வாழ்க்கை என்பது எதிர்பாராத கணங்களினால் நிறைந்தது. உலகத்திலேயே ஆகச் சிறிய சிறுகதையை எழுதியவர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே. அந்தச் சின்னஞ்சிறு கதை உச்சத்தை எட்டியது அதனுடைய எதிர்பாராத முடிவினால். ஆறே ஆறு வார்த்தைகள். ‘விற்பனைக்கு. குழந்தையின் சப்பாத்து. புத்தம் புதிது. அணியப்படவேயில்லை.’

 சிவாஜியும் பத்மினியும் நடித்த ’எதிர்பாராதது’ திரைப்படம் 1950 களில் வெளிவந்தது. படத்திலே சிவாஜியும் பத்மினியும் காதலர்கள். நாகையா இரண்டாம்தாரமாக பத்மினியை மணந்து கொள்கிறார். சிவாஜி நாகையாவின் மகன் என்பதால் இப்போது சிவாஜிக்கு பத்மினி சிற்றன்னை முறையாகி விடுகிறார். நாகையா இறந்துபோக ஒருநாள் சிவாஜி பத்மினியை தொடுகிறார். பத்மினி உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியை அடித்த அடியில் அவருடைய கன்னம் வீங்கி அவர் மூன்று நாட்களாக படப்பிடிப்புக்கு வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியை பார்க்க பத்மினி அவர் வீட்டுக்கு போய் சமாதானம் செய்து அவருக்கு புத்தம்புது ஃபியட் கார் ஒன்றை பரிசாகக் கொடுக்கிறார். அதுதான் சிவாஜியுடைய முதல் கார். எதிர்பாராத அடி; எதிர்பாராத பரிசு. இந்தச் சம்பவம் நான் பத்திரிகைகளில் படித்தது அல்ல. பத்மினியே என்னிடம் சொன்னது.

சமீபத்தில் ரொறொன்ரோவில் ஒரு பொலீஸ்காரரைச் சந்தித்தேன். திரண்ட புஜமும் ஒடுங்கிய வயிறுமாக கம்பீரமாக இருந்தார். பொலீஸ்காரர்களின் உதடு எப்பவும் ஒட்டியபடியே இருக்கும். இவர் அப்படியல்ல. நட்பு நிறைந்த முகம். அன்பாகவும் வெளிப்படையாகவும் பேசினார். அவர் வாழ்க்கையில் நிறைய குற்றவாளிகளுடன் பழகியிருக்கிறார். சிறை, நீதின்மன்றம், வழக்கு, வழக்கறிஞர்கள் என்று பல வருடத்து அனுபவங்கள் அவரிடம் கொட்டிக்கிடந்தன. ’உங்கள் வாழ்க்கையில் ஏராளமான சம்பவங்களை சந்தித்திருப்பீர்கள். நீங்கள் எதிர்பாராத ஒன்று எப்போவாவது நடந்ததுண்டா?’ என்றேன். ‘எப்போவாவது அல்ல; தினம் தினம் அப்படி ஒன்று நடக்கும்’ என்றார்.

ஒருநாள் இவர் சோமாலியாக்காரர் ஒருவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றார். அவர் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர். அவருடைய குற்றம் கொதிக்கும் எண்ணெயை மனைவியின் முகத்தில் ஊற்றியது. அரசு தரப்பு வழக்கறிஞரும் எதிரி தரப்பு வழக்கறிஞரும் தங்கள் தங்கள் வாதங்களை வைத்தனர். அரசு தரப்பு வழக்கறிஞர் எதிரிக்கு குறைந்தது 6 மாதம் தண்டனை கொடுக்கவேண்டும் என்று கேட்டு தன் வாதத்தை முடித்தார். எதிரி தரப்பு இது முதல் குற்றம் அத்துடன் கணவன் சிறைக்கு சென்றால் குடும்பம் வருமானம் இன்றி கஷ்டப்படும். ஆகவே இரண்டு மாதத்துக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கவேண்டாம் என்று மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டது.

நீதிபதி தீர்ப்பு வழங்குமுன்னர் வழமைபோல குற்றவாளியை பார்த்து அவர் ஏதாவது சொல்ல விரும்புகிறாரா என்று கேட்டார். அந்த மனிதர் இப்படிப் பேசினார். ‘கனம் ஐயா. நான் குற்றம் செய்யவில்லை, எனக்கு எப்படி தண்டனை வழங்கலாம்? குழந்தைகள் வீட்டிலே பசியால் அழுதார்கள். என் மனைவி சமைக்கவில்லை. ஆகவே அவளைத் திருத்துவதற்காக கொதிக்கும் எண்ணெயை ஊற்றினேன். அது என் கடமை. உண்மையில் நான் நன்மை செய்தேனே ஒழிய தீமை செய்யவில்லை.’ நீதிபதி இதை எதிர்பார்க்கவில்லை. அவருடைய தீர்ப்பு இப்படியிருந்தது. ‘உங்களுக்கு இரண்டு வருடகாலம் சிறைத்தண்டனை வழங்குகிறேன். நீங்கள் ஆங்கில ஆசிரியர். கனடாவின் அரசியல் சட்டத்தை முறையாகப் பயின்று நீங்கள் புலமை பெறவேண்டும் என்பது என் விருப்பம். அதற்கு இந்தக் கால அவகாசம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.’ சோமாலிய ஆசிரியர் இந்த தீர்ப்பை நிச்சயமாக எதிர்பார்த்திருக்கமாட்டார்.

