விடியற்காலை நான்கு மணிக்குச் சற்று நேரம் முந்தியே சங்கரன் எழுந்துவிட்டார். அலாரம் வைத்தாலும் மணியடிப் பதற்கு முன்பாகவே அவருக்கு முழிப்பு வந்துவிடும். அன்றும் அப்படித்தான். மனைவியைப் பார்த்தார். போர்வையைப் பாதி உடம்புக்கு மட்டும் போர்த்துக் கொண்டு, சுவர்ப் பக்கம் திரும்பிப் படுத்திருந்தாள். சில நொடிகள் அவளையே பார்த்துக் கொண் டிருந்துவிட்டு, எழுப்ப வேண்டாம் எனத் தீர்மானித்தார். அவருக்கு ஆறேகால் மணிக்குத் தொடர் வண்டி. வீட்டிலிருந்து ஐந்து மணிக்குக் கிளம்பினால் போதும். குளியலறைக்குள் புகுந்து பற்பசை யைத் துலக்கியில் பிதுக்கி வைத்துக்கொண்டு வெஸ்டர்ன் கம்மோடில் உட்கார்ந்தார். ‘இதென்ன கெட்ட பழக்கம் பல் விளக்கிக்கிட்டே டாய்லட்டில் உட்கார்றது?’ என்று அவள் எத்தனையோமுறை சொல்லிவிட்டாள். இவரோ ‘ரண்டும் சுத்தம் பண்ணுற வேலைதான். ஒரே சமயத்துல செஞ்சா என்ன தப்பு?’ என்று கேட்பார்.

இவர் எழுந்து நடமாடிய ஓசை மருமகளுக்குக் கேட்டிருக்காது. அவள் இன்னும் எழுந்து வரவில்லை. ‘பாவம் தூங்கட்டும் . . .’ என்று சொல்லிக்கொண்டு, சங்கரனே சமையலறைக்குள் புகுந்தார். குளிர்சாதனப்பெட்டியிலிருந்து பால் பாத்திரத்தை எடுத்துச் சமையல் மேடையில் வாயு அடுப்புக்குப் பக்கத்தில் வைத்தபோதுதான் தேயிலை டப்பா, தேநீர் போடும் பாத்திரம், குவளை எல்லாம் அருகில் எடுத்துவைக்கப்பட்டிருந்ததைக் கவனித்தார். மனைவியின் முன்யோசனை. சர்க்கரை சேர்க்காமல் சங்கரன் தேநீர் போட்டுக்கொண்டார். கூடத்திற்கு வந்து சிடி பிளேயரை இயக்கினார். மகாராஜபுரம் சந்தானத்தின் குரல் ஆலாபனையைத் தொடங்கியது. கூடத்தைவிட்டு வெளியில் கேட்காதவாறு

சத்தத்தைக் குறைத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்து இசையைக் கேட்டுக்கொண்டே தேநீரை உறிஞ்சினார். சங்கரன் தேநீரை ரசித்துக் குடிப்பார். ஒவ்வொரு உறிஞ்சலுக்கும் சுவை கூடும். கடைசிச் சொட்டைச் சற்றே ஏக்கத்துடன் உறிஞ்சிய பிறகு காலியாகிவிட்ட குவளையை ஒரு கணம் உற்றுப்பார்ப்பார். ஒரு சொட்டுகூட மிச்சமில்லை என உறுதியான பிறகுதான் அதைக் கீழே வைப்பார். தேநீரின் சுவை பிடித்திருந்தால்தான் இப்படி. பிடிக்காவிட்டால் முதல் முழுங்குக்குப் பிறகு குவளையைத் தொடவேமாட்டார். குடித்து முடித்ததும் குவளையை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்து அதில் கொஞ்சம் தண்ணீர் பிடித்து அலசிவிட்டு ஸிங்கில் வைத்தார். ஒவ்வொருமுறையும் சாப்பிட்ட தட்டையும் தேநீர் அருந்திய குவளையையும் இவரே சமையலறைக்கு எடுத்துப்போய்த் தண்ணீரில் கொஞ்சம் அலசி வைத்துவிட்டு வருவார். அப்போதெல்லாம் மனைவி ‘இதெல்லாம் நான் பாத்துக்கமாட்டனா?’ என்று செல்லமாகக் கோபித்துக்கொள்வாள். சொன்னாலும் கேட்கமாட்டார் என்பது அவளுக்கும் தெரியும். ‘இதுல என்ன கஷ்டம். கொஞ்சம் அலசிவச்சா கழுவறவங்களுக்கு வசதியாயிருக்கும்’ என்று வழக்கமான பதிலைச் சொல்வார்.

மீண்டும் கூடத்திற்கு வந்து கடிகாரத்தைப் பார்த்தார். மணி 4:20. சிடி பிளேயரை அணைத்துவிட்டுப் படுக்கையறைக்குத் திரும்பித் துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தார். குளிர்ந்த தண்ணீரைத் தலையில் ஊற்றிக்கொண்டபோது இதமாக இருந்தது. அவளுக்கு மைசூர் சந்தன சோப்புதான் பிடிக்கும். அதுவும் உருண்டையான சந்தன சோப்பு. எப்போதும் வீட்டில் நான்கைந்து சோப்புகளை முன்கூட்டியே வாங்கிவைத்திருப்பாள். சந்தன வாசனையை முகர்ந்தபடியே சங்கரன் குளித்து முடித்துத் துவட்டிக்கொண்டு வெளியே வந்தார். குழல் விளக்கைப் போட்டால் அவளுக்குத் தொந்தரவாயிருக்கலாம் என்று இரவு விளக்கின் வெளிச்சத்திலேயே ஓசையெழுப்பாமல் துணி அலமாரியைத் திறந்து உடைகளை எடுத்து அணிந்துகொண்டார். மறக்காமல் களைந்துபோட்ட உடைகளையும் துடைத்துக்கொண்ட துண்டையும் குளியலறையிலிருந்த துணிக்கூடையில் போட்டுவிட்டு வந்தார். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மனைவியின் முதுகுப் பக்கம் மட்டும் தெரிந்தது. மடக்கிய கால்களுக்கிடையில் இரண்டு கைகளையும் கோத்துவைத்து அவள் தூங்கிக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

கடந்த ஒரு வருடமாகவே அவளுக்கு உடல் நலக் கோளாறு. அதற்காகச் சாப்பிட்டுக்கொண்டிருந்த மருந்துகள் நிறைய தூக்கத்தைக் கொடுத்தன. அவளாக எழுந்திருக்கிறவரை யாரும் தொந்தரவு செய்வதில்லை. துக்கம் விசாரிப்பதற்காக வெளியூருக்குக் கிளம்ப சங்கரன் தயாராகியிருந்தார்.

