அந்தப் பேருந்தின் வெள்ளையருக்கான முன் வரிசை இருக்கைகள் முற்றிலுமாக நிரம்பியிருந்தன. ஒரு வெள்ளைக்காரப் பயணி ஏறியபோது நான் உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து நிற்குமாறு ஓட்டுநர் எனக்கு ஆணையிட்டார். நான் எழ மறுத்தேன். அதற்காக கைது செய்யப்பட்டேன். நான் முன் வரிசையில் உட்கார்ந்திருந்ததாகப் பலரும் பிறகு எழுதினார்கள். ஆனால் நான் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கவில்லை. வேறு பலர், நான் பேருந்தில் ஏறி முன்வரிசை இருக்கையில் உட்கார்ந்ததாகச் சொன்னார்கள். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. வெள்ளையர்கள் உட்கார்ந்திருந்த இருக்கைக்குப் பின்னால் இருந்த ஒரு இருக்கையில்தான், சொல்லப்போனால் அது பேருந்தின் கடைசி வரிசை இருக்கை, நான் உட்கார்ந்திருந்தேன். அந்த இருக்கையின் சன்னலோரத்தில் ஒரு ஆண் உட்கார்ந்திருந்தார். இருக்கையின் நடை வழியோரத்தில் நான் உட்கார்ந்தேன். இடையில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். பேருந்து இரண்டாவது அல்லது மூன்றாவது நிறுத்தத்திற்கு செல்லும் வரையில் பிரச்சனையில்லாமல்தான் போனது. அப்புறம் சில வெள்ளையர்கள் பேருந்தில் ஏறினார்கள். அவர்களில் ஒருவருக்கு உட்கார இடம் கிடைக்க வில்லை, எனவே அவர் நிற்க வேண்டிய தாயிற்று. அவர் நிற்பதைப் பார்த்த ஓட்டுநர் எங்களையெல்லாம் எழுந்து நின்று அந்த இருக்கையை அந்த வெள்ளையருக்கு விடுமாறு சொன்னார். அது முன்வரிசை இருக்கை என்று அவர் குறிப்பிட்டார். சிறிது நேர தயக்கத்திற்குப் பிறகு மற்ற மூன்று பேரும் எழுந்து நின்றார்கள். "நீ எழுந்திருக்கப் போகிறாயா இல்லையா" என்று ஓட்டுநர் கேட்டபோது நான் மாட்டேன் என்று சொன்னேன். "காவல் துறையினரிடம் சொல்லி உன்னைக் கைது செய்ய வைப்பேன்" என்றார் ஓட்டுநர். தாராளமாக அவர் அப்படி செய்துகொள்ளலாம் என்றேன் நான். அவரும் அதைத்தான் செய்தார்.

பேருந்தை அவர் அதற்குமேல் நகர்த்தவில்லை. பேருந்திலிருந்து அவர் கீழே இறங்கி விட்டார். மற்றவர்களும் இறங்கினார்கள். வெள்ளையர்கள் யாரும் இறங்கவில்லை. ஆனால் கறுப்பினத்தவர்கள் பலரும் இறங்கினார்கள்.

அப்புறம் இரண்டு காவலர்கள் வந்தார்கள். ஒருவர் என்னைப் பார்த்து "ஓட்டுநர் எழுந்திருக்கச் சொன்னது உண்மைதானா" என்று கேட்டார். நான் ஆம் என்றேன். "பிறகு ஏன் நீ எழுந்திருக்கவில்லை" என்று அவர் கேட்டார். கண்டிப்பாக நான் எழுந்து நின்றுதான் ஆக வேண்டும் என்பதாக நான் நினைக்கவில்லை என்று பதில் சொன்னேன். ஏன் எங்களை இப்படிப் புறக்கணிக்கிறீர்கள என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் கூறியபதில், அவர் சொன்னதை அப்படியே சொல்லுகிறேன், " அதெல்லாம் எனக்குத் தெரியாது. சட்டம் என்றால் சட்டம்தான். உன்னை நான் கைது செய்கிறேன்," என்பதுதான். நான் ஒரு கைதியாகத்தான் பேருந்திலிருந்து இறங்கினேன்.

அந்தக் காவலர்கள் உங்களைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றார்களா?

ஆம். ஓட்டுநரைப்பார்த்து ஒரு காவலர், அவருக்கு விருப்பமிருந்தால் ஒரு புகார் மனு தரலாம் என்று கூறினார். அதற்கு அந்த ஓட்டுநர் தனது அன்றைய பணியை முடித்துவிட்டு, பயணிகளை உரிய இடங்களில் சேர்த்துவிட்டு திரும்பி வரும் போது நேராக நகர மன்றத்திற்கு (காவல் நிலையம்) வந்து புகார் மனு பதிவு செய்வதாகக் கூறினார்.

