மலர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது. அதுவும் தமிழ்நாட்டைப் போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் உலகத்துடன் ஆன இந்த உறவு விரிவானதாகவும், ஆழமானதாகவும் அமைந்து விடுகின்றது. அரும்பு, மொட்டு, பூ, மலர் என்பவை மலரின் பருவத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொற்களாகும். இவற்றோடு ‘பூ(வி)ரி’, (தென்னம்பூரி), மடல் என்ற சொற்களும் இங்கே நினைக்கத் தகுந்தவை. இணர், தாது, பொகுட்டு, அல்லி, புல்லி, தோடு, மடல் என்பவை பூவின் உறுப்புக்களைக் குறிக்கும் பெயர்களாகும். பூ வகைகளாக நீர்ப்பூ, நிலப்பூ, கொடிப்பூ, கோட்டுப்பூ(கொம்பிலே பூப்பது) என்பன பழைய பெயர்ப் பகுப்பு முறையாகும். விதிவிலக்காக அன்றி(ஊமத்தை) எல்லா வகைப்பூக்களும் அழகுணர்ச்சி, மருத்துவப்பயன், உணவுப்பயன், சடங்கியல் மதிப்பு ஆகிய வற்றைக் கருத்தில் கொண்டு தமிழர்களால் பயன்படுத்தப் படுகின்றன.

பூத்தொடுப்பது அல்லது கட்டுவது என்பது தமிழ் நாட்டில் கலையாகவும் தொழிலாகவும் மதிக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொழிலாகக் கொண்ட சாதியார் தமிழகத்தில் ‘பண்டாரம்’ என்றும், கேரளத்தில் ‘வாரியார்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். கண்ணி, தொடரி, பிணையல், மாலை, ஆரம், தார் என்பன கட்டப் பட்ட மலர்களைக் குறிக்கும். பூக்களும், கட்டப் பட்ட பூக்களும் அரசர்களிடத்திலும், சமய எல்லைக் குள்ளும் அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. சேரருக்குப் பனம்பூ மாலை, ஆத்தி மாலை, பாண்டியருக்கு வேப்பமாலை உரியன என்று தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்ச்சமய இலக்கியத்தில் ‘மகிழ மாலை’ நம் மாழ்வாருக்கு உரிய அடையாளமாகக் கருதப் படுகிறது. இவையன்றி வழிபடு தெய்வங்களும் ஒவ்வொரு பூவோடு மாலையோடு சேர்த்தே அடையாளம் காட்டப்படுகின்றன.ஆத்தி, கொன்றை, பொன்னரளி, நந்தியாவட்டை ஆகிய பூக்கள் சிவபெருமானோடு சேர்த்துப் பேசப்படுகின்றன. ஆனால் பக்தி இலக்கியங்கள் காட்டும் குறிப்பின்படி ஒருகாலத்தில் சிவபெருமானுக்கு இண்டைப் பூவும், வன்னிப்பூவும், ஊமத்தம் பூவும்கூடச் சூட்டப்பட்டன என்று தெரிகிறது. முருகன் என்னும் தெய்வம் கடப்பம் பூவோடு தொடர்புடையவனாகப் பேசப்படுகிறான். போரிலே வெற்றி பெற்ற பின் அரசன் தன் வீரர்களுக்குப் பொன்னாலான சிறு தாமரை மலரைப் பரிசாக அளித்த செய்தி சங்க இலக்கி யத்தில் காணப்படுகிறது. இந்தப் பரிசளிப்பு விழாவினைப் ‘பூக்கோள்’ என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது.

பூக்களால் கட்டப்பட்ட மாலைகளில் பல்வேறு வகையான வேறுபாடுகளை நாம் உணர முடிகிறது. நெருக்கமாகக் கட்டப்பட்ட பூமாலைகளுக்குப் பிணையல் என்று பெயர்.சற்றே இடை வெளியுடன் கட்டப்பட்ட மாலைகளுக்குக் ‘கண்ணி’ என்று பெயர். கண்ணி என்பது இரண் டிரண்டு பூக்களால் கோக்கப்பட்ட மாலையாகும். கண்ணியை விடச் சற்றே நெருக்கமாகக் கட்டப் பட்டது ‘சரம்’ ஆகும்.தொடுக்கப்பட்ட பூச்சரத்திற்குத் தொடையல் என்று பெயர். மனை களிலும்,மண்டபங்களிலும் அழகுக்காகத் தொங்க விடும் மாலைகளுக்குத் ‘தொங்கல்’ என்று பெயர். தமிழர் வாழ்வியற் சடங்குகளின்போது அழகும். நம்பிக்கையும் கலந்த வகையில் பல்வேறு வகை யான மாலைகள் இடம்பெறுகின்றன.சில நேரங் களில் பூக்களில்லாத மாலையும் சடங்கியல் தகுதி பெறுகின்றன.எருமைத்தலை அரக்கனை அழிக்கக் கிளம்பும் தாய்த்தெய்வத்திற்கு வெற்றிலை மாலையும் , எலுமிச்சம் பழத்திலான மாலையும் அணிவிக்கப்பெறுகின்றன.(பெண்கள் அணியும் தங்கத்தினாலான காசுமாலையும் இவ்வகையில் தான் சேர்த்தி).(கேலி உணர்வோடு அணிவிக்கப் பெறும் முறுக்குமாலை, பழமாலை ஆகியவற்றையும் இப்படியே கருத வேண்டும்).