பக்கத்தில் உட்கார்ந்து அவளை எழுப்பாமல் முகத்தை மட்டும் திருப்பி ஒருமுறை பார்க்கலாமா என நினைத்தவர் உடனே எண்ணத்தை மாற்றிக்கொண்டார். படுக்கையறையைவிட்டுக் கூடத்துக்கு வந்தார். மகன் சோபாவில் உட்கார்ந்திருந்தான். இவரைப் பக்கத்துப் பேருந்து நிறுத்தத்தில் கொண்டுவந்துவிடத் தயாராக உடைமாற்றியிருந்தான். இவர் அவனுக்கு எதிரில் உட்கார்ந்தவுடனே, மருமகள் சமையலறையிலிருந்து இவர்களை நோக்கி ட்ரேயோடு வந்தாள். அதில் மூன்று குவளைகள் இருந்தன. ஒன்றில் இவருக்கான சர்க்கரை போடாத தேநீர். மற்ற இரண்டிலும் அவர்களுக்கான காபி. தனக்கான குவளையை எடுத்துக்கொண்டே, ‘அம்மா இன்னும் தூங்கிட்டிருக்கா. தூங்கறவரைக்கும் தூங்கட்டும். எழுப்பாதீங்க’ எனப் பொதுவாக இருவருக்கும் சொல்வதுபோலப் பேசினார்.

‘நீங்க கவலைப்படமா போயிட்டு வாங்க மாமா. அவங்களை நாங்க தொந்தரவு பண்ணமாட்டோம்’ என்றாள் மருமகள்.

‘டிக்கட்டெல்லாம் எடுத்துட்டீங்களாப்பா? ஐடெண்ட்டிட்டி கார்ட் எடுத்துட்டீங்களா?’ மகன் ஞாபகப்படுத்தினான்.

‘நேத்தே கைப்பையில எடுத்துவச்சிட்டேன். பேங்க் பாஸ் புக் இருக்கு. போதும்.’

பத்தேகால் மணிக்குள் தொடர்வண்டி இவர் போக வேண்டிய ஊரை அடைந்துவிடும். ஜங்ஷனிலிருந்து உறவினர் வீட்டுக்கு நேரடிப் பேருந்து. அதே தொடர்வண்டி மீண்டும் பிற்பகல் மூன்றரை மணிக்கு அந்த ஊருக்குத் திரும்பி வரும். அதைப் பிடித்தால், இரவு படுக்க வீட்டுக்கு வந்துவிடலாம்.

‘கிளம்பலாம்ப்பா’ என்று வண்டிச் சாவியை எடுத்துக்கொண்டு மகன் வாசற்கதவை நோக்கி நடந்தான். இருவரும் வெளியே வந்தவுடன் கதவைச் சாத்திக்கொள்வற்காகக் காத்து நின்ற மருமகளிடம், ‘ஜாக்கிரதைம்மா’ என்ற சங்கரன் லிஃப்ட்டை நோக்கி நடந்த மகனைப் பின்தொடர்ந்தார்.

பேருந்து நிறுத்தத்தை அடைந்து ஐந்து நிமிடத்துக்குள்ளாகவே தொடர்வண்டி நிலையத்துக்குச் செல்லும் பேருந்து கிடைத்தது. அதிகாலை நேரத்தில் கூட்டமில்லாததாலும் ஜில்லென்று வீசிய காற்றாலும் பயணத்தை இனிமையானதாக உணர்ந்தார். வண்டி புறப்படுவதற்குப் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே தன் இருக்கையில் அமர்ந்துவிட்டார். சங்கரன் எப்போதும் இப்படித்தான். தொடர்வண்டியோ பேருந்தோ கிளம்புவதற்குப் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே வந்துவிடுவார். கடைசி நிமிடத்தில் வருவதால் உண்டாகும் பதற்றம் அவருக்குப் பிடிக்காது.

பயணிகள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். வழக்கமாக அடுத்த நிறுத்தத்தில்தான் பெட்டிகள் நிரம்பும். இவருக்கு ஜன்னலோர இருக்கை.

வெளியே இலக்கில்லாமல் பார்த்தார். வண்டி புறப்படுவதற்கான விசில் சத்தம் கேட்டது. அப்போதுதான் தாட்டியான உடம்போடு ஒரு அம்மாள் அவசரமாக வந்து இவர் இருந்த பெட்டியிலேயே தடுமாறி ஏறினாள். இவர் பதைபதைப்புடன் அந்தப் பெண்மணியைக் கவனித்தார். கணநேரம் பிடி பிசகியிருந்தாலும் அவள் கீழே விழுந்திருப்பாள். இப்படிப்பட்ட உடம்பை வைத்துக்கொண்டு கடைசி நொடியில் சர்க்கஸ் செய்து தொடர்வண்டியில் ஏறுகிறவர்களைப் பார்க்கும் ஒவ்வொருமுறையும் சங்கரன் சபித்துக்கொள்வார். ரயில் புறப்பட்டு வேகமெடுத்தது. பதினைந்துநிமிடத்தில் ரயில் அடுத்த நிலையத்தை அடைந்தது. நிறைய பேர் அடித்துப்பிடித்துக்கொண்டு ஏறினார்கள். அநேகமாக எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தன. தொடர்வண்டி கிளம்பியதும் பேன்ட்ரி காரிலிருந்து தேநீர், காபி, சிற்றுண்டி என ஒவ்வொன்றாகக் கொண்டுவந்தார்கள். ‘சார் சூடா பொங்கல் வடை தரட்டுமா?’ எனக் கேட்டவரிடம் ‘வேண்டாம்’ என்று தலையசைத்தார். இந்த வண்டியில் அந்த ஊருக்குச் செல்லும்போதெல்லாம்,

அந்த நிலையத்தின் சைவ உணவகத்தில்தான் சாப்பிடுவார். மற்றவர்களையும் அங்கேயே சாப்பிடச் சொல்லுவார். படிப்பதற்காகக் கொண்டுவந்திருந்த புத்தகத்தைக் கைப்பையிலிருந்து வெளியே எடுத்தார். மனம் அதில் பதியவில்லை. மனைவியையே சுற்றி வந்தது.

சங்கரன் பட்டப்படிப்பில் காலடி எடுத்துவைத்தபோதே அப்பா இறந்துவிட்டார். இவர் ஒரே பையன். அம்மாதான் முதலில் சுதாரித்துக்கொண்டாள். அப்பா அலுவலகத்தில் வாங்கியிருந்த நல்ல பெயரும் அவருடைய நண்பர்களின் முயற்சியும் இவர்களுக்குச் சேர வேண்டிய பணம் அதிக சிரமமில்லாமல் கைக்குக் கிடைக்கச் செய்தன.

சங்கரன் பொறுப்புணர்ந்து படித்து, சர்வீஸ் கமிஷன் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்று நல்ல வேலையையும் சம்பாதித்துக்கொண்டார். அப்போது இவர் உலகம் அம்மாவும் படிப்பும் என்றிருந்தது. தான் தளர்வதற்குள் மகன் வாழ்க்கையில் நிலைத்துவிட வேண்டும் என அம்மா ஆசைப்பட்டாள்.