அந்த ஓட்டுநர் அப்படிச் செய்தாரா?

ஆம். அவர் அப்படிச் செய்தார்.

மக்கள் எதிர்ப்பு உடனடியாகக் கிளம்பியதா?

உண்மையிலேயே, அந்தச் செய்தி தெரிந்தவுடனேயே எதிர்ப்பு கிளம்பிவிட்டது. நான் கைது செய்யப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளியானது. என்ஏஏசிபி அமைப்பின் மோன்ட்கோமரி கிளை சட்டத் தீர்வுகள் பிரிவு தலைவராக இருந்த திரு. இ.டி.நிக்ஸன் அந்த இரவு நேரத்திலும் ஏராளமானோரை தொலை பேசியில் தொடர்பு கொண்டார். பல பாதிரியார்களுடன் அவர் பேசினார். ஒரு வியாழக்கிழமை மாலையில் நான் கைது செய்யப்பட்டேன். வெள்ளிக்கிழமை மாலை டெக்ஸ்டர் அவன்யூ பாப்டிஸ்ட் தேவாலயத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் தலைமைப் பாதிரியாராக இருந்தவர்தான் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.

Rosa Barx பொதுமக்கள் பலரும் கூட்டத்திற்கு வந்தார்கள். அவர்களுடன் நான் நடந்த கதையைச் சொன்னேன். நான் கைது செய்யப்பட்ட விவகாரம் செய்தியாக மாறியது. என் மீதான விசாரணை டிசம்பர் 5 அன்று நடந்தது. அதில் நான் குற்றவாளி என அறிவிக்கப் பட்டேன். எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களான ஃபிரட் கிரே, சார்லஸ் லாங்ஃபோர்டு இருவரும் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். நான் எந்தவொரு அபராதத்தையும் செலுத்த மறுத்துவிட்டேன். டிசம்பர் 5 மாலை ஹோல்ட் ஸ்ட்ரீட் தேவாலயத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். ஏனென்றால் டிசம்பர் 5 அன்றுதான் பொதுமக்கள் பலரும் வெளியே செல்லாமல், பேருந்துப் பயணத்தைப் புறக்கணித்தனர். ஒரு நாள் போராட்டத்திலேயே பொதுமக்கள் பலரும் பேருந்தைப் புறக்கணித்தது கண்டு, ஒரு வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதியில், சரியான மாற்றம் ஏற்படுத்தப்படும் வரையில் பேருந்தில் ஏறுவதேயில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

நீங்கள் எழுந்திருக்க மறுத்தபோது, அப்படியெல்லாம் செய்ய வேண்டியிருந்தது பற்றி உங்களுக்கு ஒரு கோப உணர்வு இருந்ததா?

அப்படி கோப உணர்வு இருந்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், நான் அவ்வாறு நடத்தப்படுவதை விரும்பவில்லை என்பதையும், மக்கள் அதை வெகுகாலமாக பொறுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதையும் அறியச் செய்வதற்கு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவது என்ற தீர்மானகரமான எண்ணம் எனக்கு ஏற்பட்டிருந்தது. எனினும், நான் கைது செய்யப்பட்ட அந்தத் தருணத்தில் மக்கள் அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றப் போகிறார்கள் என்பது பற்றிய எந்தவொரு சிந்தனையும் எனக்கு இருந்ததில்லை.

மக்கள் எனக்கு ஆதரவாகவே எதிர்வினையாற்றினார்கள் என்பதால் நான் அதைத் தொடர முடிவு செய்தேன். டிசம்பர் 5 பிற்பகலில், மோன்ட்கோமரி மேம்பாட்டு சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினோம். அந்த இயக்கத்தில் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் முக்கியத்துவம் பெற்றார். எனவே அவர், எங்களுக்காக வாதாடுகிறவராக, சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த நாட்களை நான் திரும்பிப்பார்க்கிறபோது, அது ஒரு கனவாகவே தெரிகிறது. எனக்குக் கவலையளித்த ஒரே விஷயம் அப்படியொரு எதிர்ப்பு இயக்கத்தை தொடங்குவதற்கும், எங்கே நாங்கள் சென்றாலும் நாங்கள் எல்லோரும் சுதந்திரமாக இருக்க வேண்டும், சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும், மற்றவர்களுக்குக் கிடைக்கிற அனைத்து வாய்ப்புகளும் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை எடுத்துச் செல்வதற்கும் அவ்வளவுகாலம் நாங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்றே என்பதுதான்.

