சட்டமன்றம் கூடும். அரசின் செயல் திட்டங்களைச் சொல்லி ஆளுநர் உரையாற்றுவார். ஆளுநர் உரையின் மீது விவாதங்கள் நடக்கும்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் சொல்வார்கள். நகைச்சுவை இருக்கும், அமைதியாக அவை நடக்கும், சில சமயம் காரசாரமாகக் கூட இருக்கும்.

இவ்வளவிற்கும் பிறகு அவையில் வைக்கப்படும் மசோதாக்கள், மக்களின் நலனுக்கேட்ப, எதிர்கட்சி உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் திருத்தப்பட்டும், ஒழுங்கு படுத்தப்பட்டும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன தமிழ்நாட்டில்.

தி.மு.க. தலைமையிலான தலைவர் கலைஞர் ஆட்சி இருந்தவரை இதுதான் சட்டமன்ற நடைமுறை,சனநாயக நடைமுறை. 

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்ற நடைமுறை தலைகீழாக மாறிவிட்டது-. மக்கள் நலத் திட்டங்கள் பேசப்படுவதில்லை. விவாதங்கள் இல்லை. கேள்விகள் கேட்டால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

சகட்டு மேனிக்கு சட்டமன்ற விதி 110இன் கீழ் அறிவிப்புகளாக வாசித்தார் ஜெயலலிதா. விவாதிக்க முடியவில்லை விதி 110 என்பதால்.

அதே சமயம் அறிவிக்கப்பட்ட திட்ட நடைமுறைகளுக்கு நிதி ஆதாரம் என்ன என்பதும் தெரிவிக்கப்படவில்லை. அது குறித்து சரியான திட்டமிடல் இல்லை என்றே தோன்றுகிறது.

கடந்த செப்டம்பரில் வரி வருவாய் 45917.5 கோடியாக இருந்திருக்க வேண்டிய நிலையில், வருவாய், 37,056 கோடி மட்டுமே வந்துள்ளது-. 2014 & 2015ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட போது, சொந்த வருவாய் 91,835 கோடி என்றும், உபரி 289 கோடி இருக்கும் என்றெல்லாம் நிதிநிலை அறிக்கையில் கூறியிருந்தார்கள். ஆனால் நிலைவேறு. வருவாய் இலக்கான 91 835 கோடியில் 70 ஆயிரம் கோடியைக் கூட எட்ட முடியவில்லை.

இப்பொழுது அரசு 1.80 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 18ஆயிரம் கோடி வருவாய் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைச் சமாளிக்க மீண்டும் அரசு கடன்வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இப்படிக் கடன் மேல் கடன் வாங்கிக் கொண்டிருந்தால், நிலைமை விபரீதமாகப் போய்விடும்.

இன்றைய தமிழக முதல்வர், முன்னாள் நிதி அமைச்சராக இருந்தவர். தமிழக நிதிநிலைமை குறித்து ஆழ்ந்து முடிவெடுக்க வேண்டிய கடமை அருக்கு இருக்கிறது.

ஆனால் அவர் இதையெல்லாம் விட்டுவிட்டு, “மக்களின் முதல்வர்?” என்பவருக்கு குனிந்து வளைந்து கொண்டிருந்தால் நாடு என்னாகும்?

எதிர்வரும் நிதியாண்டின் வரவு- செலவு திட்டத்தில் 18 ஆயிரம் கோடிக்கு மேல் பற்றாக்குறை, 4 லட்சம் கோடிக்கும் அதிகமாகக் கடனை தமிழக அரசு சுமக்க வேண்டி வருகிறது என்பதை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கவனிக்க வேண்டியது அவசியம்.

மதுவினால் தமிழகம் தள்ளாடுவதைவிட, நிதி நெருக்கடியில் தமிழக அரசு அதிகமாகவே தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

Pin It