இவையன்றி நீர்மாலை, பிணமாலை ஆகிய வையும் தமிழர் வாழ்வில் இடம் பெற்றுள்ள மாலைகளாகும். பெண்ணைப் பூவாகக் கருது வதும், பெண்ணின் உடல் மலர்ச்சியைப் ‘பூப்பு’ என்ற சொல்லால் குறிப்பிடுவதும், சினமுடைய பெண் தெய்வங்களுக்கு ‘பூச்சொரிதல்’ என்ற விழா நடத்துவதும் தமிழர் பண்பாட்டில் மற்றொரு கூறாகும்.

‘மணமாலை’ என்பது மணத்துக்குரிய ஆணும் பெண்ணும் தங்களின் இசைவினை மாலை மாற்றுவதனால் அடையாளப்படுத்துதலைக் குறிக்கும் நகரத்தார் சாதியிலும்,வேறு சில சாதி களிலும் தங்களின் குலதெய்வக் கோயிலில் சார்த்திக் களைந்த மாலைகளையே திருமணநாளில் மணமக்கள் மாற்றிக்கொள்கிறார்கள்.

மணமாலையினை, மணப்பெண்ணின் கழுத்தில் நாத்தனார் (மணமகனின் உடன் பிறந் தாள்) முறையுடைய பெண்ணே அணிவித்து மண மேடைக்கு அழைத்து வருவது வழக்கம். இதனையே, ‘மணமாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி’ என்று ஆண்டாள் பாடு கின்றார். அந்தரி (கொற்றவை) கண்ணனுக்குத் தங்கை முறையாவாள்.

‘நீர்மாலை’ என்பது பெற்றோருக்குப் பிள்ளைகள் செய்யும் நீர்ச்சடங்கினைக் குறிக்கும் சொல்லாகும். இறந்தவரைக் குளிப்பாட்ட நீர்க் கரகம் ஏந்தி வரும் பிள்ளைகள் அதனை மாலை யுடன்தான் கொண்டுவருவர். எனவே நாட்டார் பாடல்களில் மகனுக்குச் ‘செம்பன்’ (செம்பு நீராக நீர்மாலை எடுத்து வருபவர்) என்ற பெயரு முண்டு. நீர்மாலை என்பதற்கு நீரும் மாலையும் என்பதே பொருளாகும். திருவிழாக்களில் இறைவன் அல்லது இறைவியின் அருளாற்றலை ஏந்தி வரும் சாமியாடியும் கோயில் மாலையி னையே அணிந்து வருகிறார். எனவே மாலை என்பது முந்திய தலை முறையோடும் புதிய உறவுக்கும் தெய்வங்களோடு கூடிய உறவுக்கும் குறியீட்டு அடையாளமாகவே தமிழர்களால் கருதப்பட்டு வந்தது என்பதனை உணரலாம்.

மணம் முடித்தபின் இளவயதில் மங்கலப் பெண்ணாக மறைந்துபோன தங்கள் குடும்பத்துப் பெண்களைத் திருநிலைப்படுத்தித் தெய்வமாக்குகின்றபோது அதற்கு ‘மாலையம்மன்’ என்ற பெயரையே தமிழர்கள் இட்டு வழங்கி வருவதும் நினைக்கத் தகுந்ததாகும். விதிவிலக்கான ஒரு செய்தியையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். குழந்தை பிறக்கும்போது தாயின் கருப்பையிலுள்ள நஞ்சுக்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றியபடி பிறந்தால் அக் குழந்தைக்கு மாலை, மாலைசூடி, மாலையப்பன் என்று பெயரிடும் மரபும் தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்து வருகிறது. அத்துடன் மாலைசூடிப் பிறந்த குழந்தை தாய்மாமனுக்கு ஆகாது என்ற நம்பிக்கையும் உள்ளது. மாலை சுற்றிப்பிறந்த கண்ணன் தாய் மாமனான கம்சனைக் கொன்றான் என்ற புராணச் செய்தியே இந்நம்பிக்கைக்கு ஆதாரமாகும்.

(செம்ம‌லர் ஜனவரி 2011 இதழில் வெளியானது)

Pin It