பண்டைய கிரேக்கத்தில் நாடோடிப் பாடகர்கள் இருந்துள்ளார்கள். இவர்கள் நான்கு நரம்புகள் கொண்ட இசைக்கருவிகளை மீட்டிப் பாடுவார்கள் என்பதை `இலியத்’ காவியம் சொல்கிறது. ஆகவே இவர்களைப் பாணர்கள் என்றும் கவிஞர்கள் என்றும் சொல்லலாம்.

கிரேக்கத்தின் கலைகள், விளையாட்டு, வீரம், போர்கள், டிராய், ஏதன்ஸ், ஸ்பார்டா போன்றவைகளை வரலாற்றுப் பார்வையுடன் இவர்கள் பாடுவார்கள். இவர்கள் நூற்றுக்கணக்கானவர்களாக இருந்துள்ளார்கள்.

கிரீஸின் கிழக்குக் கடல் பகுதியில் உள்ள கியாஸ் என்ற தீவில் பிறந்த ஹோமர் என்பவர், மேற்சொன்ன கவிஞர்களின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். அக்கவிதைகளைத் தொகுக்கவும் தொடங்கினார்.

அவர் கவிதைகளைத் தொகுக்கும் போது கவிதைகள் இருந்தன. பாடியவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை. ஆகவே அக்கவிதைகளை ஒன்றுக்கு ஒன்று தொடர்படுத்தி நெடுங்கவிதையாக ஆக்கினார். -

அதில் ஸ்பார்ட்டா நாட்டின் மன்னன் மெனலேயஸின் மனைவி ஹெலன். அவளை டிராய் அரசின் இளவரசன் பேரீஸ் கடத்திக் கொண்டு போய்விடுகிறான்.

இதனால் டிராய் அரசுக்கும், ஸ்பார்டா அரசுக்கும் இடையே நெடிய போர் நடக்கிறது. இறுதியில் டிராய் அரசு வீழ்ச்சி அடைகிறது. டிராய் வீரர்கள் டிரோஜன் என்று அழைக்கப் பட்டதால் இது டிரோஜன் போர் என்று அழைக்கப்பட்டது. ரோமானியர்களால் கட்டப்பட்ட டிராய்நகரம் 9 தடவைகள் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெலனுக்காக நடைபெற்ற டிரோஜன் போர் கி.மு. 12ஆம் நூற்றாண்டில் நடந்த 6வது போர்.

டிராய் நகரத்திற்கு `இலியம்‘ என்ற ஒரு பெயர் இருப்பதால் இந்தக் கவிதைத் தொகுதிக்கு இலியத் என்று பெயர் கொடுத்தார் ஹோமர். இது 24 தொகுதிகளைக் கொண்ட கீரேக்கத்தின் முதல் இதிகாசம்.

அடுத்து, மேற்சொன்ன டிரோஜன் போரில் பெரிதும் வீரம்காட்டிய கிரேக்க மன்னர்களுள் ஒருவன் ஒடிஸ்ஸஸ். போர் முடிந்து தன் சொந்த ஊராகிய இத்தாக்காவுக்கு அவன் திரும்பிவரும் வழியில் நிகழ்கின்ற சம்பவங்கள், அவன் ஊரில் இல்லாத போது அவனின் மனைவிக்குத் தொல்லை கொடுத்தவர்களை அழிப்பது வரை உருவாக்கிய இலியத்தின் தொடர்ச்சியை `ஒடிஸ்ஸி’ என்று பெயரிட்டான் ஹோமர். இதுவும் 24 தொகுதிகளைக் கொண்டதுதான்.

பண்டைய தமிழகத்தில் புலவர்கள் என்று அழைக்கப்பட்ட பாவலர் பெருமக்கள் ஏராளமானவர்கள் வாழ்ந்துள்ளார்கள். நிலையாக ஓரிடத்தில் இவர்கள் தங்குவதில்லை. மக்கள் மத்தியிலும், மன்னர் முன்னிலையிலும் பாக்களைப் பாடித் திரிந்து கொண்டிருந்தார்கள் இவர்கள்.

இந்தப் புலவர்களின் பாடல்களைத் தொகுக்க விரும்பிய பாண்டியர்கள் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கித் தொகுத்தார்கள்.

தொகுக்கப்பட்ட பாடல்கள் அகம் சார்ந்ததாகவும், புறம் சார்ந்ததாகவும் இருந்தன. அவைகளில் திணைகள், துறைகள் காணப்பட்டன. அப்படி அகம்சார்ந்து தொகுக்கப்பட்டவைகள் நெடுந்தொகை, நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு என்றும், புறம் சார்ந்ததாகப் புறநானூறு என்றும் வகைப்படுத்தப்பட்டன. இவைகள் ஆசிரியப்பாவால் பாடப்பெற்றவை. பரிபாடல், பதிற்றுப்பத்து, கலித்தொகை இவைகளில் பாவினம் வேறு பட்டவை. இவை எட்டுத்தொகை ஆகும்.

பாட்டுடைத்தலைவனை வைத்துப் பாடப்பட்ட பத்து நூல்களின் தொகுப்பு பத்துப்பாட்டு.

பதினெட்டு அறநெறி நூல்களின் தொகுப்பு பதிணென் கீழ்க்கணக்கு இங்கே பாடிய பெரும்பாலான புலவர்களின் பெயர்களும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. முடத்திருமானார் தொடங்கிய கடைச்சங்கம், கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதியோடு முடிவடைகிறது. இந்தச் சங்கத்தின் காலம், சங்க இலக்கியங்களின் பொற்காலம் எனக் கூறலாம்.

செறிவார்ந்த பண்டைய கிரேக்க இலக்கியங்களும், வளம் நிறம்பிய பண்டைய தமிழ் இலக்கியங்களும்தான் உலக இலக்கியங்களுக்கு முன்னோடி என்றால் மறுப்பவர் உளரோ, மகிழ்வதை விடுத்து!

Pin It