nalakannu 350எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு

தொகுப்பு : கே. ஜீவபாரதி

வெளியீடு : ஜீவா பதிப்பகம், சீனிவாசன் தெரு, தியாகராயநகர், சென்னை - 17

தொலைபேசி : 9952079787

விலை : ரூ.180

“தமிழ்நாட்டில் இருக்குற கோடிக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு இது மாதிரியான நோய்கள் வந்தா, அதுக என்ன பண்ணும்?அவங்களுக்கெல்லாம் மருத்துவ வசதி இலவசமா எப்பக் கிடைக்கும்? இந்தக் கேள்விகளும் மனசை அரிச்சிக்கிட்டே இருக்கு பாரதி” - 16 வயதில் இறந்துபோன தன் அன்புப் பேத்தியின் நினைவாக ஒரு தாத்தா எழுதிய கடிதத்தில் இந்த வரிகள் இடம்பெற்றுள்ளன.

வேதனையை கொட்டித் தீர்க்கும் வேளையிலும், ஏழைக் குழந்தைகளைப் பற்றி யாராலாவது சிந்திக்க முடியுமா? சாதிக் கலவரத்தில் தன் அன்பிற்கினிய மாமனார் படுகொலை செய்யப்பட்டுப் பிணமாகக் கிடந்த நேரத்திலும், சாதிக் கலவரத்தைக் கட்டுப்படுத்த ‘அமைதிப் பயண’த்திற்கு தலைமை தாங்கி, ஊர் ஊராகச் செல்ல முடியுமா?

தோழர் நல்லகண்ணுவாக இருந்தால் முடியும்... முடிந்திருக்கிறது!.

மகிழ்ச்சியான மனநிலையில் கூட, மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காத மனிதர்களின் நடுவில், தன் துன்பங்களுக்கு இடையிலும், மக்களைப் பற்றிச் சிந்தித்தவர், பொதுவுடைமை இயக்கத்தின் பெருமிதத்திற்குரிய தலைவர் தோழர் நல்லகண்ணு. டிசம்பர் 26இல் 90 அகவையை நிறைவு செய்திருக்கும் தோழர் நல்லகண்ணுவைப் பற்றி, “எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு” என்றொரு நூலை, கவிஞர் ஜீவபாரதி தொகுத்துத்தர, ஜீவா பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

தோழர் நல்லகண்ணுவின் படைப்புகள் சில, அவருடைய துணைவியார் ரஞ்சிதம் அம்மையாரின் நேர்காணல் உள்ளிட்ட 64 தலைப்புகளில் கட்டுரைகள், கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர், இலக்கியவாதிகள் என பலதரப்பினரும், பல்வேறு இதழ்கள், சிறப்பு மலர்களில் அவரைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளை சிறப்பாகத் தொகுத்துள்ளார் ஜீவபாரதி. வரலாற்றின் பக்கங்களில், சில தனிமனிதர்களையும் சந்திக்க முடியும். ஆனால் ஒரு தனி மனிதனின் ஒவ்வொரு பக்கமும் வரலாறாக இருப்பதை தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கையில் காண முடிகிறது.

“அடித்தள மக்களின் இருபதாம் நூற்றாண்டு எழுச்சி வரலாற்றினை எழுத நினைக்கும் எவரும், தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் பெயரை விட்டுவிட்டு யோசிக்க முடியாது ” என்று எழுத்தாளர் பொன்னீலன் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது உண்மையிலும் உண்மை.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான போராட்டங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார். கூலி நெல் அளப்பதற்கு சிறிய மரக்காலும், குத்தகை நெல் அளப்பதற்குப் பெரிய மரக்காலும் பயன்படுத்தப்பட்டது.

ஜமீன்தார்களின் பண்ணைகளில் நடைபெற்ற இந்த அநீதியை எதிர்த்துப் போராடி, நியாயமாக நெல் அளக்க வழிவகுத்தார். அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள விவசாய நிலங்களை செழிப்பாக்கிக் கொண்டிருக்கும் கடனாநதி அணைக்கட்டு, ஐயா நல்லகண்ணு உள்ளிட்ட தோழர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தினால், 1974இல் தமிழக அரசால் கட்டப்பட்டது. சிறையிலிருந்து விடுதலையான இரண்டு காளை மாடுகள், மாலை மரியாதையோடு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியுமா?.

1965ஆம் ஆண்டு வாக்கில், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவியது. விவசாயிகள் கடனில் தத்தளித்தனர். அவர்களின் விவசாயக் கருவிகள், உழவு மாடுகள் என அனைத்தும் வங்கிகளால் ‘ஜப்தி’ செய்யப்பட்டன. அப்பகுதி விவசாய சங்கத் தலைவராக இருந்த வி.வி.ரெங்கசாமியின் இரண்டு உழவு மாடுகளும் அரசு அதிகாரிகளால் ஓட்டிச் செல்லப்பட்டன.

