farmers protestநீதிமன்றம் வேளாண் சட்டங்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்க ஒரு குழு போட்டுள்ளது. இந்த குழுவிடம் விவசாயிகள் தமது கருத்துகளை கூற வேண்டும் என்பதை கிட்டத்தட்ட ஒரு ஆணையாக நீதிமன்றம் முன்வைத்துள்ளது.

இந்த குழு அமைக்கப்பட்டதில் தான் நீதிமன்றத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

பேச்சு வார்த்தைகளில் அரசு தரப்பிலும் குழுவை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தது. சட்டங்களை அகற்றாமல் எந்த குழுவையும் தாங்கள் ஏற்க இயலாது என தொடர்ந்து விவசாயிகள் கூறிவருகின்றனர்.

இந்த குழுவின் தலைமைப் பொறுப்புக்கு நீதிபதி லோதாவை நியமிக்கலாம் என 11.01.2021 அன்று துஷ்யந்த் தவே முன்மொழிந்தார்.

சில நாட்களுக்கு முன்பு இதே ஆலோசனையை முன்வைத்த நீதிமன்றம், கிராமப்புற பிரச்சனைகள் பற்றி ஆழமாக ஆய்வு செய்யும் பிரபல பத்திரிக்கையாளர் சாய்நாத் போன்றோரை இந்தகுழுவில் இணைக்கலாம் என்று கூட கருத்து தெரிவித்தது. ஆனால் இப்பொழுது அறிவிக்கப்பட்ட குழு உறுப்பினர்களின் பெயர்கள் இமாலய அதிர்ச்சியை உருவாக்கி யுள்ளது எனில் மிகை அல்ல!

அஷோக் குலாட்டி : இவர் ஒரு விவசாய பொருளாதார அறிஞர். நிதி ஆயோக் உறுப்பினரான இவர்தான் இந்த சட்டங்களின் பிதாமகர் என கூறப்படுகிறது. 1990ஆம் ஆண்டிலிருந்து நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளை ஆதரிக்கும் இவர் இந்த சட்டங்களை ஆதரித்து பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவருகிறார். எதிர்கட்சிகள் இந்த சட்டங்கள் குறித்து தவறாக பேசி வருகின்றனர் எனவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

பிரமோத் குமார் ஜோஷி : சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்கு ஆசிய இயக்குநரான இவர் குறைந்த பட்ச ஆதார விலை என்பதே (MSV) இருக்கக் கூடாது எனவும் விவசாயிகளின் இந்த கோரிக்கையை எக்காரணம் கொண்டு ஏற்கக்கூடாது எனவும் வாதிடுபவர். வேளாண் சட்டங்களை ஆதரித்து பல கட்டுரைகளை எழுதி வருகிறார்.

வேளாண் சட்டங்களில் இம்மியளவும் மாற்றம் செய்யக்கூடாது எனவும் அப்படி மாற்றினால் இந்தியா உலக பொருளாதார வல்லரசாக மாறுவது தடைப்பட்டுவிடும் என அங்கலாய்க்கும் பிரகஸ்பதி இவர்!

அனில் கன்வாட் : இவர் ‘ஷேக்தாரி சங்கதான்’ எனும் விவசாய அமைப்பின் தலைவர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கூடாது எனவும் அவற்றில் சில சிறிய மாற்றங்கள் செய்தால்போதுமானது எனவும் கூறுகிறார். சமீபத்தில் விவசாய அமைச்சர் தோமர் அவர்களை சந்தித்து எழுத்து மூலமாக தனது ஆதரவை தெரிவித்தார்.

பல ஆண்டுகளாகவே ஷேக்தாரி சங்கதான் விவசாய சந்தையை கார்ப்பரேட்டு களுக்கு திறந்துவிட வேண்டும் என கோரி வருகிறது. இந்த சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றிய பொழுது பட்டாசுகள் வெடித்து வரவேற்றவர் இவர்!

ஜித்தேந்தர் சிங் மான் : பாரதிய கிசான் யூனியனின் ஒரு பிரிவு தலைவர். (இந்த அமைப்பின் பல பிரிவுகள் போராட்டக் களத்தில் உள்ளன) இவரும் அமைச்சரை சந்தித்து எழுத்து மூலமாக ஆதரவு அளித்துள்ளார்.

பஞ்சாப் மக்களின் கடும் கோபத்துக்கு உள்ளானவர் எனில் மிகை அல்ல! (இவர் இப்போது பதவியிலிருந்து விலகி விட்டார்) வேளாண் சட்டங்களை மட்டுமல்ல; கார்ப்பரேட்டுகளின் நலன்களை வலுவாக ஆதரிக்கும் இத்தகைய ‘அறிவாளிகள்’தான் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் உறுப்பினர்கள்.