எந்தவொரு செயலையும் மேற் கொள்வதற்கு மிகவும் முக்கிய மாகத் தேவைப்படுகிற தனிப்பட்ட குணாம்சங்கள் என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

உங்கள் மீதே நீங்கள் நம்பிக்கை வைப்பதும், நீங்கள் நினைப்பது சரியானதுதான் என்ற உணர்வு உங்களுக்கு இருக்குமானால் அதில் நீங்கள் உறுதியாக நிற்பதும் முக்கியம் என்று நான் கருதுகிறேன். சுற்றியுள்ள மக்களுடைய ஒத்துழைப்பையும் அது சார்ந்திருக்கிறது என்பது உண்மைதான். அந்தப் பிரச்சனையைப் பொறுத்தவரையில் பேருந்துகளைப் புறக்கணிப்பது என்பதில் மக்கள் மிகவும் ஒத்துழைத்தார்கள்.

அதிலிருந்துதான் நாங்கள் மற்ற பிரச்சனைகளுக்குச் சென்றோம். நானும், என்னோடு இருந்த திருமதி ஃபீல்டு அவர்களுமாக சேர்ந்து சுயமேம்பாட்டுக்கான ரோஸா அண்டு ரேமண்டு பார்க்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம். ரேமண்டு எனது கணவர். இப்போது அவர் இல்லை. என்னை ஈர்த்த மற்றொரு முக்கியமானவர் அவர். ஏனென்றால் அவ ரும் சுதந்திரம், சமத்துவம் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த வர்.

அந்தப் பேருந்து சம்பவத்தின்போது உங்களுக்குத் திருமணமாகி விட்டதல்லவா?

ஆம்.

அப்போது உங்கள் வயது என்ன?

நான் கைது செய்யப்பட்டபோது எனக்கு வயது 43.

பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து உங்கள் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதைச் சொல்ல முடியுமா?

என் வாழ்க்கையின் கதைச் சுருக்கத்தைச் சொல்ல ஒரு நிமிடத்திற்கு சற்று அதிகமான காலம் போதும். ஆனால், நாம் அனைவருமே சுதந்திரமாக இருக்க வேண்டும், சமமான வாய்ப்புகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். இளைஞர்களின் மனங்களில் அந்த உணர்வை ஏற்படுத்தவும், அவர்கள் தங்களது உயர்ந்தபட்சத் திறன்களை அடைவதற்கு ஊக்க மளிக்கவும், அதற்கான தாக்கத்தை ஏற்படுத்தவும்தான் நான் முயன்று வருகிறேன்.

உங்கள் கணவரைப்பற்றிச் சொல்லுங்களேன்?

அவரும் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றின் மீதும், வாழ்க்கை நிலைமையை மாற்றக்கூடிய அனைத்து அம்சங்கள் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவரும் உங்களுக்கு ஒரு ஆதர்சமாக இருந்தார் அல்லவா?

ஆம்.

எப்போது அவர் காலமானார்?

1977 ஆகஸ்ட் மாதத்தில்.

மாறுபட்ட சாதனைகளை நிகழ்த்த வேண்டுமென்று விரும்புகிற ஒரு இளைஞருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

மற்ற மக்களுக்கு எதிரான பாரபட்சமான எண்ணங்களில் இருந்து அவர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள வேண்டும், மற்றவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி அவர்கள் அக்கறைகொள்ள வேண்டும் என்பதே முதலில் எந்த ஒரு இளைஞருக்கும் நான் சொல்லக் கூடிய அறிவுரை. அதேபோல் நல்ல கல்வியைப் பெறவும், கிடைக்கிற வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் வேண்டும். எனது இளமைப் பருவத்தில் இருந்ததைவிட இன்று இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் எதைச் செய்தா லும், ஆக்கப்பூர்வமாக சிந்தித்து, மற்றவர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும். மோகங்களுக்கு - குறிப்பாக போதை மருந்துகள், அவர்களது உடல் நலத் தையும் மன நலத்தையும் கெடுக்கக்கூடிய மற்ற அம் சங்கள் மீதான மோகங்களுக்கு இரையாகி விடாமலிருக்கும் வல்லமையைப் பெறவேண்டும்.

தமிழில்: அ.குமரேசன்

(வாஷிங்டன் நகரில் உள்ள அகடமி ஆப் அச்சீவ்மெண்ட் இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

Pin It