1993 களில் ஒரு வழக்கு கனடாவில் பிரபலமாகியிருந்தது. கனடாவில் மட்டுமல்லாமல் உலகமே அந்த விசித்திரமான வழக்கு விவரங்களை உடனுக்குடன் அறிய ஆவல் காட்டியது. குற்றவாளியின் பெயர் போல் பெர்னாடோ. 30 பெண்களுக்கு மேல் அவர்களுடன் வல்லுறவு கொண்டவன். மூன்று பெண்களைக் கொலை செய்தவன். இதற்கு அவனுடைய மனைவியும் உடந்தை. கணவன் பெண்களை சித்திரவதை செய்யும்போது மனைவி அதை வீடியோ படம் பிடித்தாள். மனைவி செய்யும்போது கணவன் வீடியோ படம் பிடித்தான். ஓய்வாக இருக்கும் சமயங்களில் இருவரும் கொடூரமான வீடியோக்களை ஓடவிட்டு கண்டு களித்தனர்.

பெர்னாடோ என்ற காமக் கொடூரனை தினமும் கோர்ட்டுக்கு அழைத்துவரும் பொறுப்பு பொலீஸ்கார நண்பருக்கு. 1993ம் வருடம் இந்த வழக்கு விசாரணை உச்சத்தை அடைந்தது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு புதிய தகவல் குறுக்கு விசாரணையில் வெளிப்பட்டு உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. அந்த வருடம்தான் ரொறொன்ரோ Blue Jays அணி பேஸ்போல் இறுதிப் போட்டிக்கு தயாரானது. போட்டி நாள் ஒக்டோபர் 23 சனிக்கிழமை. அன்றைய போட்டியில் உலக சாம்பியன் யார் என்ற முடிவு தெரிய வரும்.

பொலீஸ்காரர் குற்றவாளியை அழைத்துக்கொண்டு கோர்ட்டுக்கு வந்தார். ஒரு குதிரை நடப்பதுபோல தலையை துக்கிக்கொண்டுதான் பெர்னாடோ நடப்பான். நீலக் கண்கள் ஒளிவீச ஓர் அதிகாரிபோல சுற்றிலும் நோட்டம் விடுவான். எல்லோருடைய மனதிலும் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனையா, மரணதண்டனையா அல்லது அவன் ஒருவேளை விடுதலையாகி விடுவானா என்று ஒரே பதற்ற நிலை. கோர்ட் சமீபமாக வந்தபோது பெர்னாடோ பொலீஸ்காரரை ‘நாய்க்கு பொறந்தவனே’ என அழைத்தான். அப்படி அழைத்தால் எல்லாம் சுமுகமாக இருக்கிறதென்று அர்த்தம். ‘சேர்’ என்று அழைத்தால்தான் ஆபத்து. ‘நாளைக்கு Blue Jays அணியில் ஜோ கார்ட்டர் home run அடித்து வெற்றி பெற்றுக் கொடுப்பானா?’ மூன்று கொலைகள் செய்து தீர்ப்புக்கு காத்திருக்கும் பெர்னாடோவுடைய அன்றைய கவலை அது ஒன்றுதான். நண்பர் பதில் பேசவில்லை. ஆனால் உண்மையில் அடுத்த நாள் ஜோ கார்ட்டர் கடைசி நேரத்தில் home run அடித்து உலக சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுத்தது சரித்திரம். கனடா நீதிமன்றங்களில் இப்படி எதிர்பாராத சம்பவங்கள் தினம் தினம் நடைபெறுவதுண்டு.

ஏர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய சிறுகதையிலும் பார்க்கச் சின்னதான ஒரு சிறுகதையை சமீபத்தில் அமெரிக்க மாணவி ஒருத்தி எழுதியிருக்கிறார். ஐந்தே ஐந்து வார்த்தைகள்தான். ‘ஓ கடவுளே! நான் கர்ப்பமாகிவிட்டேன். யாராயிருக்கும்?’

எதிர்பாராத சம்பவம் சிலவேளை வாழ்க்கையை பின்னே தள்ளும். சில சமயம் முன்னுக்கு எடுத்துச் செல்லும். வாழ்க்கை பெண்டுலம் போலத்தான். முன்னுக்கும் பின்னுக்குமாக நகர்வது.

***

Pin It