சங்கரனும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் அம்மா நிம்மதியடையவே மனசார விரும்பினார். இவர் வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் முடிந்தவுடனே அம்மா பெண் தேடத் தொடங்கிவிட்டாள். பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம். அரசாங்க வேலையிலிருக்கும் பையன். கல்யாணச் சந்தையில் சங்கரனின் மதிப்பு ஏகமாக உயர்ந்தது.

பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் அம்மா ரொம்ப நிதானத்தைக்காட்டினாள். படிப்பு, சொத்து, நகை, வேலை என எதுவும் அவளைக் கவர்ந்ததாக சங்கரனுக்குத் தெரியவில்லை. எதையெதையோ பேசிய அம்மா தனக்கு இப்படிப்பட்ட மருமகள்தான் தேவை என்பதை இவரோடு தெளிவாகப் பேசவில்லை. ஆறு மாதத் தேடலுக்குப் பிறகு அம்மா ஒரு நாள் தன் சொந்த ஊரில் பெண் பார்க்கப் போகலாம் என்றாள்.

‘பெண்ணோட அப்பா எனக்குத் தூரத்துச் சொந்தம். தம்பி முறை’ எனச் சொன்னாள்.

‘தூரம்னா எவ்வளவு தூரம்மா?’ என்று சங்கரன் கேலியாகக் கேட்டதற்கு, அவள் சிரித்துக்கொண்டே ‘ரண்டு மைலுன்னு வச்சுக்கோ’ என்றாள்.

சங்கரனுக்கு வசதியான நாளாகப் பார்த்து ஒரு ஞாயிற்றுக்கிழமை இருவரும் பெண் பார்க்கப் போயிருந்தார்கள். கூட வேறு யாரும் வரத்தோதுப்படவில்லை. பெண்ணின் பேர் பத்மினி என்பதை அங்கே போனதும்தான் தெரிந்துகொண்டார்கள். பெண்க்கு அம்மா இல்லை. அப்பாவும் அண்ணனும்தான். அந்த அண்ணனுக்கும் ஏற்கனவே கல்யாணமாகியிருந்தது. வழக்கம்போல நல்வரவு, பச்சைக் கிளி ஜோடி, மயில் கோலம் எனக் காட்டி, ‘இதெல்லாம் எங்க பொண் ணுபோட்டதுதான்’ எனப் பெருமை பொங்க யாரும் சொல்லாதது இவருக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. பெண் எஸ்எஸ்எல்சி முடித்திருந்தாள். தாயில்லாப் பெண்பிள்ளையைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைக்க அவள் அப்பாவுக்கு விருப்பமில்லை. வசதியிருக்கவில்லை என்பது அதைவிட முக்கியமான காரணம்.

பெண் இவருக்குக் காபி தம்ளரைத் தந்துவிட்டுச் சற்று நேரம் இவருடைய அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்துவிட்டு எழுந்து போய்விட்டாள். பிறகு அம்மாதான் உள்ளே போய்ப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சிரித்தபடியே வந்தாள். அம்மா சுற்றி வளைக்காமல் பெண்ணின் அப்பாவிடம் ‘உங்க பொண்ணை எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. வீட்டுக்குப் போய் அவன்கிட்டயும் கலந்துபேசிட்டுச் சொல்லியனுப்பறேன். அப்புறம் மத்ததையெல்லாம் பேசிக்கலாம்’ என்றாள்.

வீட்டுக்கு வந்தவுடனே அம்மா பெண்ணைப் பற்றிப் பேச்செடுக்கவில்லை. மறுநாள் அலுவலகத்திலிருந்து சங்கரன் வீடு திரும்பி ஓய்வாக உட்கார்ந்தபோது, ‘உனக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்காடா?’ என்று கேட்டாள்.

‘அதிருக்கட்டும். பொண்μகிட்ட நீ என்னம்மா பேசுன? என்ன கேட்ட?

வெளிய வந்தப்ப ஆனந்தமா சிரிச்சுட்டே வந்தியே’ என்று இவர் கேட்டார்.

‘அதெல்லாம் உனக்கெதுக்குடா?’ என்று அம்மா சிரித்து மழுப்பினாள்.

‘எனக்குப் பொண்ணு பாக்கறதைவிட உனக்கு மருமகளைத் தேர்ந்தெடுக்கறதுலதான் நீ குறியாயிருக்கற மாதிரி தெரியுது’ என்று சங்கரன் சிரித்தார்.

மகனை உற்றுப்பார்த்துவிட்டு, ‘ரெண்டும் ஒன்னுதாண்டா’ என்றாள் அம்மா.

சங்கரனோடு வேலைபார்த்தவர் சுந்தரம். இவரைவிடப் பத்து வயதாவது மூத்தவர். அந்த அலுவலகத்தில் எல்லோரும் எதையும் அவரிடம் கலந்தாலோசிப்பார்கள். ஃபாதர் ஃபிகர். பெண் பார்த்துவிட்டு வந்ததை சங்கரன் அவரிடம் சொன்னார். பெண்ணைப் பற்றி இவர் சொன்னதையெல்லாம் கேட்ட சுந்தரம், ‘பொண்ணு பாக்க லட்சணமாயிருக்காளா? உனக்குப் பிடிச்சுருக்கா?’ எனக் கேட்டார்.

சங்கர், ‘பாக்க லட்டசணமாத்தான் இருக்கா -

வெளக்கி வச்ச குத்துவிளக்காட்டம். அம்மாவுக்குத்தான் பொண்ணை ரொம்பப் புடிச்சிருக்கு...’ என்று இழுத்தார்.

‘ஏன் உனக்குப் பிடிக்கலையா? என்ன காரணம்? தயங்காம சொல்லு, சங்கர்.’

‘பொண்ணு படிச்சிருந்து இன்னும் கொஞ்சம் வசதியான எடமாயிருந்தா...’

‘குடும்பம் நடத்துறதுக்கு எஸ்எஸ்எல்சியே ரொம்ப அதிகம். வசதியில்லன்னா என்ன? பொண்டாட்டியா வரப்போறவ மொதல்ல உன் கண்ணு நெரஞ்சிருக்கணும். மத்ததெல்லாம் அப்புறந்தான். உங்க அம்மாவையும் திருப்திப்படுத்தறது உன் கடமை. அதனால நீ சரின்னு சொல்லறதுதான் நல்லதுன்னு எனக்குப் படுது.’ சுந்தரம் தெளிவாகச் சொன்னார். அன்று மாலையே அம்மாவிடம் ‘சரிம்மா. உன் இஷ்டம். அந்தப் பொண்ணையே கட்டிக்கறேன்’ என்றார்.