மக்களிடையே பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் செய்த பிரச்சாரத்தால், ஜப்தி செய்த பொருட்களை ஏலம் விடமுடியாத அதிகாரிகள், பொருள்களைத் திரும்ப ஒப்படைத்தனர். அப்படி, 100 நாள்கள் அரசால் சிறை வைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட தோழர் ரெங்கசாமியின் காளை மாடுகளைத்தான் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

நாங்குனேரி ஜீயர் மடம், தீருவாவடுதுறை ஆதீன மடம், களக்காடு, வடமனேரி பண்ணையார்கள் உள்ளிட்ட ஆதிக்கவாதிகளின் சுரண்டலில் இருந்து உழைக்கும் மக்களைக் காக்கின்ற தளபதியாகப் பணியாற்றி இருக்கிறார். நாங்குனேரி வட்டார விவசாய சங்க ஊழியராகத் தன் பொதுவாழ்க்கையைத் தொடங்கி, 1992 முதல் 2005 வரையான காலகட்டங்களில் நான்கு முறை இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர்.

பள்ளிக்காலத்திலேயே ‘கலைத் தொண்டர் கழகம்’ என்னும் அமைப்பை உருவாக்கியிருக்கிறார். போராட்டக் களங்கள், தலைமறைவு வாழ்க்கை என கரடு முரடான பாதையில் பயணித்த போதும், இலக்கியத்தின் மீதும் தீராத காதலுடன் இருப்பவர். தி.க.சி., உள்ளிட்ட இலக்கியவாதிகளோடு மிக நீண்ட உரையாடல்களை நடத்துவதில் தனி இன்பம் காண்பவர்.

nalakannu 600

சாந்தி, ஜனசக்தி, தாமரை போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதியும் வந்திருக்கிறார். தோழர் பாலதண்டாயுதம் மறைந்தபோது, ரஷ்யாவின் லெனின் கிராடில் இருந்து இவர் எழுதிய அஞ்சலிக் கடிதம், தோழமையின் பரிணாமங்களைத் தொட்டுக் காட்டுகிறது. அமெரிக்கா பின்னிருந்து இயக்கும் உலக வங்கியின் ‘கொள்கை’யினை எளிமையாக விளக்கும் அவருடைய கட்டுரை, எழுத்தும் அவருக்கு வசப்பட்டுள்ளதைச் சொல்கிறது.

சிறுவனான, அண்ணன் மகன் பாரதி ராமநாதன், “சித்தப்பா, உன்னை மிகவும் அடித்துத் துன்புறுத்திய போலீஸ் அதிகாரிகளை, நீ இந்த மாகாணத்தின் முதலமைச்சராக வந்தால் அவர்களை நீ தண்டிப்பாயா?” என்று மடியில் அமர்ந்து கொண்டு கேட்டதற்கு, தோழர் நல்லகண்ணு அளித்த பதில், நமக்கு நெல்சன் மண்டேலாவை நினைவூட்டுகிறது.

சிறையில் தனக்குச் சுண்ணாம்புப் பாறைகளை உடைக்கும் கடினமான வேலையைக் கொடுத்து, தன் கண் பார்வை மங்கிப் போகக் காரணமாக இருந்த சிறை அதிகாரியைத் தன் பதவி ஏற்பு விழாவுக்கு நேரில் சென்று அழைத்தாராம் மண்டேலா. நம் தோழர் சொன்ன பதில் என்ன தெரியுமா? “பாரதி, நீ ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நீ நன்றாக விமானமோட்டினால், உனக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.

அதைப்போல எங்களைப் போன்றவர்களை மிகவும் அடித்து எங்கள் இயக்கங்களைப் பற்றிய பல உண்மைகளை தெரிந்து கொண்டால் அவர்களுக்குப் பதவி உயர்வு வரும். அது அவர்களது தொழிலாகப் போய்விட்டது. இது மாற்ற முடியாத சமூகக் கேடு. அதில் அவர்கள் ஒரு அங்கம். அவ்வளவுதான். அதற்காக அவர்கள் மீது வன்மம் கொண்டால், அது சரியல்ல”!

அதனால்தான் எவர் ஒருவராலும் வெறுக்கப்பட முடியாதவராக, அனைவருக்கும் ‘அன்புத் தோழர் ஆர்.என்.கே.’யாக இருக்கிறார்.

1948இல் தலைமறைவு வாழ்க்கையின் போது, நெல்லைச் சதி வழக்கில் பிணைக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 7 ஆண்டுகள் சிறையில் கழித்ததை, தனக்கான கூடுதல் தகுதியாக ஒரு போதும் நினைக்காத, ‘அரசியலின் அற்புதம்’ தோழர் நல்லகண்ணு. நல்லவனாக வாழ வேண்டும் என்று, எங்கேயும், எப்போதும் அவர் மெனக்கெடவில்லை.

இயல்பாகவே அவரால் அப்படித்தான் வாழ முடிந்திருக்கிறது. பண்ணையார்களை எதிர்த்த பொதுவுடைமை இயக்கத்திற்குள்ளேயே இன்று சில பண்ணையார்கள் உருவாகிவிட்ட நிலையில், மனைவியின் ஓய்வூதியத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்தும், ஐயா நல்லகண்ணு எளிமையின் சிகரம்தான் என்பதில் எள் முனையளவும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இந்நூல் தொகுத்துத் தந்திருப்பது, தனி மனிதரின் வாழ்க்கையையன்று, இந்திய பொதுவுடைமை இயக்கத்தின், உழைக்கும் அடித்தட்டு மக்களின் 60 ஆண்டுகால வரலாற்றை!

Pin It