உலக வரலாற்றில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு மருத்துவ முறைகள் தோன்றியிருக்கின்றன. அவ்வாறு தோன்றிய மருத்துவ முறைகளில் தனிச்சிறப்பு பெற்றது ஹோமியோபதி மருத்துவம் என்றால் மிகையாகாது. ஏனெனில் மருத்துவ முறைகளுக்கென எந்த விதமான வரையறைகளும், அடிப்படைகளும் இல்லாத கால கட்டத்தில் - விஞ்ஞான தொழில் நுட்ப வசதிகள் இல்லாத கால கட்டத்தில் - மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட அடிப்படை விதிகளுடன், முழுமை பெற்ற மருத்துவ முறையாக ஹோமியோபதி மருத்துவ முறை உருவானது.

புதிய மருத்துவ முறைகள் உருவாக்கப்படுவது என்பது பெரிய விஷயமல்ல. யாரால் உருவாக்கப்பட்டது? பிற மருத்துவ முறைகளில் அவரது அனுபவம் என்ன? சமூகத்தின் மீது - மக்களின் மீது - அவரது அக்கறை என்ன? அனைத்திற்கும் மேலாக, உருவாக்கப்பட்ட மருத்துவ முறைக்கு, பாமரனும் புரிந்துக்கொள்ளக் கூடிய வகையில் செயல் முறை விளக்கங்களும் - சந்தேகம் வராத அளவில் தீர்வுகளும் தரப்பட வேண்டும்.

இவ்வகையில், ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை டாக்டர். ஹானெமன் தன்னிகரில்லா மருத்துவராக மட்டுமல்ல - மனிதனாகவும் திகழ்கிறார். அவர் உலகத்திற்கு அளித்த மாபெரும் நன்கொடை ஹோமியோபதி மருத்துவம் மட்டும் அல்ல, மாறாக ஆர்கனான் ஆப் மெடிசின் எனும் பொக்கிஷமாகும். இதை வைரச் சுரங்கம், தங்கச் சுரங்கம் எனவும், இதைவிட உயர்வான வார்த்தைகளின் மூலமாகவும் அழைக்கலாம்.

டாக்டர்.ஹானெமன், வெறும் ஹோமியோ பதி மருத்துவ முறையை மட்டும் அறிமுகப்படுத்தியிருந்தால் அவரும் பத்தோடு பதினொன்று தான். அது சுவரில் மாட்டக் கூடிய படம் போலத்தான் இருந்தி ருக்கும். தன் குழந்தையை நேசிக்கும் தாய், குழந்தையின் கைகளைப் பிடித்து நடக்கப் பழக்குவதும், ஆழமான தண்ணீரை கடக்கும் போது தூக்கிக் கொள்வதும், கடந்த பிறகு இறக்கி விடுவதும், மழை-வெய்யிலில் இருந்து பாதுகாப்பதும், அவ்வபோது சரி-தவறுகளை உணர்த்துவதும் என, மொத்தத்தில் குழந்தையின் முழுமையான வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படுகிறாள்.

அதுபோல, டாக்டர்.ஹானெமன் தான் உருவாக்கிய ஹோமியோபதி மருத்துவ முறையை, ஒரு பரிமாணம் அல்லது முப்பரிமாண பொருளாக மட்டும் காண்பிக்காமல், அதற்குள்ளேயே அழைத்துச் செல்கிறார். அவ்வாறு அழைத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல், மருத்துவரின் மிக உன்னதமான நோக்கம் எதுவாக இருக்க வேண்டுமென்ற முதலாவது பால பாடத்தை கற்றுத் தருவதில் தொடங்குகின்றார்.

பிறகு, நலம் தரக்கூடிய மருத்துவ முறை, எப்படிப் பட்டதாக இருக்க வேண்டுமென்று கூறுகிறார். தொடர்ந்து மருத்துவர்களின் தகுதிகளாக தெரிந்திருக்க வேண்டியது பற்றியும் விவரிக்கிறார். மருந்துகள் செய்முறைபற்றியும், நோயறிதல், மருந்துகள் கொடுப்பது முதற்கொண்டு, ஹோமியோபதி மருத்துவர்கள் பின்பற்ற வேண்டியது வரை எவ்வித ஐயப்பாடுமின்றி தெளிவாக விளக்கினார். விளக்குகிறார். விளக்குவார்.