‘இதுல என் இஷ்டம் முக்கியமில்ல. கல்யாணம் பண்ணிட்டு வாழப்போறவன் நீ. உன்னோட இஷ்டந்தான் முக்கியம்.’

தான் சம்மதித்த பிறகு அம்மா அப்படிப் பேசினாளா உண்மையிலேயே அவள் எண்ணம் அப்படித்தான் இருந்ததா என்பதை இன்றுவரைக்கும் சங்கரனால் உறுதியாகச் சொல்ல முடியாது. அவசரப்பட்டுச் சம்மதித்துவிட்டோமா? இன்னும் ஒசத்தியான பெண்ணாகப் பார்த்திருக்கலாமோ? தீவிரமாக யோசித்தார்.

இவர்கள் சமூகத்தில் கல்யாணச் செலவு மாப்பிள்ளை வீட்டாரைச் சேர்ந்தது. பெண் வீட்டாருக்கும் ஏதும் அனாவசியச் செலவு வைத்துவிடக் கூடாதென்பது அம¢மாவின் எண்ணம். அதன்படி எளிமையான திருமணம். அத்துடன் வாழ்க்கையே இருளில் மூழ்கிவிட்டதாகவெல்லாம் சங்கரன் முடிவுக்கு வந்துவிடவில்லை. ஆனால் தனக்குள்ளிருந்த வருத்தம் முகவாட்டத்தால் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனத்துடனிருந்தார். திருமணத்தின்போது முடிந்தவரை சிரித்த முகமாகவே தோற்றம் தர முயன்றார்.

சோபன அறையில் நமஸ்கரித்த பத்மினியைச் சம்பிரதாயத்துக்காகக்கூடத் தொட்டுத் தூக்கவில்லை. ‘இருக்கட்டும் . . . இருக்கட்டும் . . .’ என்று எந்திரகதியில் சொல்லிவிட்டுப் படுக்கையில் சாய்ந்துகொண்டார். நீண்ட நேரம் எதுவும் பேசவில்லை. பட்டிக்காட்டுப் பெண். அதிகம் படிக்காதவள் . . . இப்படியே திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருந்தார். தன் அம்மாவும் அதே பட்டிக்காட்டில் பிறந்து வளர்ந்தவள் என்பது ஏனோ இவர் கவனத்துக்கு அப்போது வரவில்லை. அம்மாவுக்காக அவசரப்பட்டுவிட்டோமோ என்னும் எண்ணமே உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

நீண்ட நேரம் இவர் எதுவுமே பேசவில்லை. பத்மினி எதுவும் சொல்லாமல், விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையின் ஓரத்தில் ஒடுங்கிப் படுத்துக்கொண்டாள். அவள் அழுதாளா என இவர் உற்றுப்பார்த்தார். அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. காலையில் எழுந்தார். காலைக்கடனை முடித்துவிட்டுக் கூடத்திற்கு வந்தபோது, பத்மினி தேநீர்க் குவளையை நீட்டியபோதுதான் தன் வாழ்வில் புதிய ஜீவன் நுழைந்திருந்ததும் முந்தைய இரவு நடந்ததும் நினைவுக்கு வந்தன. எதுவும் பேசாமல் குவளையை வாங்கிக்கொண்டு பேப்பரில் மூழ்கினார். பிறகு குளித்துவிட்டு வந்தார். வழக்கம்போல அம்மா சிற்றுண்டி எடுத்துவைத்தாள். பத்மினி சமையலறையில் என்னவோ செய்துகொண்டிருந்தாள்.

‘இன்னிக்குப் பத்மினியோட சமையல்தான். என்னைச் சமைக்கவேவிடல’ என்று பெருமை ததும்பிய குரலில் சொல்லிக்கொண்டே அம்மா பரிமாறினாள். இவர் எதுவுமே பேசாமல் சாப்பிட்டார். மகனுக்கு ஏதோ கூச்சம் என்று நினைத்தோ என்னவோ அம்மா அதிகம் பேசவில்லை. சாப்பிட்டதும் சங்கரன் படுக்கையறையில் புகுந்துகொண்டார். ஏதோ படித்தார். கொஞ்ச நேரம் தூங்கினார். கூடத்தில் வந்து உட்கார்ந்திருந்தார். பத்மினியே வந்து மெல்லிய குரலில் ‘சாப்புட வாங்க’ என்றாள். அதுதான் அவள் இவரிடம் பேசிய முதல் வாக்கியம். சாவி கொடுத்ததுபோல இவர் உணவு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டார். கொஞ்ச நேரம் கூடத்தில் உட்கார்ந்திருந்துவிட்டு மீண்டும் படுக்கையறைக்குள் நுழைந்துகொண்டார். எப்போது தூக்கம் வந்ததோ ஞாபகமில்லை. இவர் விழித்தெழுந்தபோது, முந்தைய இரவைப் போலவே படுக்கையின் ஓரத்தில் பத்மினி சுருண்டு படுத்திருந்தாள். சத்தமில்லாமல் இவர் எழுந்து கூடத்திற்கு வந்து உட்கார்ந்தார். இவரைப் பார்த்துவிட்டு அம்மா தேநீர் போட்டுக்கொண்டுவந்து கொடுத்தாள்.

சற்று நேரம் கழித்து வந்த பத்மினி சமையலறைக்குள் புகுந்து ‘ஐயோ அத்தே நான் அசந்து தூங்கிட்டேன்’ என்று அம்மாவிடம் சொன்னது இவருக்குக் கேட்டது.

‘அதனாலென்னம்மா. நான் அவனுக்கு டீ போட்டுத் தந்துட்டேன். உனக்கும் போட்டுதரவா?’ என்று அம்மா சமாதானமாகச் சொன்னாள்.

‘வேண்டாம் அத்தே. நானே போட்டுக்கறேன். இருங்க வந்துடறேன்’ எனச் சொல்லிவிட்டுப் பத்மினி குளியலறைக்குள் புகுந்தாள்.

பிறகு இரவுச் சமையலுக்குத் தயார்செய்துகொண்டிருந்தபோது, அவர்கள் இருவரும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தது சங்கரனுக்குக் கேட்டது. அம்மா பத்மினியோடு தயக்கமில்லாமல் பழகத் தொடங்கிவிட்டாள் எனப் புரிந்தது. தான் இன்னும் அவளோடு பேசக்கூட இல்லை என்ற உண்மை மனத்தில் லேசாக எட்டிப்பார்த்தது.

இரவு உணவும் சாப்பிட்டார். உடனே படுக்கையறையில் புகுந்து, ஏதோ புத்தகத்தை எடுத்துக் கண்களை ஓடவிட்டார். ஏதேதோ எண்ணங்கள். தான் தவறுசெய்கிறோமோ எனக் கேட்டுக்கொண்டார். அதற்குத் தீர்மானமான பதில் கிடைக்கவில்லை. சிந்தனைக்கிடையில் தூங்கிப்போனார்.

