ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்தவர் பெரியார். நீதிக்கட்சி, திராவிட இயக்கம் எல்லாமே ஆங்கிலேயர் ஆதரவு இயக்கங்கள் என்று ஒரு குற்றச்சாட்டைத் தொடர்ந்து பலர் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். மகாத்மா ஜோதிராவ் புலே, அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் மீதும் இது போன்ற குற்றச்சாட்டுகள் உண்டு. இவை உண்மையில்லை என்பதை வரலாற்றைப் புரட்டிப் பார்க்கிறவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

எடுத்துக்காட்டாக, உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் சுயமரியாதை இயக்கம் பங்கேற்கவில்லை என்று கூறுவார்கள். அது உண்மைதான். ஆனால் அதற்கான காரணங்களைக் குடியரசு இதழில் பெரியார் அன்றே எழுதியிருக்கிறார்.

போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றவில்லையே தவிர, போராட்டத்திற்குத் தன் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். அரசாங்கத்தின் அடக்குமுறைகளையும், காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டையும் கண்டித்து, 04.05.1930ஆம் நாள் குடியரசு இதழில் பெரியார் எழுதியிருக்கிறார்.

உப்புச் சத்தியாகிரகத்தை நடத்தும் காங்கிரஸ் கட்சி, பொதுக்குளத்தில், பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்படுவதை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்தவில்லை என்று கேட்கிறார். இன்றைய சிவகங்கை மாவட்டம், குன்றக்குடிக்கு அருகில் உள்ள சிராவயல் என்னும் கிராமத்திற்கு ஒரு கிணற்றைத் திறந்து வைப்பதற்காக வந்த பெரியார், அக்கிணறு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்கள் வாழும் பகுதியில் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்ததும், அவ்விழாவில் கலந்து கொள்ள மறுத்துத் திரும்பிவிட்டார். அனைவரும் தண்ணீர் எடுக்கக் கூடிய பொதுக் கிணறு என்றால்தான், தான் அதனைத் திறக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

உப்புச் சத்தியாகிரகம் பற்றிக் குடியரசில் பெரியார் எழுதியுள்ள செய்தி இதுதான்.

“உப்பு இல்லாமல் ஒரு மனிதன் பல நாட்களுக்கு ஜீவிக்க முடியும். உப்பை விடத் தண்ணீர் இல்லாமல் ஒரு நாளைக்கேனும் உயிர் வாழ முடியாது-. அப்படி இருக்க இந்த ஜீவாதாரமான தண்ணீரை கிணற்றில் இருந்து மொள்ள ஒட்டாமல், சாதியின் பெயரால் தடுக்கப்பட்டு எத்தனையோ லட்சம் மக்கள் இந்த ஜில்லாவில் வாட்டமுற்று, குட்டைகளிலும், பள்ளங்களிலும் தேங்கிக் கிடக்கும் அசுத்த நீரைக் குடித்து நோய்வாய்ப்பட்டு வருந்துகின்றனரே அவர்களுக்கு என்ன செய்தீர்கள்?

சத்தியமங்கலம் அக்கிரகாரத்தில் நாளைக்கும் பஞ்சமர்கள் நடக்க முடியாது. கவுண்டர்கள் குடி கிணற்றில் நாளைக்கும் சக்கிலி தண்ணீர் எடுக்க முடியாது. முதலிமார் பிள்ளைகளோடு, பறைப்பிள்ளை சேர்ந்து வசிக்க முடியாது. இந்நிலையில் நமது உப்புச் சத்தியாகிரகத்திற்கு நம்முடன் தோள் உரசிக் கொண்டு வருமாறு அவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும்?” (குடியரசு 11.05.1930).

பெரியாரின் சிந்தனையும், அவர் எழுப்பியுள்ள கேள்விகளும் எந்தத் தளத்தில் இருந்து எழுகின்றன என்பதைப் புரிந்து கொள்கிறவர்கள், விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக அவர் பங்கேற்கவில்லை என்று குறை கூறமாட்டார்கள். உண்மையில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன் குடும்பத்தையே பிணைத்துக் கொண்டவர் அவர். காந்தியாரினுடைய சொற்களுக்குக் கட்டுப்பட்டு, தன் குடும்பத்துக்குச் சொந்தமான, தோப்பில் இருந்த ஐந்நூறு தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவர் அவர்.

திராவிட இயக்கத்தைப் பொறுத்தமட்டில், அரசியல் விடுதலையை ஏற்றுக்கொண்டாலும், சமூக விடுதலைக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. சமூக விடுதலை இல்லாமல் வரும் சுதந்திரம், விலங்குகளுக்கான சாவியைக் கைமாற்றிக் கொள்வதே என்றார் பெரியார்.

(சான்று : எஸ்.வி.ராஜதுரை & வ. கீதா எழுதியுள்ள ‘பெரியார் & சுயமரியாதை சமதர்மம்’)

Pin It