இன்று தனிமை இங்கில்லை
கடல் மறுத்த மணல் போல
தாகமுள்ள கனவுகள்
இருக்கும் நிறங்களெல்லாம் வானில்
நீண்டதொரு இரவில்
ஊமையாய் ஒற்றை நட்சத்திரம்
கருப்பும் வெள்ளையுமாய்
உடைந்த நிலவு
சிந்திய புன்னகை போல்
சிதறியிருக்கும் மேகங்கள்
அலைகளற்ற அமைதியின்
ஆரவாரத்தில் ஒரு கடல்
திசைகளறியாமல் திரிகின்ற காற்று
யாருமே செலுத்தாமல்
அலையாடும் படகு
திரைச்சீலையாய்
அசையுமென் நிழல் பார்த்து
ஏதோவொரு தெருவில்
ஏதோவொரு சாலையில்,
ஏதோவொரு நகரத்தில்
என்னைப் பார்த்து கையசைத்த
யாரோ சுமந்து சென்ற
ஒரு தலையில்லா உடல்
நான் நினைவுகளில் வடித்ததைக்
கவிதையென்றது
கவிதையே ஆனேன் நான்
இன்னும் எத்தனை இருக்கிறது
எழுதியவற்றின் மிச்சமாய்
நானே விரும்பாத கவிதைகள்.

- விதூஷ்

Pin It