இப்படியே மூன்று நாட்கள் கழிந்தன. அடுத்த நாள் பத்மினியை வெளியே எங்காவது கூட்டிச் செல்லுமாறு அம்மாவின் யோசனை வந்து விழுந்தது. தட்ட முடியவில்லை. அன்று மாலை கோவிலுக்குக் கூட்டிப்போனார். வீடு திரும்புவதற்குள் மிஞ்சிப்போயிருந்தால் ஒரு டஜன் வார்த்தைகள் பேசியிருப்பார். அவள் முகத்தில் எந்த வாட்டமும் இவருக்குத் தென்படவில்லை.

மேலும் இரண்டு நாட்கள் எந்த மாற்றமுமில்லாமல் கழிந்தன. சங்கரன் அலுவலகத்துக்குச் செல்லத் தொடங்கினார். இவரோடு பணியாற்றிய பெண்கள் ‘புது மாப்பிளை வந்துட்டார்’ என ஆரவாரித்து ஒவ்வொருவராக வந்து சரளமாக ஆங்கிலத்தில் பேசியதும் இவர் பத்மினியை நினைத்து உள்ளுக்குள்ளேயே பெருமூச்சுவிட்டார்.

இவரோடு சாவகாசமாகப் பேச சுந்தரத்திற்கு இரண்டு நாட்கள் வசதிப்படவில்லை. மூன்றாம் நாள்தான் சுந்தரத்துக்கு இவருடன் தனிமையில் பேசச் சந்தர்ப்பம் வாய்த்தது.

‘எப்படியிருக்கு தாம்பத்திய வாழ்க்கை? இரண்டு பேரும் பேசிக்கிறீங்கதானே? ஒன்னும் சிக்கலில்லயே? அதிகம் வெளி உலகத்தைப் பாக்காத பெண்ணு அவ. முதல்ல சங்கோஜப்படலாம். எதுக்கும் கட்டாயப்படுத்தாதே. எல்லாம் தானா சரியாயிடும்.’

சுந்தரம் எதைக் குறிப்பிட்டுச் சொன்னார் என்பது முதலில் சங்கரனுக்குப் புரியவில்லை. யோசித்தபோது, ‘சங்கோஜம்’, ‘வற்புறுத்தாதே’ என்பவை அவர் சொல்ல வந்ததைத் தெளிவுபடுத்தின.

‘ஒன்னுமே நடக்கல சார். நான் இன்னும் அவளைத் தொடக்கூட இல்லை’ என சங்கரன் தயங்கினார்.

தலையாட்டிக்கொண்டே யோசனையில் ஆழ்ந்தவரைப் போலிருந்த சுந்தரம் நிதானமாகச் சொன்னார், ‘சங்கர், எப்படியோ அவ உனக்குப் பெண்டாட்டியாயிட்டா. புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடக்க வேண்டியதெல்லாம் இனி நடக்கணும். அதைத் தவிர்க்கறதுலயோ தள்ளிப்போடறதுலயோ எந்த அர்த்தமும் இல்லை. அவ முக லட்சணம் உனக்குப் புடிச்சிருக்குது. அப்புறம் என்ன? அவ உனக்குத் தகுதியில்லன்னு நீ இல்லாததையெல்லாம் கற்பனைபண்ணிட்டிருக்கற. அதையெல்லாம் தொடச்சிப்போடு. அவளோட சந்தோஷமாயிரு. எல்லாம் நல்லபடியா நடக்கும்.’

இது நடந்து இரண்டாம் நாள் மாலை அலுவலகத்திலிருந்து வந்த சங்கரன் பத்மினியின் முகம் பார்த்து ‘நாம வெளியில போயிட்டு வரலாம். அவசரமில்ல நிதானமாக் கிளம்பு’ என்றார்.

முதலில் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். தான் தனியாகக் கோவிலுக்குச் சென்ற ஞாபகமே சங்கரனுக்கு இல்லை. அம்மாவுக்குத் துணையாகப் போனதோடு சரி. அன்று அம்மா சொன்னதால் பத்மினியை இதே கோவிலுக்கு இயந்திரம்போலக் கூட்டிவந்திருந்தார். கோவிலுக்கு வெளியே பூக்கடைக்கு அருகில் நிறுத்தி, ‘உனக்கு என்ன பூ பிடிக்கும்’ எனக் கேட்ட கணவனைப் பத்மினி ஆச்சரியத்தோடு பார்த்தாள். ‘நீங்க என்ன பூ வாங்கித்தந்தாலும் சரி’ என்றாள். இவர் மல்லிகைப்பூ வாங்கினார். ‘நீங்களே வச்சிவிடுங்க’ என்று இவருக்கு முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பி நின்றாள். ‘எனக்குப் பூ வச்சிவிடல்லாம் தெரியாது. இன்னக்கி நீயே வச்சிக்க’ என்றார். பத்மினி பல் தெரியாமல் சிரித்துக்கொண்டே பூவைத் தானே சூடிக்கொண்டாள்.

கோவிலிலிருந்து ஊரின் பெரிய உணவகத்துக்குக் கூட்டிச் சென்றார். அப்படிப்பட்ட இடத்துக்கு அவள் வந்தது அதுவே முதல்தடவை என்பது அவள் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. இவரை ஒட்டிக்கொண்டே நடந்தாள். ஒதுக்குப்புறமான இடம் கிடைத்து உட்கார்ந்ததும், ‘என்ன சாப்புடற?’ எனக் கேட்டார். பத்மினி யோசிக்காமல் சொன்னாள், ‘ரண்டு இட்லி. ஒரு காபி.’ இவர் சிரித்தார். அந்தச் சிரிப்பால் அவள் இறுக்கம் தளர்ந்தது.

‘ஏன் இட்டிலிக்கு என்னா?’

‘வீட்டுலதான் தினமும் இட்லி, தோசை சாப்பிடறோமே? ஹோட்டலுக்கு வந்தும் அதையேவா சாப்புடணும்?’

‘சரி நீங்களே சொல்லுங்க.’

பாஸந்தியும் ரவா தோசையும் கொண்டுவரச் சொன்னார். பிறகு காப்பி.

உணவகத்திலிருந்து வெளியே வந்தபோதும் அவள் கண்களில் மிரட்சி மிச்சமிருந்தது. வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கியபோது இருவர் கைகளும் கோத்திருந்தன. முதலில் யார் கையை யார் பிடித்தார்கள் என்பது இருவருக்குமே தெரியாது. அன்றும் வார்த்தைகளை எண்ணியே பேசினார்.

வீட்டுக்கு வந்ததும் உடை மாற்றிக்கொண்டு, ‘அத்தே . . .’ என்று அழைத்துக்கொண்டு பத்மினி சமையலறைக்குள் நுழைந்தாள். அங்கே அவளுக்கு அரை மணிநேர வேலையாவது இருக்கும்.