இந்த குழுவை எதன் அடிப்படையில் நீதிமன்றம் நியமித்தது? இத்தகைய ஒரு குழுவிடம் எப்படி விவசாயிகள் தமது கருத்தை கூற இயலும்? இந்த குழுவின் தலைமைப் பொறுப்புக்கு நீதிபதி லோதாவை நியமிக்கலாம் எனும் துஷ்யந்த் தவே முன்மொழிவு ஏன் ஏற்கப்படவில்லை? உச்சநீதிமன்றம் தானே முன்வைத்த பத்திரிகையாளர் சாய்நாத் ஏன் இந்த குழுவில் இல்லை? இந்த குழுவின் ஆலோசனைகள் என்ன ஆகும்? உச்சநீதிமன்றம் இந்த ஆலோசனைகளை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூற அதிகாரம் உள்ளதா? இப்படி பல கேள்விகள் விடை தெரியாத புதிர்களாக உள்ளன.  இத்தகைய ஒரு குழுவிடம் தமது கருத்துகளை கூறுவதால் எந்தபயனும் இல்லை எனும் விவசாயிகளின் நிலைபாடு முற்றிலும் நியாயமானதே!

உச்சநீதிமன்றம் தனது ஆணையின் ஒரு இடத்தில் “போராட்டக் களத்தில் வைக்கப்பட்டுள்ள பெண்கள் / முதியோர் / குழந்தைகள் ஆகியோர் உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும்” என கூறுகிறது. “Kept” எனும் ஆங்கில வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. இது விமர்சனங்களை விளைவித்துள்ளது. அப்படியானால் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இருத்தி வைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்றம் கருதுகிறதா? இது முற்றிலும் பொய் என கூறுகின்றனர் விவசாயிகள்.

விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் குறிப்பாக விவசாய தொழிலாளர்களில் 70ரூ பேர் பெண்கள்தான்! இந்த சட்டங்கள் பெண்களையும் முற்றிலுமாக பாதிக்கிறது.

எனவேதான் அவர்கள்  போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பல பெண்கள் தாமாகவே டிராக்டர்களை ஓட்டி வந்துள்ளனர் என்பது அனைவரும் கண்டஉண்மை! நீதிமன்றம் தனது வார்த்தைகளை மிகவும்கவனமாக பயன்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.

வேளாண் சட்டங்களின் அமலாக்கத்துக்கு இடைக்காலத்தடை என்பது மிக அசாதாரணமான ஒன்று எனவும் இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் வீடு திரும்ப வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது ஆணை அல்ல; ஆனால் எதிர்பார்ப்பு என நீதிமன்றம் கூறுகிறது.

போராடுவதற்கான உரிமையை கேள்வி கேட்காத உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடுக்கு நன்றி தெரிவித்துள்ள விவசாயிகள், சட்டங்கள் முழுமையாக திரும்பப் பெறாமல் தாங்கள் வீடு திரும்பப் போவது இல்லை எனத் தெளிவாக தெரிவித்துள்ளனர்.

நியாயம் கிடைக்க வாய்ப்பில்லாத ஒரு குழுவை போட்டுவிட்டு வீடு திரும்புங்கள் எனச் சொன்னால் எப்படி விவசாயிகள் ஏற்றுக்கொள்ள இயலும்?100க்கும் அதிகமானவர்கள் உயிர்தியாகம் புரிந்துள்ளனரே! அதனை விழலுக்கு இறைத்த நீராக ஆக்க இயலுமா?

மேலும், விவசாயிகளின் போராட்டத்துக்கு தெற்கே ஆதரவு இல்லை என அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் கூறினார். இதைவிட பொய் ஏதாவது இருக்க இயலுமா? மகாராஷ்டிராவிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டக் களத்துக்கு வந்துள்ளனர். கேரளாவில் தினமும்போராட்டம் நடக்கிறது. தீப்பந்த ஊர்வலங்கள் நடந்தன.

கேரளா சட்ட மன்றம் இந்த சட்டங்களை எதிர்த்து தீர்மானம் இயற்றியுள்ளது. நூற்றுக்கணக்கான கேரளா விவசாயிகள் போராட்டக்களத்துக்கு விரைந்துள்ளனர். கர்நாடகா / ஆந்திரா / தெலுங்கானா மாநிலங்களிலும் பெரிய போராட்டங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் தொடர்போராட்டம் மாநிலத்தையே உலுக்கியது.

தஞ்சை தரணியில்  பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடந்துள்ளது. பெருமாள் எனும்  உழைப்பாளி இந்த பிரச்சனையில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

இவ்வளவுக்குப் பிறகும் தெற்கே இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு இல்லை என கூறுவதற்கு அட்டர்னி ஜெனரலுக்கு ஒன்று இதயம் கல்லாக இருக்க வேண்டும்; அல்லது சங்பரிவாரத்தின் பொய்க் குணங்கள் அவருக்கும் தொற்றியிருக்க வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It