ஆம்! ஆர்கனான் ஆப் மெடிசின் - புத்தகத்தின் மூலம்தான் மேற்கண்டவை நடந்து கொண்டிருக்கின்றன. உலகத்தில் எந்த ஒரு மருத்துவத்துறையிலும் இல்லாத ஒன்று ஹோமியோபதியில் இருக்கிறதென்றால், அது உயிரோட்டமுள்ள ஆர்கனான் தான்.

ஆர்கனானில் உள்ள ஒவ்வொரு மணிமொழியும் -அல்ல, வரியும்-அல்ல, வார்த்தையும் டாக்டர்.ஹானெமனின் கடுமையான உழைப்பு, ஆராய்ச்சி மற்றும் அபிவிரித்தியின் தீர்ப்புகளாகும். மாற்ற முடியாத கல்வெட்டு தீர்ப்புகளாகும். பொருள் முதல் வாதத்தின் படி, மாற்றமுடியாத எனும் வார்த்தை பிற்போக்குத் தனமானது போலவும், கருத்து முதல் வாதத்தை ஆதரிப்பது போலவும், விஞ்ஞானத்திற்கு எதிரானது போலவும் தோன்றும். ஆனால், ஆர்கனானில் கூறப்பட்டுள்ள அனைத்தும் விஞ்ஞான பூர்வ தத்துவங்களின் அடிப்படையிலும், ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலும், அறிவுபூர்வமாக மட்டுமல்ல, அனுபவ பூர்வமாகவும் மறுக்க முடியாத வகையிலும் டாக்டர்.ஹானெமன் மிகக் கவனமாக ஆர்கனான் ஆப் மெடிசின் நூலை எழுதியுள்ளார்.

பல்வேறு வகைகளில், பல சிறப்புக்கள் பெற்றுள்ள ஆர்கனான் நூலின் முதல் பதிப்பை, டாக்டர்.ஹானெமன் 1810 ம் ஆண்டில் வெளியிட்டார். ஹோமியோபதி என்கிற உண்மையை நிலைநாட்ட டாக்டர்.ஹானெமன் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். மிக எளிமையாக அவர் இதை சாதித்து விடவில்லை. பின்னர், ஹோமியோபதி மருத்துவம் உலகில் வேரூன்றி வளர்ந்து, ஆல் போல் தழைத்து செழித்து வளர்ந்து வருகிறது என்பது யாவரும் அறிந்ததே.

ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பான, ஆர்கனான் நூல் 1810 ம் ஆண்டில் வெளியிடப்பட்டு தற்போது 2010-ல், 200 -வது ஆண்டில் தனது ஆற்றலில் சிறிதளவும் குறையாமல் அடியெடுத்து வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

ஹோமியோபதிபதி விழிப்புணர்வு சங்கம், டாக்டர்.ஹானெமன்-ஹோமியோபதி மற்றும் ஆர்கனானை போற்றும் வகையில் 2010 ம் ஆண்டை “ஆர்கனான்-200” என பிரகடனம் செய்கிறது.

இக்கால கட்டத்தில், ஹோமியோபதியை நேசிப்பவர்களின் கடமைகள் என்ன?

| ஆர்கனான் புத்தகம் இல்லாதவர்கள் உடனடியாக வாங்க வேண்டும்.

| நாளொரு மணிமொழி -என கட்டாயமாக படிக்கும் பழக்கம் வேண்டும்.

| ஆர்கனான் பற்றிய சிறப்புக் கருத்தரங்குகள்-ஆய்வரங்குகள் நடத்த வேண்டும்.

| ஆர்கனான் வழியில் மருத்துவம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

| ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம், ஆர்கனானைப் பற்றி பெருமளவில்

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

| வாய்ப்புள்ள வழிமுறைகளில் “ஆர்கனான்-200” ஆண்டை (2010) உயர்த்திப் பிடிக்க

வேண்டும்.

-டாக்டர்.கே.இராமகிருஷ்ணன்

Pin It