சீன அதிபரின் வருகை, தேவ தூதரின் வருகை போல இங்கே கொண்டாடப்படுகிறது. 

நாடு முழுவதும் இதே பேச்சு. ஊடகங்களில் வேறு செய்திகளே இல்லை. பொதுவாக வெளிநாட்டு அதிபர்கள் தில்லி வந்து போவார்கள். ஆனால் இப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடியுடன் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்திற்கு வருகிறார் . ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. 

modi xijinping 600இரண்டு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு ஏற்படுவது-; - அதிலும் வலிமையான ஓர் அண்டை நாட்டுடன் உறவு புதுப்பிக்கப்படுவது நல்லதுதான். இருப்பினும் இந்தச் சந்திப்பு, அரசு முறையிலானதா அல்லது சுற்றுப்பயணம் போன்றதா என்பதே தெளிவாகத் தெரியவில்லை. இருவரும் எது எது குறித்தெல்லாம் பேசப் போகின்றனர் என்னும் செய்தி விரிவாகச் சொல்லப்படவில்லை. 

எப்படியிருப்பினும், இந்தச் சந்திப்பால் சீனாவிற்குச் சில நன்மைகள் கண்டிப்பாக உண்டு. 1970 களின் இறுதியில், இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும், பொருளாதார நிலையில் சற்று முன்னும் பின்னுமாக இருந்தன. பெரிய  வேறுபாடு இல்லை. 2000 ஆம் ஆண்டுக் கணக்கின்படி, இந்தியாவை விடச் சீனா இரண்டரை மடங்கு உயர்ந்து நின்றது. இப்போது ஐந்து மடங்கு பெரிதாக வளர்ந்துள்ளது.

பொருளாதாரத்தில் மட்டுமின்றி, ராணுவம், அறிவியல், வணிகம் என்று எல்லாத்  துறைகளிலும் நம்மை விடப்  பல மடங்கு உயரத்தில் சீனா  உள்ளது. மக்கள் தொகையில் மட்டும்தான் நாம் அவர்களை நெருங்கிக்  கொண்டுள்ளோம். 

அமெரிக்கா, சோவியத் என இருமுனையின் கீழ் இயங்கிவந்த உலகம், அமெரிக்கா என்னும் ஒருமுனையின் கீழ் சென்றுவிட்டதன் பின், அதற்கு இணையாகச் சீனாதான் வளர்ந்து வருகின்றது. எனினும் இப்போது அமெரிக்க&சீன உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனைச் சரிக்கட்டியாக வேண்டிய நிலையில் சீனா  உள்ளது. இந்தியா என்னும் பெரிய சந்தை அதற்கு உதவலாம். 

subavee twitter 350இந்திய அரசுக்கும் இப்போது  ஒரு தேவை உள்ளது. காஷ்மீர் குறித்துப் பாகிஸ்தான் அதிபர் அண்மையில் சீனா  சென்று ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எப்போதும் பாகிஸ்தானுடன் நட்புறவுடன் இருக்கும் சீனா இப்போது  நடுநிலை போலக் காட்டிக் கொள்கிறது. 

சீனாவிலும் பல சிக்கல்கள் உள்ளன. 1959 ஆம் ஆண்டு வெளியான  திபெத் தனி நாடு என்ற அறிவிப்புக்கு ஆதரவு காட்டியது இந்தியா. தர்மசாலா என்ற இடத்தில் திபெத் அரசு இயங்குவதற்கும் இடம் தந்தது. அந்தக் கோபம் சீனாவிற்கு இன்னும் தணிந்தபாடில்லை. புதிதாக இன்று சீனாவின்  ஆளுகைக்குட்பட்டிருக்கிற ஹாங்காங், கலவரங்களால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் சந்திப்பு,  வேறு ஒப்பந்தங்களைக் கொண்டு வருகிறதோ இல்லையோ, காஷ்மீர் பற்றிச் சீனாவும், ஹாங்காங் பற்றி இந்தியாவும் பேசாமல் இருப்பதற்கான எழுதப்படாத ஒப்பந்தத்தைக் கண்டிப்பாகக் கொண்டுவரும்! அருணாசலப் பிரதேசம் பற்றியும் மோடி ஜி ஜின்பிங்குடன் பேசிவிட மாட்டார். 

இந்த உண்மைகள் உரத்துப் பேசப்படாமல் போய்விட வேண்டும் என்பதற்காகவே, மாமல்லபுரம் விழாக் கோலம் கொண்டிருக்கிறது. பிரம்மாண்டத்திலும், கொண்டாட்டத்திலும்  உண்மைகள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. 

Pin It