அவள் மீண்டும் படுக்கையறைக்கு வந்தபோது, சங்கரன் படுக்கையில் சாய்ந்தவாறு ஏதோ யோசித்துக்கொண்டிருந்தார். வழக்கமாகப் படுக்கையின் ஓரத்தில் குறுகிவிடுகிறவள், அன்று இவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து ‘ரொம்ப சந்தோஷங்க’ என்றாள். இவர் கையை நீட்டினார். புரிந்துகொண்ட பத்மினி அதில் தலைசாய்த்து இவர் முகத்தைப் பார்த்தாள். அன்று சங்கரன் பத்மினியோடு முதல் சம்போகத்தை நிகழ்த்தினார்.

* * *

தொடர்வண்டி அப்போது ஒரு நிலையத்தில் நின்றது. பிளாட்பாரத்தில் சற்றுத் தொலைவில் சென்றுகொண்டிருந்த பெண் பின்பக்கத்திலிருந்து பார்க்கப் பத்மினியைப் போலவே இவருக்குத் தெரிந்தாள். அது பிரமை என்பது சில வினாடிகளுக்குள் புரிந்து, பத்மினியின் முகத்தைப் பார்க்காமல் வந்ததால்தான் திரும்பத் திரும்ப அவள் நினைவாகவே இருப்பதாகச் சமாதானப்படுத்திக்கொண்டார். அதற்குப் பிறகு இறுக்கம் தளர்ந்து பத்மினியோடு பேசினாலும் உள்ளுக்குள் சங்கரனுக்கு அவளைப் பற்றிய ஆற்றாமை தீர்ந்தபாடில்லை. படிப்படியாக இவரது நாளாந்திரத் தேவைகளின் கவனிப்பைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்தாள். ஆனால் அதில் அவள் எந்தவித அதிகாரத் தோரணையும் காட்டவில்லை என்பதே இவருக்குப் புரிய நாளாயிற்று. ஒரு பண்டிகைக்காக அம்மா எல்லோருக்கும் புதுத் துணி எடுக்கலாம் என்றாள். அதில் இவருக்கு எந்த ஆட்சேபனையும் இருக்கவில்லை. ஆனால் துணிக்கடையில் நடந்ததைத்தான் இவரால் எளிதில் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அம்மாவும் பத்மினியும் தங்களுக்கான துணிகளை அலசித் தேர்ந்தெடுத்தார்கள். இவர் ஆண்கள் பிரிவில் பார்வையை ஓட்டிக்கொண்டிருந்தார். இவர் தன் உடை விஷயத்தில் யாரையும் யோசனை கேட்டதில்லை. தனக்குப் பிடித்ததை எடுத்து வழக்கமான தையல்காரரிடம்

தருவார். அத்தோடு முடிந்தது. அந்தமுறையும் இவர் சட்டை, பேண்ட் துணிகளை எடுத்துவைத்திருந்தார். அங்கே வந்த பத்மினி இவர் எடுத்துவைத்திருந்த துணிகளைப் பார்த்து ‘உங்களுக்கு இது பொருத்தமாக இருக்காதுங்க’ என்றாள். அவள் அதிகப்பிரசிங்கித்தனமாகச் சொல்லிவிட்டதாக இவருக்குத் துணுக்கென்றது. கடை என்பதால் கோபத்தை வெளிக்காட்டவும் முடியவில்லை. கடைச் சிப்பந்தியின் முன்னால் அப்படிச் சொன்னதை இவரால் தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை. முகம் கறுத்து உதட்டைக் கவ்விக்கொண்டார். அம்மாதான் சொன்னாள், ‘ஒருதடவை இவதான் உனக்குத் துணி செலக்ட் பண்ணட்டுமே. இவ டேஸ்ட் எப்படியிருக்குன்னுதான் பார்ப்போமே’ என்றாள்.

‘ஆபீஸக்குப் போட்டுட்டுப் போறது நான். எனக்குத் தெரியாதா?’ என்றார். ஆனாலும் வேண்டாவெறுப்பாக ‘சரி’ எனத் தலையை ஆட்டிவைத்தார்.

பத்மினி தேர்ந்தெடுத்த துணிகளைத் தைத்து அலுவலகத்துக்கு அணிந்து சென்றபோதுதான் இவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ‘ட்ரெஸ் உங்களுக்கு ரொம்பப் பொருத்தமாயிருக்குது. நல்ல செலக்ஷன் சார்’ என்று பெண்கள் உட்பட சக உத்தியோகஸ்தர்கள் சொன்னபோது இவர் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார். அதுவரை இவரிடம் யாரும் அப்படிச் சொன்னதில்லை. பத்மினி தன்னோடு பணியாற்றும் பெண்களுக்கு ஒன்றும் குறைந்தவளல்ல என்கிற எண்ணம் லேசாக வந்துபோயிற்று.

அன்று இரவு எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுப் படுக்கையில் இவர் அருகில் அவள் வந்து உட்கார்ந்தபோது அதற்காகவே காத்துக்கொண்டிருந்ததைப் போல, ‘பத்து உன் ட்ரஸ் செலக்ஷன் பிரமாதம். எல்லாரும் சொன்னாங்க’ என்றார் சற்று சங்கோஜத்தோடு. பத்மினி இவரை உற்றுப்பார்த்தாள். ‘என்னை என்னன்னு கூப்பிட்டீங்க?’ என்றாள் புன்னகையோடு. தான் அவளை முதன்முறையாக ‘பத்து’ என அழைத்தது அப்போதுதான் இவர் கவனத்துக்கு வந்தது. அதற்குப் பிறகுதான் பத்மினி இவருக்குப் பத்துவானாள். * * *

 சிக்னலுக்காக வண்டி ஒரு நிலையத்தில் நின்றது. வழக்கமாக அந்த நிலையத்தில் நிற்காது. இவர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே பக்கத்துக் குன்றின் மீதிருந்த கோபுரம் ¢தெரிந்தது. பெருமாள் கோயில். இவர்கள் முந்தியிருந்த வீட்டுக்கு அருகிலிருந்த ஆஞ்சநேயர் கோவில் ஞாபகத்துக்கு வந்தது. பக்தர்கள் - குறிப்பாகப் பெண்கள் - கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்கு மட்டும்தான் செல்வார்கள் என்பது சங்கரனின் தீர்மானமான எண்ணமாக இருந்தது. பத்மினியும் அந்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு அடிக்கடி போய்க்கொண்டிருந்தது இவருக்குத் தெரியும். பெரும்பாலும் இவர் அலுவலகத்துக்குக் கிளம்பிச் சென்ற பிறகுதான் அவள் கோயிலுக்குப் போவாள். வார நாள் ஒன்றில் இவருக்கு எதிர்பாராத விடுமுறை. இவர் வீட்டிலேயே இருந்தார். எல்லோரும் சாப்பிட்டாயிற்று. மதியச் சமையலுக்கும் அவள் ஏதோ தயார்செய்துவிட்டுப் புறப்பட்டு நின்றாள். இவருக்கு என்ன தோன்றியதோ ‘இரு பத்து, நானும் வர்றேன்’ என்று கிளம்பினார். பத்மினி கையில் சின்ன பை இருந்ததைக் கோயிலை அடைந்த பிறகுதான் இவர் கவனித்தார். அது அர்ச்சனைப் பொருட்கள் அடங்கிய பையல்ல. ‘நீங்க கொஞ்ச நேரம் அங்க உக்காந்திருங்க’ என்று ஓரிடத்தைக் காட்டிவிட்டுப் பக்தர்கள் கைகால் கழுவிக்கொள்வதற்காக வரிசையாக அமைந்திருந்த குழாய்கள் இருந்த இடத்துக்குப் போனாள். அவள் எதற¢காகத் தன்னை உட்காரச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் ஏன் அங்கே போனாள் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு கவனித்தார். அந்த நேரத்தில் மிகக் கொஞ்சம் பேர்தான் கோயிலில் இருந்தார்கள்.

குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த தொட்டிக்கு முன்னால் செவ்வக வடிவில் சிமெண்ட் தளம் இருந்தது. அங்கே சென்ற பத்மினி பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்துக் கிழித்து அதிலிருந்ததைத் தளத்தில் பரவலாகக் கொட்டினாள். தொட்டிக்குப் பக்கவாட்டில் சாய்த்துவைக்கப்பட்டிருந்த விளக்குமாறை எடுத்துக்கொண்டாள். புடவையைத் தூக்கிச் செருகிக் கொண்டு, குனிந்து பரபரவெனத் தளத்தைப் பெருக்கினாள். சூழலை மறந்து பத்மினி அந்த வேலையிலேயே மூழ்கினாள். தண்ணீரால் சுத்தமாகக் கழுவிட்டு, விளக்குமாற்றை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டுக் கைகால் அலம்பிக்கொண்டாள். சிமெண்ட் தளத்தைவிட்டு வெளியே வந்து, புடவையை இறக்கிவிட்டுக்கொண்டாள். பிறகு இவரைக் கையசைத்துக் கூப்பிட்டாள்.

பத்மினி எல்லாவற்றையும் ஏதோ ஓர் ஒழுங்கிலும் தன் சொந்த வீட்டில் செய்வதுபோல இயங்கியதாகவும் இவருக்குத் தோன்றியது. எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. இதுவரை அதைப் பற்றி அவளிடம் சங்கரன் பேசியதுகூட இல்லை.

* * * .

ரயில் பெட்டியின் வாசலிலிருந்து கோபுரத்தைப் பார்ப்பதற்காகப் பயணிகள் பலரும் எழுந்து போனார்கள். அவர்களில் ஒரு பெண்மணி சங்கரனுக்குப் பத்மினியின் உருவத்தை நினைவூட்டினாள். பிற பெண்களை உற்றுப்பார்க்கும் பழக்கமில்லாத தனக்கு அன்று மட்டும் பார்க்கும் பெண்கள் பலரும் பத்மினியைப் போலவே ஏன் தோன்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கடிகாரத்தைப் பார்த்தார். பத்மினி இன்னேரம் எழுந்திருப்பாளா? மகனும் மருமகளும் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டு முடித்திருப்பார்கள். வீட்டிலிருந்திருந்தால் இவரும் இன்னேரம் சாப்பிட்டிருப்பார். ஆனால் பசிக்கவில்லை. எதிர்ப்புறமிருந்து இன்னொரு விரைவு வண்டி கடந்து சென்றது. இவரிருந்த தொடர்வண்டி மீண்டும் புறப்பட்டது.

 * * *

எந்த இழப்பையும் தாங்கிக்கொள்ளும் பக்குவம் பத்மினிக்கு இருந்ததை சங்கரன் காலப்போக்கில் உணர்ந்தார். பேரன் பிறந்து பள்ளிக்கூடம் செல்வதையும் பார்த்த பிறகுதான் அம்மா இறந்தாள். நல்ல சாவுதான். தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருந்தது. அம்மாவின் இழப்பை இவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தேரோடு போயிற்று திருவிழா; தாயோடு போயிற்று சந்தோஷம் என்பது இவரளவில் உண்மையாயிற்று. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்று ஒரு மாதம் விடுமுறை எடுத்திருந்தார். முதலில் ஒரு வாரம் இவர் போக்கில் விட்ட பத்மினி பிறகு தினமும் இவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள். கட்டாயப்படுத்தித் தினமும் வெளியே எங்காவது கூட்டிச் சென்றாள். தன் அப்பாவின் வீட்டுக்கு இவரையும் அழைத்துச் சென்று நாலு நாட்கள் தங்கியிருந்தாள். இவர் வீட்டிலேயே அடைந்துகிடந்தால் மனம் தேறமாட்டார் என்று காய்கறி வாங்க, வேறு கடைகளுக்குப் போய்வர என்று இவரை வெளியே அனுப்பிக்கொண்டேயிருந்தாள். பத்மினியின் யுக்தி பலித்தது. அம்மா இறந்த துக்கத்திலிருந்து சங்கர் படிப்படியாக விடுபட்டு அலுவலகத்துக்கும் செல்லத் தொடங்கினார்.

திருமணமான புதிதில் பத்மினி படுக்கையில் மிகுந்த கூச்சத்தோடு இயங்கினாள். அவளைப் போன்ற பெண்களுக்கு அது இயல்புதான். நாளடைவில் கூச்சம் விலகி இவருக்குச் சமதையான தோழியாகவே செயல்பட்டாள். குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட வேண்டும், ஆணுறை உபயோகிக்கலாம் அல்லது தான் காப்பர் டீ பொருத்திக்கொள்ளலாம் என்பதையெல்லாம் அவள்தான் வெட்கப்படாமல் இவருக்குச் சொல்லிப் புரியவைத்திருந்தாள். இவர் வாய்விட்டுக் கேட்காமலேயே இவரது ஆசைகளை சூசகமாக உணர்ந்து படுக்கையில் அவற்றை நிறைவேற்றினாள். இந்த விஷயத்தில் அவள்மீது சங்கரனுக்கு ஏகப்பட்ட திருப்தி.

இப்படியிருந்தபோதுதான், இவருக்கு சர்க்கரை நோய் வந்தது. படிப்படியாக விறைப்புத்தன்மை குறைந்துகொண்டே வந்தது. இடிந்துபோனார். பத்மினிக்கு மாதவிடாயும் அப்போது நிற்கவில்லை. ‘பத்து, உன்னைத் திருப்திப்படுத்த முடியலியே’ என்று ஒரு நாள் படுக்கையில் அவள்முன்னால் தேம்பினார்.

பத்மினி முதிர்ச்சியோடு பேசினாள்.

