தமிழக மக்களே உங்களுக்குத் தெரியுமா?

மதுரையில் ஆறரைக் கோடி ரூபாயில் ஹாக்கி விளையாட்டு மைதானம் கட்டி 5 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் இருக்கிறது. விருதுநகரில் 1.60 கோடியில் கட்டப்பட்ட தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம், அவரின் நினைவு நாளான அக்டோபர் 13ஆம் நாள் திறக்கப்பட இருந்தது. அதற்கான தேதியை இதுவரை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒதுக்கவில்லை.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் தீக்காயப் பிரிவு, சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட பல அம்மா உணவகங்கள் பூட்டியே கிடக்கின்றன.

மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் எதுவாக இருந்தாலும் அவைகளைத் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு வழிவிடுவதே அரசு செய்ய வேண்டிய பணி.

சட்டமன்றத்தில் முதல்வர் இருக்கையில் அமரவும் மறுக்கிறார், தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அறைக்குள் நுழையவும் மறுக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அரசு கட்டிடங்களைக்கூட திறந்து வைக்க முன்வராமல் அவர் ஒதுங்கிப் போகும் அவலநிலையும் தற்போது ஏற்பட்டு உள்ளது.

ஒருவேளை திறப்பு விழா நடத்தினால், கல்வெட்டில் தன்பெயர் இடம் பெற்றுவிடும் என்று அஞ்சி அஞ்சி ஒதுங்குகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.
இது செயல்படாத பினாமி அரசு என்று தி.மு.க. பொருளாளர் தளபதி ஸ்டாலின் சொன்னபோது, துள்ளிக் குதித்த முதல்வர் ஓ.பி, கட்டி முடிக்கப்பட்டும் மூடிக்கிடக்கும் அரசு கட்டிடங்களைத் திறந்து வைக்கத் துள்ளி வரவில்லையே!

முதுகு வளையக் குனியத் தெரிந்த முதல்வருக்கு நிமிரத் தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் விசுவாசம் காட்டலாம். அடிமையாய் இருக்க உறுதி மொழி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில், ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்ற மறுப்பதும், செயலற்று நிற்பதும் நேர்மையும் அன்று, முதல்வர் பொறுப்புக்கு அழகும் அன்று.

மூடிக்கிடப்பவை வெறும் கட்டிடங்கள் இல்லை. வியர்வை சிந்திய மக்களின் வரிப்பணம்.

Pin It