Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

 

இறுதி யுத்தத்தில் இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையின் கொடூரத்தை அவ்வப்போது சிறுசிறு அடையாள போராட்டங்கள் மட்டும் நடத்தியும் மௌனமாகவும் கடந்து வந்துவிட்ட தமிழ் பேசும் இந்தியர்களின் ஈழத் தமிழர்களின் மீதான ரத்த பாசத்தையும் நாடகங்களையும் சண்டைக் காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தோம். ஈழ உறவுகளின் துயரனைத்தும் என் தலைமுறையின் மீதான மொத்த பழியாக என் மேல் சுமத்தப்பட்டு கழுவேற்றப்பட்டவளாக உணர்கிறேன்.

எங்கள் வாக்குரிமைக்கு உள்ள மதிப்பே தெரியாத நாங்கள் எப்படி இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியும். அல்லது எங்கள் வாக்கினைப் பெற்ற ஒருவரால் எப்படித் தடுத்து நிறுத்த முடியும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. தமிழக அரசியல் தலைவர்களால், தமிழினத் தலைவர்களால் ஏதும் முடியாத போது சாமானிய தமிழர்களால் என்ன செய்திருக்க முடியும் என்ற பதிலைக் கூறிக்கொண்டு நம்முடைய குற்றவுணர்வி லிருந்து தப்பிக்க முயற்சித்தோம். ஈழ மக்கள் தஸ்மிழகம் தங்களைக் காப்பாற்றும் என்றும் தங்களுக்குப் பேராபத்து ஏற்படும் நிலைமை உருவானால் தமிழகமே கொதித்தெழுந்து இலங்கையைப் பணியவைக்கும் என்றும் நம்பினார்கள். தமிழகத் தலைவர்கள் தங்களை கைவிட மாட்டார்கள் என ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஈழத் தமிழர்கள் தொடர்ந்து தமிழகத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டார்கள்.

தமிழகத்தில் மாணவர்கள், வழக்குரைஞர்கள், மனிதவுரிமை இயக்கங்கள், எழுத்தாளர்கள், பெண்கள் இயக்கங்கள் மற்றும் பல்வேறு சிறு குழுக்கள் இணைந்தும் தனித்தும் போரை நிறுத்த குரல் எழுப்பிக்கொண்டுதான் இருந்தனர். இவைகள் மத்திய மாநில அரசுகளை நிர்பந்திக்கும் அளவுக்கு பலம் பெற்றிருக்கவில்லை. ஆனால் இச்சிறு போராட்டங்களைக்கூட தமிழக அரசு அனுமதிக்கத் தயாராகயில்லை. முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை நிறுத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை உளவுத்துறையாலும் காவல் துறையாலும் பழிவாங்கியும் வழக்குரைஞர் களின் மண்டையைப் பிளந்தும் தமிழின உணர்வைப் புலப்படுத்திக் கொண்டது. ஈழ மக்களின் போராட்டம் வெடிகுண்டுகளால் அடக்கப்பட்டது என்றால் தமிழகத்தில் சிறு சிறு மக்கள் எழுச்சியும் ஜனநாயக முறையிலான போராட்டங்களும் லத்தி முனையில் ஒடுக்கப்பட்டன.

இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி ஈழத் தமிழர்களை கொன்றொழிக்க துணை போனது உலகறிந்த செய்தி. இதை இலங்கை அரசும் வெளிப்படையாக அறிவித்தது. நிருபர் நிதின் கோகுலே தன் நூலில் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். மதிமுக தலைவர் வைகோ அவரது நூலிலும் இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறார். இந்திய பாது காப்புத்துறை இணை அமைச்சரும் பத்திரிக்கை யாளர் கூட்டத்தில் ஒப்புக்கொள்கிறார். ஆனால் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கொண்டும் ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்துவது, ஈழத் தமிழர் எழுச்சிக் கூட்டங்கள் நடத்துவதென பா.ம.க., ம.தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் சேர்ந்து நடத்திய அரசியல் நாடகங்களின் அவலத்தை புரிந்து கொள்ளும் திறனற்ற நிலையில் தமிழக மக்கள் இல்லை.

ஈழத் தமிழர்களை கொல்ல இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்துதவும் ஒரு மத்திய அரசில் இருந்துகொண்டே எப்படி ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்காகப் போராட முடியும். இந்த சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணி இலங்கைத் தமிழர்களை பாது காக்கும் என்று தமிழுணர்வாளர்கள் நம்பியது இன்றைய அரசியல் சதித்திட்டங்களை அறிந்து கொள்ள முடியாததின் வெளிப்பாடுதான். இந்த கொள்கை முரண்பட்ட கூட்டணியினர் சேர்ந்து இந்திய அரசு மூலம் ராஜபட்சேவை பணிய வைத்துவிடுவார்கள் என எதிர்பார்த்த ஈழ ஆதரவாளர்கள், ஈழ மக்களின் நம்பிக்கை யை மண்ணோடு மண்ணாக்கியது அரசியல் தந்திரம் என்பதா, அரசியல் சூழ்ச்சி என்பதா? இந்த துரோகத்தைத் தாங்க முடியாமல்தான் முத்துக்குமரன் தமிழக அரசியல்வாதிகளின் முகங்களை அம்பலப்படுத்தி மாண்டான். இதையும் தமிழக அரசியல்வாதிகள் தங் களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