‘வாழ்க்கையில எல்லா சுகமும் எப்பவும் கிடைச்சிட்டே இருக்காதுங்க. இதுவரைக்கும் கிடைச்ச இந்தச் சுகம் போதுங்க. வேணுன்னா டாக்டரைப் போய்ப் பார்க்கலாங்க’ என்றாள்.

படுக்கைச் சுகத்திற்காக டாக்டரிடம் ஆலோசனை கேட்க இவருக்கு விருப்பமில்லை. சங்கோஜப்பட்டார்.

‘படுக்கைச் சுகத்துல இதுமட்டுந்தானா? இன்னும் எவ்வளவோ இருக்குங்க. அதுல நாம சந்தோஷப்படலாங்க’ என்று சொன்னதோடு இவரை ஈடுபடுத்தித் திருப்தியையும் ஏற்படுத்தினாள்.

பத்மினியின் ஆறுதலும் துணையும் யுக்திகளும் இருந்திருக்காவிட்டால் தான் ஒருவேளை தற்கொலைகூடச் செய்துகொண்டிருக்கலாம் என இவர் பலமுறை எண்ணியதுண்டு.

இவருக்குக் கல்யாணமானபோது இவர்கள் இருந்த வீடு அப்பா கட்டியது. வசதியானதுதான் என்றாலும் பழைய பாணி வீடு. இவர்கள் இப்போதிருக்கும் அபார்ட்மெண்ட் வீட்டை வாங்க யோசனை சொன்னவளே பத்மினிதான். அவ்வளவு பெரிய தொகையைத் தன்னால் புரட்ட முடியுமா என இவர் மலைத்து நின்றார். இவருக்கு நம்பிக்கையே இல்லை. அதுவரை இவர் சம்பளம் எவ்வளவு எனப் பத்மினி கேட்டதேயில்லை. அப்போதுதான் இவருடைய பே ஸ்லிப்பைக் கேட்டு வாங்கிக்கொண்டாள். வங்கிப் பாஸ்புக் கேட்டாள். இரண்டு நாட்கள் அவற்றை வைத்துக்கொண்டு என்னென்னவோ கணக்குகளைப் போட்டுக்கொண்டிருந்தாள். ‘அப்படி என்னதான் கணக்குப் போடற? உனக்கு இதெல்லாம் புரியுமா?’ என்று இவர் கேலியாகவே கேட்டார். ‘ரண்டு நாள் பொறுங்க. விளக்கமாச் சொல்றேன்’ என்றாள். இவரைக் கூப்பிடாமல் அவளாகவே வங்கிகளுக்கும் போய் விசாரித்துவிட்டு வந்தாள்.

இரண்டு நாள் கழித்து இவர் அலுவலகத்துக்குப் புறப்பட்டபோது, ‘சாயந்தரம் வரும்போது சுந்தரம் சாரையும் அழைச்சுட்டு வாங்க’ என்றாள். ‘ஏதோ திட்டம் போடுகிறாள். போடட்டும். உருப்படியாக ஏதாவது நடந்தால் சரி’ என்று நினைத்து ‘ஆகட்டும்’ எனச் சொன்னார்.

சங்கரன் சுந்தரத்தை மாலை வீட்டுக்கு அழைத்தபோது, அவர் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். இந்த மாதிரி காரியங்களுக்காகவே தான் பிறவியெடுத்திருப்பதாக நினைத்தவர் அவர். அன்று அவர்கள் இருவரிடமும் ஃபிளாட் வாங்கப் பணம் புரட்டுவதற்கான மூன்று திட்டங்களைப் பத்மினி சமர்ப்பித்தாள். சங்கரின் சம்பள விவரம், வங்கியில் உள்ள இருப்பு, மற்ற சேமிப்புகள், வங்கிகளில் கிடைக்கக்கூடிய கடன், பிஎஃப், எல்ஐசி பாலிசியிலிருந்து பெறக்கூடிய கடன் என எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து அவற்றை விளக்கினாள். வீட்டுக் கடனால் கிடைக்கும் வருமானவரிச் சலுகையைக்கூட மறக்காமல் குறித்திருந்தாள். அவள் சொன்னதையெல்லாம் கேட்ட சுந்தரம் ‘ரொம்பப் பிரமாதமா திட்டம்போட்டிருக்கறம்மா. எப்படி இதெல்லாம் கரெக்டா கணக்குப் போட்ட?’ என்று சிலாகித்தார். அப்போதுதான் ‘நான் எஸ்எஸ்எல்சியில கணக்குல நூத்துக்கு நூறுங்க’ என்று வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னாள். அதுவரை அந்தத் தகவலே தனக்குத் தெரியாதென்பது சங்கருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தது. ‘பத்மினிய வீட்டுலயே அடைச்சுவச்சி வேஸ்ட் பண்ணிட்ட சங்கர். உன்னை மன்னிக்கவே முடியாது’ என்ற சுந்தரத்தைப் பார்த்து இவரால் புன்னகைக்க மட்டுமே முடிந்தது.

 * * *

வண்டி இவர் இறங்க வேண்டிய நிலையத்தின் பிளாட்பாரத்தில் நுழைந்துகொண்டிருந்தது. இவர் பெட்டியின் வாசலை நோக்கிச் சென்றார். வண்டி நின்றதும் அவசரமாக இறங்கியவர்களுக்கு வழிவிட்டு நிதானமாக இறங்கினார். பசித்தது. பக்கத்துப் பிளாட்பாரத்திலிருந்த சைவ உணவகத்தை நோக்கி நடந்தார். அதை நெருங்கியதும் தன் உறவினருடைய மகன் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தார். அவர்கள் வீட்டுக்குத்தான் இவர் துக்கம் விசாரிக்கப் போக வேண்டும். இவரைப் பார்த்ததும் அவன் பதற்றத்தோடு அருகில் வந்து, கையைப் பிடித்துக்கொண்டு கூட்டத்திலிருந்து விலகி ஓரமாக இவரை அழைத்துச் சென்றான். இவருக்கு ஒன்றும் புரியவில்லை. இவர் ஏதோ கேட்பதற்குள் அவன் இடைமறித்து, ‘சித்தப்பா, செல்போனை வீட்டுலயே மறந்து வச்சிட்டு வந்துட்டீங்களா? உங்க வீட்டுலயிருந்து உங்களைக் காண்டாக்ட் பண்ண ரொம்ப முயற்சி செஞ்சாங்க’ என்றான். அவன் கேட்டதும்தான் இவருக்குக் கைப்பேசி ஞாபகம் வந்தது. பத்மினியைப் பற்றியே யோசித்துக்கொண்டு வந்ததால், அதைச் சுத்தமாக மறந்திருந்தார். அவன் பதற்றத்தோடு தயங்கி நடுங்கிய குரலில் ‘பத்மினி சித்தி...’ என ஆரம்பித்தான்.

***

Pin It