பெரியாரின் பெருந்தொண்டர் அய்யா இராம.சுப்பையா அவர்களின் 118ஆம் பிறந்தநாள் விழா 14-11-2025 அன்று காரைக்குடியில் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி :
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தன் சொந்த அண்ணனைப் போல, அய்யா இராம சுப்பையா அவர்களுடன் உரிமையோடும், மரியாதையோடும் பழகினார்கள். நம் முதலமைச்சர் அவர்களுக்கும், அய்யா இராம.சுப்பையா அவர்கள் மீதும், அவருடைய தொண்டின் மீதும் மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. கலைஞர் குடும்பத்துக்கும், அய்யா இராம.சுப்பையா அவர்களின் குடும்பத்துக்கும் மூன்று தலைமுறை பந்தம், அது.
அய்யா இராம.சுப்பையா அவர்களின் வீட்டுக்குப் பெயரே சமதர்மவிலாஸ். இந்தப் பெயரை சூட்டியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். 2015 ஆம் ஆண்டில் அந்த வீட்டை பழமை மாறாமல் புனரமைத்துள்ளார்கள். அப்போது ஒரு நிகழ்ச்சிக்காக நம் பொதுச் செயலாளர் துரைமுருகன் மாமா இந்தப் பக்கம் வந்து இருக்கிறார். அய்யா சுப்பையா அவர்களின் புனரமைக்கப்பட்ட வீட்டையும் சென்று பார்த்து இருக்கிறார். பிறகு சென்னை திரும்பியதும், கலைஞர் அவர்களைப் பார்த்து, சுப்பையா அண்ணன் வீட்டை அப்படியே பழமை மாறாமல் புதுப்பித்து இருக்கிறார்கள்.
அங்கு இருந்த தூண், முற்றம், ஹால் எல்லாமே அப்படியே இருக்கு என்று, துரைமுருகன் மாமா கலைஞர் அவர்களிடம் சொல்லி இருக்கிறார்.
உடனே கலைஞர் அவர்கள், அண்ணன் சுப.வீரபாண்டியன் அவர்களைப் பார்த்து, `கிணறு ஒன்று இருந்ததே அதை அப்படியே வைத்திருக்கிறீர்களா' என்று கேட்டுள்ளார்.
உடனே அங்கு இருந்த நம் கழகத்தலைவர் அவர்கள், ''எப்படிப்பா கிணறு இருந்ததை எல்லாம் இப்போ வரை சரியாக ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்?''என்கிறார்.
அதற்குக் கலைஞர் அவர்கள், ''அந்தக் கிணற்றில் பலமுறை நானே தண்ணீர் இறைத்துக் குளித்து இருக்கிறேன். எப்படி மறக்க முடியும்”- என்று சொல்லி இருக்கிறார்கள்.
1930 களில், பெரியார் கொள்கைகளை இந்தக் காரைக்குடி பகுதியில் பரப்புவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நிறைய எதிர்ப்புகள், நேரடியாவும், மறைமுகமாவும் இருந்தன. ஆனால், அய்யா சுப்பையா அவர்கள் மனம் தளரவில்லை. குடும்பத்துடன் சேர்ந்து சுயமரியாதை இயக்கப் பணிகளை அவர் செய்துகொண்டிருந்தார். குறிப்பாக, 1935 களிலேயே, கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் கைம்பெண் மறுமண நிகழ்வுகளை நடத்தி சாதனை புரிந்தவர்தான் அய்யாவின் துணைவியார். அய்யா இராம.சுப்பையா அவர்களின் வாழ்க்கை நாமெல்லாம் படிக்க வேண்டிய ஒரு பாடம்.
கலைஞர் அவர்கள், அய்யா இராம.சுப்பையாவைப் பற்றி பேசும் போது, காரைக்குடிக்கும், கல்லக்குடிக்கும் நெருங்கிய தொடர்பு பற்றி பேசுகிறார். கலைஞர் அவர்களின் தலைமையில் நடந்த கல்லக்குடி போராட்டம், முதல் அணிக்கு கலைஞர் தலைமை, இரண்டாவது அணிக்கு இராம.சுப்பையா அவர்கள், மூன்றாவது அணிக்கு கண்ணதாசன் அவர்கள் தலைமை. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு போராட்டம். அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கலைஞர் அவர்களுடன் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தவர்தான் அய்யா இராம.சுப்பையா அவர்கள்.
முதலில் அரியலூர் சிறையிலும், தண்டனை அறிவிக்கப்பட்டு, பிறகு திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டார்கள். திருச்சி ஜெயிலில் கலைஞர் அவர்களுக்கு 6 மாதம் சிறை, அய்யா இராம.சுப்பையா அவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை. ஜெயிலில் ஒரு 'மாதிரி அரசாங்கத்தையே' கலைஞர் அவர்கள் அமைத்தார்கள். இன்னும் சொல்லப்போனால், அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்த 'முதல் அமைச்சரவை' என்று பலபேர் பேசும்போது குறிப்பிட்டுப் பேசுவார்கள். அண்ணன் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் சொன்னதைப்போல அந்த அமைச்சரவையில், அய்யா இராம.சுப்பையா அவர்கள்தான் உணவு மந்திரி. ஜெயிலில் எல்லோருக்கும் சரியான நேரத்தில் உணவு சென்று சேருகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அய்யா இராம.சுப்பையா அவர்களின் பொறுப்பு. தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரைக்கும் அய்யா இராம.சுப்பையா அவர்கள் முன்னாள் அமைச்சராக இல்லை. ஆனால், தி.மு.க-வைப் பொறுத்தவரைக்கும் அய்யா இராம.சுப்பையா முன்னாள் அமைச்சர் என்று சொன்னால் அது மிகையாகாது.
இப்படி, கலைஞர் குடும்பத்திற்கும் அய்யா இராம.சுப்பையா அவர்களின் குடும்பத்திற்கும் கொள்கை உறவையும் தாண்டி, ஜெயில் உறவு இருக்கிறது. அதனால்தான் நான் தைரியமாகச் சொல்கிறேன், நான் கலைஞருக்கு மட்டும் பேரனில்லை, அய்யா இராம.சுப்பையா அவர்களுக்கும் நான் பேரன்தான்; கொள்ளுப் பேரன் இல்லை, கொள்கை வழி பேரன்.