(16.01.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருவிழாவில், கைகோத்துக் களம் காணட்டும் கருஞ்சடைகள் என்றுத சுபவீ ஆற்றிய உரையினை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இமயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் நேர்காணலில் இருந்து ஒரு பகுதி கீழேதரப்படுகிறது.)

இமயம் தொலைக்காட்சி: சமீபத்தில் சுப.வீரபாண்டியன்,கருஞ்சட்டைகள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். உங்களுக்கும் திராவிடர் கழகத்துக்கும் எந்தவிதமான கொள்கை வேறுபாடும் இல்லை. அப்படி இருக்கும்போது, இன்றைய சூழலில் ஒரே கருத்துடையவர்கள் ஒன்று சேர வேண்டும் என்னும் சுபவீயின் கோரிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?

கொளத்தூர்மணி: எங்களுக்குள் கொள்கை அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதுதான் உண்மை. நடைமுறை வேறுபாடுகள்தான் இருந்தன. அதன் காரணமாகவே இரண்டாண்டுகளுக்கு முன்பு, நண்பர் கோவை இராமகிருஷ்ணன் தலைமையிலான அணியும், நாங்களும் பிரிந்தோம். ஆனால், ஈழம் தொடர்பான போராட்டங்களில் எல்லாம் நாங்கள் இணைந்துதான் நிற்கிறோம்.

வேறு வேறு கொள்கைகளைக் கொண்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளோடுகூட, கோட்சே சிலை எதிர்ப்பு மாநாடு போன்றவைகளில் எல்லோரும் கலந்து கொண்டோம். அப்படியிருக்க, பெரியாரின் கருத்துகளையே மக்களிடம் எடுத்துப் பேசிக்கொண்டிருக்கிற நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வதில் ஒரு தடையும் இல்லை.

அவர் சொல்லி இருக்கும் கருத்து வரவேற்கக் கூடியதுதான். இணைப்பு என்பது உடனடிச் சாத்தியம் இல்லாமல் இருக்க லாம். கூட்டமைப்பாக இணைந்து செயல் படுவதில் ஒரு சிக்கலும் இல்லை. அது இன்றைய சூழலில் ஒரு தேவையாகவும் இருக்கிறது.

இமயம் தொலைக்காட்சி: திராவிடர் கழகத் தலைவரிடமும், இதே கேள்வியை நாங்கள் முன்வைத்தோம். எங்களுக்குள் ஒருவரை ஒருவர் நாங்கள் விமர்சித்துக் கொள்வது கிடையாது.

எதிரிகளை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோமே தவிர, எங்களுக்குள்ளான பிளவுகளை எதிரிகள் பயன்படுத்திக் கொள்ள எப்போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். அவருடைய பதிலும், இணைவதற்குச் சாதகமாகத்தான் இருந்தது.

Pin It