seeman 450 copyஇன்று (18.10.2019) காலை 'தி இந்து' ஆங்கில நாளேட்டில் ஓர் அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,  ராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுக் கடந்த 28 ஆண்டுகளாகச்  சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலை குறித்த தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்க இயலாது என்று முதலமைச்சர் எடப்பாடியிடம் கூறி விட்டதாகத் தெரிகிறது என்பதே அந்தச் செய்தி!

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே, 2014 பிப். தொடங்கி இந்தக் கோரிக்கை மத்திய அரசுக்கு முன் வைக்கப்படுவதும், அதனை மத்திய அரசு மறுப்பதுமாக ஒரு போக்கு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் கேட்பது போல் கேட்கிறோம், நீங்கள் மறுப்பதை மறுத்துக் கொள்ளுங்கள் என்பதான நாடகமாகவே இது உள்ளது.  

இதில் கவனிக்கப்பட வேண்டிய பல செய்திகள் உள்ளன. தமிழக அரசு உண்மையாகவே அந்தக் கோரிக்கையை வைக்கிறதா அல்லது கோரிக்கை வைப்பது போல் நடிக்கிறதா என்பது!

அடுத்து, மத்திய அரசு, தன் மறுப்பை எழுத்து வடிவில் கூடத்  தராமல், போகிற போக்கில் வாய்மொழியாக விடை சொல்லிவிட்டாலே  போதும் என்று நினைக்கிறது என்னும் அவமானம்.  

மூன்றாவதாக, இன்னொரு செய்தியையும் இங்கு நாம் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. சில நாள்களுக்கு முன், விக்கிரவாண்டியில் பேசிய சீமான், ராஜீவை நாங்கள்தான் கொன்றோம் என்று பேசினார்.(நாங்கள் என்றால் யார்?!).  ஏழு தமிழர் விடுதலைக்கு அப்பேச்சு ஓர் இடையூறாக அமைந்துவிடக் கூடும் என்று பலரும் கருதினர். அது இன்று உண்மையாகி விட்டது.

பேச்சினால் தடை ஏற்பட்டுள்ளதா அல்லது தடை ஏற்படுத்துவதற்காகவே பேசப்பட்டதா என்னும் வினாவும் இப்போது எழுகிறது.  நாங்குனேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் நேரத்தில் இச்சிக்கலை மீண்டும் பேசுவதன் மூலம், அது காங்கிரசுக்கு எதிராகவும், பாஜக ஆதரிக்கும் அதிமுக வுக்கு  ஆதரவாகவும் அமையும் என்பது வெளிப்படை.

விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிராபாகரனை இங்கு கொண்டுவந்து தூக்கிலிட வேண்டும் என்று அன்று பேசிய ஜெயலலிதாவிற்கு ஆதரவாக  2011 தேர்தலில் 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்று பேசியவர்தான் சீமான். தமிழீழ மக்களைக் கொன்று குவித்து நாடு திரும்பிய இந்திய அமைதிப் படையை ஊர் ஊராகச் சென்று வரவேற்றுப் பேசிய ம.பொ.சிக்கு சுவரொட்டி ஒட்டிப் பாராட்டும் கட்சிதான் நாம் தமிழர் கட்சி. 

ஏழு தமிழர் விடுதலை குறித்துச் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவருமே தங்களுக்குத் தடையில்லை என்று தெரிவித்திருக்கும் வேளையில்,  சீமான் இப்படிப் பேசி இதனைத் திசை திருப்பி இருப்பதில், பாஜக வினர் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர்  என்று செய்திகள் வருகின்றன.

ஒருவேளை, சீமானின் குரல், பாஜக வின் குரல்தானோ?

Pin It