அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாநிலத்தைச் சார்ந்த மரியா ஸ்மித் ஜோனஸ் என்னும் மூதாட்டி தன் 89ஆவது அகவையில் அண்மையில் காலமானார். அவருடைய மரணம் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

பழங்குடியினத்தைச் சார்ந்தவரான அவர், ‘ஏயக்’ என்னும் மொழி பேசி வந்தவர். அந்த மொழியைப் பேசிய கடைசி மனிதர் அவர்தான். இந்த உலகைவிட்டு அவர் போகும்போது ஏயக் மொழியையும் எடுத்துக்கொண்டே போய்விட்டார்.

1993ஆம் ஆண்டு அம் மொழி அறிந்த அவருடைய சகோதரி இறந்த பிறகு, ஜோனஸ் அம்மையாருக்குப் பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல் போயிற்று. அவருடைய பிள்ளைகள், பேரன் பேத்திகள் எல்லோரும் ஆங்கிலம்தான் பேசுகிறார்கள். தங்கள் தாய்மொழியை அறிந்து கொள்ளவோ, பேசவோ அவர்கள் அணியமாயில்லை. தங்கள் தாய் மொழி அழிந்து போவது குறித்தும் கவலை கொள்ளவில்லை.

இதோ நம் கண்முன்னால் ஏயக் மொழி மடிந்து போய்விட்டது. அந்த அம்மையார் இறப்பதற்கு முன்பு, மொழியில் வல்லுனர்களைக் கொண்டு, ஏயக் மொழிக்கான இலக்கணம் மற்றும் அகராதி நூல்களை உருவாக்கிவிட்டுப் போயிருக்கிறார். அவை கொண்டு எதிர்காலத்தில் அம் மொழியை யாரேனும் மீட்டெடுத்தால்தான் உண்டு.

இவ்வாறு உலகில் பல மொழிகள் அழிந்துகொண்டே இருக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் அவை ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. எத்தனை மொழிகளைக் கற்றுக்கொண்டாலும் தாய்மொழியைக் காக்க வேண்டும் என்னும் எண்ணம் ஏற்படவில்லை யென்றால் இந்த நிலை தொடரத்தான் செய்யும்.

தாய் மொழியில் பேச மறுக்கும், தாய் மொழியில் பெயர் சூட்ட மறுக்கும் தமிழர்கள் இந்தச் செய்தியை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வார் களா?

Pin It