மற்ற குழுக்களின் ஈழ ஆதரவுப் போராட்டங்களை தமிழகத்தில் ஒடுக்கிக் கொண்டே திமுகவும் அதன் கட்சிக்காரர்களும் நடத்திய போராட்டங்களும் சிந்திய கண்ணீரும் தொடரும் ஒப்பாரிக் கவிதைகளும் கடிதங் களும் ஓநாய், ஆட்டுக்குட்டி நாடகத்தின் முற்பகுதி காட்சிகள். முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்தது இடைவேளை காட்சி. இலங்கையில் முப்பதாயிரம் தமிழர்கள் ஓரே நாளில் கொல்லப்பட்ட அன்று தமிழக முதல்வர் டெல்லிக்குப் போய் மத்திய மந்திரி பதவிகளுக்கு பேரம் பேசியது உச்சபட்ச காட்சி. இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை அடித்து நொறுக்கி கொண்டிருக்க பத்து தமிழக எம்.பிகள் குழு இலங்கை சென்று ராஜபட்சே அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கி விருந்துண்டது இயேசு யுதாஸின் இறுதி விருந்து காட்சியை மிஞ்சியவை. உலக வங்கி, பன்னாட்டு நிதி அமைப்புகள் ராஜபட்சே அரசின் போர்க் குற்றங்களுக்காக நிதியுதவி கொடுக்க மறுக்கும் போது, நம் தமிழக எம்.பிகளின் நற்சான்றிதழ் போர் குற்றவாளியென அறிவிக்கபட வேண்டிய ராஜபட்சேவுக்கு கருணை மனுவாக ஐ.நா. சபையில் சாட்சியமளிக்கப் போகிறது. இந்தியா ஐநூறு, ஐநூறு கோடியாக வழங்கிக் கொண்டிருக்கப் போகிறது. இலங்கையில் தமிழக அரசியல்வாதிகளின் முதலீடுகளும் பெருகத்தான் போகிறது. உலக நாடுகளின் முன் தமிழக அரசியல்வாதிகள் பொய்சாட்சியுரைத்து தங்கள் அரசியல் பேரங்களை லாபகரமாக முடித்துக் கொண்டார்கள்.

அறிவுஜீவிகள் ஈழத் தமிழர்களுக்காக கவிதைகளில், தலையங்கங்களில் ரத்தக் கண்ணீர் வடிப்பதும், பொத்தாம் பொதுவாக இந்திய அரசை கண்டிப்பதும் அரசியல்வாதி களைக் கண்டித்து ரத்தம் கொதிப்பதும் பிறகு தங்கள் நூலை வெளியிடவும், கூட்டங்களுக்கு தலைமையேற்கவும், அரசு நூலகங்களுக்கு புத்தக அனுமதி பெறவும் விளம்பரங்கள் பிடிக்கவும் விருதுகளுக்காகவும் பகையாளி களை பழி தீர்க்கவும் அரசியல்வாதிகளுடன் உறவாடுவது அவமானக் காட்சிகள். மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், திரைப்படக்காரர்கள், இலக்கிய மேடைகளையும் இலக்கிய கூட்டங்களையும் அலங்கரிப்பதின் அளவைப் பொறுத்து பல எழுத்தாளர்களின் நட்சத்திர அந்தஸ்த்து கணக்கிடப்படுகிறது. எழுத்தாள தொண்டர் படையும் அதற்கு தகுந்தாற்போல் இருக்கும். இவர்கள் உலகின் எந்த மூலையில் நடக்கும் அரச பயங்கரவாதத்தையும் எதிர்ப்பார்கள். ஆனால் அரசியல், இலக்கிய விழாக்களுக்குச் சென்று மன்னர் துதிபாடி பரிசில் பெறுவதும் இந்திய அரசியல்வாதிகளுக்கு இலக்கிய மேடையில் புனிதர் பட்டம் வழங்குவதும் கேடுகெட்ட தந்திரக்காட்சிகள்.

