“திராவிடம் என்பது மாயை அன்று

செய்த நன்மைகள் பலநூறு

திராவிடம் என்பது தமிழர் உணர்வைச்

செதுக்கிய தென்பது வரலாறு!”

என்று கூறும் கவிஞர் தமிழேந்தி, திராவிட இயக்கம் தமிழ் இசைக்குச் செய்துள்ள தொண்டுகள் பலவற்றை, ‘திராவிடம், பெரியாரியம் இன்றும் தேவையே’ என்னும் தன் தொகுப்பு நூலில் விளக்கி எழுதியுள்ளார்.

1927ஆம் ஆண்டு இறுதியில், சென்னையில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டிற்காகத் திரட்டப்பட்ட தொகையில் மிஞ்சிய பணத்தைக் கொண்டே, 1928ஆம் ஆண்டு சென்னையில் மியூசிக் அகாடமி அரங்கம் உருவாக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பணம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும் சொந்தமானதில்லை. ஆனால் அன்று முதல் இன்று வரை அவர்களின் ஆதிக்கம்தான் அங்கு கொடிகட்டிப் பறக்கிறது.

இந்தச் சூழலில் சுயமரியாதை இயக்கம் தமிழிசை மேம்பாட்டுக்காக மேற்கொண்ட முயற்சிகள் மிகப் பலவாகும். தமிழிசைக்காக தனி ஒரு மாநாட்டையே சுயமரியாதை இயக்கம் நடத்தியது. அண்ணாமலை அரசரும், ஆர்.கே.சண்முகமும் இணைந்து தோற்றுவித்த தமிழிசைச் சங்கத்திற்கும் திராவிட இயக்கம் துணை நின்றது.

கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, பார்ப்பனர் அல்லாத இசைக்கலைஞர்களைத் திராவிட இயக்கம் ஊக்குவித்தது. கே.பி.சுந்தராம்பாள், சத்தியமூர்த்தி அவரோடும், தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யோடும் சேர்ந்து சுயமரியாதை இயக்கத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார்.

இதனால் பார்ப்பனர்கள் உள்ளூர மகிழ்ச்சி கொண்டாலும், பார்ப்பனர் அல்லாத, அவர்களால் கீழ்ச்சாதி எனச் சொல்லப்படும் வகுப்பில் பிறந்த கே.பி.எஸ் இசைத் துறையிலும், நடிப்பிலும் பெரும் புகழ் ஈட்டி வருவதைக் கண்ட பார்ப்பனர்கள் பொறாமை கொண்டனர். சுதேச மித்திரன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகள் அவருடைய ஆற்றலைக் குறைத்து மதிப்பிட்டு எழுதின.

அந்த நேரத்தில் கே.பி.எஸ்.சுக்கு ஆதரவாகக் குடியரசு ஏடுதான் எழுதியது. அவருடைய இசை ஞானத்தையும், நடிப்பையும் புகழ்ந்து எழுதிய ஏடு குடியரசுதான்.

1962 ஏப்ரலில் பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பங்கேற்றார். அப்போது கன்னடர்கள், தமிழ்ப்பாட்டுப் பாடுவதை எதிர்த்துக் குரல் எழுப்பினர். நிகழ்ச்சியை நடத்த விடாமல் கலவரம் செய்தனர். கருப்புக் கொடி காட்டினர்.

இச்செய்தியைப் படித்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் கொதித்தெழுந்தார். கன்னட வெறியர்களுக்கு எதிராக அறிக்கை கொடுத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் கன்னடர் எதிர்ப்புக் கூட்டம் ஒன்று நடத்தி, அதில் கடுமையாகப் பேசினார்.

முதலமைச்சர் காமராசர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். திராவிட இயக்கக் கொள்கைகளை ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த புரட்சிக் கவிஞர்தான், கன்னடர்களுக்கு எதிராகக் கொதித்தெழுந்தவர் என்பதை இங்கு நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் இசைக்கு ஆதரவாக 1944ஆம் ஆண்டு பெரியார் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது (குடியரசு 19.2.1944). “நமக்குப் பாட்டுக் கேட்கக் கூடத் தெரியாது என்றும், நம் தமிழ் மொழியானது பாட்டு இசைக்கக் கூடப் பயன்படாது என்றும் சொன்னால், இந்த இழிமொழி நம் உயிரைப் போய் அல்லவா கவ்வுகிறதாய் இருக்கிறது என்று மிக்க வேதனையோடு கூறுகிறேன்.” எனக் கூறும் பெரியார், அப்படிப்பட்டவர்களை தமிழ்ச் சமூகத்திலிருந்து ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று மிகக் காட்டமாகப் பேசுகின்றார்.

இசைத் துறையில் மட்டுமின்றி, கலை, இலக்கிய, நாடகத் துறைகளிலும் தமிழின் வளர்ச்சிக்குத் திராவிட இயக்கம் ஆற்றியிருக்கும் தொண்டு அளப்பரியது. குறிப்பாக, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, கலைஞர், ஜலகண்டபுரம் கண்ணன் ஆகியோர் திரைப்படத்துறைக்குள் கால் பதித்த பின்னர், திரை உலகின் போக்கே மாறியது.

கடவுள் கதைகளையும், புராணக் குப்பைகளையும் திரும்பத் திரும்பப் படமாக எடுத்துக் கொண்டிருந்த காலம் விடைபெற்று, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான முற்போக்குச் சிந்தனைகள் திரை உலகில் இடம் பிடிக்கத் தொடங்கின.

இவை அனைத்தும் தமிழக வரலாற்றில் திராவிட இயக்கம் ஏற்படுத்திய தாக்கமே என்பதை யாரால் மறுக்க முடியும்?

Pin It