அறிவுஜீவிகளின் இன்னொரு குழு புலி பாசிசத்தை எதிர்ப்பவர்கள். மரண தண் டனையை எதிர்ப்பவர்கள், இன ஒடுக்கு முறையை எதிப்பவர்கள் என அடையாளம் காட்டிக்கொண்டவர்கள். இலங்கையில் கடைசித் தமிழ் குழந்தையும் மடிந்தால் கூட பரவாயில்லை புலிகளை அழிக்கும் வரை சிங்கள அரசு இலங்கையில் குண்டு வீச்சை நிறுத்தக்கூடாது என எதிர்பார்த்தவர்கள். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரச பாசிஸ்டுகளைவிட விடுதலை புலிகள் ஆபத்தானவர்களென நிறுவ பல முறைமுக நேர்முக காட்சிகளை அரங்கேற்றியவர்கள். இதில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் வருடம் ஒருமுறை தமிழகம் வந்து கோயில் கொடைக்கு நிதி அளிப்பது மாதிரி இலக்கிய கூட்டங்களை நடத்தி பரிவட்டம் கட்டிக்கொள்வதும் மீந்த பணத்தில் பத்திரிக்கை நண்பர்களுக்கு செலவு செய்து தமிழ்ப் பத்திரிகைகளில் நேர்காணல்களைப் போடவைத்து ஜனநாயகத்தையும் முதலாளித் துவத்தையும் பன்னாட்டு சந்தை விரிவாக்கத்தையும் புலி பாசிசத்தையும் கேள்வி கேட்டுவிட்டு செல்வார்கள். ராஜபட்சே கொண்டு வந்த மயான அமைதிக்காக காத்திருந்தவர்கள்.

போர் ஒரு கொண்டாட்ட காட்சியாக ஊடகங்களுக்கு தீனியான அவலத்தின் சாட்சியாக இன்று 3 லட்சம் தமிழர்கள் வன்னியில் திறந்த வெளி சிறைக்குள் ஒரு வேளை உணவுக்குக் கையேந்தி கிடக்கிறார்கள். ஊடக முதலாளிகள் தொழில் அதிபர்களாக வும் அரசை அமைப்பவர்களாகவும் அரசை மாற்றுபவர்களாகவும் இருப்பதால் இந்திய ஊடகங்கள் தங்கள் கண்ணெதிரே நடந்த தமிழினப் படுகொலையை கண்டிக்கவில்லை. மனிதவுரிமை மீறல்களை உலகின் கண்களி லிருந்து மறைத்தன. பல ஊடகங்கள் பல சமயங்களில் சிறு செய்தியைக்கூட கசிய விடாமல் பார்த்துக்கொண்டன. இலங்கை அரசு எத்தனை ஊடகவியலாளர்களை கொன்றாலும் பரவாயில்லை அக்கொலை குறித்து ஒரு கட்டுரை போட்டுவிட்டு தமது பணியைத் தொடர்ந்தன. இலங்கையில் தங்கள் முதலீட்டுக் கணக்கை ஆரம்பிக்க தமிழர்களை கொன்று முடிக்கும் நாளுக்காக காத்திருந்தன. எண்ட் த கேம்என மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே இலங்கைப் போர் வரலாற்றை ஆங்கில ஊடகங்கள் தொகுத்து அளித்தன. தமிழர்களின் தேசியஇனப் போராட்டத்தை விளையாட்டு என கொச்சைப்படுத்திய ஊடக பயங்கரவாதம் ஜனநாயக நாடு என அழைத்துக்கொள்ளும் இந்தியாவில் தான் சாத்தியம்.

இந்த நூற்றாண்டில் நம் கண்ணெதிரே கூப்பிடும் தூரத்தில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் தமிழர்களின் உயிரை குடித்தது இந்திய, இலங்கை, தமிழக அரச பயங்கரவாதம். ஈழத் தமிழினப் படுகொலையைப் பார்த்து கொண்டிருந்த நாம் அனைவரும் குற்றவாளி களாக வரலாற்று முன் நிற்கிறோம்.

இந்தியத் தமிழர்கள் முதலில் இங்கு நடக்கும் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட முன்வரட்டும். இலங்கை ராணுவத் தால் கொல்லப்பட்ட 400க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு இந்திய, இலங்கை அரசை நிர்பந்தித்து நீதி தேடி தரட்டும். இலங்கை ராணுவத்தின் அத்து மீறலைத் தடுத்து நிறுத்தட்டும். பழங்குடிகள், தலித்துகள், மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரங்களை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து மீட்டெடுத்துத்தர என்ன திட்டங்களை இவர்கள் வைத்திருக் கிறார்கள். தீண்டாமை தலைவிரித்தாடும் தமிழகத்தை சீரமைக்க என்ன செய்யப் போகிறார்கள். இவற்றில் எதையுமே செய்ய முடியாத தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டத்துக்கு என்னவகைப் பங்களிப்பைத் தரமுடியும். இவர்களின் ஆதிக்க அரசியலுக்கு ஈழத்தமிழர்களை பலி வாங்கியது போதும். இறுதி வேண்டுகோள். ஈழத் தமிழர்களே மீண்டும் இந்தியத் தமிழர்களை நம்பாதீர்கள். நம்பி இழந்தது போதும்.

- மாலதி மைத்ரி

 

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 katsura 2010-03-17 18:45
maalathy enna iththanai naalukku pinpum onrume puriyavillaiyaa ?
Report to administrator
0 #2 theevaan kailaimalainathan 2010-04-01 03:29
kizhavanin arasiyalil iethellam sakasamappa.
Report to administrator

Add comment


Security code
Refresh